Pages

Friday, May 20, 2011

புனிதர்



தேவர்களும் பார்த்து மகிழக்கூடிய புனிதர் ஒருவர் இருந்தார். அவர் புனிதர் என்பதே அவருக்கு தெரியவில்லை. அவரது வேலைகளை அலட்டிக்கொள்ளமல் செய்து வந்தார். ஒரு தெருவிளக்கு எரிந்து தன் கடமையை செய்வது போல... தான் செய்வதாக நினைக்காமல் மலர்கள் தம் வாசனையை பரப்புவது போல..

அவர் யாரை பார்த்தாலும் அவரை உள்ளபடி பார்ப்பார். "இவர்களது காமும் குரோதமுமே இவர்களை பிடித்து ஆட்டிகிறது. பாவம்!” இதனால் அவர் எல்லோரிடமும் அன்பு செலுத்தினார். அவரது பார்வை வித்தியாசமாக இருப்பதாக அவருக்கு தெரியவே தெரியாது!

கடவுளிடம் இருந்து ஒரு தேவதை வந்தது. என்னை கடவுள் அனுப்பினார். நீ ரொம்பவும் நல்லவனாக இருக்கிறாய். ஏதாவது வரம் வாங்கிக்கொள்!
ஒரு வரமும் வேண்டாம் என்றார் புனிதர்.
"ஏதாவது வாங்கிக்கொள்ள வேண்டுமே! இல்லாவிட்டால் கடவுள் கொடுத்த வேலையில் இருந்து நான் தவறிவிடுவேனே! எல்லா நோயையும் குணமாக்கும் சக்தி கொடுக்கட்டுமா?”
"வேண்டாம். அதை கடவுளே செய்து கொள்ளட்டும்!”
"பாபம் செய்வோரை நல்வழி திருப்பும் சக்தி?"
"வேண்டாம், அதை தேவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்!"
"உன்னை எல்லோரும் ஒரு ஆதர்ச மனிதனாக பார்த்து அதைபோல நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க வைக்கும் சக்தி?"
"வேண்டவே வேண்டாம். அப்புறம் எல்லோரும் என்னை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்துவிடுவர்!"
"பின்னே என்னதான் கொடுக்கட்டும். ஏதாவது கேட்டு வாங்கிக்கொண்டு என்னை காப்பாற்று!"
"ம்ம்ம்ம்ம்... சரி, என் நிழல் என் பின்னால் விழும்போது எதன் மீது விழுகிறதோ அந்த இடத்தில் உள்ள தோஷங்கள் அகல வேண்டும்."

அன்றிலிருந்து புனிதரின் நிழல் பின்னால் விழுந்த இடத்தில் இருந்தவர் நோய்கள் நீங்கின. நிலம் செழுமையானது. தாவரங்கள் நன்கு வளர்ந்தன.

எல்லோரும் புனிதரைவிட்டு அவரது நிழலையே பார்த்துக்கொண்டு இருந்ததால் அவருக்கும் ஒரு பிரச்சினையும் வரவில்லை.

2 comments:

Geetha Sambasivam said...

தான் செய்வதாக நினைக்காமல் மலர்கள் தம் வாசனையை பரப்புவது போல..//

நல்ல உதாரணம். சூரிய, சந்திரரையும் சொல்லலாம்.

திவாண்ணா said...

ஆமாம்!