Pages

Friday, March 23, 2012

உரத்த சிந்தனை: கடவுளோட ஒரு லிங்க்


 ஒரு வேலையை செய்யப்பார்க்கிறோம்.
இதை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா செய்யலாம்.
சிலர் 'நானே' செய்து விடுவேன் ன்னு செய்யலாம்.
சிலர் கடவுளே இதை செய்து கொடுன்னு சொல்லிட்டு சும்மா இருக்கலாம்.
சிலர் கடவுளே உதவி பண்ணுன்னு சொல்லிட்டு செய்ய முனையலாம்.

'நானே செய்வேன்' ஆசாமிங்க செய்து முடிக்கவும் முடிக்கலாம்; கஷ்டப்பட்டும் முடிக்கலாம்; முடிக்க முடியாமலும் போகலாம்.
வெகு சுலபமா செய்து முடிக்கக்கூடிய காரியங்கள் கூட சமயத்தில தலை கீழா நின்னாலும் செய்ய முடியறதில்லை!
ஒரு காரியம் முடியுமா இல்லையா என்கிறது கர்மா சம்பந்தப்பட்டதா இருந்தாலும் பல சமயம் இந்த 'நான்' வராவிட்டா காரியம் முடிஞ்சுடும். இந்த ப்ரீவில் (freewill) பத்தி முன்னாலேயே எழுதியாச்சு. 'நான் செய்வேன்' ன்னு நினைச்சா 'சரி செஞ்சுக்கோ' ன்னு கடவுள் விட்டுடுவார். அப்புறமா முடியறது முடியாதது எல்லாம் நம்ம முயற்சியை சார்ந்ததா ஆகிடும்.
சரி. 'கடவுளே நீயே செய், நான் செய்ய மாட்டேன்னு' சொல்கிற சோம்பேறிங்களுக்கு அது நடக்கவே நடக்காது.  புருஷ யத்னம் இல்லாமல் வேலை நடக்காது. மிகச்சில எக்சப்ஷனே பார்க்கலாம். அவை முழுக்க முழுக்க சரணாகதி செய்த கேஸா இருக்கும்.

'என் முழு உழைப்பையும் கொடுக்கிறேன், உதவி பண்ணு' ன்னு சொல்கிறவங்களுக்கு கொஞ்சம் சுலபமாவே வேலை முடிஞ்சுடும்.

ஒரு விஷயம் எப்படி நடக்கணும்ன்னு கடவுள் ப்ளான் ஒண்ணு இருக்கும். அதை ஒட்டி நம்ம வேலை அமைஞ்சுதுன்னா அது சுலபமா பூர்த்தி ஆகும். எதிரா அமைஞ்சா பூர்த்தியே ஆகாது. அதாவது இந்த 'நான்' இல்லாம கடவுளை வேலை செய்ய விட்டுட்டா நாம் வெறும் கருவியா உழைச்சா வேலை நடந்துடும்.
கடவுள் எங்கிருந்தோ ஏணி ஏறி வர வேண்டிய அவசியமில்லை. அவர் உள்ளேயேத்தான் இருக்கார். அதாவது இறைத்தனம் எல்லார் உள்ளும் இருக்கு. அது வெளிப்பட்டு வேலை செய்ய நாம் விடுவதில்லை. நான், என் என்கிற அஹங்காரம் அதை வெளிப்படாம தடுக்குது. இந்த தடை நீங்கினா நம் ஒவ்வொரு காரியத்திலும் கடவுள் தன்மை வேலை செய்து எல்லாத்தையும் சரியாகவே நடத்திக்கொண்டு போகும்.
அதெப்படி தடையை நீக்கி கடவுள்தன்மையை வேலை செய்யவிடறது?
அதுக்குத்தான் இந்த கடவுளோட ஒரு லிங்க் இருக்கணும்.
லௌகீக வேலைகளிலே கடவுளோட லிங்க் வெச்சுக்கிறது கஷ்டம். அதனால இந்த லிங்க்கை உருவாக்கி பராமரிக்கவே தனியா நேரம் ஒதுக்கணும்.
இதுக்காகவேதான் பல கர்மாக்களை விதிச்சு இருக்காங்க.
பூஜை செய்கிறோம். ஒரு மணி நேரம் செய்கிற பூஜையில் நம்ம மனசு லயிச்சு கடவுளோட ஒரு லிங்க் கிடைக்கிறது சில நொடிகளாகத்தான் இருக்கும். பழகப்பழக இது அதிகமாகும்.
ஒரே மாதிரி முயற்சி அலுத்துப்போய் 'ச்சே, நமக்கு இது கிடைக்கவே கிடைக்காது' ன்னு ஒரு நிராசை உருவாக வாய்ப்பு இருக்கு.  அதனால வித விதமான கர்மாக்களாலே இதை சாதிக்க வித விதமான பூஜைகள், சடங்குகள் உருவாக்கி வெச்சு இருக்கு. இன்ன இன்ன சமயத்தில இப்படி இப்படி செய் ன்னு சொல்லி வெச்சு இருக்கு.
இது வருஷத்தை ஒட்டி ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தி ன்னு இருக்கலாம். அல்லது நம் தினசரி கர்மாவா சந்தியாவந்தனம், தினசரி பூஜைன்னு இருக்கலாம். அல்லது நம் வாழ்கையை ஒட்டி ஜாதகர்மா, சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ன்னு இருக்கலாம்.  ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வித பலனும் இருக்கும். ஆனா எதா இருந்தாலும் இந்த கடவுளோட லிங்க் உருவாக்கிக்கற சமாசாரம்தான்.
எந்த பேரைச்சொல்லி எந்த கடவுளுக்கான சடங்கு செய்தாலும் குறிக்கோள் ஒண்ணேதான்.
 

Thursday, March 22, 2012

உரத்த சிந்தனை -புண்ணியம் பாபம் -3


போன பதிவிலே "ஒத்தர் ரொம்ப சுலபமா சொல்லிட்டார்: புண்ணியம் பாபம் ஏதுன்னு கேக்கறீயா? ” ன்னு எழுதி இருந்தேன். அது மஹாபாரதத்தில வருகிறது. ரந்தி தேவர் சொன்னதா சாந்தி பர்வத்திலே வ்யாஸர் எழுதி இருக்கிறதா நினைவு.
"ஸ்லோகார்த்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி: பரோபகாராய புண்யாய பாபாய பரபீடணம்.”
--
சரி, நிறைய பாபம் பண்ண ஆசாமி கோவில் கோவிலா போய் பூஜை அபிஷேகம் எல்லாம் செஞ்சா செய்த பாபம் எல்லாம் போயிடுமா ன்னு கேட்டா...
நல்ல கேள்விதான்! நிறைய அரசியல்வியாதிங்க அப்படித்தானே செய்து கொண்டு இருக்காங்க?
இது அடிப்படையில கர்மா பலன் கொடுக்கிறது பத்திய சமாசாரம். சில ப்ராயசித்தங்கள் செய்தா கர்மாவோட பலனை அது கொஞ்சம் பாதிச்சு தற்காலிக நிவாரணமோ அல்லது தாக்கத்தை கம்மியாக்குவதோ நடக்கக்கூடியதுதான். ஆனா பலனை எப்படியுமே அனுபவிச்சே ஆகணும். இது கூட்டல் கழித்தல் கணக்கு மாதிரி புண்ணியம் 2 கிலோ பண்ணேன், பாபம் 2 கிலோ பண்ணேன்; தானிக்கி தீனி சரி போயிந்தி ன்னு சொல்ல முடியாது. இந்த இரண்டு கணக்கு புத்தகங்களும் வேற வேற. புண்ணியம் பண்ணியா, பிடி சுகம். பாபம் பண்ணியா, பிடி கஷ்டம்!
இந்த சுகமும் கஷ்டமும் எப்போ வரும் எப்ப அனுபவிக்கணும்ன்னு பிறக்கும்போதே தீர்மானம் ஆயிடும். அதுக்கு தகுந்தாப்போல வாழ்கையில சூழ்நிலைகள் அமையும். நல்ல ஜோதிடர்கள் இதை அடையாளம் கண்டு இன்ன இன்ன காலகட்டத்தில இப்படி இப்படி அமையும்ன்னு சொல்லுவாங்க. நமக்கு காரணமே இல்லாம சில நாட்கள் சோறு கிடைக்க மாட்டேங்குது. என்னதான் வசதி இருந்தாலும், ஹோட்டல்ல போய் சாப்பிட த்ராணி இருந்தாலும் எங்கேயாது மாட்டிக்கிட்டு சோறு கிடைக்காம திண்டாடுவோம்! அது கர்மாவோட பலன்தான். மத்த நாட்களில கிடைக்கறதும் கர்மாவோட பலன்தான். அது ஒரு கர்மாவோட பலன்; இது இன்னொரு கர்மாவோட பலன்!
அதனால நாம ஒழுங்கா நடந்துக்கற வழியை பார்க்கணும். உடனடியா அதோட பலன் இல்லைன்னாலும் பின்னால் கஷ்ட படாம இருக்க அது உதவலாம். செய்யற பாபத்தை செய்துகிட்டு உடனடி தண்டனைதான் இல்லையே என்கிற தைரியத்துல மேலே மேலே தப்பு செய்து கர்ம மூட்டை பளுவை அதிகமாக்கிக்கறதுல அர்த்தமே இல்லை.
அடிப்படையில உலகத்தைப்பத்திய நம்மோட ஆட்டியூட் மாறணும். மாறலைன்னா எந்த ஆன்மீக சாதனையும் கொஞ்சம் கூட முன்னேறலைன்னு அர்த்தம். எந்த பூஜை புனஸ்காரமும் பலிக்கலைன்னு அர்த்தம். அதுல நம்ம மனசு சரியா ஈடுபடலைன்னு அர்த்தம்.
யோசிப்போம்!
 

Wednesday, March 21, 2012

பஞ்சதஶீ 1 - 22


தை​: ஸர்வை​: ஸஹிதை​: ப்ராணோவ்ரு«த்திபே⁴தா³த்ஸ பஞ்சதா⁴ | ப்ராணோ'பாந​: ஸமாநஶ்சோதா³நவ்யாநௌ ச தே புந​: || 22|| 

இந்த கர்ம இந்திரியங்களின் சேர்கையால் ப்ராணன்கள் உருவாயின. செயலால் அவை ஐந்தாயின. ப்ராணன். அபானன், சமானன், உதானன், வியானன் என்பன அவை.

[சில காரணங்களால் தடைப்பட்ட இந்த பதிவுகள் இனி கோர்வையாக தொடர்ந்து வரும். ]

 

உரத்த சிந்தனை - பாபம் புண்ணியம் 2


ஸோ, 'பகுத்தறிவு கடவுள் மறுப்பாளர்கள்' மேலே என் கம்ப்லைண்ட் இதான். அவங்க கடவுள் இல்லைன்னு சொல்லறது அவங்க நம்பிக்கை. அதைப்பத்தி விவாதிக்க என்ன இருக்கு? ஆனா அவங்களோட செயலோட விளைவு என்ன? இதுக்கு என்ன செய்து கொண்டிருக்காங்க?

சாதாரண ஆசாமி கடவுள் நம்பிக்கை இருக்கிற வரை பாபத்துக்கு பயந்துகொண்டு சரியா நடந்து கொண்டார். கடவுள் இல்லை, அதனால பாபம் செய்கிறவங்களுக்கு தண்டிக்க யாருமில்லைன்னு ஆயிடுத்து. அரசாங்கம் தண்டனை கொடுத்தாத்தான் உண்டு. ஊழல் செய்து அராஜக வழியில நிறைய சம்பாதிக்கலாம். இந்த பணத்தை வெச்சே கீழ் மட்ட அதிகாரிகளை சரிக்கட்டிடலாம்.  அரசாங்கம் ஒரு வழியா முழிச்சுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பாத்தா கோர்ட் போய் வழக்காடலாம் ஆடலாம் ஆடலாம்.... ஒண்ணு ரெண்டு மாமாங்கம் கழிச்சு அது ஒரு வழியா முடிவுக்கு வரப்ப எனக்கு வயசாயிடுத்து, உடல் நிலை சரியில்லை, அதனால விடுதலை செய்யணும் ன்னு அப்பீல் செய்யலாம்!

தப்பு செய்தா தண்டனைன்னு ஒரு நம்பிக்கையும் இல்லை, நடை முறையும் இல்லை. ஏன் மக்கள் மனம் போன போக்கிலே நடந்துக்க மாட்டாங்க?

சரி சரி எது புண்ணியம் எது பாபம் ன்னு நியாயமான கேள்வி எழ வாய்ப்பிருக்கு!
இதுக்கு ஒவ்வொத்தரும் ஒவ்வொரு மாதிரி பதில் சொல்லலாம். சாஸ்திரங்கள் சொல்லறதுதான் அதாரிடி என்கலாம். பெரியவங்க சொல்லறதுதான் ன்னும் சொல்லலாம். குடும்ப பாரம்பரியம் எப்படியோ அப்படின்னு சொல்லலாம்.
எப்படியோ அது நமக்கு உள்ளுக்குள்ள தெரிஞ்சே இருக்கு!

ஒத்தர் ரொம்ப சுலபமா சொல்லிட்டார்:
"புண்ணியம் பாபம் ஏதுன்னு கேக்கறீயா? ஆயிரம் புத்தகங்களில சொல்லி இருக்கறதை அரை ஸ்லோகத்துல சொல்லறேன். உலகத்துக்கு இதமானதை செய்யறது புண்ணியம்; உலகத்துக்கு துன்பத்தை தருவது பாபம்."
முடிஞ்சு போச்சு!
உலகம் என்பதை வெறும் பௌதிக பொருளா பார்க்காம உலக மக்கள், மற்ற ஜீவ ராசிகள், இயற்கைன்னே எடுத்துக்கணும். சும்மாவானா காரணமில்லாம மண்ணை தோண்டினாக்கூட அது பாபம்தான்; ஒரு கிளையை வெட்டினாக்கூட பாபம்தான். ஜட பொருட்கள் சமாசாரம் இப்படின்னா மனிதர்கள் சமாசாரம் எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க 'ஏன் ஒருத்தர் சரியா நடந்துக்கணும்? தப்பா நடந்துண்டா என்ன? அது என் இஷ்டம்' ன்னு சொன்னா அவங்ககிட்ட அதுக்கு விடை கிடையாது. எவ்வளவு பேருக்கு பொது நலத்துக்காக இப்படி இருக்கணும்ன்னு தோணும்? அப்புறம் நான் ஏன் பொது நலம் பத்தி கவலைப்படணும்ன்னு கேட்டாலும் அதுக்கு விடை இருக்காது.

ஆக பகுத்தறிவால இதுக்கு ஒரு தீர்வு காணமுடியாது. உலகத்தில சாதாரண ஜனங்கள் அதிகமா இருக்கிற இந்த காலகட்டத்துல ஆன்மீகம் மட்டுமே அதை சாதிக்க முடியும். ரொம்ப பாமர ஜனங்கள்கிட்டே சாமி கண்ணை குத்தும் ரீதியில சொல்லி பயமுறுத்தி சரியா நடந்துக்க வைக்கலாம். கொஞ்சம் சிந்திக்கக்கூடியவங்ககிட்ட உலகத்துக்கு நல்லது செய்தா கடவுளுக்கு அது பிடிக்கும்; அதனால அவர் உனக்கு நல்லது செய்வார்ன்னு நைச்சியமா சொல்லலாம்.  இன்னும் வளர்ந்தவங்களுக்கு உலகமே கடவுளோட ரூபம் என்கிறதால உலகத்துக்கு இதமா நடந்துக்கறது கடவுளுக்கு இதமா நடந்துக்கிறதே ஆகும் ன்னு சொல்லலாம். இன்னும் மேல் நிலையில தானே பிரம்மம், இந்த உலகம் ன்னு தெரியும் போது யாரும் ஒண்ணும் சொல்ல வேண்டி இராது.
தொடரும்....
 

Tuesday, March 20, 2012

உரத்த சிந்தனை: பாபம் புண்ணியம்

பாபம் புண்ணியம்

இப்போதெல்லாம் எங்கே பார்த்தாலும் மக்கள் மத்தியில் அத்ருப்திதான் நிலவுகிறது. அதற்கு காரணங்களுக்கு குறைச்சலே இல்லை.  வீட்டில் ஆரம்பித்து உலகம் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அத்ருப்தி. எதை எடுத்தாலும் நடத்தை சரியில்லை. எது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. வேலியே பயிரை மேய்கிறது. சட்டத்தை மீறுவது யார் என்று பார்த்தால் அதை காக்க வேண்டிய காவல் துறை, வக்கீல்கள், அரசாங்கமே முதலில் இருக்கிறது. கன்ஸ்யூமர் வழக்கு எத்தனை டாக்டர்கள் மீது வருகிறது? ஒரு வக்கீல் மீதாவது வருகிறதா? இத்தனைக்கும் ஸ்கூல் பசங்க மாதிரி இவங்க ஆன்னா ஊன்னா ஸ்ட்ரைக் பண்ணுகிறார்களே! ஒரு வழக்கு என்று வந்துவிட்டால் எவ்வளவு முறை தள்ளித்தள்ளிப்போகிறது? கோர்டுக்கு போவதே சமாசாரத்தை தள்ளிப்போடத்தான் என்றே ஜனங்கள் மத்தியில் மனசில் பதிந்துவிட்டது. அதனாலேயே யாரும் கோர்ட் வழக்கு என்பதில்  நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதில் நம்பிக்கை யாருக்குமே இல்லை! ஜனங்கள் அவரவர் இஷ்டத்துக்கு நடந்துகொள்ள கேட்பானேன்!
இதை சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன்.
சில நாட்களாக இந்த மாதிரி பிரச்சனைக்களுக்கெல்லாம் என்ன காரணம் என்று தீவிரமாக யோசனை செய்தேன்.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் என்பது போல தோன்றினாலும் அந்த காரணத்துக்கு என்ன காரணம் என்றெல்லாம் யோசித்ததில் ஒரு விஷயம் தோன்றியது.
உலகத்தில் மக்களுக்கு பாபம், புண்ணியம் அல்லது சரி, தப்பு என்கிற கொள்கை போய்விட்டது.
சரி தப்பு என்கிறது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக சொன்னது. பாபம் புண்ணியம் என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொன்னது. இன்னும் சிலர் கடவுள் உண்டு என்று நம்பிக்கொண்டு தப்பு செய்தால் பாபம், கடவுள் தண்டிப்பார்; புண்ணியம் செய்தால் பாராட்டி நமக்கு வேண்டியது கொடுப்பார், சொர்கம் கிடைக்கும் என்றெல்லாம் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கடவுள் இருக்காரா, அப்படி இருந்தால் அவர் எப்படி இருக்கார், என்ன செய்கிறார் என்கிற சமாசாரத்துக்கு இப்போது போக தேவையில்லை. 1940 களில் பெரும்பாலும் ஜனங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். ஆன்மீகம் கொஞ்சம் சரியான பாதையிலும் இருந்தது. ஜனங்கள் பாபம் செய்ய பயந்தார்கள். யாரேனும் பப்ளிக்கா தப்பு செய்கிறதை பார்த்தால் அருகில் இருக்கிறவர்கள் கண்டித்தார்கள். இது பாபம்டா. செய்யாதே என்றார்கள். பெரும்பாலானவர்கள் அந்த பக்கம் நின்றதால் தப்பு செய்கிறவர்களுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.
அப்புறம் பகுத்தறிவு இயக்கங்கள் தோன்றின. அவற்றின் நடவடிக்கையில் ஒரு விஷயத்தை மட்டும் பார்க்கலாம். கடவுள் என்று ஒருவர் இல்லை என்பது அவற்றின் சாராம்சமாக இருந்தது. திருப்பித்திருப்பி இதை வலியுறுத்தியதால் அத்துடன் சேர்ந்த இந்த பாபம் செய்தால் தண்டனை கோட்பாடும் காணாமல் போயிற்று. கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தப்பு செய்தால் ஒண்ணும் பிரச்சினை உடனடியாக இராது என்று
தோன்றிவிட்டது.
ஒரு சரியான மாற்று வழியை உறுதி செய்யாமல் வெறுமனே கடவுள் நம்பிக்கையை மட்டும் பெயர்த்து போட்டதில் ஜனங்களுக்கு ஒரு விஷயத்திலும் பயமில்லாமல் போய்விட்டது. எப்போதுமே இருந்து கொண்டிருக்கிற சுயநலம் தலை தூக்கி எனக்கே எல்லாம் வேணும் எந்த வழியில் கிடைத்தாலும் பரவாயில்லை என்று ஆகிவிட்டது. காலங்காலமாக இருக்கிற லஞ்சம் ஊழல் பயமில்லாமல் பகிரங்கமாக செய்கிற காரியம் ஆகிவிட்டது.
யாரோ சொன்னாங்களே, ஏற்பது இகழ்ச்சின்னு?
தொடரும்.

Friday, March 2, 2012

அண்ணா - 7


சுமார் பத்து வருஷத்துக்கும் மேலாக ஏறத்தாழ படுத்த படுக்கையாகவே இருந்து வந்திருக்கிறார். பின் வருஷங்களில் மாஹா மாயையின் சக்தியையும் உணர வைத்தார்! அப்படி இருந்த 'ஞானி' யா இப்படி இருக்கிறார், பேசுகிறார் என்று நினைக்கும் அளவுக்கு! சின்னக்குழந்தையாகவே ஆகிவிட்டார். வயிற்றில் கட்டி இருப்பதாக நிச்சயமாக நம்பினார். எல்லா மருத்துவ பரிசோதனைகளும் செய்து ஒரு பிரச்சனையும் கண்டு பிடிக்க முடியவில்லை! இப்படியும் அப்படியும் இருப்பார். ஞானி போலவும் பேசிக்கொண்டு இருப்பார். சாதாரணமாகவும் இருப்பார். குழந்தையாகவும் இருப்பார்! இவருடைய எஞ்சிய பிறப்பில் அனுபவிக்க வேண்டிய கர்மாக்களை அனுபவித்து தீர்த்தார் என்று எண்ணுபவர்கள் உண்டு. பலவித உபாதைகள் இருந்தன.

கடிதத்தில் எனக்கு இருக்கிறதை ஹாரஸ்கோப் உள்பட எந்த ஸ்கோப்பாலும் கண்டு பிடிக்க முடியாது என்று ஒரு முறை எழுதினார்.

புதிதாக யாரையும் பார்க்க மறுத்தார். யாரும் வருவதையும் தவிர்க்கும்படி கூறினார். கடைசி சில வருஷங்களில் அவரை அதிகம் பார்க்கவில்லை. வருஷம் 2-3 முறை சென்னை செல்லும்போது போய் பார்த்து நமஸ்காரம் செய்வதோடு சரி.

ஆரம்பத்திலேயே ஒன்றும் அதிகமாக உணவு உட்கொண்டவரில்லை. போகப்போக இதன் அளவும் குறைந்து கொண்டே போனது. கடைசி ஓரிரு வருஷங்கள் வெறும் திரவ ஆகாரம் என்றே கூட சொல்லலாம். இதை முழுங்கக் கூட கஷ்டப்பட்டார். கடைசி சில நாட்கள் ஒன்றுமே இல்லை. வேறு வழியாக உணவு செலுத்தப்படுவதையும் மறுத்தார்.

ஆனால் உடலில் சக்தி இல்லாமல் போகவில்லை. கடைசி வாரத்தில் மட்டும் ஒருவருக்கு 7 கடிதங்கள் எழுதி இருக்கிறார். அவற்றில் ஒன்று 37 பக்கங்கள்! ஒன்றில் மந்திரோபதேசம்!

சிவ ராத்திரிக்கு அடுத்த நாள் கடைசியாக பார்க்க நானும் என் மனைவியும் சென்று இருந்தோம். முகத்தில் இருந்த தேஜஸ் கொஞ்சமும் குறையவில்லை என்று தோன்றியது! ஒரு வருஷம் முன்னால் "நான் போன பிறகு கொடுக்க வேண்டும்" என்று சொல்லி வைத்து பத்திரப்படுத்தி இருந்த கவர் ஒன்றை அவரது உதவியாளரில் ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார். அதில் என் மனைவியின் முகவரி எழுதி உள்ளே அவரது போட்டோ ஒன்று இருந்தது!

என் வாழ்கையில் மஹா பெரியவாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் அவரது உபதேசங்களை எழுதியவரது ஆசீர்வாதங்களை பெற்றேன்! வழிகாட்டுதலை பெற்றேன்! இதற்கு கைமாறு என்ன செய்ய இயலும்?

-நிறைந்தது-

Thursday, March 1, 2012

அண்ணா -6


என் கதையையும் இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது!
தெய்வத்தின் குரலை படிக்க ஆரம்பித்து மனம் மாறிப்போனேன். எப்படி இருக்க வேண்டும் என்று பரமாச்சாரியார் சொல்லி, "நானும் யாரானா கேக்க மாட்டாளான்னு கரடியா கத்திண்டு இருக்கேன். கேட்கிறவாதான் கம்மி" என்று சொல்லி இருந்தது மனதை வெகுவாக பாதித்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவர் சொன்னபடி நடக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். சந்தியாவந்தனம் ரெகுலர் ஆயிற்று. பின் கோபால்ஜி சொல்லி தினசரி ஆயிரத்தெட்டு காயத்ரி ஜபம் என்று துவங்கியது. தெய்வத்தின் குரலே எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்ததால் அண்ணாவை சென்று பார்த்து பேசத்துவங்கினேன். கடிதத்தொடர்பும் ஆரம்பித்தது. அவருடைய வழிகாட்டுதலிலேயே பல அனுஷ்டானங்கள் துவக்கினேன். இந்த சமயத்தில் பலதும் என் மனைவிக்கு உகப்பாக இல்லை. டாக்டராக இருந்துகொண்டு எதுக்கு இதெல்லாம் என்று நினைப்பு. நான் சொன்னால் கேட்க மாட்டார். சண்டை சச்சரவு வரும். அண்ணாவுக்கு அப்பீல் அனுப்புவேன். அண்ணா சமாதானமாக என் மனைவிக்கு கடிதம் எழுதுவார்; அல்லது போனில் பேசுவார். அப்புறம் சரி என்று என் மனைவி ஒத்துக்கொள்வார்.
இப்படியேத்தான் ஔபாசனம், அக்னி ஹோத்ரம் ஆகியவை ஆரம்பித்து தொடர்ந்து நடத்த வும் முடிந்தது. எதற்கு இதை இங்கே சொல்கிறேன் என்றால் புத்தகம் மூலம் கர்மா செய்ய புத்தியை தூண்டியது மட்டுமில்லாமல் அதை செய்யவும் எல்லா உதவிகளையும் செய்தார் என குறிப்பிடவே.
அண்ணாவை சந்திக்கும் எல்லாருமே அண்ணா தன் மீது மட்டுமே இவ்வளவு அன்பு பாராட்டுகிறார் என்று நினைப்பார்கள்! அவரவருக்கு தகுந்த மட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பார். பெரிய ஆன்மீக விஷயங்களில் இருந்து அக்கப்போர் வரை நபரை பொருத்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கும்.
சிலர் அவருடன் பேசும் போது தனக்கு இருந்த உடல் உபாதைகள் நீங்கியதாக சொல்வார்கள். நல்ல தலைவலியில் இருந்தேன், போய்விட்டது, ஆஸ்த்மாவில் அவதி பட்டுக்கொண்டு இருந்தேன் போய் விட்டது என்பர். எனக்கோ அண்ணாவை சந்திக்கும் ஒவ்வொரு சமயமும் மைக்ரேன் அதிகமாகிவிடும். கிளறிவிட்டு தீர்க்கிறார் என்று நினைத்துக்கொள்வேன்.
எனக்கு சாதாரணமாகவே மஹா கோபம் வரும். தப்பு என்று தெரிந்தாலும் அடக்க முடியாது. இதை எப்படி நீக்கலாம் என்று ஆலோசனை கேட்டேன். "திருக்களர் போய் அங்கே துர்வாசருக்கு சுப்ரமணியர் தரிசனம் கொடுத்து கோபத்தை நீக்கின ஸ்தலத்தில் ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வா" என்று சொன்னார். உடனடியாக செய்யாவிட்டாலும் கோபம் பெரும்பாலும் போய்விட்டது. தெரியாத்தனமாக "அதான் பெரும்பாலும் போய்விட்டதே, திருக்களர் போகணுமா?” என்று கேட்டேன். ஆமாம் என்றார். அப்படியே போய் வந்தோம். பின்னால்தான் இதை ஒரு வ்யாஜ்யமாக வைத்துக்கொண்டு கோபத்தை தொலத்தவர் யார் என்று புரிந்தது!
ஒரு வருஷம் இளையாத்தங்குடியில் சதஸ் நடந்த பிறகு இவருக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. இவருடைய எழுத்துத்தொண்டை நினைவு கூறும் வகையில் இவருக்கு கையில் தங்கத்தில் ஒரு தோடா போட்டார்கள். ஜஸ்டிஸ் அருணாசலம் தலைமை தாங்கினார் என்று நினைவு. நான் போகும்போது நிகழ்ச்சி துவங்கிவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் இவரை பார்க்க முடிந்தது. "நல்ல காலம் நீ வந்திருக்கே! இதை எவ்வளவு தங்கம் இருக்குன்னு பாத்து கொஞ்ச கூட போட்டு பணம் அனுப்பு. இவாளுக்கு எப்படியாவது திருப்ப வேணும்!” என்று சொல்லி தோடாவை என் கையில் கொடுத்துவிட்டார். அதை மதிப்பு போட்டு பணத்தை அனுப்பிவிட்டு தோடாவை என் கையில் போட்டுக்கொண்டுவிட்டேன்! அப்புறம்தான் எழுத்தாளன் ஆனேன் போலிருக்கு! :-)
அவர் தனக்கு எந்தவித சக்தியும் இருப்பதாக காட்டிக்கொள்ளவே இல்லை. அம்பாளிடம் ப்ரார்த்தனை செய்கிறேன். அவள் அனுக்கிரம் பண்ணினாலும் பண்ணுவாள் என்பார். அப்படி 'அனுக்ரஹம்' நடந்த கதைகள் ஏராளம்!