Pages

Friday, March 23, 2012

உரத்த சிந்தனை: கடவுளோட ஒரு லிங்க்


 ஒரு வேலையை செய்யப்பார்க்கிறோம்.
இதை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா செய்யலாம்.
சிலர் 'நானே' செய்து விடுவேன் ன்னு செய்யலாம்.
சிலர் கடவுளே இதை செய்து கொடுன்னு சொல்லிட்டு சும்மா இருக்கலாம்.
சிலர் கடவுளே உதவி பண்ணுன்னு சொல்லிட்டு செய்ய முனையலாம்.

'நானே செய்வேன்' ஆசாமிங்க செய்து முடிக்கவும் முடிக்கலாம்; கஷ்டப்பட்டும் முடிக்கலாம்; முடிக்க முடியாமலும் போகலாம்.
வெகு சுலபமா செய்து முடிக்கக்கூடிய காரியங்கள் கூட சமயத்தில தலை கீழா நின்னாலும் செய்ய முடியறதில்லை!
ஒரு காரியம் முடியுமா இல்லையா என்கிறது கர்மா சம்பந்தப்பட்டதா இருந்தாலும் பல சமயம் இந்த 'நான்' வராவிட்டா காரியம் முடிஞ்சுடும். இந்த ப்ரீவில் (freewill) பத்தி முன்னாலேயே எழுதியாச்சு. 'நான் செய்வேன்' ன்னு நினைச்சா 'சரி செஞ்சுக்கோ' ன்னு கடவுள் விட்டுடுவார். அப்புறமா முடியறது முடியாதது எல்லாம் நம்ம முயற்சியை சார்ந்ததா ஆகிடும்.
சரி. 'கடவுளே நீயே செய், நான் செய்ய மாட்டேன்னு' சொல்கிற சோம்பேறிங்களுக்கு அது நடக்கவே நடக்காது.  புருஷ யத்னம் இல்லாமல் வேலை நடக்காது. மிகச்சில எக்சப்ஷனே பார்க்கலாம். அவை முழுக்க முழுக்க சரணாகதி செய்த கேஸா இருக்கும்.

'என் முழு உழைப்பையும் கொடுக்கிறேன், உதவி பண்ணு' ன்னு சொல்கிறவங்களுக்கு கொஞ்சம் சுலபமாவே வேலை முடிஞ்சுடும்.

ஒரு விஷயம் எப்படி நடக்கணும்ன்னு கடவுள் ப்ளான் ஒண்ணு இருக்கும். அதை ஒட்டி நம்ம வேலை அமைஞ்சுதுன்னா அது சுலபமா பூர்த்தி ஆகும். எதிரா அமைஞ்சா பூர்த்தியே ஆகாது. அதாவது இந்த 'நான்' இல்லாம கடவுளை வேலை செய்ய விட்டுட்டா நாம் வெறும் கருவியா உழைச்சா வேலை நடந்துடும்.
கடவுள் எங்கிருந்தோ ஏணி ஏறி வர வேண்டிய அவசியமில்லை. அவர் உள்ளேயேத்தான் இருக்கார். அதாவது இறைத்தனம் எல்லார் உள்ளும் இருக்கு. அது வெளிப்பட்டு வேலை செய்ய நாம் விடுவதில்லை. நான், என் என்கிற அஹங்காரம் அதை வெளிப்படாம தடுக்குது. இந்த தடை நீங்கினா நம் ஒவ்வொரு காரியத்திலும் கடவுள் தன்மை வேலை செய்து எல்லாத்தையும் சரியாகவே நடத்திக்கொண்டு போகும்.
அதெப்படி தடையை நீக்கி கடவுள்தன்மையை வேலை செய்யவிடறது?
அதுக்குத்தான் இந்த கடவுளோட ஒரு லிங்க் இருக்கணும்.
லௌகீக வேலைகளிலே கடவுளோட லிங்க் வெச்சுக்கிறது கஷ்டம். அதனால இந்த லிங்க்கை உருவாக்கி பராமரிக்கவே தனியா நேரம் ஒதுக்கணும்.
இதுக்காகவேதான் பல கர்மாக்களை விதிச்சு இருக்காங்க.
பூஜை செய்கிறோம். ஒரு மணி நேரம் செய்கிற பூஜையில் நம்ம மனசு லயிச்சு கடவுளோட ஒரு லிங்க் கிடைக்கிறது சில நொடிகளாகத்தான் இருக்கும். பழகப்பழக இது அதிகமாகும்.
ஒரே மாதிரி முயற்சி அலுத்துப்போய் 'ச்சே, நமக்கு இது கிடைக்கவே கிடைக்காது' ன்னு ஒரு நிராசை உருவாக வாய்ப்பு இருக்கு.  அதனால வித விதமான கர்மாக்களாலே இதை சாதிக்க வித விதமான பூஜைகள், சடங்குகள் உருவாக்கி வெச்சு இருக்கு. இன்ன இன்ன சமயத்தில இப்படி இப்படி செய் ன்னு சொல்லி வெச்சு இருக்கு.
இது வருஷத்தை ஒட்டி ராம நவமி, பிள்ளையார் சதுர்த்தி ன்னு இருக்கலாம். அல்லது நம் தினசரி கர்மாவா சந்தியாவந்தனம், தினசரி பூஜைன்னு இருக்கலாம். அல்லது நம் வாழ்கையை ஒட்டி ஜாதகர்மா, சஷ்டி அப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ன்னு இருக்கலாம்.  ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு வித பலனும் இருக்கும். ஆனா எதா இருந்தாலும் இந்த கடவுளோட லிங்க் உருவாக்கிக்கற சமாசாரம்தான்.
எந்த பேரைச்சொல்லி எந்த கடவுளுக்கான சடங்கு செய்தாலும் குறிக்கோள் ஒண்ணேதான்.
 

No comments: