Pages

Wednesday, March 20, 2013

ரமணர் - 4 ஜீவ காருண்யம்

 
சூரி நாகம்மா எழுதுகிறார்:
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நாங்கள் எல்லாரும் பேசிக்கொண்டு இருந்த போது புதிதாக யாரோ ஒருவர் தட்டு நிறைய பழங்களுடன் பகவானிடம் வந்து கொண்டு இருந்தார். வரும் போதே ஒரு வானர வீரன் வந்து தன் பங்கு பழங்களை பிடுங்கிக்கொண்டு எவருக்கும் பிடிபடாமல் ஓடிவிட்டான். ஹா ஹூ என்ற அதட்டல்களை கேட்டு அதை பார்த்த பகவான் "உள்ளே இது வரை வந்துவிட்டால் தனக்குக்கிடைக்காது என்று தன்பங்கை வழியிலேயே எடுத்துக்கொண்டுவிட்டான். இப்போது என்ன செய்வீர் ஐயா?” என்றார் தமாஷாக. எங்கள் எல்லோருக்கும் சிரிப்பு வந்தது.

இந்தக்கலாட்டா சற்று ஓய்ந்த போது பெண் குரங்கு அதன் மார்பை கட்டிக்கொண்டுஇருந்த குட்டியுடன் பழக்கூடையின் அருகில் வந்தது. அங்கிருந்தவர்கள் "போ, போ” என்று அதை விரட்டினார்கள். அதைப்பார்த்த பகவான், “பாவம், தாயாரும் குழந்தையும் ஐயா, ஏதாவது கொடுத்து அனுப்பக்கூடாதா?” என்றார் இரக்கத்துடன். பகவான் சொன்னது அவர்கள் காதில் விழாததால் அவர்கள் அதை மேலும் அதட்ட அது மிரண்டு ஒரு மரத்தின் மேலேறி ஒளிந்து கொண்டது. பகவான் மனமுருகி, “இதுவா நம் தர்மம்? ஸன்யாஸி என்று பெயர் வைத்துக்கொள்வது. உண்மையான ஸன்யாஸி வந்தால் ஒன்றும் கொடுக்காமல் விரட்டுவது, என்ன அநியாயம் பாருங்கள்! நாம் உக்கிராணத்தில் சாமான்களை சேகரித்து வைத்து பூட்டி சாவியை பத்திரப்படுத்துகிறோம். அதெற்கென்ன வீடா, வாசலா! போகட்டும். நாளைக்காவது ஏதாவது மறைத்து வைத்திருக்கிறதா? கிடைத்ததை தின்று ஏதேனும் ஒரு மரத்தின் மேல் படுத்துக்கொள்கிறது. குழந்தையை வயிற்றிலேயே கட்டிக்கொண்டு திரிகிறது. கால் முளைத்தவுடன் அதை விட்டு விடுகிறது. நிஜமான ஸன்யாஸி நாமா அதுவா? அதனால்தான் இதற்கு முன்வந்த அவன் தானே வழியில் எடுத்துக்கொண்டுவிட்டான். இவளோ பெண், என்ன செய்வாள்?” என்று கூறி அதன் பக்கமாக பார்த்து, “வாம்மா, வா” என்றதும் அந்த குரங்கு பகவானது ஸோஃபா பக்கத்தில் வந்து மிகவும் உரிமையோடு நின்றது. அதற்கு வேண்டிய பழங்களை கொடுத்து அனுப்பினார் பகவான்.

1 comment:

Geetha Sambasivam said...

இது குறித்துப் பலமுறை படிச்சிருக்கேன். என்றாலும் மீண்டும் படிக்கப் படிக்க மனம் மகிழ்ச்சி அடைகிறது. நன்றி.