Pages

Friday, April 5, 2013

கோளாறான எண்ணங்கள் - கொஞ்சம் ஆபத்தான பதிவு!


கொஞ்சம் ஆபத்தான பதிவு!
இந்த பதிவு கொஞ்சம் மேம்பட்ட சிந்தனை உடையவர்களுக்கு. மற்றவர்களுக்கு சரிப்படலாம்; இல்லாமலும் போகலாம்; சில விரும்பத்தகாத விளைவும் உண்டாகலாம். அதனால் முதல்லேயே இப்படி ஒரு எச்சரிக்கை!
எல்லாம் அவன் செயல்ன்னா கெட்ட விஷயங்களும் நடக்குதே அதுவும் அவன் செயலா? 'அப்படித்தான்' ன்னா அவன் என்ன இறைவன்? கருணையாளன்னு எல்லாம் சொல்லவே முடியாதே?
நாத்திகவாதிகளும் குதர்க்கவாதிகளும் அப்பப்ப முன் வைக்கிற வாதம் இது.

முதல்ல எல்லாம் அவன் செயல் என்கிறது சரிதானா என்று பார்க்கலாம்.

நாம் இப்ப வாதம் பண்ணுகிற லெவல்ல - சரியில்லை.
நாம் செய்கிற காரியங்களுக்கு நாமேதான் பொறுப்பு. ஒருத்தனை அடித்து விட்டு "நான் செய்யலை; கடவுள்தான் செய்தார்" ன்னா எந்த கோர்ட்டும் அதை ஒத்துக்காது. தண்டனை கொடுக்கத்தான் கொடுக்கும்.
ஒரு சூழ்நிலையை இறைவன் உருவாக்கி வைக்கிறான். எப்படிப்பட்ட சூழ்நிலை? அது நம்முடைய முன் ஜன்ம கர்மாக்கள் என்ன பாக்கி இருக்கோ, அதுல இந்த ஜன்மாவில என்ன அனுபவிக்கணும்ன்னு இருக்கோ அதுக்கு அனுகூலமான சூழ்நிலையை அமைச்சுக்கொடுப்பான். இப்ப மீதி நம் செயலை பொருத்து இருக்கு. நம்ம வாசனையை பொருத்து இருக்கு. அது முன் ஜன்மாக்களில பழகின வழியில போகத்தூண்டும். புத்தி செயல்பட்டா அதுக்கு மாறாகவும் போக முடியும். நல்ல சிந்தனையோட சரியா செயல்பட்டா நல்லதே நடக்கும். இல்லை கெட்ட சிந்தைனையோட செயல்பட்டா கெட்டது நடக்கும். இல்லை மிக்ஸ்ட் ஆகவும் போகலாம்.

முன்னேயே ஒரு பதிவில எழுதியபடி ஒரு மாடு முளையில கட்டி வெச்சு இருக்கு. அது எவ்வளவு மேய முடியும்? கயிறு அனுமதிக்கும் அளவுக்கு மேய முடியும். ஆனால் அப்படி அந்த பரப்பில இருக்கறதை முழுக்க மேயுமா இல்லையா என்கிறது அதோட சாய்ஸ்! பழக்கத்தால் இவ்வளோன்னு மேயலாம். இல்லை பசியால இவ்வளோன்னு மேயலாம். இல்லை சும்மா இருக்கலாம்!

இதேப்போலத்தான் அமைகிற சூழ்நிலையில ஒருத்தர் எவ்வளோ பெறலாம் என்பது ஒரு லிமிட்டுக்குள்ள அவங்களோட சாய்ஸ்!

ஆனா இதிலேயே சிலர் எனக்குன்னு ஒண்ணுமில்லை; எல்லாம் உன் செயல்ன்னு பலமா தோன்றி உண்மையா சரண்டர் செய்துட்டாங்கன்னா - இங்கே கவனிக்கணும், உண்மையான சரண்டர் பத்தி பேசறேன்; சும்மா உதட்டளவுக்கு சொல்கிற சரண்டர் இல்லை.- அதுக்கப்பறம் அவரை பொருத்தவரை நடக்கிற எல்லாமே கடவுளோட காரியமாத்தான் இருக்கும். அதாவது ஒண்ணு அவரோட கர்மாவை தீர்க்கிறதா இருக்கும் அல்லது சரியாகவே இருக்கும். ஏதா இருந்தாலும் உண்மையா சரண்டர் பண்ண ஆசாமி கவலையே பட மாட்டார். "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" ன்னு இறை நினைவுடன் சும்மாவே இருப்பார்! அப்படி இல்லாமல் "ஏன் என்னை கைவிட்டீர்" ன்னு புலம்பறவங்க முழுசா சரண்டர் செய்தவங்க இல்லை.

இன்னொரு லெவல்ல அது சரிதான்! அதாவது எல்லாம் அவன் செயல்தான்!
நடக்கிறது எல்லாமே அவன் செயல்தான்! இன்னைக்கு நான் கஷ்டப்படறேன்னாலும் அது அவன் செயல்தான்; சுகப்பட்டாலும் அது அவன் செயல்தான்!

இதைப்பத்தி பேசிகிட்டு இருக்கறப்ப ஒரு சகா கேட்டார். ஒரு குழந்தையை கொன்னு போடறான். அது சரிதானா? அது கெட்ட செயல்தானே? அதுவும் கடவுள் செய்ததுதானா?

ரைட்! அது கெட்ட செயல்தான். அதுக்கு அந்த ஆசாமிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இந்த மாதிரி கொடுமைக்கு அவனுக்கு மரண தண்டனை கொடுக்கணும்.

அதுதான் நடந்து இருக்குன்னு வெச்சுக்கலாமா?

எப்படி?

முன் ஜன்மத்தில இந்த ஆசாமி ஒரு குழந்தையா இருந்து, கொலையான குழந்தை ஆசாமியா இருந்து இதே போல கொன்னு இருந்தா?

இந்த மாதிரி சமாசாரங்கள்தான் 'தொந்தம்' என்கிறது. இப்ப கெட்ட விஷயம் ஒண்ணு உதாரணமா பார்த்தோம். இதே போல நல்லதும் இருக்கலாம். ஒருத்தர் இன்னொருத்தருக்கு நிறைய பொருள் உதவி செய்து இருந்தா, அடுத்த ஜன்மத்தில அது ரிவர்ஸ் ஆக வாய்ப்பு இருக்கும். முன்னே சொன்னது பாபம் ன்னா இப்ப இது புண்ணியம். இரண்டுமே நம்மை இன்னொரு பிறவில ஆழ்த்துகிற விலங்குதான். ரா.கி இதை பொன் விலங்கு என்பார்! இரும்பா இருந்தாலும் பொன்னா இருந்தாலும் விலங்கு விலங்குதானே?!

சரி சரி எல்லாத்துக்கும் அவனே பொறுப்புன்னா ஏன் கெட்டது நடக்கணும்?

இங்கதான் கொஞ்சம் டேஞ்சர்! சரியா புரிஞ்சுக்கணும்.
'நல்லது', 'கெட்டது' நாமா உருவாக்கிக்கொண்டது. மேன் மேட் கான்சப்ட்! அல்லது மனிதனுக்காக கடவுள் உருவாக்கிக்கொடுத்த கான்சப்ட். (வேறு வழியில்லை! ரிஷிகள் மூலமா சாத்திரங்களில நல்லது கெட்டது சொல்லி இருக்கே!)
இறைவனைப்பொறுத்த வரை அவன் சாம்ராஜ்யத்தில் ஒரு செயல், அதுக்கான எதிர் செயல்.... இதை நடத்திக்கொண்டே போவதுதான். அல்லது அதுக்கான சூழ்நிலையை அமைச்சு கொடுப்பதுதான். இதில் நல்லதும் இல்லை; கெட்டதும் இல்லை. ந பாபம், ந புண்யம்!
இறைவன் ஒரு ஜட்ஜ். கொஞ்சம் கருணைக்கு பாத்திரமா இருந்தா, அதாவது வேற நிறைய புண்ணிய காரியங்கள் செய்து இருந்தா, கொஞ்சம் கன்டோன் பண்ணி கொஞ்சம் கேன்சல் பண்ணி தண்டனையை குறைக்கலாமே தவிர, தண்டனை இல்லாமல் செய்வது நீதி ஆகாது. அதனால் நம்மோட செயல்களுக்கு எதிர்வினை நடத்தவே நடத்துவான்.

பின்ன இது ஒரு விஷஸ் சைக்கிள் ஆகாதா? நான் அவனை அடிக்க அடுத்த ஜன்மத்தில் அவன் என்னை அடிக்க அடுத்த ஜன்மத்தில..... ஆமாம் ஆகும். அதுக்குத்தான் வேற வழி சொல்லி இருக்கேன்.... வேற பதிவில.....

Post a Comment