Pages

Tuesday, April 30, 2013

ப்ரார்த்தனை


பூஜையின் முடிவில் ப்ரார்த்தனை செய்வது உண்டு அல்லவா? பலருக்கும் பல வேண்டுதல்கள் இருக்கும். அவற்றை வேண்டும் எனக்கேட்பதில் தவறே இல்லை

 இருந்தாலும் பல வருஷங்களாக என்னால் இதை செய்யவே முடியாமல் இருக்கிறது. ஓரிரு முறைகள் செய்திருப்பேன்; அவ்வளவே.
நமக்கு சரியாக வேண்டிக்கொள்ளத்தெரியாதுன்னு நம் பெரியோர்களுக்குத்தெரியும். ஆகவே அவர்களே எழுதி வைத்து விட்டார்கள். நான் பூஜை முடித்து அதன் அங்கமாக சொல்வது இதுவே.

அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வ
அனாயாஸேன மரணம்ʼ வினாதை³ன்யேன ஜீவனம்ʼ
தே³ஹி மே க்ரிபயா ஶம்போ⁴ த்வயி ப⁴க்திம்ʼ அசஞ்சலாம்

என்ன பொருள்?

நான் உன்னையே சரணடைகிறேண். உன்னைத்தவிர வேறு யாரையும் இல்லை. ஆகவே மஹேஶ்வரா, கருணை கொண்டு என்னை காப்பாற்றுவாய்.

உன்னிடம் அப்படி என்ன கேட்கிறேன்
 
பிறந்தவர் எல்லாரும் ஏதோ ஒரு நாள் இறந்தே போக வேண்டும். அதை விட இயற்கையானது என்ன இருக்கிறது? ஆனால் எப்படி இறந்து போக வேண்டும் என்று கேட்க முடியும் இல்லையா? நோய்ப்பட்டு, இழுத்து பிடித்துக்கொண்டு, தானும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டப்படுத்தி, சேமிப்பு எல்லாவற்றையும் கரைத்து, தலையெடுத்து வரும் குழந்தைகளின் கனவுகளை சிதைக்கும் படி அவர்களுக்கு செலவு வைத்துக்கொண்டா போக வேணும்?? வேண்டாம், வேண்டாம். இன்றைக்கு படுத்தேன். நாளை காலை எழுந்திருக்கவில்லை என்பது போல போய் சேரவேணும். ஆயாசம் இல்லாமல்.

சரி, அந்த நாள் வரும் வரை? செல்வத்தில் திளைக்க வேண்டும் என்றா கேட்கிறேன்? அது உன்னை மறக்க வைத்து விடுமே? வேண்டாம் வேண்டாம்! அப்படிப்பட்ட செல்வமே வேண்டாம். அதற்கு என்று வறுமையில் கஷ்டப்பட வைத்துவிடாதே! வறுமை இல்லை என்ற நிலையில் வைத்துவிடு போதும்! என் ஜீவனம் வறுமையில்லாமல் இருக்கட்டும்.

அத்தகைய இந்த வாழ்வு எதற்கு? உன்னிடம் சஞ்சலப்படாமல் பக்தி வைக்கத்தான்!
பலரையும் பார்க்கிறேன். இன்றைக்கும் இந்த சாமி பின்னால் ஓடுகிறார்கள். நாளை இன்னொரு சாமி இன்னும் வரப்ப்ரசாதி என்று யாரும் சொன்னால் அங்கே ஓடுகிறார்கள். கோவில் கோவிலாக சுற்றுகிறார்கள். அப்படியும் த்ருப்தி வருவதில்லை! இன்னும் சிலர் ஏதேனும் வேண்டிக்கொள்கிறார்கள். அது நடக்கவில்லை என்றால் சலிப்பு வந்து விடுகிறது. தெய்வம் இருக்கிறதா என்றே கூட சந்தேகம் வருகிறது! இப்படி எல்லாம் சலித்துக்கொண்டு இராமல் நிலையான பக்தி வேண்டும். கருணை கூர்ந்து அதையும் அருள்வாயாக!

 

No comments: