Pages

Wednesday, April 10, 2013

கர்மாக்களின் வகைகள்


கர்மா மனம், சொல், உடம்பு ஆகியவற்றால் செய்யப்படுகிறது.

மனதால் செய்யப்படும் கர்மாக்களில் ..
இறைவனை குணங்களுடன் - இந்த ரூபம், இந்த சக்தி என்பது போல – உபாசிப்பது; இப்படிப்பட்ட குணங்கள் ஏதும் இல்லாமல் உபாசிப்பது. பக்தி, வைராக்கியம் (பற்றின்மை) இவற்றை ஒட்டிய எண்ணங்கள், பர லோகம் குறித்த சிந்தனைகள் ஆகியன புண்ய கர்மாக்கள். உலக விஷயங்களை அனுபவிப்பதிலேயே நாட்டம், மற்றவர்களுக்கு கெடுதல் செய்யும் எண்ணம், வேதம் சாஸ்திரங்கள் நம்பத்தகுந்தவை அல்ல என்னும் எண்ணம், தர்மம் அதர்மம் ஏதும் இல்லை என்னும் எண்ணம் - இவை பாப கர்மாக்கள். இந்த எண்ணங்கள் பலதும் கலந்து இருப்பது மிஸ்ர - கலந்த – கர்மாக்கள்.

சொல்லால் செய்யப்படும் கர்மாக்களில் வேத அத்யயனம், சாத்திரங்கள் வாசித்தல், கீதா பாராயணம், ஸ்ஹஸ்ரநாமங்கள் ஜபம், பஞ்சாக்ஷரம் முதலான மந்திர ஜபங்கள், பகவந்நாம சங்கீர்த்தனம், பரோபகாரம் செய்வதற்கான சொற்கள், உண்மை பேசுதல், ஹிதமாக பேசுதல் போன்றவை புண்ணியமானவை. வேத சாத்திரங்களை நிந்தித்தல், தேவதா நிந்தனை, பொய் பேசுதல், புறம் சொல்லல், கடுமையான பேச்சு, ஏளனம் செய்தல் - இவை பாப கர்மாக்கள். வேதாத்யயனம், பூஜை செய்தல், மேற் சொன்ன புண்ணிய சொற்கள் இவற்றின் நடுவில் பிறரை நிந்தனை செய்தல், பொய், பரிஹாஸம், லோக சம்பந்தமான சொற்கள் இவை கலந்த கர்மாக்கள்.

புண்ய தீர்த்த ஸ்னானம், குரு, தேவதை இவர்களை வணங்குதல், தேவதா பூஜை, நமஸ்காரம், சாதுக்களை தரிசித்தல், த்யாகம், உலக நன்மைக்காக சஞ்சரித்தல் - இவை சரீரத்தால் செய்யப்படும் புண்ய கர்மாக்கள். பிறரை ஹிம்சித்தல், பரஸ்த்ரீ சங்கம், திருட்டு, துஷ்ட சகவாசம் ஆகியவை காயிக பாப கர்மாக்கள். அன்னதானம் செய்ய மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்தல், கோவில் கட்ட பிறர் சொத்தை அபகரித்தல், தண்ணீர் பந்தல் ஏற்படுத்தி, அதற்கு உழைத்தவனுக்கு கூலி கொடுக்காமல் இருப்பது போன்றவை புண்ணியம் பாபம் கலந்தவை.

இவற்றை அவ்வப்போது விசாரிக்க வேண்டும். அதாவது நம் செயல்கள் இவற்றில் எங்கே அமைகின்றன என்று பார்க்க வேண்டும்.

வாழை மரம் வளர்ப்பதில் முக்கிய பலன் வாழைப்பழம் பெறுவது என்றாலும், இடையில் வாழைப்பூ, வாழை இலை ஆகியன பெறுவது இடையில் ஏற்பட்ட பலன் போல....
முன் சொன்ன விசாரணயால் இவ்வளவு செய்தாலும் ஆத்மா இவை எவற்றுடனும் சம்பந்தப்படாமல் இருக்கிறது என்று திடமாக அறிவது முக்கிய பலனாகும். இடையில் புண்ணிய காரியங்களையே செய்து வர வேண்டும், அப்படி முடியாவிட்டால் கலந்த கர்மாவாக இருக்க வேண்டும். பாப கர்மாக்களை ஒரு போதும் செய்யக்கூடாது என்று உணர்ந்து செயல் படுவது இடைப்பட்ட பலனாகும்.

 

4 comments:

ஸ்ரீராம். said...

புண்ய கர்மாவோ, பாப கர்மாவோ... விதிதானே காரணம்?

திவாண்ணா said...

கர்மாவுக்கு வாசனைகள்தான் காரணம். ஒரு கிவன் சிசுவேஷனுக்கு இன்ன ரெஸ்பான்ஸ்ன்னு பழகிபோச்சு. அது இந்த ஜன்மமோ போன ஜன்மங்களிலோ.... அதனால் சாதாரணமா ரியாக்ஷன்தான் இருக்கு, ஆக்ஷன் இல்லை. இது புரிந்து கொண்டா ஒவ்வொரு செயலுக்கும் முன்னே யோசிச்சு செயல்படுவோம். அப்ப அது புண்ய கர்மாவா இருக்குமா அல்லது பாப கர்மாவா இருக்குமா என்கிறது நம் கையில் இருக்கும்.

இன்னம்பூரான் said...

'வாழை மரம் வளர்ப்பதில் முக்கிய பலன் வாழைப்பழம் பெறுவது என்றாலும், இடையில் வாழைப்பூ, வாழை இலை ஆகியன பெறுவது இடையில் ஏற்பட்ட பலன் போல....'
~ என்னே பொருத்தமான உவமை!
இன்னம்பூரான்

திவாண்ணா said...

இ சார், ஆமாம். க்ரெடிட் வாசுதேவ மனனம் எழுதியவருக்கு.....