ஏதேனும் ஒரு நிமித்தத்தை ஒட்டி செய்யப்படும் ஶ்ராத்தம் நைமித்திக ஶ்ராத்தம் ஆகும். ஸபிண்டீகரணம் வரை செய்யப்படும் ப்ரேத ஶ்ராத்தம், ஸங்க்ரமண ஶ்ராத்தம், க்ரஹண ஶ்ராத்தம், ஸோதகும்ப ஶ்ராத்தம், நாந்தீ ஶ்ராத்தம் - இவை நிமித்தம் ஒட்டிய நைமித்திக ஶ்ராத்தங்கள் ஆகும்.
நாந்தீ ஶ்ராத்தம்:
இது சுப காரியங்களை ஒட்டி செய்யப்படுவது. ஆகவே மங்கலமானது. பிள்ளை பிறந்த பின் செய்யப்படும் ஜாதகர்மா முதலான அனைத்து கர்மாக்களிலும் உண்டு. சௌளம், உபநயனம், விவாஹம்… சேர்த்து செய்யப்படும் பல சுப கர்மாக்களுக்கு ஒரு முறைதான் நாந்தீ செய்ய வேண்டும். முதலில் முந்தைய நாளில் மாத்ரு வர்க்கம், அடுத்து நிகழ்ச்சி அன்று பித்ரு வர்க்கம் மூன்றாவதாக மங்கல நிகழ்வுக்கு அடுத்த நாள் மாதாமஹ வர்க்கம் என்று 3 ஶ்ராத்தங்களாக செய்யச்சொல்லி இருக்கிறது. சரி சரி… முடியாவிட்டால் முந்தைய நாளிலேயே மூன்றும்.
மேலே போகலாம்.
ஶுப காரியங்களை ஒட்டிச்செய்வதால் பலதும் மாறும். இதன் முக்கிய காலம் காலை - ப்ராதஹ்காலம். பார்வண ரூபமாக செய்வதே நல்லது. இல்லை ஹிரண்யமாக செய்யலாம். அது இப்போது இல்லாமல் அரிசி வாழைக்காய் பணம் என்று தத்தம் செய்வதாக மாறிவிட்டது. இது ஆமம், அக்னியில்லாதவன், தேசாந்திரத்தில் இருப்பவன், ரஜஸ்வலாபதி ஆகியோர் செய்யலாம். மற்றபடி ஆமம் அந்தணருக்கு உகந்ததல்ல. அதையே ஸ்யம்பாக அன்னம் ஸ தக்ஷிணாகம் ஸதாம்பூலம் என்று சொல்லி மாற்றி இருக்கிறார்கள். பராசரர் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் தான்யத்தை கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படி கொடுப்பதானால் அன்னம் போல 4 மடங்கு கொடுக்க வேண்டும்.
பார்வண விதானமாக செய்யப்படும் நாந்தி ஶ்ராத்தத்தில் விஶ்வேதேவர் சத்ய வஸூ என 2. பித்ரு வர்க்கம் 3. மாதா வர்க்கம் 3. ஸபத்னீக மாதாமஹ வர்க்கம் 3. (இவற்றில் 3 இல்லையானால் குறைந்தது 2) மஹா விஷ்ணு 2.
வரணம் முதல் எல்லா இடங்களிலும் கோத்ரம் நாமம் இல்லை. நாந்தீ முக பித்ரு என்ற ரீதியில் உறவை சொல்லியே வரணம் இத்தியாதி. எள்ளுக்கு வேலையே கிடையாது. எல்லாம் உபவீதியாகவே.
சிலர் இதில் தர்ப்பங்களை பயன்படுத்தாமல் அருகம்புல்லை பயன்படுத்துகின்றனர். ஆசனத்துக்கு மடிக்காத தர்ப்பைகள். எள்ளுக்கு பதில் யவை. அப்ரதஷிண பரிசேஷணம் இல்லை. ஸ்தாலீபாகம் போலவே ஹோமம். கோத்ரம் நாமம் இல்லை. நாந்தீ முக பித்ரு என்ற ரீதியில் எல்லாம் வரும். ஸ்வதா சப்தம் கூட வராது. அபிஶ்ரவணம் இல்லை.
பிண்டம் இலந்தம் பழம் தயிர் இவற்றை அன்னத்துடன் கலந்து. கிழக்கு நோக்கி அமர்ந்து கிழக்கு நுனி தர்ப்பங்களில் கையை மறிக்காமல் வைக்கப்படும். பிண்ட பாத்திரங்களை கவிழ்ப்பது இல்லை.
24 பிண்டங்கள். வழக்கம் போல உருண்டை பிண்டமாக பிடிக்காமல் எடுத்து அப்படியே வைக்க வேண்டும்.
பார்வண ஶ்ராத்தம் போலவே 6. கூடுதலாக மாதாமஹ வர்க்கத்துக்கும் அப்படியே. 12 ஆயிற்று. ஒவ்வொரு பிண்டத்துக்கும் அருகில் ‘யே சத்வாமனு’ என்று வைப்பது 12. ஆக 24.