Pages

Friday, July 1, 2016

கோளாறான எண்ணங்கள் - லேட்டஸ்ட்!


பாசத்தை விட்டுடு. நடக்கிறதை சினிமா போல பாரு. இந்த உலக நடப்புகள் மித்யா. திரையில் தெரியற சினிமா போல. உண்மைன்னு தோணினாலும் அது உண்மையான உண்மை இல்லை!
ஒரு சாட்சியா நடக்கறதை வேடிக்கை பாரு!

ஆன்மீக பயணத்துல இப்படி அப்பப்ப காதுல விழுந்திருக்கு. லோகத்தில நடக்கிற ஆயிரத்தெட்டு சமாசாரங்களைப்பத்தி கவலைப்படறதுன்னா இந்த ஜன்மம் போறாது. எல்லாம் கர்ம வினைப்படி நடக்கிறதுன்னு புரியற போது, முயற்சி செஞ்சு பாத்ததுல பெரும்பாலான நிகழ்வுகளை “ரைட் நடக்க வேண்டியது நடக்கிறது. இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லே” ந்னு கடந்து போக முடியறது. இது கஷ்டமா தோணினாலும் சாதிக்கக்கூடியதுதான்னு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கு. சமூக வலைத்தளங்களில பலரும் பல விஷயங்களுக்கும் பொங்கறதைப்பாத்தா ஒரு பக்கம் சிரிப்புதான் வரது. சம்பந்தமில்லாத பலதுக்கும் பொங்கி, சண்டைப்போட்டு நட்புக்களை முறிச்சுக்கக்கூட தயாரா இருக்காங்க! இதையும் கர்ம வினைன்னு தாண்டலாம். ஆனா இது இப்ப புதுசா செய்யற கர்மா; கொஞ்சம் முயற்சி செஞ்சா விலக்கிக்கூடியது. போகட்டும்.

இப்ப என் பிரச்சினையே நடக்கிறதை சினிமா மாதிரி பார்க்க முடியலை; பார்க்கிறது நாடகம் மாதிரி இருக்கே!

என்ன வித்தியாசம் என்கிறீங்களா? சினிமாவில விலகி இருக்கறது சுலபம். எப்ப வேணும்ன்னாலும் இது சினிமா; எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்னு நினைவு படுத்திக்கொண்டு அதோட தாக்கத்திலேந்து மீளறது சுலபம். எந்த கதாநாயகன் யார்கிட்ட அடி வாங்கினா எனக்கென்ன? :-) சினிமாவில நாம் வெறும் பார்வையாளர்தான்!

நாடகம் அப்படி இல்லை. அதுல நாமும் ஒரு பாத்திரம். என்னத்தான் கடவுள் என்கிற டைரக்டர் இயக்கறா மாதிரி இயங்கறோம்ன்னாலும் அது நமக்கு புரியறதில்லையே. விலகி இருக்கறது கஷ்டமா இருக்கு. சும்மா இருக்கவும் முடியலை. நாடகத்தில நாமும் ஏதோ செய்ய வேண்டி இருக்கு; வசனம் பேச வேண்டி இருக்கு. இதுக்கான ஸ்க்ரிப்டையும் நம்மகிட்ட கொடுக்கலை! இதுல நாமா செய்யக்கூடியது, பேசக்கூடியது ஏதேனும் இருக்கா என்கிறது அப்பப்ப வந்து போகிற கேள்வி. சந்தர்பத்துக்கு தகுந்தாப்போல (?) எதையாவது உளறிட்டு இருக்கோம்! அது சரியா தப்பான்னு ஒண்ணும் புரியறதில்லே. இதையும் நாமா செய்யலே, நாம் சொல்லறதையும் செய்கிறதையும் அவனே நிர்ணயிச்சு இருக்கான், அவனின்றி அணுவும் அசையாதுன்னு சிலர் சொல்லறது புத்திக்கு தெரிஞ்சாலும் அனுபவத்துக்கு வர மாட்டேன் என்கிறது! ஐயோ இப்படி சொல்லிட்டோமே, செஞ்சுட்டோமேன்னு பச்சாதாபப்படுகிறோம்! இந்த தாக்கத்திலேந்து மீளறது சுலபமா இல்லே! நம்மைவிட விட்றா சூனா பானா ந்னு போறவங்க பரவாயில்லேன்னு தோணறது!

ரமணர் தெளிவா சொல்லிட்டார்! ‘அவரவரது பிராப்த பிரகாரம், அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது. நடப்பதை என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மவுனமாய் இருத்தல் நன்று’

ம்ம்ம் என்ன செய்யலாம்? மௌனமா ஒரு போஸ்ட் எழுதி போட்டுடலாம். அதையாவது தேத்திப்போம். மத்தபடிக்கு இதுல – இந்த பொலம்பல்ல- என்ன ப்ரயோஜனம்ன்னு புரியலை!

No comments: