Pages

Wednesday, April 13, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 9


மாலை நேரம். மெல்ல இருட்ட ஆரம்பித்து இருந்தது. டீக்கடையில் டீயை உறிஞ்சியபடி இளைஞன் பராக்கு பார்த்துக்கொண்டு இருந்தான். எதிர் சாரியில் அவன் பார்வை படிந்தது. அங்கிருந்து 'சட் பட்' என்று தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருந்தது. பார்வையை மறைத்துக்கொண்டு இருந்த ஒரு நபர் எழுந்து போக சத்தம் வந்த இடம் தெரிந்தது. அங்கே ஒரு அம்மணி கொசு பேட்டை வைத்துக்கொண்டு டி-20 கிரிக்கெட்காரர் மாதிரி ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார்.
இளைஞனின் சிந்தனை விரியலாயிற்று. இது என்ன? கொலை. ஆனா கொல்லாம இருக்க முடியுமா என்ன? அது நம்பளை கடிச்சு வியாதி வரதே! சிக்கன்குனியா டெங்குன்னு ஏதேதோ ஆயிரம் சொல்லறாங்களே? ம்ம்ம்ம்? அது சரி! கொசு கடிக்கற எல்லாருக்கும் வியாதி வரதா? இல்லையே! எத்தனையோ எளிய குடும்பங்களில கொசுவை விரட்ட வழி இருக்கா என்ன? அவங்க கொசு கடில அவஸ்தை படறாங்க; ஆனா பலருக்கும் வியாதி வரலையே! அது வரதுக்கு கர்மா இருந்து இதை ஒரு வாய்ப்பா வெச்சுக்கொண்டு வரும் போலிருக்கு!

கொலையைத்தவிர வேறு ஒண்ணுமில்லை. ஏதோ வேலை செஞ்சு கொண்டு இருக்கோம். கொசு கடிக்கிறது. யோசிக்காமலே ரிப்லெக்ஸ் ஆக்‌ஷனா அத அடிக்கறோம். சில சமயம் அடி பட்டு சாகிறது. பல சமயம் தப்பி விடுகிறது. நாமும் வேலையை தொடர்ந்து செய்யறோம். கொஞ்ச நேரத்திலேயே திரும்பவும் கொசுக்கடி. அதே கொசு. அல்லது முன்னே கொசு அடிபட்டு செத்திருந்தா புதுசா வேற கொசு. என்ன செஞ்சாலும் கொசுக்கடியில் இருந்து தப்ப முடியலை.
ரூம்ல ரிபெல்லர், ஸ்ப்ரேன்னு என்ன செஞ்சு விரட்டி இருந்தாலும் டாய்லெட்டில் உட்காந்துட்டு வரும் ஓரிரு நிமிஷத்திலேயே அது வந்து கடிச்சு தீர்த்துடறது!
இப்ப இந்த கொசுவை கொன்னா புது கர்மா வந்து பிடிச்சுக்குமா? இல்ல நாம அடிச்சுகொல்லறதுதான் கர்மாவை தீக்கிறதா? புரியலையே! ம்ம்ம்ம்?
நாம அறியாம அடிச்சு அது செத்தா அதோட கர்மாவை தீர்த்துக்கறதுன்னு வெச்சுக்கலாமா? அப்படித்தான் போலிருக்கு!
கொசு விரட்டி வெச்சா? டிவி விளம்பரத்துல என்னதான் க்ராபிக் கொசு செத்து விழுந்தாலும் நிஜத்துல எல்லாம் மயக்கமா விழுது அல்லது கிட்ட வராம பறந்து போயிடுது. இது கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு. ஆனா இந்த பேட்டை வெச்சுண்டு அடிச்சா? அதை தேடி தேடி கொல்லறா மாதிரின்னா இருக்கு? ம்ம்ம்ம்? இது புதுசா கர்மாவை சேர்க்கும்ன்னுதான் தோணறது!
குழப்பமா இருக்கே? சரியா, தப்பா?
"சரிதான்பா !" என்ற குரல் கேட்டது. இளைஞர் திரும்பி பார்த்த போது பெரியவர் பத்தடி தள்ளி கூட்டத்தில் கரைந்து கொண்டு இருந்தார்!

No comments: