Pages

Thursday, May 7, 2009

ஜீவன்முத்தரும் பிராரத்தமும்



ஒரு பஞ்சுப்பொதி இருக்கு. அதை எரிக்கணும்னா ஒரு சின்ன தீக்குச்சி தீயே போதும். ஊழித்தீ ன்னா? கேக்கவே வேணாம். பல ஜன்மங்களா சேர்ந்து நம்ம துரத்திக்கிட்டே வர சஞ்சித கர்மங்கள் இருக்கு இல்லையா? அவை எல்லாம் தத் பத தரிசனம் என்கிற அஹம் ப்ரம்மாஸ்மி என்கிற பாவனை திடமா வந்ததுமே எரிந்து போகும். ஞானத்தீயால அத போல அழிக்கப்படுதாம். த்வம் பத தரிசனம் என்கிற தான் யார்ன்னு நிச்சயமா அறிஞ்ச உடனே அன்னியமா ஒண்ணும் இல்லாததால யார் யாருக்கு என்ன செய்ய முடியும்ன்னு ஒரு நிலை வந்து விடுகிறதாலே பற்றில்லாத கர்மத்தால ஆகாமியம் வராமல் போகும். மீதி இருக்கிறது பிராரத்தம்தான். அது வில்லுலேந்து கிளம்பின அம்புபோல. இலக்கை அடைஞ்சே தீரும். அதனால அது அனுபவிக்க அனுபவிக்கத்தான் தீரும். அது தீரும் போது அஸி பத நிலை வந்துடும். அடியோட தான் என்கிறது போய் சகஜ சமாதி அடைந்துடுவார். அதுக்கு அப்புறம் வெளியே வர வேலையே இல்லை. அவர் வரனாகி, வரீயானாகி, அப்புறம் வரிட்டனாயிடுவார்.

சஞ்சிதமுன் கட்டுவினை சற்குருநோக் காற்சரியும்
பஞ்சுமலை பட்ட நெருப்பாய்.
கொடுப்பானு மீசனதை கொள்வானுமீசனெனின்
மடுக்கா வெதிர் வினைகள் வந்து.
உள்ளப் பொசிப்பெல்லா முண்டொழிப்ப தன்றியிதைத்
தள்ளப் படாதெவர்க்குந் தான்

வள்ளலார் _ பாசவியல்

102.
கன்மத்திரயம் நீங்குதல்:
பஞ்சினை யூழித்தீப்போற் பலசன்ம விவித வித்தாஞ்
சஞ்சித மெல்லாஞானத் தழல்சுட்டு வெண்ணீறாக்கும்
கிஞ்சிதா காமியந்தான் கிட்டாமல் விட்டுப்போகும்
விஞ்சின பிராரத்தத்தின் வினையநு பவித்துத்தீரும்.

பஞ்சினை ஊழித்தீப்போல் பல சன்ம விவித (பல விதமான) வித்தாம் சஞ்சிதம் எல்லாம் ஞானத் தழல்சுட்டு வெண்ணீறாக்கும். கிஞ்சித் (கொஞ்சம்) ஆகாமியம்தான் கிட்டாமல் விட்டுப்போகும் (சம்பவியாமல் நீங்கும்). விஞ்சின (மீதி) பிராரத்தத்தின் வினை அநுபவித்துத்தீரும்.
தாத்பர்யம்: சஞ்சித கர்மம் பரஞானத்தாலும், ஆகாமியம் ஜீவத்துவம் நஷ்டமடைவதாலும், பிராரத்தம் அனுபவித்தும் தீரும்.
---
நினைவுறுத்தல்: சஞ்சித கர்மம்: பிறவி எடுக்கும் போது நாம் கொண்டு வந்த மூட்டை. ஆகாமியம்: இந்த ஜன்மத்தில் நாம் உண்டாக்கிக் கொள்வது. பிராரத்தம்: பலன் தர துவங்கிவிட்ட கர்மா.
--
அநுபவித்துத்தீருதல்: புலி என நினைத்து விட்ட அம்பு பசு என அறிந்தாலும் எப்படி நிற்காதோ அது போல பலன் தர தொடங்கிவிட்ட கர்மா ஞானம் வரினும் நிறுத்த இயலாமல் இச்சை, அனிச்சை, பர இச்சைகளாக புசித்து தீரும்.



Wednesday, May 6, 2009

ஜீவன் முத்தரும் கர்மங்களிலே உழலுவானேன்?



இப்ப சீடன் கேக்கிறான் ஸ்வாமி ஞானமடைஞ்ச ஜீவன் முத்தரும் கர்மங்களிலே உழலுகிற அஞ்ஞானிகள் மாதிரி பிரபஞ்ச விவகாரங்களை பண்ணா எப்படி? இச்சை, கர்மங்கள் ஒழிஞ்சு எப்படி இவங்களுக்கு முக்தி கிடைக்கும்?

குரு சொல்கிறார்: அப்பனே ஆகாசம் இருக்கு. அது எல்லா இடத்திலேயும் இருக்கு. ஆனா எதையும் அது பற்றி இல்லை. மத்த நாலு பூதங்களையும் பாத்தா ஒண்ணோட ஒண்ணு சம்பந்தம் வந்தா உறவு கொண்டாடி விடும். ஆகாசம் எல்லாத்துக்கும் இடம் கொடுத்தாலும் எதையுமே பற்றாம இருக்கும்.

அது போல அஞ்ஞானிகள் நாம் தேகி; கர்மம் செய்யறோம்ன்னு நினைவோட செய்வதால அவங்களுக்கு அந்த செயலாலே பற்றுதல் உண்டாகும். பலனை அவங்க அனுபவிக்கனும். ஆனா ஞானியோ தனக்கு தேகம் இருக்கறதாவே நினைக்கிறதில்லை. தான் செய்கிறோம் என்கிற நினைப்பு அவனுக்கு இல்லை.  பிராரத்தத்தினாலே தானா வருகிறதை செய்து கொண்டு போறாங்க. வெளியே இருக்கிறவங்களுக்கு இவங்க காரியம் செய்கிறதா தோணிணாலும் இவங்களோ சாட்சியா மட்டுமே இருக்காங்க. (தானே செய்கிற விஷயங்களையே அவங்க ஒரு சினிமாவை பாக்கிறது போல பாப்பாங்க.) ஆதனால கர்ம பலன் அவங்களை பிடிக்கிறது இல்லை.

பிரம்ம வித்து சாட்சியா மட்டும் தாமரை இலை நீர் போல இருந்து உலகிலே இருந்தாலும், அன்னியர் துக்கத்தைப்பாத்து தான் துக்கிக்கிறாராம்.

ஏன் அன்னியர் துக்கம்? அதான் இவருக்குன்னு இருக்கிற உடம்பை நாம பாத்தாலும் இவர் பாக்கிறதில்லையே? அப்ப இவரோட உடம்புக்கு நேருகிற துன்பங்கள் இவரை பாதிக்கிறதில்லை. பின்னே எப்படி பிராரத்த கரமா அனுபவிச்சு கழிகிறது? இப்படி மறைமுகமாவும் இன்னுமொரு பின்னால் சொல்லப்போகிற ஆச்சரியமான விஷயத்தாலும்!

மத்தவங்களுக்கு ஏற்படுகிற துன்பத்தை தனக்கு ஏற்பட்டதாவே இவர் பாத்து கஷ்டப்படுவார்! இந்த மாதிரியான ஜீவ காருண்ய செயல்களாலே கர்மா அனுபவிக்கப்பட்டு நீங்கும்! இதுக்கான வாய்ப்பை இவர் தேடிப்போக வேணாம். பிராரத்த கர்மாவே அவற்றை கொண்டுவந்து சேர்க்கும்!

ஆனா எப்பவுமே ஜீவ முக்த தன்மை கெட்டுப்போகாது. பற்று இல்லையானாலும் திரிபுடி (செய்கிறவன், செய்கை, செய்யப்படுவது) உண்டு. மனசும் இருக்கும். ஆனா அது சத்துவமாகவே இருக்கும்.

101.
பிரமவித்துக்களும் அஞ்ஞானிகளைபோலே விவகாரம் செய்தால் சம்சார பந்தம் எப்படி நீங்கும்?
பிரமஞானிகளுங் கன்மப் பேதையர் போலே வாழ்ந்தால்
திரமுறுமஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியேதென்றால்
பரவுமா காச மொன்றிற் பற்றாது மற்றை நாலும்
விரவின தோடுங் கூடும் விதமிரு வோரு மாவார்

பிரமஞானிகளும் (பிரமவித்துக்களும்) கன்மப் பேதையர் (கர்மிகளான அஞ்ஞானிகள்) போலே வாழ்ந்தால், ஸ்திரமுறும் (நிலையான) அஞ்ஞானம் போய் செனியாத (மீண்டும் பிறக்காத) வழியேது என்றால், பரவும் ஆகாசம் (மற்ற 4 பூதங்களில்) ஒன்றில் பற்றாது, மற்றை நாலும் (4 பூதங்களும்) விரவினதோடும் கூடும் (கலந்து நிற்கும்) விதம் இருவோரும் ஆவார் (ஞானி அஞ்ஞானிகள் இருவரும் ஆவார்)
தாத்பர்யம்: கர்மம் ஒன்றானாலும் கருத்து வேறானதால் பிரமவித்து அஞ்ஞானம் நீங்கி மோட்சம் அடைவர்.



Tuesday, May 5, 2009

எப்படி முத்தர்ன்னு கண்டு பிடிக்கிறது?



இப்படி பிரமவித்து ஏன் துக்கம் அனுபவிக்கணும் ன்னு ஒரு கேள்வி இருக்கு.
இந்த நாலு பேரோட கர்மாக்களும்தான் வேறு வேறா இவர்கள் இருக்க காரணம்.

சமாதி என்கிறது உலகநாட்டமே இல்லாம இரண்டற ஐக்கிய நிலையிலே இருக்கிறதாகும்.
வரன் பசி முதலியது வரும் போது ஆகாரம் சம்பாதிச்சு சாப்பிட பகிர் முகமாவான்.
வரியன் அன்னியர் தூண்டினால் மட்டுமே பகிர் முகமாகி உணவை ஏத்துப்பான்.
வாரிட்டன் தானாவும் வராமாட்டான். மத்தவங்க தூண்டியும் வரமாட்டான். எப்பவுமே தேகம் கட்டை போல கிடக்க தான் சதா அதீத நிலையிலேயே இருப்பான். அவன் நிலைதான் முடிவான முடிவுன்னு சிலர் சொல்கிறது. மத்தவங்க பார்வைக்குத்தான் அவன் உடம்போட இருக்கானே தவிர தன் வரை தேகம் இருக்கிற நினைப்பே இல்லாத பேரின்பத்திலே இருப்பான்.

முந்திய ரெண்டு பேரும் பிரம்ம நிலையிலே இருக்காங்கன்னா இந்த உலகத்தை எப்படி பார்ப்பாங்க? அவங்களுக்கும் தன்னோட உடம்புன்னு ஒரு உணர்ச்சி இருக்காது. அதை சாக்ஷியா மட்டும் பார்ப்பாங்க. நாம் ஒரு சினிமாவை பார்க்கிறபோது எப்படி பார்க்கிறோமோ அப்படி. இன்னும் சரியா சொல்லணும்னா ஒரு நாடகத்திலே நடிக்கிற மாதிரி. அதிலே தனக்கும் ஒரு பாத்திரம் -ரோல்- இருக்கு இல்லையா?

இவங்க இப்படி பகிர்முகமா வரதால அப்போதைக்கு அனுபவிக்கும் சுகம் குறையுதே தவிர மத்தபடி அவங்களோட ஞான நிலையை அது பாதிக்காது.

இப்படி வித்தியாசம் இருக்கிறது அவங்களோட பிராரத்த கர்மாவிலே இருக்கிற வித்தியாசம்ன்னு சொன்னோம். முக்தி நிலைக்கு போகணும்ன்னா ஒத்தரோட கர்ம கணக்கு பாலன்ஸ் ஆகணும். அதாவது அனுபவிக்க வேண்டிய புண்ணியமோ பாபமோ இல்லைன்னு ஆகணும். பத்து புண்ணியம் பண்ணி இருக்கேன். பத்து பாபம் பண்ணி இருக்கேன். தானிக்கி தீனி சரி போயிந்தி ன்னு சொல்ல முடியாது. பாபமோ புண்ணியமோ விளைவை அனுபவிச்சே தீரணும். சில பிராயச்சித்தங்கள் அவற்றோட கடுமையை குறைக்கலாமே தவிர வராம தடுக்காது. இல்லை கொஞ்சம் தள்ளிப் போட முடியுமோ என்னவோ?

ஞானம் வந்தா சஞ்சித கர்மா காணாம போயிடும். பற்றில்லாத போனதாலே இப்ப செய்கிறதிலே கர்ம பலன் ஒட்டாது. ஆகாமி கர்மா கிடையாது. ஆனா ஏற்கெனெவே பலன் தர ஆரம்பிச்சுவிட்ட கர்மாவான பிராரத்த கர்மாவை அனுபவிச்சு தீரணும்ன்னு முன்னேயே பாத்தோம். உலக விவகாரத்திலே இல்லாம இதை அனுபவிச்சு தீர்க்க முடியாதே? அதனால அவங்க அப்பப்ப தேவையான அளவு பகிர்முகமா இருக்காங்க. ஆகாரம் எடுத்துக்க வேண்டிய அளவு கூட பிராரத்தம் இல்லாதவனே வரிட்டனா இருக்கிறவன். அப்ப மத்தவங்களைப்பத்தி யூகிச்சுக்கலாம். ஆனா நாலு பேருமே ஞானிகள்தான். அதுல சந்தேகமே இல்லை.

முக்தி என்கிறது மோட்சம். அதை அடைஞ்சவங்க முத்தர். இவர்கள் ரெண்டு விதம்: ஜீவன் முத்தர், விதேக முத்தர்ன்னு பாத்தோம். விதேக முத்தருக்கு தேகம் போயிடுத்து. மறு பிறவி இல்லாம பரமாத்மாவோட ஐக்கியம் ஆயிட்டார்.
ஜீவன் முத்தர் உடம்போட இருக்கிறபோதே பிரம்ம நிலையை அனுபவிக்கக்கூடியவர் ன்னு பாத்தோம். இதிலே 4 வகையும் பாத்தோம்.
அதனால முத்தி என்கிறது ஏதோ இறந்து போனாதான் வரும்ன்னு இல்லை என்பது தெளிவு.

இவங்க சில காரணங்களுக்காக தன்னை வெளியே அதிகமா காட்டிக்கிறதில்லைன்னும் பாத்தோம். அப்ப எப்படி ஒத்தர் ஜீவன் முத்தர்ன்னு கண்டு பிடிக்கிறது?

அவங்களுக்கு பத்து குறிகள் உண்டுன்னு சிவப்பிரகாச ஸ்வாமிகள் சொல்லி இருக்காங்க.

குறிகளோர் பத்துளவா ஞானமயர்ச் சுவைதாங்
குரோதமின்மை வைராக மைம்பொறிக ளடக்க
லறமுதவு சமைதமையே சனப்பிரியத்துவமே
யலோபமொடு கொடையபய நிருமதமென் றறிக
நெறிமருவு சீடரொடு பத்தருதா சீனர்
நிலையில்பா விகளென்னு நால்வகையோ ரிடத்து
முறையினனுக் கிரகம்வந் துறுமருள்கொள் சீவன்
முத்தனா லென்பரவை முறையினெடுத் துரைப்பாம்.

பிரிச்சுப்பாக்க:
குறிகளோர் பத்துளவாம் ஞானமயர்ச் சுவைதாம்
குரோதமின்மை வைராகம் ஐம்பொறிகள் அடக்கல்
அறம் உதவு சமை தமையே சனப்பிரியத்துவமே
லோபமொடு கொடை அபயம் நிருமதம் என்றறிக
நெறி மருவு சீடரொடு பத்தர் உதாசீனர்
நிலையில் பாவிகளென்னும் நால் வகையோர் இடத்து
முறையின் அனுக்கிரகம் வந்துறு மருள் கொள் சீவன்
முத்தனால் என்பர் அவை முறையின் எடுத்துரைப்பாம்.
(வேதாந்த சூடாமணி)

1.குரோதமின்மை 2. உலோபமின்மை 3. அகங்காரமின்மை 4. பஞ்ச இந்திரியங்களையும் அடக்குதல் 5. சமை (சமம்) 6. தமை (தமம்) 7. ஜனப்பிரியத்துவம். 8. கொடை 9. அபயம். 10. வைராக்கியம்.
இதை எல்லாம் சாதனா சதுஷ்டயத்திலே (நினைவிருக்கா? :) பாத்தாச்சு இல்லையா?
அபேதமா பாக்கிறதாலே சீடனானாலும் சரி, பகதர்கள் ஆனாலும் சரி, "இவரோட சமாசாரம் ஒண்ணும் எனக்கு வேணாம்பா" என்கிற உதாசீனரானாலும் சரி, இல்லை அவரை திட்டி பிரச்சினை செய்கிற பாவிகளானாலும் சரி - எல்லாருக்குமே அனுக்கிரகம் செய்கிறாராம்!



Monday, May 4, 2009

சீனாவிலே ஒரு புத்த துறவி...



// ஆசையாத்தான் இருக்கு இப்படி சீவன் முக்தர் ஆக.
அதுக்கெல்லாம் ஒரு அம்சம் வேணாமா?
இப்படி இருந்தாப் பைத்தியக்காரப் பட்டம்
வந்துரும், இந்தக் கலிகாலத்தில்.//

இப்படி ஒரு பின்னூட்டம் போட்டாங்களா? அவங்களுக்கு ஒரு கதை சொல்லறேன்னு சொல்லி இருந்தேன்.

இதோ:

சீனாவிலே ஒரு புத்த துறவி. கிராமத்திலே நல்ல பேர் வாங்கி இருந்தார். அவருக்கு ஒரு நாள் ஒரு பிரச்சினை வந்தது. அந்த ஊரை சேர்ந்த ஒத்தர் திடுதிப்புன்னு வந்து "சாமி! நாங்க அவசரமா வேற ஊருக்கு போக வேண்டி இருக்கு. இந்த பொண்ணை கூப்பிட்டுகிட்டு போக முடியாத சூழ்நிலை. இப்பதான்+2 பரீட்சை நடக்குது. உங்க பொறுப்பிலே விட்டுட்டு போறேன். கொஞ்சம் பாத்துக்குங்கன்னார். துறவி "அடடா! நானோ பிரம்மசரியம் இருக்கறவன். எப்படி ஒரு கன்னிப்பெண்ணை பாத்துகிறது? நான் சரியா இருந்தாலும் ஊர் என்ன சொல்லும்?” ன்னார்.

வந்தவர் "சாமி, ஊரைப்பத்தி எனக்கு கவலை இல்லை. உங்களை நான் நம்பறேன். அது போதும் ன்னார்; பொண்ணை விட்டுட்டு போயிட்டார். முத நாள் இரவு துறவி வெளியெ கடும் குளிரிலே படுக்க வேண்டியதாச்சு. உடம்பெல்லாம் விறைச்சு போச்சு. அடுத்த நாள் "என்னடா இது! எவ்வளவு நாள் இப்படி காலம் தள்ள முடியும்? உடம்பை வெச்சுதானே சித்திரம் எழுதணும். இன்னும் இந்த உடம்புன்னு நினைப்பெல்லாம் இருக்கே! இதை காப்பாத்திக்கணுமே! என்ன பண்ணறது"ன்னு யோசிச்சார்.

தன் ஆசிரியர்கிட்டே போய் "என்ன செய்ய?" ன்னு கேட்டார். அவர் சிரிச்சுகிட்டே அரை நாள் பயணத்துலே இருந்த ஒரு ஊர் பேர் சொல்லி அங்கே இந்த பேர்ல ஒத்தர் இருக்கார். அவரை போய் பாருன்னார். துறவியும் "அம்மா பத்திரமா இரு. அடுத்த ஊர் போயிட்டு சாயந்திரம் வந்துடறேன்" னார். கிளம்பி அந்த ஊருக்கு போனார். பேரை சொல்லி விசாரிச்சார். பேரை கேட்டதுமே ஊர்காரங்க முகத்தை சுளிச்சாங்க. "அவனா? இப்படீஈ போ" ன்னு வழிகாட்டினாங்க. துறவிக்கு ஆச்சரியம்! "என்னடா இது! அவருக்கு இங்கே ஒண்ணும் மதிப்பு இல்லையா? அப்படிப்பட்ட ஒத்தர்கிட்டேயா நம்ம வாத்தியார் அனுப்பி இருக்கார்?"ன்னு நினைச்சுண்டார். விசாரிச்சு கொண்டே அவர் வீட்டுகிட்டே போயாச்சு.

கடசியா ஒத்தரை விசாரிச்சப்ப அவரும் முகத்தை சுளிச்சுகிட்டே "அதோ பாரு! அவன்தான்"னு சொன்னார். காட்டின நபரை பாத்தா அந்த நபரும் ஒரு பிள்ளையும் வீட்டுக்கு வெளியே உக்காந்து டம்ளர் டம்ளரா ஏதோ குடிக்கிறாங்க! பக்கத்திலே மது குடுவை வேற. "இதென்னடா இது?" ன்னார் துறவி. வழி காட்டியவர் "ஆமா. அப்பனுக்கும் பிள்ளைக்கும் இதே வேலை. காலைல எழுந்தா ராத்திரி வரை குடிச்சுகிட்டே இருக்காங்க" ன்னுட்டுபோயிட்டார்.

துறவி என்னடா செய்கிறது ன்னு யோசிச்சார். அப்புறம் வாத்தியார் சொல்லி இருக்காரே; போய் கேட்டுடலாம் ன்னு கிட்டே போனார். கிட்டே போனா சாராய வாசனை கொஞ்சம் கூட இல்லை. வெறும் தண்ணியைத்தான் குடிக்கிறாங்க ன்னு தெரிஞ்சது! ஏன் இப்படி ஏமாத்தறீங்க ன்னார். 'குடியர்' பதில்சொன்னார்: அப்பதான் பொண்ணை பாத்துக்க ன்னு யாரும் என் கிட்ட வர மாட்டாங்க!



Friday, May 1, 2009

மற்ற மூவரின் இயல்பு


சரி சரி நாலு வகைன்னு சொன்னீங்க! ஒண்ணு ஆச்சு - சீவன் முக்தர். மீதி மூணு?
மூணிலே ரெண்டு பேர் சமாதியிலே இருப்பாங்க.
அதானே பாத்தேன். இப்படி இருந்தாதான் ஏதோ விசேஷம்ன்னு தோணுது. அப்புறம்?
ஒத்தர் இந்த உடம்பை காப்பாத்திக்க அப்பப்ப சமாதி நிலையிலேந்து வெளியே வந்து ஏதாவது உணவு சம்பாதித்து சாப்பிடுவார். உலக வியாபாரம் ஏதேனும் இருக்கலாம். திருப்பி சமாதிக்கு போயிடுவார். இவர் பிரம்மவரன்.

இன்னொருத்தர் தானா சமாதி நிலையிலேந்து வெளியே வர மாட்டார். யாரான ஏதாவது செய்து இவரை வெளியே கொண்டு வருவாங்க. டமர டமரடம் ன்னு எதேனும் வெச்சு சத்தம் எழுப்புவாங்க. மணி அடிப்பாங்க. சத்தம் போட்டு நாமசங்கீர்த்தனம் பண்ணுவாங்க. வெளியே வந்த பிறகு ஏதேனும் சாப்பிடுவார். உலக வியாபாரம் ஏதேனும் இருந்தா இருக்கும். அல்லது உடனே திருப்பி சமாதிக்கு போயிடுவாங்க. இவர் பிரம்ம வரியான்.
இப்படிப்பட்ட ஒத்தரை கவனிச்சுக்கிட்டவர் சமாதியிலே இருக்கிறவரை தடியால அடிச்சு வெளீலே கொண்டு வருகிறதும் உண்டு! அநியாயமா தோணுது இல்லே? ஹும், அவருக்கு வேற வழி இருக்கல்லே!

இப்படி எந்த வழியாலும் வெளியே வராம எப்பவுமே சமாதியிலே இருக்கிறவங்க பிரம்ம வரிட்டன்.

99.
மற்ற மூவரின் இயல்பு?

பின்னைமூ வரி லிரண்டு பேர்களுஞ் சமாதி யோகம்
தன்னையுற்றிருப்பார் தேக சஞ்சார நிமித்தந் தானாய்
உன்னுவோன் வரன்வேற்றோரா லுணர்பவன் வரியானாகும்
அன்னியர் தம்மாற்றன்னா லறியாதோன் வரிட்டனாமே

பின்னை மூவரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம் தன்னை உற்றிருப்பார். தேக சஞ்சார (பயண) நிமித்தம் தானாய் உன்னுவோன் (சமாதியிலிருந்து வெளி வந்து உணவு ஆகியவற்றை நினைப்பவன்) வரன்; [சீடன் முதலான] வேற்றோரால் உணர்பவன் (சமாதி கலைந்து உணவு ஆகியவற்றை நினைப்பவன்) வரியானாகும். அன்னியர் தம்மால் (மற்றவர்களாலும்) தன்னால் (தானாகவும்) அறியாதோன் (உணவு கொள்ளல் முதலியனவற்றை கொள்ள அறியாதவன்) வரிட்டனாமே.

ஹும். அப்ப இந்த நாலு பேரும் வித்தியாசமானவங்க. அவங்க அனுபவிக்கிறதுலேயும் வித்தியாசம் இருக்கும் இல்லையா?
இல்லை. இவங்க அனுபவிக்கிற பிரம்ம ஆனந்தம் ஒண்ணே! வித்தியாசமே இல்லை.

அட பின்னே ஏன் சமாதி நிலையிலே இருக்கணும். அல்லது உலக விவகாரங்களிலே இருக்கணும்? பாடு பட்டு சமாதி பழகறதிலே என்ன பிரயோசனம்?
பிரம்ம வித்து உலக வியவகாரியங்களிலே இருக்கிறதால அதுக்கான பலன்களா நாம் பாக்கிறது போல துக்கம், சந்தோஷம் அனுபவிப்பார். முள்ளு குத்தி ரத்தம் வரும். அடி படும். ஏதோ நோய் வந்து உடம்பு கத்தியாலே வெட்டப்படும்! மத்தவங்க சுகமா இருப்பாங்க!

ஸ்ரீ ரமணர் க்கு சார்க்கோமா வந்து அதுக்காக அறுவை சிகித்சை செய்தாங்க. அனெஸ்தீஷியா எல்லாம் ஒண்ணும் வேணாம்னுட்டார். ஆபரேஷன் நடந்தது. ரமணரோ வேடிக்கை பாத்து கொண்டு இருந்தார்.
எல்லாம் முடிஞ்ச பிறகு ஒத்தர் ஸ்ரீரமணரை கேட்டார்:
ஆமாம், உங்களுக்கு வலியே தெரியலையா?
தெரியாம என்ன? நல்லாவே தெரிஞ்சது!
பின்னே?
அந்த வலியோட சாதாரணமா இருக்கிற வேதனை இல்லை.


ஆயிரமாயிரம் சீவன்கள்! அதிலே மனிதப்பிறவி வாய்க்கிறது துர்லபம்! அப்படியே வாய்ச்சாலும் ஆன்மீகம் பத்தி நாட்டம் வரது துர்லபம். வந்தாலும் அவருக்கு ஏத்த சரியான வழியை கண்டுபிடிச்சு அதிலே போகிறது துர்லபம். போனாலும் இடையிலே வருகிற தடைகளை எல்லாம் தாண்டி மேலே போகிறது கஷ்டம். குருநாதர் அமையணும். பிறகு பிரம்ம அனுபவம் கிடைக்கணும். அப்படி கிடைச்சாலும் சந்தேகம் முதலான இடையூறுகள் வேற வராம இருக்கணும். (குரு வந்தாச்சுன்னா அப்புறம் மீதி தாண்டிடக்கூடியதுதான்:)
இதனால் இவர்கள் மிகவும் அரிதானவர்களாவே இருப்பாங்க.

100.
வித்தியாசம் உள்ள இந்த நால்வருக்கும் மோட்சமும் வித்தியாசமானதா?

அரிதாகு மிவர்க ளிவ்வா றநேகரா னாலுமுத்தி
சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால்
பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன்
வரியானும்வரனு மற்றை வரிட்டனுஞ் சுகமாய்வாழ்வார்.

அரிதாகும் இவர்கள் இவ்வாறு அநேகரானாலும் முத்தி சரியாகும். (முத்தியில் வேறுபாடில்லை). [பின்னே] பாடு பட்ட சமாதிக்குப் பலன் ஏதென்றால், [விவகாரத்தில் பிரவிருத்தி உள்ளதால்] பெரிதான திருஷ்ட (பிரத்யக்ஷமான) துக்கம் பிரமவித்து அநுபவிப்பன். [விவகாரம் இல்லை ஆதலாலும் பிரவிருத்தியும் இல்லாததாலும்] வரியானும் வரனும் மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார்.
--
ஜகத்தில் உயிர்களுக்கு மற்ற விருப்பம் நீங்கி மோட்ச விருப்பம் வருதல் அரிது; வரினும் கர்ம சாத்திரம் முதலியனவற்றை விட்டு வேதாந்த சாத்திர விருப்பம் வருதல் அரிது; வரினும் அதில் சொன்னதை அநுசந்தானம் செய்தல் அரிது; செய்யினும் சுகாநுபவம் கிடைத்தல் மிக அரிது (ஆகவே அரிதாகும் இவர்கள்...) இவர்கள் நானா ரூபமாய் இருப்பினும் எல்லா நதிகளும் சமுத்திரத்தில் ஐக்கியமாவது போல மோட்சத்தில் ஒரே தன்மை உடையவராவர். நித்திரையோடு வழி செல்வோனுக்கு வழியில் உள்ள கல் முள் இவற்றால் நினைவுண்டாகி அச்சுகத்துக்கு கேடு உண்டாவது போல் பிராரத்தினால் வரும் தொழில்களால் பிரவிருத்தி உண்டாகி தன் ஆனந்தத்துக்கு விக்கினமுண்டாகி பிரமவித்து துன்பம் அனுபவிப்பான்.