Pages

Wednesday, May 6, 2009

ஜீவன் முத்தரும் கர்மங்களிலே உழலுவானேன்?



இப்ப சீடன் கேக்கிறான் ஸ்வாமி ஞானமடைஞ்ச ஜீவன் முத்தரும் கர்மங்களிலே உழலுகிற அஞ்ஞானிகள் மாதிரி பிரபஞ்ச விவகாரங்களை பண்ணா எப்படி? இச்சை, கர்மங்கள் ஒழிஞ்சு எப்படி இவங்களுக்கு முக்தி கிடைக்கும்?

குரு சொல்கிறார்: அப்பனே ஆகாசம் இருக்கு. அது எல்லா இடத்திலேயும் இருக்கு. ஆனா எதையும் அது பற்றி இல்லை. மத்த நாலு பூதங்களையும் பாத்தா ஒண்ணோட ஒண்ணு சம்பந்தம் வந்தா உறவு கொண்டாடி விடும். ஆகாசம் எல்லாத்துக்கும் இடம் கொடுத்தாலும் எதையுமே பற்றாம இருக்கும்.

அது போல அஞ்ஞானிகள் நாம் தேகி; கர்மம் செய்யறோம்ன்னு நினைவோட செய்வதால அவங்களுக்கு அந்த செயலாலே பற்றுதல் உண்டாகும். பலனை அவங்க அனுபவிக்கனும். ஆனா ஞானியோ தனக்கு தேகம் இருக்கறதாவே நினைக்கிறதில்லை. தான் செய்கிறோம் என்கிற நினைப்பு அவனுக்கு இல்லை.  பிராரத்தத்தினாலே தானா வருகிறதை செய்து கொண்டு போறாங்க. வெளியே இருக்கிறவங்களுக்கு இவங்க காரியம் செய்கிறதா தோணிணாலும் இவங்களோ சாட்சியா மட்டுமே இருக்காங்க. (தானே செய்கிற விஷயங்களையே அவங்க ஒரு சினிமாவை பாக்கிறது போல பாப்பாங்க.) ஆதனால கர்ம பலன் அவங்களை பிடிக்கிறது இல்லை.

பிரம்ம வித்து சாட்சியா மட்டும் தாமரை இலை நீர் போல இருந்து உலகிலே இருந்தாலும், அன்னியர் துக்கத்தைப்பாத்து தான் துக்கிக்கிறாராம்.

ஏன் அன்னியர் துக்கம்? அதான் இவருக்குன்னு இருக்கிற உடம்பை நாம பாத்தாலும் இவர் பாக்கிறதில்லையே? அப்ப இவரோட உடம்புக்கு நேருகிற துன்பங்கள் இவரை பாதிக்கிறதில்லை. பின்னே எப்படி பிராரத்த கரமா அனுபவிச்சு கழிகிறது? இப்படி மறைமுகமாவும் இன்னுமொரு பின்னால் சொல்லப்போகிற ஆச்சரியமான விஷயத்தாலும்!

மத்தவங்களுக்கு ஏற்படுகிற துன்பத்தை தனக்கு ஏற்பட்டதாவே இவர் பாத்து கஷ்டப்படுவார்! இந்த மாதிரியான ஜீவ காருண்ய செயல்களாலே கர்மா அனுபவிக்கப்பட்டு நீங்கும்! இதுக்கான வாய்ப்பை இவர் தேடிப்போக வேணாம். பிராரத்த கர்மாவே அவற்றை கொண்டுவந்து சேர்க்கும்!

ஆனா எப்பவுமே ஜீவ முக்த தன்மை கெட்டுப்போகாது. பற்று இல்லையானாலும் திரிபுடி (செய்கிறவன், செய்கை, செய்யப்படுவது) உண்டு. மனசும் இருக்கும். ஆனா அது சத்துவமாகவே இருக்கும்.

101.
பிரமவித்துக்களும் அஞ்ஞானிகளைபோலே விவகாரம் செய்தால் சம்சார பந்தம் எப்படி நீங்கும்?
பிரமஞானிகளுங் கன்மப் பேதையர் போலே வாழ்ந்தால்
திரமுறுமஞ்ஞா னம்போய்ச் செனியாத வழியேதென்றால்
பரவுமா காச மொன்றிற் பற்றாது மற்றை நாலும்
விரவின தோடுங் கூடும் விதமிரு வோரு மாவார்

பிரமஞானிகளும் (பிரமவித்துக்களும்) கன்மப் பேதையர் (கர்மிகளான அஞ்ஞானிகள்) போலே வாழ்ந்தால், ஸ்திரமுறும் (நிலையான) அஞ்ஞானம் போய் செனியாத (மீண்டும் பிறக்காத) வழியேது என்றால், பரவும் ஆகாசம் (மற்ற 4 பூதங்களில்) ஒன்றில் பற்றாது, மற்றை நாலும் (4 பூதங்களும்) விரவினதோடும் கூடும் (கலந்து நிற்கும்) விதம் இருவோரும் ஆவார் (ஞானி அஞ்ஞானிகள் இருவரும் ஆவார்)
தாத்பர்யம்: கர்மம் ஒன்றானாலும் கருத்து வேறானதால் பிரமவித்து அஞ்ஞானம் நீங்கி மோட்சம் அடைவர்.



2 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//மத்தவங்களுக்கு ஏற்படுகிற துன்பத்தை தனக்கு ஏற்பட்டதாவே இவர் பாத்து கஷ்டப்படுவார்! இந்த மாதிரியான ஜீவ காருண்ய செயல்களாலே கர்மா அனுபவிக்கப்பட்டு நீங்கும்!//

பற்று நீங்கிய ஞானிக்கு, கர்மா அனுபவிக்கப் படுவதா? கொஞ்சம் புதிரா, இருக்கே!
நான், அவங்களோட தயை, கருணை compassion இதுனால தான், லோகத்தில் மாந்தர் படும் பாட்டைப் பார்த்து அநுக்ரஹம் பண்ணுவாங்க அப்படின்னு நினைச்சிருந்தேனே, தப்பா?

திவாண்ணா said...

ஆமாம் பிராரத்த கர்மா அனுபவிச்சுதான் தீர்க்கணும். அடுத்த பதிவுல வரும்.