Pages

Friday, May 1, 2009

மற்ற மூவரின் இயல்பு


சரி சரி நாலு வகைன்னு சொன்னீங்க! ஒண்ணு ஆச்சு - சீவன் முக்தர். மீதி மூணு?
மூணிலே ரெண்டு பேர் சமாதியிலே இருப்பாங்க.
அதானே பாத்தேன். இப்படி இருந்தாதான் ஏதோ விசேஷம்ன்னு தோணுது. அப்புறம்?
ஒத்தர் இந்த உடம்பை காப்பாத்திக்க அப்பப்ப சமாதி நிலையிலேந்து வெளியே வந்து ஏதாவது உணவு சம்பாதித்து சாப்பிடுவார். உலக வியாபாரம் ஏதேனும் இருக்கலாம். திருப்பி சமாதிக்கு போயிடுவார். இவர் பிரம்மவரன்.

இன்னொருத்தர் தானா சமாதி நிலையிலேந்து வெளியே வர மாட்டார். யாரான ஏதாவது செய்து இவரை வெளியே கொண்டு வருவாங்க. டமர டமரடம் ன்னு எதேனும் வெச்சு சத்தம் எழுப்புவாங்க. மணி அடிப்பாங்க. சத்தம் போட்டு நாமசங்கீர்த்தனம் பண்ணுவாங்க. வெளியே வந்த பிறகு ஏதேனும் சாப்பிடுவார். உலக வியாபாரம் ஏதேனும் இருந்தா இருக்கும். அல்லது உடனே திருப்பி சமாதிக்கு போயிடுவாங்க. இவர் பிரம்ம வரியான்.
இப்படிப்பட்ட ஒத்தரை கவனிச்சுக்கிட்டவர் சமாதியிலே இருக்கிறவரை தடியால அடிச்சு வெளீலே கொண்டு வருகிறதும் உண்டு! அநியாயமா தோணுது இல்லே? ஹும், அவருக்கு வேற வழி இருக்கல்லே!

இப்படி எந்த வழியாலும் வெளியே வராம எப்பவுமே சமாதியிலே இருக்கிறவங்க பிரம்ம வரிட்டன்.

99.
மற்ற மூவரின் இயல்பு?

பின்னைமூ வரி லிரண்டு பேர்களுஞ் சமாதி யோகம்
தன்னையுற்றிருப்பார் தேக சஞ்சார நிமித்தந் தானாய்
உன்னுவோன் வரன்வேற்றோரா லுணர்பவன் வரியானாகும்
அன்னியர் தம்மாற்றன்னா லறியாதோன் வரிட்டனாமே

பின்னை மூவரில் இரண்டு பேர்களும் சமாதி யோகம் தன்னை உற்றிருப்பார். தேக சஞ்சார (பயண) நிமித்தம் தானாய் உன்னுவோன் (சமாதியிலிருந்து வெளி வந்து உணவு ஆகியவற்றை நினைப்பவன்) வரன்; [சீடன் முதலான] வேற்றோரால் உணர்பவன் (சமாதி கலைந்து உணவு ஆகியவற்றை நினைப்பவன்) வரியானாகும். அன்னியர் தம்மால் (மற்றவர்களாலும்) தன்னால் (தானாகவும்) அறியாதோன் (உணவு கொள்ளல் முதலியனவற்றை கொள்ள அறியாதவன்) வரிட்டனாமே.

ஹும். அப்ப இந்த நாலு பேரும் வித்தியாசமானவங்க. அவங்க அனுபவிக்கிறதுலேயும் வித்தியாசம் இருக்கும் இல்லையா?
இல்லை. இவங்க அனுபவிக்கிற பிரம்ம ஆனந்தம் ஒண்ணே! வித்தியாசமே இல்லை.

அட பின்னே ஏன் சமாதி நிலையிலே இருக்கணும். அல்லது உலக விவகாரங்களிலே இருக்கணும்? பாடு பட்டு சமாதி பழகறதிலே என்ன பிரயோசனம்?
பிரம்ம வித்து உலக வியவகாரியங்களிலே இருக்கிறதால அதுக்கான பலன்களா நாம் பாக்கிறது போல துக்கம், சந்தோஷம் அனுபவிப்பார். முள்ளு குத்தி ரத்தம் வரும். அடி படும். ஏதோ நோய் வந்து உடம்பு கத்தியாலே வெட்டப்படும்! மத்தவங்க சுகமா இருப்பாங்க!

ஸ்ரீ ரமணர் க்கு சார்க்கோமா வந்து அதுக்காக அறுவை சிகித்சை செய்தாங்க. அனெஸ்தீஷியா எல்லாம் ஒண்ணும் வேணாம்னுட்டார். ஆபரேஷன் நடந்தது. ரமணரோ வேடிக்கை பாத்து கொண்டு இருந்தார்.
எல்லாம் முடிஞ்ச பிறகு ஒத்தர் ஸ்ரீரமணரை கேட்டார்:
ஆமாம், உங்களுக்கு வலியே தெரியலையா?
தெரியாம என்ன? நல்லாவே தெரிஞ்சது!
பின்னே?
அந்த வலியோட சாதாரணமா இருக்கிற வேதனை இல்லை.


ஆயிரமாயிரம் சீவன்கள்! அதிலே மனிதப்பிறவி வாய்க்கிறது துர்லபம்! அப்படியே வாய்ச்சாலும் ஆன்மீகம் பத்தி நாட்டம் வரது துர்லபம். வந்தாலும் அவருக்கு ஏத்த சரியான வழியை கண்டுபிடிச்சு அதிலே போகிறது துர்லபம். போனாலும் இடையிலே வருகிற தடைகளை எல்லாம் தாண்டி மேலே போகிறது கஷ்டம். குருநாதர் அமையணும். பிறகு பிரம்ம அனுபவம் கிடைக்கணும். அப்படி கிடைச்சாலும் சந்தேகம் முதலான இடையூறுகள் வேற வராம இருக்கணும். (குரு வந்தாச்சுன்னா அப்புறம் மீதி தாண்டிடக்கூடியதுதான்:)
இதனால் இவர்கள் மிகவும் அரிதானவர்களாவே இருப்பாங்க.

100.
வித்தியாசம் உள்ள இந்த நால்வருக்கும் மோட்சமும் வித்தியாசமானதா?

அரிதாகு மிவர்க ளிவ்வா றநேகரா னாலுமுத்தி
சரியாகும் பாடு பட்ட சமாதிக்குப் பலனே தென்றால்
பெரிதான திருஷ்ட துக்கம் பிரமவித் தநுப விப்பன்
வரியானும்வரனு மற்றை வரிட்டனுஞ் சுகமாய்வாழ்வார்.

அரிதாகும் இவர்கள் இவ்வாறு அநேகரானாலும் முத்தி சரியாகும். (முத்தியில் வேறுபாடில்லை). [பின்னே] பாடு பட்ட சமாதிக்குப் பலன் ஏதென்றால், [விவகாரத்தில் பிரவிருத்தி உள்ளதால்] பெரிதான திருஷ்ட (பிரத்யக்ஷமான) துக்கம் பிரமவித்து அநுபவிப்பன். [விவகாரம் இல்லை ஆதலாலும் பிரவிருத்தியும் இல்லாததாலும்] வரியானும் வரனும் மற்றை வரிட்டனும் சுகமாய் வாழ்வார்.
--
ஜகத்தில் உயிர்களுக்கு மற்ற விருப்பம் நீங்கி மோட்ச விருப்பம் வருதல் அரிது; வரினும் கர்ம சாத்திரம் முதலியனவற்றை விட்டு வேதாந்த சாத்திர விருப்பம் வருதல் அரிது; வரினும் அதில் சொன்னதை அநுசந்தானம் செய்தல் அரிது; செய்யினும் சுகாநுபவம் கிடைத்தல் மிக அரிது (ஆகவே அரிதாகும் இவர்கள்...) இவர்கள் நானா ரூபமாய் இருப்பினும் எல்லா நதிகளும் சமுத்திரத்தில் ஐக்கியமாவது போல மோட்சத்தில் ஒரே தன்மை உடையவராவர். நித்திரையோடு வழி செல்வோனுக்கு வழியில் உள்ள கல் முள் இவற்றால் நினைவுண்டாகி அச்சுகத்துக்கு கேடு உண்டாவது போல் பிராரத்தினால் வரும் தொழில்களால் பிரவிருத்தி உண்டாகி தன் ஆனந்தத்துக்கு விக்கினமுண்டாகி பிரமவித்து துன்பம் அனுபவிப்பான்.


Post a Comment