Pages

Friday, June 5, 2015

அடியார்கள் - டி.பி.ராமசந்திர ஐயர்


டி.பி.ராமசந்திர ஐயர் 1856 இல் ரயிலில் திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்குப் போய்க் கொண்டு இருந்தார். இந்த பெட்டியில் பி.வி, நரசிம்ம ஸ்வாமியும் உட்கார்ந்து இருந்தார். இருவரும் பால்ய நண்பர்கள். இருவரும் பேச ஆரம்பித்தனர்.
நரசிம்ம ஸ்வாமி பகவானிடம் இருந்தவர். அவருடைய சரித்திரத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர். பிறகு சீரடி சாய்பாபாவின் பரம பக்தரானார். பாபாவின் புகழை இந்தியா எங்கும் பரப்பினார். இந்த செயல் பகவானின் பக்தர்கள் மத்தியில் வியப்பூட்டியது. நரசிம்மசாமி பகவானிடம் வருவதும் இல்லை. 
டி.பி.ராமசந்திர ஐயர் நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தார்.
பகவான்கிட்டே பாடம் படிச்ச நீங்க எப்படி அவரை விட்டுட்டு சீரடி சாய்பாபா குருன்னு போனேளோ?”
நரசிம்மசாமி தயங்கியபடியே இதைத்தான் எல்லாருமே கேட்கறா. நான் பதில் சொல்லறது இல்லை. அது என்னோடவே போகட்டும்என்றார்.
நான் மத்தவா மாதிரியா? எங்கிட்டே சொல்லலாமே?” என்றார் ராமசந்திரஐயர்.
நரசிம்மசாமி மனம் திறந்து சொன்னார். பகவாந்தான் என்னை அங்கே போகச்சொன்னது!
ஒரு நாள் தனியா இருந்தப்ப நாமசங்கீர்த்தனத்துல எனக்கு இருந்த ஆர்வத்தை பகவான்கிட்டே சொன்னேன். அவர் சீர்டிக்குப்போ! சாய்பாபாதான் உனக்கு குரு. அவரோட சரித்திரத்தை எழுது. அவரோட புகழை இந்தியா முழுக்கப்பரப்பு. எல்லோருக்கும் தெரிய வை. உன் நேரத்தை இதுக்கே செலவு பண்ணு. ஆடறேன் பாடறேன் ந்னு நேரத்தை விரயம் பண்ணித்திரியாதே. முதல்ல சீரடிக்குக் கிளம்புன்னு சொன்னார். நானும் அவர் சொல்லறாரேன்னு சரின்னு சொன்னேன். ஆனா நடைமுறைக்கு கொண்டு வரலை. சீரடி சாய்பாபா 1918 லேயே விதேகமாயிட்டார். அவர் எனக்கு வழி எப்படி காட்டுவார்ன்னு தோணித்து. அதனால் பகவான் உத்திரவை பெருசா எடுத்துக்கலை.
பிற மகான்களைத் தேடிப் போனேன். என் எல்லாமுயற்சிகளும் தோல்வியிலேயே முடிஞ்சது. ஒரு நாள் அடுத்து என்ன செய்யறதுன்னு திகைச்சுக்கொண்டு நடு ரோடில்  இருக்கும்போது யாரோ ஒருவர் வந்து பக்கத்திலேதான் சீரடி; நீ அங்கே போய் பாபா சமாதியில் கும்பிடுந்னு சொன்னார்.
அவர் சமாதிக்கு முன் நின்னப்போ பகவான் சொன்னது காதிலே கேட்டது. என் வேலை என்னன்னு அப்பத்தான் புரிஞ்சது.
பகவான் எனக்குப் பண்ண பெரிய ஆசீர்வாதம் என்னை பாபாகிட்டே கொண்டு சேர்த்ததுதான். இது எனக்குத்தான் தெரியும். வேற யாரும் புரிஞ்சுக்க முடியாது.என்று கண்ணீருடன் கூறினார்.

ஒரு முறை பழைய ஹாலில் நரசிம்மசாமி பற்றிய ஏதோ பேச்சு நடந்த போது இந்த சர்ச்சையும் வந்தது.
பகவான் அவரோட ஆள்; அவர்கிட்டே போயிட்டார்என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


Thursday, June 4, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -27


          ஒரு நாள் நள்ளிரவு பகவான் எழுந்து இயற்கை உபாதைக்காக வெளியே சென்றார். ஒரு சேவகரும் உடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் பகவான் திரும்பவில்லை. சேவகர் பகவான் சென்ற திசையை நோக்கிச்சென்றாற். அப்போது வித்தியாசமான லப் லப் லப் என்ற ஒலி காதில் விழுந்தது. பகவான் யாருடனோ போதும் போதும்! இப்ப திருப்தியா என்று பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது. ஆச்சரியத்துடன் சேவகர் இன்னும் கிட்டே போன போது ஒரு நாயைப் பார்த்தார். அதன் உடலெல்லாம் சிரங்கு! எலும்பும் தோலுமாக இருந்தது. அது வாஞ்சையுடன் பகவானை நக்கிக்கொண்டு இருந்தது!
சேவகர் அதை துரத்த எத்தனித்தார். பகவான் வேண்டாம்எனத்தடுத்தார். “அவனுக்கு என் மேல் ரொம்ப பிரியம். எப்ப வந்தாலும் யாரானா அவனை துரத்திவிட்டுடறா. இன்னைக்கு இன்னேரத்துலே பார்த்துட்டு பிரியத்திலே கொஞ்சறான்!” என்றார்.
பின் நாயைப் பார்த்து போதுமாடா? நான் இப்ப போகலாமா?” என்று சொல்லி விடை பெற்றார்.
அடுத்த நாள் அந்த நாய் அடங்கிவிட்டது.

ஒரு முறை காஷ்மீரில் இருந்து ஒருவர் பகவானை தரிசிக்க வந்தார். அவருடன் அவருடைய வேலையாளையும் அழைத்து வந்தார். இந்த வேலையாளுக்கு அவரது தாய் மொழியான கஷ்மீரி மட்டுமே தெரியும்.
ஒரு நாள் இரவு ஓல்ட் ஹாலில் பகவானுடன் சாட்விக் மட்டுமே இருந்தார். ஓர் அரிக்கேன் விளக்கு மட்டுமே வெளிச்சம் கொடுத்துக்கொண்டு இருந்தது. அந்த வேலையாள் உள்ளே நுழைந்தார். அவரது மொழியில் பேச ஆரம்பித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தார். பகவான் அவரை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார். வாயே திறக்கவில்லை. வேலையாள் பின்னர் நமஸ்கரித்து விட்டு போய்விட்டார்.
அடுத்த நாள் காஷ்மீரில் இருந்து தரிசிக்க வந்தவர் பகவானிடம் கஷ்மீரியில் உங்களுக்கு கஷ்மீரி தெரியும்ன்னு சொல்லவே இல்லையேஎன்றார்.
பகவான் என்ன சொல்றார்ன்னு கேளுங்கோ!” என்றார்.
அவர் அருகில் இருந்தவரிடம் நேத்து பகவான் என் வேலையாள்கிட்டே கஷ்மீரியில நல்லா பேசினாராம். அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னாராம். அவன் என்கிட்டே சொன்னானே பகவான் நல்லா கஷ்மீரி பேசறார்ன்னு!” என்றார்.
நான் எதுவுமே பேசலையே!” என்றார் பகவான்.

1945 அம் ஆண்டு க்ருஷ்ணமூர்த்திஐயர் பகவானை தரிசிக்க வந்தபோது பகவானின் தேகம் நலிந்து இருப்பதை பார்த்தார்.
பகவானே, உங்க கருணையால நிறைய பேரோட தீராத வ்யாதி எல்லாம் தீர்ந்து இருக்கு. அதனால பகவானோட உடம்புக்கு பாதிப்பு இருக்குமா?” என்று கேட்டார்/
பகவான் ஆமாம் ந்னும் சொல்லலாம்; இல்லை ந்னும் சொல்லலாம்என்றார்.
அதெப்படி?”
முக்தனுக்கு உண்மையை உணர்ந்த பிறகு உடம்பு தேவை இல்லே. ஆனாலும் அவன் தேகத்தோட இருக்கறதுக்கு காரணம் பரேச்சைதான். அவன் தேகத்தோட இருக்கிற வரை அவன் மத்தவாகிட்டேந்து அவாளோட நோயை அவன் தேகத்தில வாங்கிக்கலாம். அதனால் அவனோட தேகம் கொஞ்ச நாள் அவஸ்தைப்படும். அதனால்தான் ஆமா ந்னு சொன்னேன்.
யாரோட தொந்திரவும் இல்லாம ஒரு மூலையா உடல் உலகத்தை மறந்து சமாதில இருந்தா அந்த கர்மா பொசுங்கி திரும்ப உடம்பு ஆரோக்கியமா வரும். இதுக்கு எவ்ளோ காலம் சமாதில இருக்கணும் என்கிறது அந்தந்த கர்மாவை பொருத்தது.
ஆதி சங்கரர் சின்ன வயசுலேயே ஞானம் அடைஞ்சுட்டார். நல்ல ஆரோக்கியத்தோட பாரத நாட்டையே வலம் வந்தார். எப்பவும் சகஜ நிலையிலேயே இருந்ததால பல காரியங்களை செய்ய முடிஞ்சது. ஆனா கருணையாலே வாங்கிண்ட மத்தவங்களோட கர்மாக்களை தனிமையில இருந்து போக்கிக்கலை. அதனாலத்தான் சின்ன வயசுலேயே விதேகமாயிட்டார்
பகவான் மலை மேலே இருந்த போது உடல் நலிவுற்று பின் மீண்டு வந்ததைப்பற்றி முருகனார் கேட்ட போது இதே பதிலை சொல்லி இருக்கிறார்.

    

Wednesday, June 3, 2015

உள்ளது நாற்பது - 29



சடவுடனா னென்னாது சச்சித் துதியா
துடலளவா நானொன் றுதிக்கு – மிடையிலிது
சித்சடகி ரந்திபந்தஞ் சீவனுட்ப மெய்யகந்தை
யிச்சமு சாரமன மெண்.

சடஉடல் நான்என்னாது ஸச்சித்து உதியாது
உடல்அளவா நான் ஒன்று உதிக்கும் – இடையில் இது
சித்சடகிரந்தி பந்தம்ஜீவன் நுட்பமெய் அகந்தை
இச்சமுசாரம் மனம் எண்.

ஜடமாகிய உடல் மனம் தூண்டினாலொழிய நான் என்று சொல்லாது. சத் ஆகிய உண்மைப்பொருள் நான் என்று உதிப்பதில்லை. (அதையன்றி வேறெதுவும் இல்லையாதலால் நான் என்பதில் பொருள் இல்லை.) ஆகவே இந்த சித்துக்கும் உடலுக்கும் இடையிலே, 'நான்' என்று ஒன்று உதிக்கிறது. இதையே பலவிதமாக சொல்கிறார்கள். சித்சடகிரந்தி, பந்தம், ஜீவன், சூக்ஷ்ம சரீரம் என்னும் நுட்பமெய், அகங்காரம் என்னும் அகந்தை, சம்சாரம், மனம் என பல பெயர்கள் இதற்கு உண்டு என அறிவாயாக.

देहो न जानाति सतो न जन्म देहप्रमाणोऽन्य उदेति मध्ये ।
अहङ्कृतिग्रन्थिविबन्धसूक्ष्मशरीरचेतोभवजीवनामा ॥ २६ ॥

தே³ஹோ ந ஜானாதி ஸதோ ந ஜன்ம தே³ஹப்ரமாணோ()ந்ய உதே³தி மத்⁴யே |
அஹங்க்ருʼதிக்³ரந்தி²விப³ந்த⁴ஸூக்ஷ்மஶரீரசேதோப⁴வஜீவனாமா || 26 ||

Tuesday, June 2, 2015

அடியார்கள்- தொப்பைய முதலியார், மாதவி அம்மாள்.


தொப்பைய முதலியார் பகவானின் அத்யந்த பக்தர். 1939 இல் மாத்ரு பூதேஸ்வரர் ஆலய நிர்மாணத்தின் போது கட்டுமானப்பணியை மேர்பார்வை செய்து வந்தார். விரக்தியின் பிடியில் இருந்தார், ஆசிரம பணியை சரி வர செய்ய முடியவில்லை. மனமோ பொறுப்புகள் எல்லாவற்றையும் துறந்து முழுக்க முழுக்க ஆன்மீக சாதனையில் ஈடுபட ஆசைப்பட்டது. பகவானிடம் உத்திரவு கேட்க பயமாக இருந்தது. மனச்சோர்வும் துக்கமும் மேலிட தைரியத்தை வர வழைத்துக்கொண்டு தனியாக இருந்த பகவானை சென்று நமஸ்கரித்தார்.
பகவானே ஆன்மீக சாதனை புரிய ஒத்தன் உலகப்பற்றை விடனும்தானே? வீட்டை விட்டுடலாம்ன்னு இருக்கேன். சன்னியாசம் எடுத்துக்க பகவான் உத்தரவு வேணும்என்றார்.
பகவான் பதில் ஏதும் சொல்லவில்லை. மௌனமாக இருந்தார்.
சற்று நேரம் கழித்து பகவானே உத்திரவு கொடுங்கோ!” என்றார்.
பகவான் முகத்தில் கடுமை தோன்றியது
விடறதாவது எடுத்துக்கறதாவது? எங்கே போறது? எதை எடுத்துக்கறது? எல்லாம் நாம்தான். யார் விடறது, யார் எங்கே போறது?” என்றார் கடுமையாக.
அந்த கடுமை, உத்தரவு கிடைக்காததின் வருத்தம் எல்லாமாக சேர்ந்து முதலியார் பழைய ஹாலுக்கு வெளியே நின்று சூழ்நிலை பாராது அழுதார்.
பத்து நிமிடம் அது நீடித்தது. அப்போதும் பகவானின் கடுமை குறையவில்லை என்றறிந்தார். மீண்டும் ஹாலுக்குள் சென்றார். அப்போது முருகனாரும் அங்கிருந்தார். பகவான் முருகனாரை பார்த்து இவரைப்பாரும்! எல்லாத்தையும் விட்டுட்டு ஓடப்போறாராம்! நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே ஓடறது? இருக்கிறது எப்பவுமே இருக்கு. அதை விட்டுட்டு எங்கே போறது? யார் போறதுஎன்றார்.
தொப்பை முதலியார் வாடி நின்றார்.
பகவான் முகம் மெதுவாக அன்பும் கருணையுமாக மாறியது. பரிவோடு பார்த்து நீர் யார்? சொல்லும்!” என்றார்.
முதலியார் கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு பகவானே! நான் ஆத்மா
என்றார்.
பகவான் மிகுந்த கருணையுடன் அவ்வளவுதான் இங்கே தெரிஞ்சுக்க வேண்டியது. இப்போ இந்த ஞானம் திடமில்லாம இருக்கு. காலம் போகப்போக இது திடமாகும். போமையா என்றார்.

மாதவி அம்மாள் பகவானின் பக்தை. பகவான் தீட்சை என்று யாருக்கு ஒன்றும் தருவதில்லை என்று நன்றாகத்தெரிந்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பகவானே எனக்கு தீட்சை கொடுங்கோ என்று கேட்பார். பகவான் எப்போதும் ஒரே பதிலைத்தான் தருவார்: யார் குரு? யார் சிஷ்யன்? ரெண்டும் இங்க இல்லை. இருக்கறது ஒண்ணேதான். அது உங்கிட்டேயே இருக்கு! அதை யாரும் தரவோ எடுக்கவோ முடியாது!
ஒரு நாள் ஹாலில் மாதவ ஸ்வாமி தவிர வேறு யாரும் இல்லாத நேரத்தில் வழக்கமான கோரிக்கையை வைத்து விட்டு மாதவி அம்மாள் பகவானுக்கு நமஸ்காரம் செய்தார். பகவான் செய்தித்தாளை வைத்துவிட்டு பத்மாசனத்தில் உட்கார்ந்தார். அசலமானார். மாதவி அம்மாள் அக்‌ஷரமணமாலை பாடினார். பாடி முடித்ததும் பகவான் மாதவ ஸ்வாமியிடம் ப்ரார்த்தனையை அருணாசலத்துக்கிட்டே சொல்லிட்டாஎன்றார்.
மீண்டும் அசலமாக மாதவி அம்மா மிகுந்த உணர்ச்சியுடன் ஸ்வாமி எனக்கு தீட்சை பெற தகுதி இல்லையா? சொல்லுங்கோ என்றார்.
இதை சொல்லி முடித்தபோது பகவான் முகத்தில் ப்ரகாசம் அதிகமாயிற்று. அதில் இருந்து ஒளி கிளம்பி ஹால் முழுவதையும் நிறைத்தது! பகவானின் உடம்பு தெரியவில்லை. அந்த ஒளியே சோபாவை நிறைத்தது. மாதவி அம்மாள் கண்களில் ஆனந்தம் தாண்டவமாடியது! சில வினாடிகளில் சகஜ நிலை திரும்பியது! மீண்டும் பகவானை நமஸ்கரித்தார்.
பகவான் புன்முறுவலுடன் உன் தீட்சை பைத்தியம் சரியாயிடுத்தா?” என்றார். பின் ஒரு பேப்பரில் ஒரு பாடலை எழுதிக் கொடுத்து இதை உன் த்யான ஸ்லோகமா வெச்சுக்கோ என்றார்.
ஹ்ருதய குகையில் வாசம் செய்யும் குகனை
ப்ரபஞ்சத்தைக் காப்பவனின் மகனை
நினைப்புக்கு அப்பால் உள் சுத்தப் ப்ரஞ்ஞையை
ஞான சக்தியை ஆயுதமாக தரித்தவனை
சீர் அடியார் அஞ்ஞான இருள் அகற்றுபவனை
நான் போற்றி வணங்குகிறேன்.”


Monday, June 1, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 26



மாத்ருபூதேஸ்வரர் ஆலய வேலைகள் ஒரு வழியாக நிறைவை எட்டின. யோகாம்பிகை சிலையை வார்க்க ஒரு சிற்பி வரவழைக்கப்பட்டார். பஞ்சலோகத்தை உருக்க ஜ்யோதிடர்கள் குறித்த நேரம் காலை எட்டு முதல் மதியம் ஒன்னரை வரை. சிற்பி எட்டு மணிக்கு உலோகத்தை உருக்கத் துவங்கினார்.
அன்று பகவான் வழக்கத்தைவிட சீக்கிரமாக படுக்கப்போய்விட்டார்.
சிற்பி என்ன செய்தும் உலோகம் உருகத்துவங்கக்கூட இல்லை! மணி பதினொன்னரை ஆயிற்று. யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. அண்ணாமலைஸ்வாமி போய் பகவானை எழுப்பி விஷயத்தைச் சொன்னார். பகவான் வந்து உலை அருகே ஒரு சேர் போடச்சொல்லி அதில் அமர்ந்து உலையையே பார்த்தபடி இருந்தார். ஒரு நிமிடத்திலேயே உலோகம் உருகத்துவங்கியது!
களிமண் வார்ப்பில் அதை ஊற்றும் வரை பகவான் அங்கேயே இருந்தார். அடுத்த நாள் வார்ப்பை உடைத்து பார்த்த போது சிலை அற்புதமாக நேர்த்தியாக வந்திருந்தது!

பக்தர் ஒருவர் ஒரு நாள்மிகுந்த மனவேதனையுடன் பகவானைப்பார்த்து கேட்டார். “பகவானே! நீங்க நினைச்சா பக்தர்களோட தலையெழுத்தை மாத்த முடியுமா?”
பகவான் சிரித்தார்! “ஞானிக்கு சங்கல்பம்ன்னு ஒண்ணு இருக்குமா? ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கறது சாத்தியமே இல்லை!”
அப்போ எங்க கதிதான் என்ன? எங்க கஷ்டங்களை போக்கிக்கத்தானே உங்ககிட்டே வரோம்; வேண்டிக்கறோம்? அதுக்கு பலனில்லையா?”
பகவான் கருணை கூர்ந்து சொல்லலானார். “ ஞானியோட சாந்நித்தியதுக்குள்ளே உட்காரும் போது ஒருத்தனோட பாபச்சுமை கணிசமா குறையும்! ஞானிக்கு சங்கல்பம் இல்லைதான்; ஆனா அவனோட சாந்நித்தியம் ரொம்பவே சக்தி வாய்ந்தது! அவன் பேசாம சும்மா இருந்தாலும் அவனோட சாந்நித்தியம் தலையெழுத்தையே மாத்தும்; காப்பாத்தும்; சாந்தி கொடுக்கும்; பக்குவமானவனா இருந்தா அவனுக்கு ஆன்மானுபவத்தை கொடுக்கும். இதெல்லாம் தானா நடக்கும். அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமே இராது.
ஞானி பக்தர்களை காப்பாத்தறது அவனோட சங்கல்பத்தால இல்லே. அவனோட சாந்நித்தியத்தால!”

1944 ஆம் வருஷம். என்.ஆர். க்ருஷ்ணமூர்த்திஐயர் தன் மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்தார், அப்போது விழாக்காலம். பகவானின் ஜெயந்தியும் அம்மாவின் சமாதி நாளும் பக்கத்து பக்கத்திலே வரும். பெரிய பந்தல் அமைக்கப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படும். நிறைய பேருக்கு சாப்பாடு போடப்படும். என்.ஆர். க்ருஷ்ணமூர்த்திஐயருக்கு உணவுப்பந்தலுக்கு ஆட்களை ஒழுங்கு படுத்தி அனுப்பும் வேலை தரப்பட்டது. அது மிகவும் கடினமான வேலையாக இருந்தது, பந்திக்குச் செல்ல மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது அவர் கண் எதிரே ஒரு பெண் தன் குழந்தையுடன் கீழே விழுந்தாள். க்ருஷ்ணமூர்த்திஐயர் கிட்டே ஓடினார். ஆனால் கூட்டம் குழந்தையை மிதித்துவிட்டது! அருகில் சென்ற போது குழந்தை அசைவில்லாமல் கிடந்தது. உயிரில்லை போல் இருந்தது.
க்ருஷ்ணமூர்த்திஐயர் துயரம் தாங்காமல் பகவானே! இன்னைக்குப்பார்த்து உன் சந்நிதியிலே இப்படியா நடக்க வேணும்?” என்று வாய்விட்டு கதறினார். அப்போது அவரது காதில் மட்டும் ஒரு குரல் கேட்டது. “ இதுக்கு பதிலா உன் குழந்தையை கொடுத்துடறியா?” அது பகவானின் குரலேதான்!
ஒரு வினாடி அதிர்ந்து போன க்ருஷ்ணமூர்த்திஐயர் அடுத்த வினாடி சரி பகவானே! தந்துடறேன் என்று சொன்னபடி குழந்தையை தூக்கினார். குழந்தை ஒரு துள்ளு துள்ளியது. அழ ஆரம்பித்துவிட்டது! குழந்தையை தாயிடம் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாகப்போய் உட்கார்ந்துவிட்டார்.
இதே நேரத்தில் க்ருஷ்ணமூர்த்திஐயரின் கிராமத்தில் குழந்தைகள் வயலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். குழந்தை ரமணன் ஒரு கன்றுக்குட்டியால் முட்டப்பட்டு கிணற்றில் விழுந்தான். கோடையானதால் வயலில் பெரியவர்கள் யாருமில்லை. குழந்தைகள் பெரியவர்களைக்கூப்பிட கிராமத்துக்கு கத்திக்கொண்டே ஓடினர். ஆனால் கிராமம் கொஞ்சம் தூரத்திலே இருந்தது. உடனே யாரும் வர வாய்ப்பில்லை! செய்தி கேட்ட பெரியவர்கள் துக்கத்துடன் ஓடி வந்தனர். நேரம் கடந்துவிட்டதால் விரும்பத்தகாத செய்தியை எதிர்பார்த்தே சென்றனர். ஆனால் கிணற்றின் கரையில் குழந்தை கிடத்தப்பட்டு இருந்தான்! ஓடிச்சென்று தூக்கியபோது எழுந்துவிட்டான். யார் காப்பாற்றி இருக்கலாம் என்று அக்கம் பக்கம் பார்த்தால் தூரத்தில் ஒரு சன்னியாசி ஈரத்துணியுடன் சென்று கொண்டிருந்தார்!
சிறிது நேரத்தில் ரமணாசிரமத்துக்கு ஒரு தந்தி வந்தது. க்ருஷ்ணமூர்த்திஐயரின் குழந்தை விபத்தில் சிக்கி பிழைத்துக்கொண்ட செய்தி அதில் இருந்தது. க்ருஷ்ணமூர்த்திஐயர் விம்மி விம்மி அழுதார்!