Pages

Thursday, June 4, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -27


          ஒரு நாள் நள்ளிரவு பகவான் எழுந்து இயற்கை உபாதைக்காக வெளியே சென்றார். ஒரு சேவகரும் உடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் பகவான் திரும்பவில்லை. சேவகர் பகவான் சென்ற திசையை நோக்கிச்சென்றாற். அப்போது வித்தியாசமான லப் லப் லப் என்ற ஒலி காதில் விழுந்தது. பகவான் யாருடனோ போதும் போதும்! இப்ப திருப்தியா என்று பேசிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது. ஆச்சரியத்துடன் சேவகர் இன்னும் கிட்டே போன போது ஒரு நாயைப் பார்த்தார். அதன் உடலெல்லாம் சிரங்கு! எலும்பும் தோலுமாக இருந்தது. அது வாஞ்சையுடன் பகவானை நக்கிக்கொண்டு இருந்தது!
சேவகர் அதை துரத்த எத்தனித்தார். பகவான் வேண்டாம்எனத்தடுத்தார். “அவனுக்கு என் மேல் ரொம்ப பிரியம். எப்ப வந்தாலும் யாரானா அவனை துரத்திவிட்டுடறா. இன்னைக்கு இன்னேரத்துலே பார்த்துட்டு பிரியத்திலே கொஞ்சறான்!” என்றார்.
பின் நாயைப் பார்த்து போதுமாடா? நான் இப்ப போகலாமா?” என்று சொல்லி விடை பெற்றார்.
அடுத்த நாள் அந்த நாய் அடங்கிவிட்டது.

ஒரு முறை காஷ்மீரில் இருந்து ஒருவர் பகவானை தரிசிக்க வந்தார். அவருடன் அவருடைய வேலையாளையும் அழைத்து வந்தார். இந்த வேலையாளுக்கு அவரது தாய் மொழியான கஷ்மீரி மட்டுமே தெரியும்.
ஒரு நாள் இரவு ஓல்ட் ஹாலில் பகவானுடன் சாட்விக் மட்டுமே இருந்தார். ஓர் அரிக்கேன் விளக்கு மட்டுமே வெளிச்சம் கொடுத்துக்கொண்டு இருந்தது. அந்த வேலையாள் உள்ளே நுழைந்தார். அவரது மொழியில் பேச ஆரம்பித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டே இருந்தார். பகவான் அவரை உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார். வாயே திறக்கவில்லை. வேலையாள் பின்னர் நமஸ்கரித்து விட்டு போய்விட்டார்.
அடுத்த நாள் காஷ்மீரில் இருந்து தரிசிக்க வந்தவர் பகவானிடம் கஷ்மீரியில் உங்களுக்கு கஷ்மீரி தெரியும்ன்னு சொல்லவே இல்லையேஎன்றார்.
பகவான் என்ன சொல்றார்ன்னு கேளுங்கோ!” என்றார்.
அவர் அருகில் இருந்தவரிடம் நேத்து பகவான் என் வேலையாள்கிட்டே கஷ்மீரியில நல்லா பேசினாராம். அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னாராம். அவன் என்கிட்டே சொன்னானே பகவான் நல்லா கஷ்மீரி பேசறார்ன்னு!” என்றார்.
நான் எதுவுமே பேசலையே!” என்றார் பகவான்.

1945 அம் ஆண்டு க்ருஷ்ணமூர்த்திஐயர் பகவானை தரிசிக்க வந்தபோது பகவானின் தேகம் நலிந்து இருப்பதை பார்த்தார்.
பகவானே, உங்க கருணையால நிறைய பேரோட தீராத வ்யாதி எல்லாம் தீர்ந்து இருக்கு. அதனால பகவானோட உடம்புக்கு பாதிப்பு இருக்குமா?” என்று கேட்டார்/
பகவான் ஆமாம் ந்னும் சொல்லலாம்; இல்லை ந்னும் சொல்லலாம்என்றார்.
அதெப்படி?”
முக்தனுக்கு உண்மையை உணர்ந்த பிறகு உடம்பு தேவை இல்லே. ஆனாலும் அவன் தேகத்தோட இருக்கறதுக்கு காரணம் பரேச்சைதான். அவன் தேகத்தோட இருக்கிற வரை அவன் மத்தவாகிட்டேந்து அவாளோட நோயை அவன் தேகத்தில வாங்கிக்கலாம். அதனால் அவனோட தேகம் கொஞ்ச நாள் அவஸ்தைப்படும். அதனால்தான் ஆமா ந்னு சொன்னேன்.
யாரோட தொந்திரவும் இல்லாம ஒரு மூலையா உடல் உலகத்தை மறந்து சமாதில இருந்தா அந்த கர்மா பொசுங்கி திரும்ப உடம்பு ஆரோக்கியமா வரும். இதுக்கு எவ்ளோ காலம் சமாதில இருக்கணும் என்கிறது அந்தந்த கர்மாவை பொருத்தது.
ஆதி சங்கரர் சின்ன வயசுலேயே ஞானம் அடைஞ்சுட்டார். நல்ல ஆரோக்கியத்தோட பாரத நாட்டையே வலம் வந்தார். எப்பவும் சகஜ நிலையிலேயே இருந்ததால பல காரியங்களை செய்ய முடிஞ்சது. ஆனா கருணையாலே வாங்கிண்ட மத்தவங்களோட கர்மாக்களை தனிமையில இருந்து போக்கிக்கலை. அதனாலத்தான் சின்ன வயசுலேயே விதேகமாயிட்டார்
பகவான் மலை மேலே இருந்த போது உடல் நலிவுற்று பின் மீண்டு வந்ததைப்பற்றி முருகனார் கேட்ட போது இதே பதிலை சொல்லி இருக்கிறார்.

    

No comments: