Pages

Monday, June 1, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 26



மாத்ருபூதேஸ்வரர் ஆலய வேலைகள் ஒரு வழியாக நிறைவை எட்டின. யோகாம்பிகை சிலையை வார்க்க ஒரு சிற்பி வரவழைக்கப்பட்டார். பஞ்சலோகத்தை உருக்க ஜ்யோதிடர்கள் குறித்த நேரம் காலை எட்டு முதல் மதியம் ஒன்னரை வரை. சிற்பி எட்டு மணிக்கு உலோகத்தை உருக்கத் துவங்கினார்.
அன்று பகவான் வழக்கத்தைவிட சீக்கிரமாக படுக்கப்போய்விட்டார்.
சிற்பி என்ன செய்தும் உலோகம் உருகத்துவங்கக்கூட இல்லை! மணி பதினொன்னரை ஆயிற்று. யாருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. அண்ணாமலைஸ்வாமி போய் பகவானை எழுப்பி விஷயத்தைச் சொன்னார். பகவான் வந்து உலை அருகே ஒரு சேர் போடச்சொல்லி அதில் அமர்ந்து உலையையே பார்த்தபடி இருந்தார். ஒரு நிமிடத்திலேயே உலோகம் உருகத்துவங்கியது!
களிமண் வார்ப்பில் அதை ஊற்றும் வரை பகவான் அங்கேயே இருந்தார். அடுத்த நாள் வார்ப்பை உடைத்து பார்த்த போது சிலை அற்புதமாக நேர்த்தியாக வந்திருந்தது!

பக்தர் ஒருவர் ஒரு நாள்மிகுந்த மனவேதனையுடன் பகவானைப்பார்த்து கேட்டார். “பகவானே! நீங்க நினைச்சா பக்தர்களோட தலையெழுத்தை மாத்த முடியுமா?”
பகவான் சிரித்தார்! “ஞானிக்கு சங்கல்பம்ன்னு ஒண்ணு இருக்குமா? ஒரு ஜீவன் முக்தனுக்கு சங்கல்பம் இருக்கறது சாத்தியமே இல்லை!”
அப்போ எங்க கதிதான் என்ன? எங்க கஷ்டங்களை போக்கிக்கத்தானே உங்ககிட்டே வரோம்; வேண்டிக்கறோம்? அதுக்கு பலனில்லையா?”
பகவான் கருணை கூர்ந்து சொல்லலானார். “ ஞானியோட சாந்நித்தியதுக்குள்ளே உட்காரும் போது ஒருத்தனோட பாபச்சுமை கணிசமா குறையும்! ஞானிக்கு சங்கல்பம் இல்லைதான்; ஆனா அவனோட சாந்நித்தியம் ரொம்பவே சக்தி வாய்ந்தது! அவன் பேசாம சும்மா இருந்தாலும் அவனோட சாந்நித்தியம் தலையெழுத்தையே மாத்தும்; காப்பாத்தும்; சாந்தி கொடுக்கும்; பக்குவமானவனா இருந்தா அவனுக்கு ஆன்மானுபவத்தை கொடுக்கும். இதெல்லாம் தானா நடக்கும். அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமே இராது.
ஞானி பக்தர்களை காப்பாத்தறது அவனோட சங்கல்பத்தால இல்லே. அவனோட சாந்நித்தியத்தால!”

1944 ஆம் வருஷம். என்.ஆர். க்ருஷ்ணமூர்த்திஐயர் தன் மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்தார், அப்போது விழாக்காலம். பகவானின் ஜெயந்தியும் அம்மாவின் சமாதி நாளும் பக்கத்து பக்கத்திலே வரும். பெரிய பந்தல் அமைக்கப்பட்டு விமரிசையாக கொண்டாடப்படும். நிறைய பேருக்கு சாப்பாடு போடப்படும். என்.ஆர். க்ருஷ்ணமூர்த்திஐயருக்கு உணவுப்பந்தலுக்கு ஆட்களை ஒழுங்கு படுத்தி அனுப்பும் வேலை தரப்பட்டது. அது மிகவும் கடினமான வேலையாக இருந்தது, பந்திக்குச் செல்ல மக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது அவர் கண் எதிரே ஒரு பெண் தன் குழந்தையுடன் கீழே விழுந்தாள். க்ருஷ்ணமூர்த்திஐயர் கிட்டே ஓடினார். ஆனால் கூட்டம் குழந்தையை மிதித்துவிட்டது! அருகில் சென்ற போது குழந்தை அசைவில்லாமல் கிடந்தது. உயிரில்லை போல் இருந்தது.
க்ருஷ்ணமூர்த்திஐயர் துயரம் தாங்காமல் பகவானே! இன்னைக்குப்பார்த்து உன் சந்நிதியிலே இப்படியா நடக்க வேணும்?” என்று வாய்விட்டு கதறினார். அப்போது அவரது காதில் மட்டும் ஒரு குரல் கேட்டது. “ இதுக்கு பதிலா உன் குழந்தையை கொடுத்துடறியா?” அது பகவானின் குரலேதான்!
ஒரு வினாடி அதிர்ந்து போன க்ருஷ்ணமூர்த்திஐயர் அடுத்த வினாடி சரி பகவானே! தந்துடறேன் என்று சொன்னபடி குழந்தையை தூக்கினார். குழந்தை ஒரு துள்ளு துள்ளியது. அழ ஆரம்பித்துவிட்டது! குழந்தையை தாயிடம் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாகப்போய் உட்கார்ந்துவிட்டார்.
இதே நேரத்தில் க்ருஷ்ணமூர்த்திஐயரின் கிராமத்தில் குழந்தைகள் வயலில் விளையாடிக்கொண்டு இருந்தனர். குழந்தை ரமணன் ஒரு கன்றுக்குட்டியால் முட்டப்பட்டு கிணற்றில் விழுந்தான். கோடையானதால் வயலில் பெரியவர்கள் யாருமில்லை. குழந்தைகள் பெரியவர்களைக்கூப்பிட கிராமத்துக்கு கத்திக்கொண்டே ஓடினர். ஆனால் கிராமம் கொஞ்சம் தூரத்திலே இருந்தது. உடனே யாரும் வர வாய்ப்பில்லை! செய்தி கேட்ட பெரியவர்கள் துக்கத்துடன் ஓடி வந்தனர். நேரம் கடந்துவிட்டதால் விரும்பத்தகாத செய்தியை எதிர்பார்த்தே சென்றனர். ஆனால் கிணற்றின் கரையில் குழந்தை கிடத்தப்பட்டு இருந்தான்! ஓடிச்சென்று தூக்கியபோது எழுந்துவிட்டான். யார் காப்பாற்றி இருக்கலாம் என்று அக்கம் பக்கம் பார்த்தால் தூரத்தில் ஒரு சன்னியாசி ஈரத்துணியுடன் சென்று கொண்டிருந்தார்!
சிறிது நேரத்தில் ரமணாசிரமத்துக்கு ஒரு தந்தி வந்தது. க்ருஷ்ணமூர்த்திஐயரின் குழந்தை விபத்தில் சிக்கி பிழைத்துக்கொண்ட செய்தி அதில் இருந்தது. க்ருஷ்ணமூர்த்திஐயர் விம்மி விம்மி அழுதார்!
 

No comments: