Pages

Tuesday, June 2, 2015

அடியார்கள்- தொப்பைய முதலியார், மாதவி அம்மாள்.


தொப்பைய முதலியார் பகவானின் அத்யந்த பக்தர். 1939 இல் மாத்ரு பூதேஸ்வரர் ஆலய நிர்மாணத்தின் போது கட்டுமானப்பணியை மேர்பார்வை செய்து வந்தார். விரக்தியின் பிடியில் இருந்தார், ஆசிரம பணியை சரி வர செய்ய முடியவில்லை. மனமோ பொறுப்புகள் எல்லாவற்றையும் துறந்து முழுக்க முழுக்க ஆன்மீக சாதனையில் ஈடுபட ஆசைப்பட்டது. பகவானிடம் உத்திரவு கேட்க பயமாக இருந்தது. மனச்சோர்வும் துக்கமும் மேலிட தைரியத்தை வர வழைத்துக்கொண்டு தனியாக இருந்த பகவானை சென்று நமஸ்கரித்தார்.
பகவானே ஆன்மீக சாதனை புரிய ஒத்தன் உலகப்பற்றை விடனும்தானே? வீட்டை விட்டுடலாம்ன்னு இருக்கேன். சன்னியாசம் எடுத்துக்க பகவான் உத்தரவு வேணும்என்றார்.
பகவான் பதில் ஏதும் சொல்லவில்லை. மௌனமாக இருந்தார்.
சற்று நேரம் கழித்து பகவானே உத்திரவு கொடுங்கோ!” என்றார்.
பகவான் முகத்தில் கடுமை தோன்றியது
விடறதாவது எடுத்துக்கறதாவது? எங்கே போறது? எதை எடுத்துக்கறது? எல்லாம் நாம்தான். யார் விடறது, யார் எங்கே போறது?” என்றார் கடுமையாக.
அந்த கடுமை, உத்தரவு கிடைக்காததின் வருத்தம் எல்லாமாக சேர்ந்து முதலியார் பழைய ஹாலுக்கு வெளியே நின்று சூழ்நிலை பாராது அழுதார்.
பத்து நிமிடம் அது நீடித்தது. அப்போதும் பகவானின் கடுமை குறையவில்லை என்றறிந்தார். மீண்டும் ஹாலுக்குள் சென்றார். அப்போது முருகனாரும் அங்கிருந்தார். பகவான் முருகனாரை பார்த்து இவரைப்பாரும்! எல்லாத்தையும் விட்டுட்டு ஓடப்போறாராம்! நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே ஓடறது? இருக்கிறது எப்பவுமே இருக்கு. அதை விட்டுட்டு எங்கே போறது? யார் போறதுஎன்றார்.
தொப்பை முதலியார் வாடி நின்றார்.
பகவான் முகம் மெதுவாக அன்பும் கருணையுமாக மாறியது. பரிவோடு பார்த்து நீர் யார்? சொல்லும்!” என்றார்.
முதலியார் கொஞ்சம் தைரியத்தை வர வழைத்துக்கொண்டு பகவானே! நான் ஆத்மா
என்றார்.
பகவான் மிகுந்த கருணையுடன் அவ்வளவுதான் இங்கே தெரிஞ்சுக்க வேண்டியது. இப்போ இந்த ஞானம் திடமில்லாம இருக்கு. காலம் போகப்போக இது திடமாகும். போமையா என்றார்.

மாதவி அம்மாள் பகவானின் பக்தை. பகவான் தீட்சை என்று யாருக்கு ஒன்றும் தருவதில்லை என்று நன்றாகத்தெரிந்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பகவானே எனக்கு தீட்சை கொடுங்கோ என்று கேட்பார். பகவான் எப்போதும் ஒரே பதிலைத்தான் தருவார்: யார் குரு? யார் சிஷ்யன்? ரெண்டும் இங்க இல்லை. இருக்கறது ஒண்ணேதான். அது உங்கிட்டேயே இருக்கு! அதை யாரும் தரவோ எடுக்கவோ முடியாது!
ஒரு நாள் ஹாலில் மாதவ ஸ்வாமி தவிர வேறு யாரும் இல்லாத நேரத்தில் வழக்கமான கோரிக்கையை வைத்து விட்டு மாதவி அம்மாள் பகவானுக்கு நமஸ்காரம் செய்தார். பகவான் செய்தித்தாளை வைத்துவிட்டு பத்மாசனத்தில் உட்கார்ந்தார். அசலமானார். மாதவி அம்மாள் அக்‌ஷரமணமாலை பாடினார். பாடி முடித்ததும் பகவான் மாதவ ஸ்வாமியிடம் ப்ரார்த்தனையை அருணாசலத்துக்கிட்டே சொல்லிட்டாஎன்றார்.
மீண்டும் அசலமாக மாதவி அம்மா மிகுந்த உணர்ச்சியுடன் ஸ்வாமி எனக்கு தீட்சை பெற தகுதி இல்லையா? சொல்லுங்கோ என்றார்.
இதை சொல்லி முடித்தபோது பகவான் முகத்தில் ப்ரகாசம் அதிகமாயிற்று. அதில் இருந்து ஒளி கிளம்பி ஹால் முழுவதையும் நிறைத்தது! பகவானின் உடம்பு தெரியவில்லை. அந்த ஒளியே சோபாவை நிறைத்தது. மாதவி அம்மாள் கண்களில் ஆனந்தம் தாண்டவமாடியது! சில வினாடிகளில் சகஜ நிலை திரும்பியது! மீண்டும் பகவானை நமஸ்கரித்தார்.
பகவான் புன்முறுவலுடன் உன் தீட்சை பைத்தியம் சரியாயிடுத்தா?” என்றார். பின் ஒரு பேப்பரில் ஒரு பாடலை எழுதிக் கொடுத்து இதை உன் த்யான ஸ்லோகமா வெச்சுக்கோ என்றார்.
ஹ்ருதய குகையில் வாசம் செய்யும் குகனை
ப்ரபஞ்சத்தைக் காப்பவனின் மகனை
நினைப்புக்கு அப்பால் உள் சுத்தப் ப்ரஞ்ஞையை
ஞான சக்தியை ஆயுதமாக தரித்தவனை
சீர் அடியார் அஞ்ஞான இருள் அகற்றுபவனை
நான் போற்றி வணங்குகிறேன்.”


No comments: