Pages

Friday, April 15, 2016

கிறுக்கல்கள்! - 103


மாஸ்டர் சொன்னார்: மற்றவர்களை மாற்ற நீ முயற்சிக்கும் முன் இதை உன்னையே கேட்டுக்கொள். இந்த மாற்றத்தால் எது திருப்தி அடையப்போகிறது? என் ஆணவமா? என் சந்தோஷமா அல்லது என் லாபமா?
பின் வழக்கம்போல் கதை சொன்னார்.
ஒரு இளைஞன் பாலத்தில் இருந்து குதித்து உயிரை விட பாலத்தின் கட்டுச்சுவர் மீது ஏறி நின்றான். ஒரு போலீஸ்காரர் அங்கே ஓடி வந்தார்.
ஏன்பா! உனக்கு என்ன வயசாச்சு. வாழ்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லை; அதுக்குள்ள உசிரை விடறேங்கறியே?”
எனக்கு வாழ்கை வெறுத்துபோச்சு!”
தயவு செய்து நான் சொல்லறதை கேளு! நீ இப்ப தண்ணிக்குள்ள குதிச்சா நான் உன்னை காப்பாத்த பின்னாலேயே குதிக்க வேண்டி இருக்கும். இப்பவே தண்ணி பாதி உறைஞ்சு போச்சு. நானோ டபிள் நிமோனியாவில படுத்து எழுந்து இப்பத்தான் ட்யூட்டி ல சேந்தேன். என்ன ஆகும்ன்னு புரியுது இல்லையா? இந்த நிலையில் நான் உறைஞ்சு போன ஆத்தில குதிச்சா செத்துப்போயிடுவேன். என் மனைவியும் நாலு குழந்தைகளும் என்ன செய்வாங்க?இது வாழ்நாள் பூரா உன் மனசை உறுத்தணுமா? வேணாமில்ல? அதனால் நா சொல்லறத கேளு. இப்ப சமத்தா கீழ இறங்கு. வீட்டுக்குப்போ. அங்கே தனியா நிம்மதியா தூக்கு மாட்டிண்டு செத்துப்போ!”

Thursday, April 14, 2016

கிறுக்கல்கள்! - 102



சில சீடர்கள் கடும் முயற்சி எடுத்தால் உலகில் செய்ய முடியாதது எதுவுமே இல்லை என்பார்கள். மாஸ்டர் சொல்லுவார்: உலகில் இருக்கும் அருமையான விஷயங்களை முயற்சியால் சாதிக்க முடியாது!
உன் முயற்சியால் உணவை வாயில் போட்டுக்கொள்ளலாம்; ஆனால் பசியை உன்னால் முயன்றும் உருவாக்க முடியாது.
நீ முயன்று ஒரு நல்ல படுக்கையில் படுக்கலாம்; ஆனால் தூக்கத்தை உன்னால் முயற்சி மூலம் அடைய இயலாது.
நீ யாரையாவது பாராட்டலாம்; ஆனால் ஒருவரை வியப்புடன் போற்றுதல் முயற்சியால் வராது.
நீ முயன்று ஒரு ரகசியத்தைச் சொல்லலாம்; ஆனால் நம்பிக்கையை உன்னால் முயன்று பெற முடியாது.
நீ முயன்று சேவை செய்யலாம்; ஆனால் அன்பு காட்டுதல் உன் முயற்சியால் வராது!

Wednesday, April 13, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 9


மாலை நேரம். மெல்ல இருட்ட ஆரம்பித்து இருந்தது. டீக்கடையில் டீயை உறிஞ்சியபடி இளைஞன் பராக்கு பார்த்துக்கொண்டு இருந்தான். எதிர் சாரியில் அவன் பார்வை படிந்தது. அங்கிருந்து 'சட் பட்' என்று தொடர்ந்து சத்தம் வந்து கொண்டு இருந்தது. பார்வையை மறைத்துக்கொண்டு இருந்த ஒரு நபர் எழுந்து போக சத்தம் வந்த இடம் தெரிந்தது. அங்கே ஒரு அம்மணி கொசு பேட்டை வைத்துக்கொண்டு டி-20 கிரிக்கெட்காரர் மாதிரி ருத்திர தாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார்.
இளைஞனின் சிந்தனை விரியலாயிற்று. இது என்ன? கொலை. ஆனா கொல்லாம இருக்க முடியுமா என்ன? அது நம்பளை கடிச்சு வியாதி வரதே! சிக்கன்குனியா டெங்குன்னு ஏதேதோ ஆயிரம் சொல்லறாங்களே? ம்ம்ம்ம்? அது சரி! கொசு கடிக்கற எல்லாருக்கும் வியாதி வரதா? இல்லையே! எத்தனையோ எளிய குடும்பங்களில கொசுவை விரட்ட வழி இருக்கா என்ன? அவங்க கொசு கடில அவஸ்தை படறாங்க; ஆனா பலருக்கும் வியாதி வரலையே! அது வரதுக்கு கர்மா இருந்து இதை ஒரு வாய்ப்பா வெச்சுக்கொண்டு வரும் போலிருக்கு!

கொலையைத்தவிர வேறு ஒண்ணுமில்லை. ஏதோ வேலை செஞ்சு கொண்டு இருக்கோம். கொசு கடிக்கிறது. யோசிக்காமலே ரிப்லெக்ஸ் ஆக்‌ஷனா அத அடிக்கறோம். சில சமயம் அடி பட்டு சாகிறது. பல சமயம் தப்பி விடுகிறது. நாமும் வேலையை தொடர்ந்து செய்யறோம். கொஞ்ச நேரத்திலேயே திரும்பவும் கொசுக்கடி. அதே கொசு. அல்லது முன்னே கொசு அடிபட்டு செத்திருந்தா புதுசா வேற கொசு. என்ன செஞ்சாலும் கொசுக்கடியில் இருந்து தப்ப முடியலை.
ரூம்ல ரிபெல்லர், ஸ்ப்ரேன்னு என்ன செஞ்சு விரட்டி இருந்தாலும் டாய்லெட்டில் உட்காந்துட்டு வரும் ஓரிரு நிமிஷத்திலேயே அது வந்து கடிச்சு தீர்த்துடறது!
இப்ப இந்த கொசுவை கொன்னா புது கர்மா வந்து பிடிச்சுக்குமா? இல்ல நாம அடிச்சுகொல்லறதுதான் கர்மாவை தீக்கிறதா? புரியலையே! ம்ம்ம்ம்?
நாம அறியாம அடிச்சு அது செத்தா அதோட கர்மாவை தீர்த்துக்கறதுன்னு வெச்சுக்கலாமா? அப்படித்தான் போலிருக்கு!
கொசு விரட்டி வெச்சா? டிவி விளம்பரத்துல என்னதான் க்ராபிக் கொசு செத்து விழுந்தாலும் நிஜத்துல எல்லாம் மயக்கமா விழுது அல்லது கிட்ட வராம பறந்து போயிடுது. இது கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு. ஆனா இந்த பேட்டை வெச்சுண்டு அடிச்சா? அதை தேடி தேடி கொல்லறா மாதிரின்னா இருக்கு? ம்ம்ம்ம்? இது புதுசா கர்மாவை சேர்க்கும்ன்னுதான் தோணறது!
குழப்பமா இருக்கே? சரியா, தப்பா?
"சரிதான்பா !" என்ற குரல் கேட்டது. இளைஞர் திரும்பி பார்த்த போது பெரியவர் பத்தடி தள்ளி கூட்டத்தில் கரைந்து கொண்டு இருந்தார்!

Tuesday, April 12, 2016

கிறுக்கல்கள்! - 101


ஏசு தன் சீடர்களிடம் பெற்றோரை வெறுக்கச்சொல்லி இருக்கிறாரே என்று சிலர் மாஸ்டரிடம் கேட்பார்கள். மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொல்லுவார்: பெற்றோரைப்போல பெரிய எதிரிகள் கிடையாது. ஒரு முறை சூப்பர் மார்கெட் போயிருந்தேன். ஒரு பெண்மணி இரண்டு சிறு குழந்தைகளை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்தார்.
அட! அழகான குழந்தைகள். என்ன வயசாச்சு?” என்றேன்.
பதில் வந்தது: “டாக்டருக்கு மூணு வயசு; வக்கீலுக்கு ரெண்டு வயசு!”

Monday, April 11, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 8


அட! என்ன இந்த நேரத்துக்கு வறீங்க? வாங்க வாங்க!”
உறவினர்களில ஒத்தர் இறந்துட்டாரு. போய் வழி அனுப்பிட்டு வரேன்.”
ரொம்ப சோர்வா இருக்கீங்க?”
ஆமா. அதுக்குத்தான் மதிய நேரம் மணி ரெண்டானாலும் ஒரு டீ குடிக்கலாம்ன்னு….. காலையிலேந்து டாய்லெட்டே கதின்னு கிடந்தேன்.”
அட! என்னாச்சுங்க?”
காலை டிபன் சாப்பிட ஆரம்பிக்கறப்பத்தான் போன் வந்தது. போன் பேசிகிட்டே சாப்டு முடிச்சுட்டேன். ஆபீசுக்கு லீவு போட சில ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு கிளம்பிகிட்டு இருந்தேன். அப்பத்தான் வயித்தை முறூக்கிகிட்டு… யப்பா! செம வலி. டாய்லெட்டுக்கு ஓடினேன். வயித்தாலை போச்சு. அப்பறமா இன்னும் ரெண்டு மூணு தரம். அப்பவே சோர்ந்து போயிட்டேன். பொண்டாட்டி சொல்றா, சாவு சேதி கேட்டுட்டும் சாப்டேனாம். அதனால குத்தம்ன்னு சொல்றா. அப்படிக்கூட உண்டானா?”
தெரிலீங்களே! நா கேள்விப்பட்டதில்ல.”
நமக்குத்தெரியாத விஷயம் உலகத்தில நிறைய இருக்கு!” குரலைக்கேட்டு திரும்பிப்பார்த்தான் இளைஞன். அதே பெரியவர்தான். சோர்வைத்தாண்டி கொஞ்சம் உற்சாகம் தொற்றிக்கொண்டது!
காசை கொடுத்து டீயை வாங்கிக்கொண்டவர் இளைஞன் அருகில் அமர்ந்தார்.
மாயா லோகம்ன்னு சொல்லுவாங்க இதை. ஆயிரத்தெட்டு என்ன கோடி சட்டதிட்டங்கள்… அதுல பலதும் நமக்குத்தெரியாது; பலதும் புரியாது. தெரிஞ்ச சிலதை வெச்சுகிட்டு நமக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைச்சுக்கிறோம்.”
உதாரணம் காட்டுங்களேன்!”
அதோ பார்!”
எதிர் சாரியில் இருந்த ஒரு வீட்டில் ஒருவர் வந்து மதில் சுவர் மேல் ஒரு உருண்டை சோறு வைத்துவிட்டு, காக்காக்காக்கா என்று குரல் கொடுத்துவிட்டு, ஓடி வந்த பூனையை விரட்டி விட்டு உள்ளே போனார்.
திதி கொடுக்கறார் போலிருக்கு. இதுல என்ன?”
ஆமாம். அப்பா, தாத்தா, தாத்தாவோட அப்பான்னு மூணு தலை முறைக்கு பிண்டம் வைப்பாங்க. வேடிக்கை பாரு!”
காகம் ஒன்று வந்து உட்கார்ந்தது. ஓரடி தூரத்தில் சோற்று உருண்டை இருந்தாலும் அதை கொத்தவில்லை. கா கா என கத்தியபடி இருந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் சென்றன. இன்னும் கொத்தவில்லை. ம்ம்ம்ம் இப்படி ஆனா திதி கொடுத்தவர் ச்ரத்தையா கொடுக்கலைம்பாங்களே என்று நினைத்தான் இளஞன். அப்போது ஒரு காகம் பறந்து வந்து உடகார்ந்தது. சரி வந்தாச்சு என்று நினைத்தால் அதுவும் கா கா என்று கத்த ஆரம்பித்தது! இதென்னாடா இது? பசியே இல்லாத காக்காவா வருது என்று நினைத்தான், மெஸ்மரைஸ் ஆனது போல அந்த காட்சியை விட்டு வேறு எதையும் பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்கள் சென்றன. உடல் முழுதும் கருமையான அண்டங்காக்காய் ஒன்று பறந்து வந்தது. உட்காரவில்லை. பறந்து கடக்கிற போக்கில் சட்டென்று ஒரு கொத்து கொத்திச்சென்றது. உடனே மற்ற இரு காகங்களும் கொத்த ஆரம்பித்தன! சாப்பிட்டு சில நாள் ஆனது போல விரைவாக உண்டன! பிரமிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான் இளைஞன். எந்த வரிசையில் சாப்பிட வேண்டும் என்று கூடவா விதி இருக்கும்?” ”ஏன் சார்” என்று திரும்பி பார்த்த போது பெஞ்சில் காலியான டீ க்ளாஸ் மட்டுமே இருந்தது!