Pages

Saturday, June 13, 2015

உள்ளது நாற்பது - 32

 
நானுதியா துள்ளநிலை நாமதுவா யுள்ளநிலை
நானுதிக்குந் தானமதை நாடாம - னானுதியாத்
தன்னிழப்பைச் சார்வதெவன் சாராமற் றானதுவாந்
தன்னிலையி னிற்பதெவன் சாற்று.


நான் உதியாது உள்ள நிலை நாம்அதுவாய் உள்ளநிலை
நான்உதிக்கும் தானமதை நாடாமல் - நான் உதியாத்
தன் இழப்பைச் சார்வதுஎவன் சாராமல் தான்அதுவாம்
தன்நிலையில் நிற்பதெவன் சாற்று.


நான் என்னும் அகந்தை உதிக்காமல் இருக்கும் நிலையே நாம் ஆன்ம ஸ்வரூபமாக இருக்கும் நிலையாகும். நான் உதிக்கின்ற இடத்தை-ஸ்தானத்தை- விசாரித்து அதை அழித்தால் ஒழிய அது ஒழியாது. அப்படிச் செய்யாமல் நான், தான் என்பன மீண்டும் உதிக்காத நம் உண்மையான ஆன்ம நிலையை அடைவது எப்படி? அகந்தை நாசமாகாமல் தன் உண்மையான ஆன்ம நிலையில் நிற்பது எப்படி? சொல்வாயாக!


सत्या स्थितिर्नाहमुदेति यत्र तच्चोदयस्थानगवेषणेन ।
विना न नश्येद्यदि तन्न नश्येत् स्वात्मैक्यरूपा कथमस्तु निष्ठा ॥ २९ ॥

ஸத்யா ஸ்தி²திர்னாஹமுதே³தி யத்ர தச்சோத³யஸ்தா²னக³வேஷணேன |
வினா ந நஶ்யேத்³யதி³ தன்ன நஶ்யேத் ஸ்வாத்மைக்யரூபா கத²மஸ்து நிஷ்டா² || 29 ||


 

Friday, June 12, 2015

அடியார்கள் - சாந்தம்மாள் -2



பகவான் விதேகமான பிறகும் சாந்தம்மாள் பல வருடங்கள் பகவான் சேவையிலேயே காலம் கழித்தாள். வயதானது. உடல் நலிவுற்றது. வேலை செய்ய முடியவில்லை. ஆசிரமத்தில் வேலை செய்யாமல் உணவு ஏற்க விரும்பவில்லை. திருவண்ணாமலையில் தனியாக வசிக்க வசதியும் இல்லை. தூரத்து உறவினரான டாக்டர் ஒருவர் தன்னுடன் வந்து இருக்கும்படி அழைத்தார்.
சாந்தம்மாளும் கிளம்ப முடிவு செய்தார். அன்றிரவு ஒரு கனவு வந்தது. அதில் பகவானிடம் விடை பெற சென்றார். பகவான் ஏன் என்னைவிட்டு போறே? என்னத்தவிர யார் இருக்கா இந்த லோகத்துல உன்னை பாத்துக்க?” என்றார்
பகவானின் ஒப்புதல் இல்லை எனத் தெரிந்தாலும் சூழ்நிலை கருதி டாக்டர் வீட்டுக்குச் சென்றார். சனிக்கிழமை அங்கு போய் சேர்ந்தார். ஆரோக்கியமாக இருந்த டாக்டர் திடீரென்று ஞாயிற்றுக்கிழமை போய்ச்சேர்ந்தார்! சாந்தம்மாள் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்குப் போனார். அங்கு ஒன்றும் சரிப்படவில்லை. மிகுந்த துக்கத்துக்குள்ளானார். உறவினர் திருவண்ணாமலைக்கே ரயில் ஏற்றிவிட்டனர். பகவானைத்தவிர தன்னை பார்த்துக்கொள்ள யாருமில்லை என்பது இப்போது அனுபவமாயிற்று.
இறுதி நாட்களை பகவான் அடி நிழலிலேயே கழித்தார். பார்ப்பவர்கள் அவள் மிகவும் கஷ்டப்படுவதாக எண்ணினர்கள். யாரும் அவரிடம் ஐயோ பாவம்! இவ்வளோ கஷ்டப்படறயே?” என்று சொன்னால் ஒரு கதையை சொல்லுவார்.

ஒருமுறை கிச்சன்ல சமைச்சுண்டு இருக்கும் போது பகவான் வந்தது. சமைச்சதை உப்பு காரம் சரியான்னு பாத்தது. அப்பறம் எங்கிட்ட பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் சாப்பாட்டில உப்பு காரம் பார்க்க சம்பளம் கொடுத்து ஆள் வெச்சிருப்பா. உன் சமையலை தினமும் உப்பு காரம் பாக்கறேனே, எனக்கு என்ன சம்பளம் கொடுக்கப்போறே?’ ந்னு கேட்டது. எனக்கு உள்ளே அழுகை முட்டித்து. ‘பகவானே! நான் பிச்சைக்காரி. உங்களுக்கு கொடுக்க எங்கிட்டே என்ன இருக்கு? இந்த பிச்சைக்காரியையே கொடுத்துடறேன் ஏத்துக்கோங்கன்னு கால்ல விழுதேன். பகவான் கம்பீரமா தலையாட்டித்து.

வெளியே பாக்க நான் கஷ்டப்படறா மாதிரி தெரியறது. உள்ளே எப்படி இருக்கேன்னு எனக்குத்தானே தெரியும்?”


Thursday, June 11, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் -29



1945 இல் பகவானின் வலது கால் பெருவிரலில் மூட்டு விலகிவிட்டது. ஆசிரம டாக்டர் ஒரு மாதத்துக்கு எங்கும் நடக்கக்கூடாது என்று தடை போட்டுவிட்டார். சாப்பாட்டு ஹாலுக்கும் கழிவறைக்கும் மட்டுமே போக அனுமதி அளித்தார்.ஒரு மாதம் முடியும் முன் ஒரு நாள் வெங்கட்ராமையரும் ராமசந்திரஐயரும் பகவான் சாப்பாட்டு ஹாலில் இருந்து வெளியே வரும்போது நமஸ்கரித்தனர்.
"என்ன ஓய் என்ன விசேஷம்?”
"ரெண்டு பேரும் கந்தாஸ்ரமம் போகப்போறோம். அதான் உத்திரவுக்கு வந்தோம்.”
"சரி போயிட்டு வாங்கோ.”
பகவான் தன் உதவியாளர் ரங்கசாமியிடம் நாமும் போகலாமா?’ என்று கேட்டார்.
ரங்கசாமி அதிர்ச்சிக்குள்ளானார். இன்னும் கால் சரியாகலையே? ஒரு மாசம் நடக்கக்கூடாதே? வெயில் வேற சுட்டெறிக்கிறது.
நாம் எப்படி போக முடியும்? உங்களாலே முடியாதே பகவானே?” என்றார் ரங்கசாமி.
மூவரையும் பார்த்து குழந்தைப் போல பகவான் ஏம்பா! கூட்டிண்டு போக மாட்டேளா என்ன?” என்றார்.
ராமசந்திரஐயர் பகவானே உங்ககூட போறது எங்க பாக்கியம்தான். ஆனா நீங்க நடக்க முடியாதே? எப்படி வர முடியும்?” என்றார்.
ரங்கசாமியைப் பார்த்து இவா கூட்டிண்டு போக மாட்டாஎன்றார் பகவான் வருத்தத்துடன்.
பின் ராமசந்திரஐயரும் வெங்கட்ராமையரும் கிளம்பினர். சிறிது தூரம் சென்றபின் திரும்பிப்பார்த்தால் பகவானும் ராமசந்திரஐயரும் மலைப்பக்கமாக நடந்து வந்து கொண்டு இருந்தனர். ரங்கசாமி பயப்படாதீங்கோ! நாங்க ஒண்ணும் உங்களோட வரலைஎன்றார்.
பகவான் தினமும் கொஞ்ச தூரம் மலையில் நடப்பதுண்டு. அதை நிறுத்தி இருந்தார். அதை மீண்டும் ஆரம்பிக்கிறார் போலும் என்று நினைத்தார்கள்.
கொஞ்ச தூரம் நால்வரும் ஒன்றாக நடந்தார்கள். பிறகு இவர்கள் இருவரும் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது ரங்கசாமி ஓடி வந்தார்.
நானும் உங்க கூட வரேன். கொஞ்சம் தூரம் போய் சித்த நில்லுங்க!” என்றார்.
சரியென்று இருவரும் பாதி மலையேறி ஓர் இடத்தில் ரங்கசாமிக்காக காத்து நின்றனர். அரை மணி ஆகியும் வரவில்லை. அப்போது ஒருவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம் வழியில் யாரும் வராங்களா?’ என்று விசாரித்தனர். அவர் ஆமாம்; பகவான் வருகிறார்!” என்றார். “வெயிலோ உக்கிரம்; பகவான் காலூனவும் முடியாது. எப்படி வரார்? நான் போய் பார்க்கிறேன்என்று ராமசந்திரஐயர் கிளம்பிப்போனார். போய்ப்பார்த்தால் பகவான் பகவான் சிரமப்பட்டு வந்து கொண்டு இருந்தார், உடல் முழுதும் வேர்வை. மிகவும் களைப்புடன் இருந்தார். மெதுவாக தவழ்ந்து வருவது போலவே இருந்தது. கூரான பாறைகளில் ஊன்றி கைகளும் கால்களும் சிராய்த்து இருந்தன. உண்மையிலேயே அவரால் மலையேற முடியவில்லை. திரும்பிப்போகலாம் என்றால் அதற்கு பகவான் ஒப்புக்கொள்ளவில்லை.
வேறு வழியில்லாமல் ரங்கசாமியும் ராமசந்திரஐயரும் பகவானை இருபுறமும் தாங்கலாக தூக்கிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன் கந்தாஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அப்போது கந்தாஸ்ரமத்தில் மராமத்துப்பணி நடந்துக்கொண்டு இருந்தது. அதை செய்து கொண்டு இருந்த சிற்பி பகவானைப் பார்த்ததும் ஓடி வந்து பகவானே! என்ன புண்ணியம் செஞ்சேனோ! எனக்காகவே இவ்வளவு தூரம் ஏறி வந்தீங்களே என்று காலில் விழுந்தான்.
பகவானும் புன்னகையுடன் ஆமாம். உனக்காகவே வந்தேன்! உன் வேண்டுதல்தான் என்னை இங்கே இழுத்து வந்ததுஎன்றார்.
ராமசந்திரஐயர் ஒன்றும் புரியாமல் பகவானே, என்ன வேண்டுதல்?” என்று கேட்டார்.
உனக்குத் தெரியாதோல்லியோ? நாலு நாள் முன்னே அம்மா கோவிலுக்கு முன்னே ஒரு ஹால் கட்ட முஹூர்த்தம் பண்ணின்னா. தூணை வெச்சு ஸ்தபதியும் சின்னசாமியும் தொட்டு ஆசீர்வாதம் பண்ணச்சொன்னா. டாக்டர்கிட்டே பெர்மிஷன் வாங்கிண்டு மெதுவா போய் அங்கே உட்காரச் சொல்லி.... பெரிய கூட்டம். முஹூர்த்தம் முடிஞ்சு கிளம்பறப்போ இவன் அந்த கூட்டத்திலே இருந்து பெரிய ஸ்தபதி வேலை பாத்தா பகவான் வந்து ஆசீர்வாதம் பண்ணாறார். நாமும்தான் நிறைய பக்தி சிரத்தையோடத்தானே கந்தாஸ்ரமத்தில வேலை செய்யறோம்? பகவான் வந்து பாத்து ஆசிர்வாதம் பண்ணா நல்லா இருக்குமே. ஆனா இதெல்லாம் நடக்குமாந்னு வேண்டிக்கொண்டு நின்னான்.
அதுதான் இப்ப என்னை இங்கே இழுத்துண்டு வந்ததுஎன்றார் பகவான்.


Wednesday, June 10, 2015

உள்ளது நாற்பது - 31

 
அகந்தையுண் டாயி னனைத்துமுண் டாகு
மகந்தையின் றேலின் றனைத்து - மகந்தையே
யாவுமா மாதலால் யாதிதென்று நாடலே
யோவுதல் யாவுமென வோர்.
அகந்தை உண்டாயின் அனைத்தும் உண்டாகும்
அகந்தை இன்றேல் இன்றுஅனைத்தும் - அகந்தையே
யாவுமாம் ஆதலால் யாதுஇது என்றுநாடலே
ஓவுதல் யாவும்என ஓர்.


அகந்தை உண்டானால் எல்லாவித தோற்றங்களும் உண்டாகின்றன. அகந்தை இல்லை எனில் இந்த தோற்றங்கள் அனைத்தும் இல்லாமல் போகின்றன. ஆகையால் அகந்தையே எல்லாமுமாக உள்ளது. அகந்தையின் தன்மையை விசாரிக்க எல்லாம் மறைவதால் அதுவே எல்லாவற்றையும் துறப்பது என அறிவாயாக.

भावेऽहमः सर्वमिदं विभाति लयेऽहमो नैव विभाति किञ्चित्।
तस्मादहंरूपमिदं समस्तं तन्मार्गणं सर्वजयाय मार्गः ॥ २८ ॥

பா⁴வே()ஹம: ஸர்வமித³ம்ʼ விபா⁴தி லயே()ஹமோ நைவ விபா⁴தி கிஞ்சித்|
தஸ்மாத³ஹம்ʼரூபமித³ம்ʼ ஸமஸ்தம்ʼ தன்மார்க³ணம்ʼ ஸர்வஜயாய மார்க³: || 28 ||
 


 

Tuesday, June 9, 2015

அடியார்கள் - சாந்தம்மாள்-1



சாந்தம்மாள் கைங்கரியம் செய்ய ஆசிரமத்துக்கு வந்த புதிதில் பகவானுக்கு பரிமாறும் போது உருளைக்கிழங்கு கறியை அதிகமாக பரிமாறினார். பகவான் தலையை குனிந்துக்கொண்டார். பரிமாறுபவர்களை முகம் பார்க்கவே இல்லை.
மாலையில் கைங்கர்யம் முடிந்து எல்லாம் பெண்களும் பகவானிடம் உத்திரவு பெற்றுப்போவார்கள். பகவான் யாரும் துணைக்கு இருக்கிறார்களா, கைவிளக்கு இருக்கிறதா என்றெல்லாம் விசாரிப்பார்.
அப்படி அவர்கள் வந்த போது பகவான் சாந்தம்மாளை அழைத்தார்.
இன்னைக்கு நீ என்ன பண்ணே?”
தெரியலையே பகவானே! ஏதும் தப்பு பண்ணிட்டேனா?“
மத்தவாளைவிட எனக்கு கறி அதிகம் வெச்ச இல்லையா? ”
அதுக்கென்ன? ஒரு பிரியத்திலே அப்படி பறிமாறினேன்!”
மத்தவாளை விட அதிகமா சாப்பிடறேனேன்னு ரொம்ப வெக்கமா இருந்தது! இனிமே மத்தவாளை விட எனக்கு குறைவா பரிமாறு!”
அதெப்படி பகவானே மத்தவாளை விட உங்களூக்கு குறைவா பரிமாறுவது? ”
இதுலேதான் நான் சந்தோஷப்படுவேன்னு நினைச்சியா? உருளைக்கிழங்கு கறியிலா அருளிருக்கு? ”
நீ எல்லார் மேலேயும் எவ்வளோ பிரியமா இருக்கியோ அவ்வளொ என் மேல் பிரியமா இருக்கறதா அர்த்தம். என் மேலே உண்மையா பிரியம் வந்துடுத்துன்னா எல்லார்கிட்டேயும் சமமா பிரியம் வந்துடும்!”

சாந்தம்மாளின் சொந்த ஊர் ராமநாதபுரம். நவராத்திரி உற்சவம் அங்கு சிறப்பாக நடைபெறும். சாந்தம்மாளுக்கு அம்பாளை தரிசிக்க அங்கு செல்ல ஆசையாக இருந்தது. ஆசிரமத்திலோ வேலை நெட்டிமுறித்தது.
பகவானிடம் உத்திரவு கேட்போம். ஒரு வேளை அவர் உத்திரவு கொடுத்தால் போகலாம் என்று நினைத்துக்கொண்டு பழைய ஹாலில் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அவள் கண் எதிரேயே பகவான் மறைந்து போனார். அவருக்கு பதிலாக ஒரு அழகிய சிறுபெண் குழந்தை பட்டுப்பாவாடையுடன் கம்பீரமாக அமர்ந்திருந்தாள்!
சிறிது நேரத்தில் மீண்டும் பகவானின் உருவம் தோன்றிவிட்டது.
தனக்கு பதில் கிடைத்துவிட்டது என்று கருதிய சாந்தம்மாள் உத்திரவு கேட்கவில்லை!

ஒரு முறை சாந்தம்மாள் நிறைய புடலங்காயை வதக்க வேண்டி இருந்தது. நீர் நிறைந்தது என்பதால் அதை நன்றாக பிழிந்துவிட்டு வதக்குவார்கள்; சீக்கிரம் வதங்கிவிடும். ஆனால் பகவான் அதை பிழியாமல் வதக்கச்சொன்னார்.
நீண்ட நேரம் ஆகும் என்பதால் அடுப்பருகே அமர்ந்து அவ்வப்போது கிளறிவிட்டுக்கொண்டு இருந்தார். அருகே சாந்தம்மாளும் அமர்ந்து இருந்தார். திடீர் என பகவான் கையில் இருந்து அகப்பை நழுவியது. வெறித்த பார்வையுடன் அசைவற்று இருந்தார். இதை பார்த்த உடனே சாந்தம்மாளும் அதே போலானார். அவள் கண் முன்னிருந்த அனைத்தும் மறைந்துவிட்டன.
சிறிது நேரம் கழித்து பகவான் அசைந்தார். சாந்தம்மாவுக்கு நினைவு திரும்பியது.
பகவான் கறியிலே சப்தம் வரலை பார். முழுக்க சரண்டர் ஆயிடுத்து. இப்பத்தான் அரைச்சு வெச்ச சேர்மானத்தை சேர்க்கணும். நல்லா சரண்டர் ஆனவாத்தான் ஆத்ம விசாரத்துக்கு தகுதியானவா. அப்படித்தான் ஞானமும். முழுசா சரண்டர் ஆன பிறகே ஞானம் வரும்.” என்றார்.