1945 இல் பகவானின் வலது கால் பெருவிரலில்
மூட்டு விலகிவிட்டது. ஆசிரம
டாக்டர் ஒரு மாதத்துக்கு எங்கும் நடக்கக்கூடாது என்று தடை போட்டுவிட்டார். சாப்பாட்டு ஹாலுக்கும் கழிவறைக்கும்
மட்டுமே போக அனுமதி அளித்தார்.ஒரு
மாதம் முடியும் முன் ஒரு நாள் வெங்கட்ராமையரும் ராமசந்திரஐயரும் பகவான் சாப்பாட்டு
ஹாலில் இருந்து வெளியே வரும்போது நமஸ்கரித்தனர்.
"என்ன ஓய் என்ன விசேஷம்?”
"ரெண்டு பேரும் கந்தாஸ்ரமம் போகப்போறோம்.
அதான் உத்திரவுக்கு வந்தோம்.”
"சரி போயிட்டு வாங்கோ.”
பகவான் தன் உதவியாளர் ரங்கசாமியிடம் ‘நாமும் போகலாமா?’
என்று கேட்டார்.
ரங்கசாமி அதிர்ச்சிக்குள்ளானார்.
இன்னும் கால் சரியாகலையே?
ஒரு மாசம் நடக்கக்கூடாதே?
வெயில் வேற சுட்டெறிக்கிறது.
“நாம் எப்படி போக முடியும்? உங்களாலே முடியாதே பகவானே?” என்றார் ரங்கசாமி.
மூவரையும் பார்த்து குழந்தைப் போல
பகவான் “ஏம்பா!
கூட்டிண்டு போக மாட்டேளா என்ன?”
என்றார்.
ராமசந்திரஐயர் “பகவானே உங்ககூட போறது எங்க
பாக்கியம்தான். ஆனா
நீங்க நடக்க முடியாதே? எப்படி
வர முடியும்?” என்றார்.
ரங்கசாமியைப் பார்த்து “இவா கூட்டிண்டு போக மாட்டா”
என்றார் பகவான் வருத்தத்துடன்.
பின் ராமசந்திரஐயரும் வெங்கட்ராமையரும்
கிளம்பினர். சிறிது தூரம்
சென்றபின் திரும்பிப்பார்த்தால் பகவானும் ராமசந்திரஐயரும் மலைப்பக்கமாக நடந்து
வந்து கொண்டு இருந்தனர். ரங்கசாமி
“பயப்படாதீங்கோ!
நாங்க ஒண்ணும் உங்களோட வரலை” என்றார்.
பகவான் தினமும் கொஞ்ச தூரம் மலையில்
நடப்பதுண்டு. அதை
நிறுத்தி இருந்தார். அதை
மீண்டும் ஆரம்பிக்கிறார் போலும் என்று நினைத்தார்கள்.
கொஞ்ச தூரம் நால்வரும் ஒன்றாக
நடந்தார்கள். பிறகு
இவர்கள் இருவரும் ஸ்கந்தாஸ்ரமத்துக்கு நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது ரங்கசாமி ஓடி வந்தார்.
”நானும் உங்க கூட வரேன். கொஞ்சம் தூரம் போய் சித்த நில்லுங்க!”
என்றார்.
சரியென்று இருவரும் பாதி மலையேறி ஓர்
இடத்தில் ரங்கசாமிக்காக காத்து நின்றனர். அரை மணி ஆகியும் வரவில்லை. அப்போது ஒருவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம் ‘வழியில் யாரும் வராங்களா?’ என்று விசாரித்தனர். அவர் “ஆமாம்; பகவான்
வருகிறார்!” என்றார்.
“வெயிலோ உக்கிரம்; பகவான் காலூனவும் முடியாது. எப்படி வரார்? நான் போய் பார்க்கிறேன்” என்று ராமசந்திரஐயர்
கிளம்பிப்போனார். போய்ப்பார்த்தால்
பகவான் பகவான் சிரமப்பட்டு வந்து கொண்டு இருந்தார், உடல் முழுதும் வேர்வை. மிகவும் களைப்புடன் இருந்தார். மெதுவாக தவழ்ந்து வருவது போலவே
இருந்தது. கூரான
பாறைகளில் ஊன்றி கைகளும் கால்களும் சிராய்த்து இருந்தன. உண்மையிலேயே அவரால் மலையேற முடியவில்லை.
திரும்பிப்போகலாம் என்றால்
அதற்கு பகவான் ஒப்புக்கொள்ளவில்லை.
வேறு வழியில்லாமல் ரங்கசாமியும்
ராமசந்திரஐயரும் பகவானை இருபுறமும் தாங்கலாக தூக்கிக்கொண்டு மிகுந்த சிரமத்துடன்
கந்தாஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அப்போது கந்தாஸ்ரமத்தில் மராமத்துப்பணி
நடந்துக்கொண்டு இருந்தது. அதை
செய்து கொண்டு இருந்த சிற்பி பகவானைப் பார்த்ததும் ஓடி வந்து “பகவானே! என்ன புண்ணியம் செஞ்சேனோ! எனக்காகவே இவ்வளவு தூரம் ஏறி
வந்தீங்களே” என்று
காலில் விழுந்தான்.
பகவானும் புன்னகையுடன் “ஆமாம். உனக்காகவே வந்தேன்! உன் வேண்டுதல்தான் என்னை இங்கே இழுத்து
வந்தது” என்றார்.
ராமசந்திரஐயர் ஒன்றும் புரியாமல் “பகவானே, என்ன வேண்டுதல்?” என்று கேட்டார்.
“உனக்குத் தெரியாதோல்லியோ? நாலு நாள் முன்னே அம்மா கோவிலுக்கு
முன்னே ஒரு ஹால் கட்ட முஹூர்த்தம் பண்ணின்னா. தூணை வெச்சு ஸ்தபதியும் சின்னசாமியும் தொட்டு
ஆசீர்வாதம் பண்ணச்சொன்னா. டாக்டர்கிட்டே
பெர்மிஷன் வாங்கிண்டு மெதுவா போய் அங்கே உட்காரச் சொல்லி.... பெரிய கூட்டம். முஹூர்த்தம் முடிஞ்சு கிளம்பறப்போ இவன் அந்த
கூட்டத்திலே இருந்து ‘பெரிய ஸ்தபதி வேலை பாத்தா பகவான் வந்து ஆசீர்வாதம் பண்ணாறார்.
நாமும்தான் நிறைய பக்தி
சிரத்தையோடத்தானே கந்தாஸ்ரமத்தில வேலை செய்யறோம்? பகவான் வந்து பாத்து ஆசிர்வாதம் பண்ணா நல்லா
இருக்குமே. ஆனா இதெல்லாம்
நடக்குமா’ ந்னு
வேண்டிக்கொண்டு நின்னான்.
அதுதான் இப்ப என்னை இங்கே இழுத்துண்டு
வந்தது” என்றார் பகவான்.
No comments:
Post a Comment