Pages

Friday, June 12, 2015

அடியார்கள் - சாந்தம்மாள் -2



பகவான் விதேகமான பிறகும் சாந்தம்மாள் பல வருடங்கள் பகவான் சேவையிலேயே காலம் கழித்தாள். வயதானது. உடல் நலிவுற்றது. வேலை செய்ய முடியவில்லை. ஆசிரமத்தில் வேலை செய்யாமல் உணவு ஏற்க விரும்பவில்லை. திருவண்ணாமலையில் தனியாக வசிக்க வசதியும் இல்லை. தூரத்து உறவினரான டாக்டர் ஒருவர் தன்னுடன் வந்து இருக்கும்படி அழைத்தார்.
சாந்தம்மாளும் கிளம்ப முடிவு செய்தார். அன்றிரவு ஒரு கனவு வந்தது. அதில் பகவானிடம் விடை பெற சென்றார். பகவான் ஏன் என்னைவிட்டு போறே? என்னத்தவிர யார் இருக்கா இந்த லோகத்துல உன்னை பாத்துக்க?” என்றார்
பகவானின் ஒப்புதல் இல்லை எனத் தெரிந்தாலும் சூழ்நிலை கருதி டாக்டர் வீட்டுக்குச் சென்றார். சனிக்கிழமை அங்கு போய் சேர்ந்தார். ஆரோக்கியமாக இருந்த டாக்டர் திடீரென்று ஞாயிற்றுக்கிழமை போய்ச்சேர்ந்தார்! சாந்தம்மாள் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்குப் போனார். அங்கு ஒன்றும் சரிப்படவில்லை. மிகுந்த துக்கத்துக்குள்ளானார். உறவினர் திருவண்ணாமலைக்கே ரயில் ஏற்றிவிட்டனர். பகவானைத்தவிர தன்னை பார்த்துக்கொள்ள யாருமில்லை என்பது இப்போது அனுபவமாயிற்று.
இறுதி நாட்களை பகவான் அடி நிழலிலேயே கழித்தார். பார்ப்பவர்கள் அவள் மிகவும் கஷ்டப்படுவதாக எண்ணினர்கள். யாரும் அவரிடம் ஐயோ பாவம்! இவ்வளோ கஷ்டப்படறயே?” என்று சொன்னால் ஒரு கதையை சொல்லுவார்.

ஒருமுறை கிச்சன்ல சமைச்சுண்டு இருக்கும் போது பகவான் வந்தது. சமைச்சதை உப்பு காரம் சரியான்னு பாத்தது. அப்பறம் எங்கிட்ட பெரிய பெரிய ராஜாக்கள் எல்லாம் சாப்பாட்டில உப்பு காரம் பார்க்க சம்பளம் கொடுத்து ஆள் வெச்சிருப்பா. உன் சமையலை தினமும் உப்பு காரம் பாக்கறேனே, எனக்கு என்ன சம்பளம் கொடுக்கப்போறே?’ ந்னு கேட்டது. எனக்கு உள்ளே அழுகை முட்டித்து. ‘பகவானே! நான் பிச்சைக்காரி. உங்களுக்கு கொடுக்க எங்கிட்டே என்ன இருக்கு? இந்த பிச்சைக்காரியையே கொடுத்துடறேன் ஏத்துக்கோங்கன்னு கால்ல விழுதேன். பகவான் கம்பீரமா தலையாட்டித்து.

வெளியே பாக்க நான் கஷ்டப்படறா மாதிரி தெரியறது. உள்ளே எப்படி இருக்கேன்னு எனக்குத்தானே தெரியும்?”


No comments: