சாந்தம்மாள் கைங்கரியம் செய்ய ஆசிரமத்துக்கு வந்த புதிதில் பகவானுக்கு பரிமாறும் போது உருளைக்கிழங்கு கறியை அதிகமாக பரிமாறினார். பகவான் தலையை குனிந்துக்கொண்டார். பரிமாறுபவர்களை முகம் பார்க்கவே இல்லை.
மாலையில் கைங்கர்யம் முடிந்து எல்லாம் பெண்களும்
பகவானிடம் உத்திரவு பெற்றுப்போவார்கள்.
பகவான் யாரும் துணைக்கு இருக்கிறார்களா, கைவிளக்கு
இருக்கிறதா என்றெல்லாம் விசாரிப்பார்.
அப்படி அவர்கள் வந்த போது பகவான்
சாந்தம்மாளை அழைத்தார்.
“இன்னைக்கு நீ என்ன பண்ணே?”
“தெரியலையே பகவானே! ஏதும் தப்பு பண்ணிட்டேனா?“
“மத்தவாளைவிட எனக்கு கறி அதிகம்
வெச்ச இல்லையா? ”
“அதுக்கென்ன? ஒரு பிரியத்திலே அப்படி பறிமாறினேன்!”
“மத்தவாளை விட அதிகமா
சாப்பிடறேனேன்னு ரொம்ப வெக்கமா இருந்தது! இனிமே மத்தவாளை விட
எனக்கு குறைவா பரிமாறு!”
“அதெப்படி பகவானே மத்தவாளை விட
உங்களூக்கு குறைவா பரிமாறுவது? ”
“இதுலேதான் நான்
சந்தோஷப்படுவேன்னு நினைச்சியா? உருளைக்கிழங்கு கறியிலா
அருளிருக்கு? ”
“நீ எல்லார் மேலேயும் எவ்வளோ
பிரியமா இருக்கியோ அவ்வளொ என் மேல் பிரியமா இருக்கறதா அர்த்தம். என் மேலே உண்மையா பிரியம் வந்துடுத்துன்னா எல்லார்கிட்டேயும் சமமா பிரியம்
வந்துடும்!”
சாந்தம்மாளின் சொந்த ஊர் ராமநாதபுரம். நவராத்திரி உற்சவம் அங்கு
சிறப்பாக நடைபெறும். சாந்தம்மாளுக்கு அம்பாளை தரிசிக்க அங்கு
செல்ல ஆசையாக இருந்தது. ஆசிரமத்திலோ வேலை நெட்டிமுறித்தது.
பகவானிடம் உத்திரவு கேட்போம். ஒரு வேளை அவர் உத்திரவு
கொடுத்தால் போகலாம் என்று நினைத்துக்கொண்டு பழைய ஹாலில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
அப்போது அவள் கண் எதிரேயே பகவான் மறைந்து போனார். அவருக்கு பதிலாக ஒரு அழகிய சிறுபெண் குழந்தை பட்டுப்பாவாடையுடன் கம்பீரமாக
அமர்ந்திருந்தாள்!
சிறிது நேரத்தில் மீண்டும் பகவானின்
உருவம் தோன்றிவிட்டது.
தனக்கு பதில் கிடைத்துவிட்டது என்று
கருதிய சாந்தம்மாள் உத்திரவு கேட்கவில்லை!
ஒரு முறை சாந்தம்மாள் நிறைய புடலங்காயை
வதக்க வேண்டி இருந்தது. நீர் நிறைந்தது என்பதால் அதை நன்றாக பிழிந்துவிட்டு வதக்குவார்கள்;
சீக்கிரம் வதங்கிவிடும். ஆனால் பகவான் அதை பிழியாமல்
வதக்கச்சொன்னார்.
நீண்ட நேரம் ஆகும் என்பதால் அடுப்பருகே
அமர்ந்து அவ்வப்போது கிளறிவிட்டுக்கொண்டு இருந்தார். அருகே சாந்தம்மாளும் அமர்ந்து இருந்தார். திடீர் என பகவான் கையில் இருந்து அகப்பை நழுவியது. வெறித்த
பார்வையுடன் அசைவற்று இருந்தார். இதை பார்த்த உடனே
சாந்தம்மாளும் அதே போலானார். அவள் கண் முன்னிருந்த அனைத்தும்
மறைந்துவிட்டன.
சிறிது நேரம் கழித்து பகவான் அசைந்தார். சாந்தம்மாவுக்கு நினைவு
திரும்பியது.
பகவான் “கறியிலே சப்தம் வரலை பார். முழுக்க
சரண்டர் ஆயிடுத்து. இப்பத்தான் அரைச்சு வெச்ச சேர்மானத்தை சேர்க்கணும்.
நல்லா சரண்டர் ஆனவாத்தான் ஆத்ம விசாரத்துக்கு தகுதியானவா. அப்படித்தான் ஞானமும். முழுசா சரண்டர் ஆன பிறகே
ஞானம் வரும்.” என்றார்.
No comments:
Post a Comment