क्षणप्रतियोगी परिणामापरान्तनिर्ग्राह्यः क्रमः ।।33।।
க்ஷணப்ரதியோகீ³ பரிணாமாபராந்தநிர்க்³ராஹ்ய: க்ரம: || 33||
க்ஷணப்ரதியோகீ³ = க்ஷண ஸமூஹத்தை நிமித்தமாக உடையதாகிறது; பரிணாம = மாறுதலின்; அபராந்த = முடிவினால்; நிர்க்³ராஹ்ய: = கிரகிக்க முடியாமல், ஊஹிக்கப்படுவதாக: க்ரம: = க்ரமம் என்பது;
ஒரு மாறுதலின் ரூபம் மாறுதல் முடிந்த பிறகே தெரிய வரும். இடைநிலையில் அது முழுவதுமாக தெரிய வராது. குறித்த நேரத்தில் குறிப்பிட்டதாக இருக்கிறது என்றே சொல்லமுடியும். அதற்கு மேல் சொல்ல முடியாது. அதனால் அது ஊகித்து அறியப்படுவதாகிவிடும். ஆகவே க்ரமம் என்பது நேரத்தை சார்ந்ததாகிறது.
யோக சித்தாந்தப்படி புருஷன் நீங்கலான எல்லாம் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில வஸ்துக்களின் மாறுதல் கிரமம் நேரடியாக தெரிகிறது. சில அனுமானத்தால் அறியக்கூடும்.
மண்ணை பிசைந்து குயவன் மண் உருண்டை ஆக்குகிறான். பின் அதை குடமாக ஆக்குகிறான். குடம் உடைந்தால் ஓட்டஞ்சில்லு ஆகிறது. பின் அது பொடிந்து மண் பொடி ஆகிறது. இப்படி மாறுதல் பிரத்யக்ஷமாக தெரிகிறது. இதே போல் ஒரு துணியை வாங்கி பெட்டியில் வைத்து பல காலம் கழித்து பார்த்தால் அது வலு குறைந்து காணப்படுகிறது.
அநித்திய வஸ்துக்கள் அல்லாமல் நித்ய வஸ்துக்களுக்கும் பரிணாமம் இதே போல உண்டா என்று கேட்டால், எது நித்தியம் என்று ஒரு கேள்வி எழுகிறது. நித்தியம் இரு வகையாகும். ஒன்று கூடஸ்த நித்தியம். இரண்டாவது பரிணாமி நித்தியம். புருஷ தத்துவத்தில் பரிணாமம் இல்லை. அதனால் அது எப்போதுமே நித்தியம். ஸத்வம் முதலிய குணங்கள் பரிணாமி நித்தியம் ஆகும்.
புத்தி அநித்தியமானது; மாறுதல் அடையக்கூடியது. ராகம் முதலான இந்த மாறுதல்களுக்கு ஒரு முடிவு உள்ளது- விவேக க்யாதி ஏற்பட்டால் இவை முடிந்துவிடும். உற்பத்தி கிரமத்துக்கும் மாறான கிரமத்தில் லயம் ஏற்பட்டுவிடும். (எங்கிருந்து வந்ததோ அங்கேயே வந்த வழியிலேயே பின் நோக்கிப்போய் சேரும்) ஆனால் இப்படி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. கல்ப கோடி காலம் ஆனால் ஒருவர் முக்தி அடைகிறார்கள். உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைந்து உலகில் யாருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்ற நிலை வராது.
2 comments:
உலக ஜீவர்கள் அனேகம் இருப்பதால் எல்லா ஜீவர்களும் முக்தி அடைந்து உலகில் யாருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்ற நிலை வராது...
இதுதான் நல்லாவே புரிந்தது. எல்லாரும் முயன்றாலும் சிலரால் தான், அதாவது எவரோ ஒருத்தருக்குத் தான் முக்தி கிடைக்கிறது இல்லையா? அது சரி முக்தி கிடைக்கிறவரை திரும்பத் திரும்பப் பிறப்பு, இறப்பு, கர்மாநுஷ்டானங்கள் இருந்து கொண்டே இருக்கும் இல்லையா?? அப்போ பிறப்பும், இறப்பும் நித்தியமா?? சரியாய்ப் புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன்.
ஆமாம். பிறப்பும் இறப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஓன்று முக்தி கிடைக்க வேண்டும். அல்லது பிரளயம் வர வேண்டும். அது வரை....
Post a Comment