Pages

Friday, May 20, 2011

சந்த்யாவந்தனம் -6




43. கட்டை விரலை மற்ற விரல்களுடன் சேர்க்கூடாது என்று கேள்விப்பட்டேன்.
சரிதான். அது ராக்ஷஸர்களுக்கு உகந்தது ஆகும். அதனால் கட்டை விரல்களை நீக்கியே அர்க்கியம் தர வேண்டும். இடது கட்டைவிரல் சுட்டு விரல்களுக்கு இடையில் ஜல பாத்திரத்தை பிடித்துக்கொண்டு செய்வது சுலபமாக இருக்கும்.

44. எவ்வளவு அர்க்கியம்?
காலை மாலை மும்மூன்றும் மதியம் இரண்டும். கூடவே சரியான காலத்தில் அர்க்கியம் தரவில்லை என்பதற்கு ப்ராயச்சித்தமாக ஒன்று.

45. நான் ஐந்து மணிக்கே அர்க்கியம் கொடுக்கிறேன். ப்ராயச்சித்தம் தேவையில்லைதானே?
சந்த்யா நேரமே அர்க்கியம் கொடுக்க சரியான நேரம். இது மிகவும் சூக்ஷ்மமானது. அதனால் எப்படியும் ப்ராயச்சித்த அர்க்கியம் தர வேண்டும்.

46. எதற்காக இந்த அர்க்கியம்?
இது குறித்து ஒரு கதை இருக்கிறது. சில ராக்ஷஸர்கள் ப்ரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தனர். கடுந்தவம் செய்தால் வரம் கொடுத்தே ஆக வேண்டும். ப்ரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்க ராக்ஷஸர்கள் தினமும் சூரியனுடன் சண்டையிடும் பெருமை வேண்டும் என்று வேண்டினர். வரமும் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் தினசரி சண்டையிடுகிறார்கள். அந்த சமயத்தில் ஸாதுக்கள் காயத்ரி கூறி அர்க்கியம் அளிக்க இந்த ராக்ஷஸர்கள் மந்தே ஹாருணம் என்ற தீவில் தூக்கி எறியப்படுகிறார்கள். இதனால் சூரியன் மகிழ்ந்து எல்லா நன்மைகளையும் செய்கிறார்.

47 சரி, சரி, ராக்ஷஸர்கள் வரம் வாங்கித்தானே சண்டை போடறாங்க? அதை நாம் போய் தடுத்தா அது பாவமில்லையா?
பாபம்தான். இப்படி தூக்கி எறிந்த பாபம் அடுத்து தன்னைத்தானே ப்ரதக்ஷிணம் செய்வதால் அழிகிறது.

48. கதையானா இருக்கு?
கதையானாலும் இல்லையானாலும் அதில் பெரிய தத்துவம் இருக்கு.

49. என்ன தத்துவம்?
சூரியன் என்பது நம் அறிவு. இந்த அறிவை ராக்ஷஸ ரஜோ, தமோ குண வெளிப்பாடுகளான காமம், கோபம் முதலான அசுர சக்திகள் பீடிக்கின்றன. காயத்ரி இவற்றை தற்காலிகமாக அழிக்கிறது. அவை மீண்டும் பீடிக்கின்றன.

50. சரி, 'இதனால் சூரியன் மகிழ்ந்து எல்லா நன்மைகளையும் செய்கிறார்' என்கிறதுக்கு என்ன ஆதாரம்?
க்ருஷ்ண யஜுர் வேதத்தில் இது மிகத்தெளிவாக ஆருணம் இரண்டாம் ப்ரச்னத்தில் சொல்லப்பட்டு இருக்கு. 'ஸகலம் பத்ரமச்னுதே'

51. சரி அப்புறம்?
ப்ரணவமும் வ்யாஹ்ருதிகளையும் சொல்லி ஜலத்தால் பரிசேஷணம் போல தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கீழே ஜலத்தை விட வேண்டும்.

52. கோவில்ல சுத்தரவங்க சுத்திக்கிறாங்களே அந்த மாதிரியா?
அந்த மாதிரிதான். ஆனா அங்கே அப்படி செய்யறது தப்பு. அது பூர்வ ஜன்ம புண்ணியத்தை காலி செய்துவிடும். இங்கே அப்படி விதிச்சு இருக்கிறதாலே செய்யணும்.

2 comments:

Geetha Sambasivam said...

அர்க்கியம் பற்றிய தகவல்கள் முற்றிலும் தெரியாத ஒன்று. நன்றி.

திவாண்ணா said...

நன்றி!