இது குட்டிக்கதைகளுக்கு சீசன் போல இருக்கு. ஏற்கெனெவே ரொம்ப ஹெவியான யோக சாஸ்திரம் முடிந்த பிறகு எல்லாருக்கும் ரிலாக்ஸ்டா குட்டிக்கதைகள் போடணும்ன்னு தீர்மானம். கூடவே சந்தியா வந்தனம், காயத்ரி பற்றி எல்லாம் எழுத வேண்டிய ஒரு சூழ்நிலை. இரண்டும் மாறி மாறி வெளியாகும்.
---------
ஒரு முதிய துறவி தனியாக சாலை வழியே சென்று கொண்டு இருந்தார். காட்டுவழியாக வெகு தூரம் சென்று ஒரு பெரும் நதியை படகில் கடந்து அடுத்த ஊர் செல்ல வேண்டும்.
வழியில் ஒரு இளம் துறவி வந்து சேர்ந்தார்.
"நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்றார் இளம் துறவி.
"அடுத்த ஊருக்கு..."
"ஓ, காட்டு வழியாக செல்ல வேண்டும். நானும் கூட வரலாமா? பேச்சுத்துணையாக இருக்கும்!"
" தாராளமாக...."
வழி நெடுக தர்ம விசாரம் - குறிப்பாக சந்நியாஸ நிலையின் கட்டுப்பாடுகளை- பேசிக்கொண்டு நடந்தனர். இளம் துறவி பல விஷயங்களை விவாதித்தார்.
கடைசியில் சந்நியாசி பணம் வைத்துக்கொள்ளலாமா கூடாதா என்று விசாரம் நடந்தது. கூடாது என்பது பெரியவரின் கொள்கை. அவசரத்துக்காக சிறிதளவு வைத்துக்கொண்டால் தப்பில்லை என்பது இளையவரின் வாதம்.
"சந்நியாசி பணத்தை கையால் தொடுவது கூட பிரச்சினை உண்டு பண்ணலாம்; பணம் வைத்துக்கொள்ளாவிட்டால் எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான்" என்றார் பெரியவர்.
இந்த நேரத்தில் காட்டு வழியின் எல்லை வந்துவிட்டது. இருட்டும் நேரமும் ஆகிவிட்டது.
ஆற்றை கடக்க இலவச படகு சேவையின் கடைசி படகு போய்விட்டது.
இரவு நேரம் வந்தால் மிருகங்களின் நடமாட்டமும் அவற்றால் தொந்திரவும் இருக்கும் என்பதால் நதியை அவசியம் கடக்க வேண்டிய சூழ்நிலை என்று இளம் துறவி கருதினார். அங்கும் இங்கும் தேடி ஒரு படகோட்டியை கண்டு பிடித்தார். பணம் தருவதாக சொன்னதும் அவனும் ஆற்றை கடக்க படகு ஓட்ட சம்மதித்தான்.
ஆற்றை கடந்தபின் இளம் துறவி தன்னிடமிருந்த சிறு பண முடிப்பை திறந்து அவனுக்கு பணம் கொடுத்தார்.
பின்னர் ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தனர், இளம் துறவி சொன்னார். "பார்த்தீர்களா? நான் சொன்ன படியே ஆயிற்று. என்னிடம் கொஞ்சம் பணம் இருந்ததால்தானே இப்போது நாம் ஆற்றை கடக்க முடிந்தது? நான் கூட வரவில்லையானால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?"
பெரியவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "அப்பா, நான் தனியாகத்தானே புறப்பட்டேன்? வழியில் நீயாக வந்து சேர்ந்து கொண்டாய். பணம் இல்லாத சந்நியாசிக்கு பணம் வைத்து இருப்பவர் வந்து உதவ வேண்டும் என்பது இறைவன் விருப்பம் போலிருக்கிறது!"
இளம் துறவி வாயடைத்துப்போனார்.
3 comments:
Super Kutti Kadhai... never heard before...thanks for sharing..;)
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கமெண்ட் பொட்டி திறக்க அடம். அது சரி, ஒரு சந்தேகம், அந்த இளம் சந்நியாசி தனக்கு மட்டும் பணத்தைக் கொடுத்துட்டுப் போயிருந்தால்?? என்ன ஆகி இருக்கும்???ம்ம்ம்ம்ம்ம்?? யோசிக்கிறேன். :)))))
சீரியஸா எடுத்துக்காதீங்க!
ஆண்டவன் விட்ட வழின்னு இருக்கிறவர் ஏன் கஷ்டப் படப்போகிறார்?
Post a Comment