Pages

Friday, January 11, 2013

அத்ருஷ்டம் - 3



அதெப்படி மாற்றுவது?
புத்தி பூர்வகமாக சரியான வழியில் செயல்பட வேண்டும். வாசனை நம்மை பழக்கமான வழிக்கு கொண்டு செல்லவே முயலும். நாம் வலுக்கட்டாயமாக மாற்று வழியில் அதை செலுத்த வேண்டும். முன்னே பழகி பழகி ஒரு வழியில் சென்றது இப்போது மெல்ல மெல்ல வேற்று வழியில் பழக ஆரம்பிக்கும்.
--
இது முடியவே முடியும். கொஞ்சம் சிரம சாத்தியமா இருக்கலாம்.  இருந்தாலும் சாத்தியம்தான். முயற்சி செய்யணும்.
எது வரை முயற்சி செய்யணும்?
ஒரு மரத்துக்குள்ள ஆணி அடிச்சு இருக்கு. அதை பிடுங்கணும். சமீபத்தில குறைவான ஆழத்துக்கு அடிச்சு ஆணியானால் சுலபமாக பிடிங்கிடலாம். நல்லா ஆழமா வெகு நாட்களுக்கு முன்னே அடிச்சு ஆணியா இருந்தா அதை பிடிங்கறது சுலபமா இராது.
இழுத்துப்பார்க்கிறோம். வெளியே வரலை. விட்டுவிட்டுப் போயிடுவோமா? இன்னும் பலமா பல முறை இழுக்கத்தான் பார்ப்போம்.
அதே போல நம்மோட குறைகள் பலதும் நமக்கு தெரிஞ்சுதான் இருக்கு. அதை மாற்றப்பார்க்கிறோம். முடியலை. முடியலைன்னு விட்டுவிடக்கூடாது. மாற்றம் நல்லதுன்னா இன்னும் இன்னும் முயற்சியை அதிகமாக்கி, மாற்றத்தான் வேணும்.
இத்தோட மாற்றுப்பக்கத்தையும் பார்க்கலாம். மத்தவங்க நமக்குத் தகுந்தாப்போல மாறணும்ன்னு நாம் பல சமயம் விரும்பறோம். அவங்க அப்படி மாறலையேன்னு வருத்தப்படறோம். கோபப்படறோம். நாம மாற பாத்தாதான் அதில் இருக்கிற கஷ்டங்கள் தெரியும்! அதனால  மத்தவங்க மேல வருத்தப்படறதுல பிரயோஜனமே கிடையாது. “பாவம் மாற முடியலியே! பகவானே கொஞ்சம் அனுக்ரஹம் பண்ணுன்னு கேட்டுக்கலாம்.
வ்ருத்தி, சம்ஸ்காரம், வாசனை பத்தி பாத்தோம். இவை நமக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு புரியாத சில விஷயங்களை தெளிவாக்குது.
கர்மா ன்னு பொதுவா சொல்லப்படர சமாசாரமும் இப்படித்தான். எதிர்வினைகள் ஒரே ஜன்மத்திலேயே ஏற்படாமல் போகலாம். அவை அடுத்த ஜன்மத்தில நிச்சயம் தொடரும். இந்த ஜன்மத்துல  செய்த வினைகள் மட்டுமே நம்ம பார்வைக்கு தெரியறதால் குழப்பம் ஏற்படுது. இந்த தொடரும் எதிர்வினைகளும் அத்ருஷ்டம். “எனக்கு ஏன் இப்படின்னு புலம்புகிற சமாசாரத்துக்கு இங்கேதான் விடை இருக்கு!
இப்படி அத்ருஷ்டம் அத்ருஷ்டம் ன்னு சொல்லிக்கொண்டே போனால் எவ்வளவுதான் அத்ருஷ்டம் இருக்கு? ன்னு கேட்டா…..
புருஷ சூக்தத்தில இதுக்கு விடை இருக்கு. கால் பாகம் பிரபஞ்சம்தான் நாம் புலன்களால உணரக்கூடியதாம். மீதி அழியாதது, திவ்யமானது என்கிறது வேதம்.
சரி சரி, இந்த வாசனை, எதிர் வினை எல்லாம் எப்படி ஜன்மத்திலேந்து இன்னொரு ஜன்மத்துக்கு  தாவுதுன்னு கேட்டா
அதுக்கு நம்மோட சரீரங்களைப் பத்தி தெரியணும்.
நாம் பார்க்கக்கூடிய இந்த உடம்புகண் காது மூக்கு முதலானது ஸ்தூல சரீரம். இதில ப்ராண சக்திஉயிர் என்கிறோமே அது- இருக்கும் வரை இதுவும் இருக்கும். இந்த மண்ணில் கிடைக்கிற தான்யங்கள் முதலான உணவை உண்டு இது வளரும். ப்ராண சக்தி போன பின் எரிக்கப்பட்டோ, புதைக்கப்பட்டோ, அந்த மண்ணிலேயே சேர்ந்து விடும்.
நாம் காண முடியாத …. ஹிஹிஹி இதுவும் அத்ருஷ்டம்தான்…. அளவுக்கு நுட்பமானதுசூக்ஷமமானதுசூக்ஷ்ம சரீரம். ப்ராணன் முதலான ஐந்து வாயுக்கள், கர்மம் செய்ய உடலுக்கு  உதவும் ஐந்து சக்திகள்- இவற்றுக்கு கர்மேந்திரியங்கள் என்று பெயர்- உலகில் உள்ளதை அனுபவிக்க  உதவும் நுகர்தல் முதலான ஐந்து செய்கைகளுக்கு உதவுவன- இவை ஞானேந்திரியங்கள் எனப்படும்- இவை அடங்கியது சூக்ஷ்ம சரீரம்.
அடுத்தது காரண சரீரம். இதோட முக்கிய அங்கம் அஹங்காரம்.
நான் ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? மற்றதெல்லாம் இருக்கிறதோ இல்லையோ, நமக்கு இந்த நான் இருக்கிறதுல மட்டும் சந்தேகம் இருக்கிறதில்லை. இப்ப ஒரு மீட்டிங் நடக்குது. நாமும் உட்கார்ந்து இருக்கோம். மின் தடை ஏற்படுது. கன இருட்டு. ஒண்ணுமே தெரியலை. அப்ப நாம் இருக்கோமா ன்னு ஒரு சந்தேகம் யாருக்கும் ஏற்படுதா? அட, ஒரு விபத்துல மாட்டிக்கிறோம்; குளிர் காலம். உடம்பே மரத்து போயிடுது. உணர்வு வரப்ப நாம் இருக்கோமா ன்னு சந்தேகம் வருமா?
இந்த நான் என்கிறதுதான்  அஹங்காரம்.
காரண சரீரத்தோட இன்னொரு அங்கம்தான் கன்மம். கன்மம்? கர்மம். சரியா ஊகிச்சுட்டீங்க. இப்ப கொஞ்சம் நேரம் முன்னே படிச்ச எதிர்வினை, வாசனை எல்லாம்தான் கன்மம்.இந்த காரண சரீரம் ஒரு பெட்டி மாதிரி. ரெபாசிடரி ன்னு ஆங்கிலத்துல சொல்லறோமே அது. வ்ருத்திகள் அடிக்கடி நடந்து சம்ஸ்காரமா பலப்பட்டு வாசனையாக  வளர்ந்தபின்னே அதை இந்த பெட்டியிலே போட்டு வெச்சுக்கும். இந்த வாசனை அந்த ஜன்மத்திலேயே வெளிப்பட்டு கொண்டும் இருக்கும். அடுத்த ஜன்மத்திலே வெளிவரவும் வரும். சில சமயம் நடப்பு ஜன்மத்திலே வெளி வரலைன்னாக்கூட அடுத்த ஜன்மங்களிலே வெளி வரும்! இப்படி வெளி வரும் வாசனைகளுக்கு அஹங்காரம்தான் ரொம்ப ப்ரெண்டு! நான் கோபக்காரன் தெரியுமா, ஜாக்கிரதை. நான் எவ்வளோ அறிவாளி தெரியுமா? நான் எவ்வளோ நல்லா பாடுவேன் தெரியுமா? இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்ட் எல்லாம் கேட்டகறப்பவே இது நல்லா தெரியும்!
ஆச்சரியமான விஷயம் என்னன்னா இந்த காரண சரீரம் தனக்கு  தகுந்தாப்போன்ற சரீரத்தை அடுத்த ஜன்மாவுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்கிறது! அதை வெறும் சங்கல்பத்தாலேயே செய்து கொள்கிறது! அடிதடி சண்டையில இறங்கற சம்ஸ்காரம் இருந்தா அதுக்கு தகுந்தாப்போல…. சாதுவா இருந்தா அதுக்குத் தகுந்தாப்போல
இதுக்குத்தான் நம் நடத்தையை வெகு ஜாக்கிரதையாக இந்த ஜன்மாவிலேயே கண்காணிச்சு சரி செய்யணும் என்கிறது. இப்போ இது நமக்கு புரிகிறது, தெரிகிறது.. இப்பவே இதை செய்வோம்!
முன்னே விதி என்கிறதை ஒரு தொடர்ச்சிதான் என்றும் இப்ப எப்படி நடந்துக்கணும்ன்னு பார்த்ததை ஒட்டியே இதுவும் அமைகிறது என்பது ஆச்சரியமில்லை.
 ---
குறிப்பு: இணையம் படுத்தின படுத்தலில் கிடக்கட்டும்ன்னு இரண்டு போஸ்ட் சமாசாரம் ஒண்ணா போட்டாச்சு! மன்னிக்கவும்.

2 comments:

Geetha Sambasivam said...

//ஆச்சரியமான விஷயம் என்னன்னா இந்த காரண சரீரம் தனக்கு தகுந்தாப்போன்ற சரீரத்தை அடுத்த ஜன்மாவுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்கிறது! அதை வெறும் சங்கல்பத்தாலேயே செய்து கொள்கிறது! அடிதடி சண்டையில இறங்கற சம்ஸ்காரம் இருந்தா அதுக்கு தகுந்தாப்போல…. சாதுவா இருந்தா அதுக்குத் தகுந்தாப்போல…//

நிஜமாவே ஆச்சரியமாத்தான் இருக்கு.அடுத்த ஜன்மத்துக்கு இப்போவே தேர்ந்தெடுக்குதா?? ஆஹா!~~

திவாண்ணா said...

:-)))