Pages

Monday, May 6, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 1

 
யக்ஷப்ப்ரச்னம்.
பாண்டவர்கள் "த்வைதவனம்" என்ற காட்டில் வசித்து வருகையில் ஒரு சமயம் ஒரு ப்ராம்ஹணன் அரணிக்கட்டைகளையும் அக்னிக்காக அதை கடையும் மத்தையும் ஒரு மரக்கிளையில் மாட்டி வைத்து இருந்தான். அதே மரத்தில் ஒரு மான் தன் தினவை தீர்த்துக்கொள்ள உராய்ந்தது. அப்போது அரணிக்கட்டைகளும் மத்தும் அதன் கொம்புகளில் மாட்டிக்கொண்டன. உடனே அந்த மான் அக்கட்டைகளுடனேயே விரைந்து வெகு தூரம் ஓடிவிட்டது. அக்கட்டைகள் இல்லாமல் ப்ராம்ஹணன் யாகங்களை அனுஷ்டிக்க இயலாது. ஆகையால் பாண்டவர்களை அண்டி அந்த மானிடமிருந்து அக்கட்டைகளை திரும்ப பெற்று தமக்கு அளிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டான்

 அதற்கிணங்கி பாண்டவர்கள் வில்லும் கையுமாக புறப்பட்டு கானகத்தில் வெகு தூரம் சென்றனர். ஆனால் அந்த மான் காணப்படவில்லை. அப்பொழுது பசியும் தாகமும் அவர்களை மிகவும் பீடித்தன. களைப்புற்று ஒரு ஆல மரத்தடியில் அமர்ந்து " சமீபத்தில் உள்ள குளத்துக்குச் சென்று நீயும் நீரை அருந்தி எங்களுக்கும் கொண்டு வா" என்று நகுலனை அனுப்பினர். அவனும் அக்குளத்துக்கு விரைந்தோடி நீரைக்குடிக்க அக்குளத்தில் இறங்கினான். “தண்ணீரைக்குடிக்காதே! குளம் என்னுடையது! என் கேள்விகளுக்கு பதில்களை சொல்லிவிட்டு நீரை நீயும் குடி. எடுத்தும் செல்" என ஆகாயத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. பொறுக்க முடியாத தாகத்தால் அதை இலக்ஷியம் செய்யாமல், குளத்தில் உள்ள குளிர்ந்த நீரை அருந்தினான் நகுலன். உடனே அந்த ஜலக்கரையிலேயே விழுந்து மாண்டான்.  

வெகு நேரம் வரை நகுலன் திரும்பி வராததால் அவனைத்தேடிக்கொண்டு சகாதேவன் சென்றான். அதே குரலை அவனும் கேட்டான். நகுலனைப்போலவே இலக்ஷியம் செய்யாமல் நீரைக்குடித்து அவனும் மாண்டான். பிறகு அர்ஜுனனும் பீமனும் சென்று முன் சென்றவர்களைப்போலவே மாண்டனர். கடைசியில் தர்ம புத்திரர் சென்றார். அதே குரலைக் கேட்டார். கீழே விழுந்து கிடக்கும் தன் சகோதரர்களை கண்டு பலவாறாக வருந்தினார். பிறகு தைரியத்துடன் வீராதி வீரர்களான நமது சகோதரர்களை கொன்றவர் யாராக இருக்கலாம், என்று ஆலோசித்துக்கொண்டே நான்கு பக்கங்களிலும் பார்த்தார். மரத்தின் மேல் வீற்றிருக்கும் ஒரு பெரிய கொக்கை கண்டார். “நீர் யார்? உமக்கு எங்களால் ஆக வேண்டியதென்ன? உம்மைக்கண்டதும் என் மனம் நடுங்குகிறது. உண்மையை தெரிவிக்க வேண்டும்" என அக்கொக்கை நோக்கி வினவினார் தருமர். “ நன் சாமான்ய கொக்கல்ல. நான் ஓர் யக்ஷன். நான்தான் உன் சகோதரர்களை கொன்றேன். என் குளத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை உரைக்காமல் தண்ணீர் குடிக்கக்கூடாது என்ற என் வார்த்தைகளை இலக்ஷியம் செய்யாமல் அவர்கள் குடித்தனர். ஆதலால் அவர்களை நான் கொன்றுவிட்டேன், நீயும் தண்ணீர் குடிக்க விரும்பினால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் உரைக்க வேண்டும்.” என கொக்குருவம் கொண்ட அந்த யக்ஷன் பதில் உரைத்தான். "கேள்விகளை கேளுங்கள். எனக்கு தெரிந்த வரை நான் பதில் சொல்லுகிறேன்" என தருமர் கூற அந்த யக்ஷன் பல கேள்விகளை கேட்கிறான்.

அந்த கேள்விகளுக்குத்தான் யக்ஷப்ப்ரச்னம் என்று பெயர். தர்ம ராஜனே தர்ம புத்திரருக்கு உள்ள தர்ம அறிவை பரீக்ஷிப்பதற்காக யக்ஷன் உருவில் அங்கு தோன்றினான். தர்மத்தின் அம்சமாகிய தரும புத்திரர் அக்கேள்விகளுக்கு சரியான விடைகளையளித்தார். கேள்வி கேட்டவர் தர்மராஜன்; பதில் அளித்தவர் தர்மபுத்திரர் என்றால் அக்கேள்விகளிலும் பதில்களிலும் இருக்கும் கருத்துக்கள் எப்படிபட்டவையாக இருக்கும் என்பதை நாம் ஒருவாறு ஊகித்துக்கொள்ளலாம்.

இக்கேள்விகளும் பதில்களும், ஆத்ம ஞானத்துக்கு பல சாதனங்களை எடுத்துரைத்து அதன் மூலம் ஆத்ம தத்துவத்தை நிர்ணயம் செய்வதற்காக ஏற்பட்டவை. ஆதலால் பல கேள்விகளும் பதில்களும் அதற்கேற்றவாறு விளக்கப்படும்" என்று நீலகண்ட உரையில் கூறப்பட்டு இருக்கிறது.
(வெகு நாட்களுக்கு முன் நண்பர் சம்பத் சொன்னதற்கிணங்கி எழுதி பின் கிடப்பிலேயே இருந்தது. முழுவதும் எழுதியாகி விட்டபடியால் இனி பகுதி பகுதியாக வெளியாகும்.)

No comments: