Pages

Sunday, January 30, 2022

ஶ்ராத்தம் - 29 - உணவிடும் முன்.





பிறகு மூவருக்கும் உட்கார தர்ப்பை ஆசனம் கொடுக்க வேண்டும். முன் போல ‘க்ஷணக்கர்தவ்யஹ’ என்று சொல்லி கொடுத்து, பாத்திரத்திற்கு அடியில் இரண்டிரண்டு தர்ப்பைகளை போட்டு பாத்திர ஆசனம் கொடுக்க வேண்டும். பிறகு இலைகளை நீரால் துடைத்து இலை மீது சிறிது நெய் ஊற்றி அபிகாரம் செய்ய வேண்டும். பிறகு அன்னம் தவிர்த்த மீதி பதார்த்தங்களை எல்லாம் பரிமாற வேண்டும். இந்த சமயத்தில் கர்த்தா உபவீதியாக அமர்ந்து ‘ஸஹவை’ என்ற மந்திரத்தை கூற வேண்டும்.

நிறைய அன்னம் வடித்து அதில் ஹோமத்துக்கும் எடுத்துக்கொண்டு பிண்டத்துக்கு எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை போக்தாக்களுக்கு பரிமாறி அதிலும் மிஞ்சியதை தங்களுக்கும் பரிமாறி உண்பது என சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பழக்கத்தில் யாரும் அவ்வளவு அன்னம் வடிப்பதில்லை. ஆகவே ஹோமம் செய்யும் போது தயார் செய்த ஹவிஸை பாதி ஹோமம் செய்து விட்டு மீதியை பிண்டத்துக்கு வைத்துக்கொள்கிறார்கள். அதிலிருந்து சிறிது எடுத்து பித்ரு இலையில் மட்டும் இடுகிறார்கள். இது ஏதோ சம்பிரதாயம் போலிருக்கிறது. சாஸ்த்திரத்தில் அப்படி சொல்லப்படவில்லை.

சமையல் குறித்து சொல்லுவீங்களா? அப்படின்னா, அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்….. அப்படி இல்ல. உண்மையில் கர்த்தாவைத்தான் சமைத்து பரிமாற சொல்லி இருக்கு. ஆனாலும் இந்த மத்த விஷயங்கள் எல்லாம் முடிச்சுண்டே சமையலுக்கு வரலாம்.

ஸஹவை என்ற மந்திரம் ஜபிக்க வேண்டும் என்றேன். இதன் கருத்து: ஒரு சமயம் தேவர்களும் அஸுரர்களும் தாங்களே ஸுவர்க்கம் சென்று ஆள வேண்டும் என்று யக்ஞம் செய்ய ஆரம்பித்தனர். அசுரர்கள் தயாரிப்பு செய்து கொண்டு பலத்தினால் யாகம் செய்தனர். தேவர்கள் பிரம்மசரியத்துடனும் விதிப்படியும் செய்தனர். விதி, சாஸ்திரம் இவற்றை விட்ட அசுரர்கள் மோகத்தால் என்ன செய்வதென்று அறியவில்லை; ஸுவர்கத்தையும் அடையவில்லை.

தேவர்கள் யக்ஞோபவீதம் அணிந்து யக்ஞம் செய்து ஸ்வர்கத்தை அடைந்தனர். அப்படி செய்வது ப்ரஸ்ருதம் எனப்படும். அணியாமல் செய்வது அப்ரஸ்ருதம். அந்தணன் யக்ஞோபவீதம் அணிந்து அத்யயனம் செய்தால் அது யாகத்தை செய்ததற்கு சமமாகிறது. ஆகவே யக்ஞோபவீதம் அணிந்தே அத்யயனம் செய்ய வேண்டும்; யாகம் செய்ய வேண்டும்; யாகம் செய்விக்க வேண்டும். அதனாலேயே அது சிறந்ததாகும். மான் தோலையோ வஸ்திரத்தையோ உபவீதமாக தரிக்க வேண்டும் (இடுப்பில் கட்டக்கூடாது) மேல் பக்கம் இடது தோளிலும் கீழ்ப்பக்கம் வலது கை பக்கமாக தொங்கும் படி அணிவது யக்ஞோபவீதம். மாறாக வலது தோள் மேலும் இடது கை பக்கம் கீழும் தொங்கும் படி தரிப்பது ப்ராசீனாவீதம். இரண்டு தோள்களிலும் மாலையாக கழிப்பது ரிஷிகளுக்கு (மனிதர்களுக்கு) ஏற்றது.

உபவீதியாக தேவ காரியம்; ப்ராசீனாவீதியாக பித்ரு காரியம்; நிவீதியாக ரிஷி காரியம் செய்ய வேண்டும். சிராதத்தில் அடிக்கடி தேவ பித்ரு காரியங்களுக்கு உபவீதி ப்ராசீனாவீதி என்று மாற்றுவதையும் அதனால் தேவர்கள் சுவர்கம் சென்றது போல் இந்த காரியம் பயனுள்ளதாகும் என்று கருத்தை உணர்ந்து கடைபிடிக்கிறோம்.

அடுத்ததாக ‘ரக்‌ஷாகும்ஸி’ என்று ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டும்.


 

Friday, January 28, 2022

ஶ்ராத்தம் - 28





அடுத்து நாம் பூணூலை இடம் செய்துகொண்டு, தெற்கு பார்த்து பிராமணர்களுக்கு பரிமாறுவதற்கு வைத்திருக்கும் அனைத்தையும் தர்ப்பையால் தொட்டுக்கொண்டு மந்திரம் சொல்ல வேண்டும். வழக்கத்தில் அன்னத்தை மட்டும் வைத்து தர்ப்பையால் தொட்டுக்கொண்டு சொல்வதாக இருக்கிறது.
இதற்கு ‘ஏஷதே’ என்ற மந்திர பிரயோகம் ஆகிறது. அதன் பொருள்: ‘தந்தையே! உமக்காக செய்த இந்த அன்னாதிகள் தேன் போல ருசி உள்ளதுமானதும் கடல் போலும் இருக்கிறது. அக்னியும் பூமியும் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது அன்னம் முதலியன. அவ்வளவு பெரிய அவற்றை உமக்கு அளிக்கிறேன். அன்னம் முதலான பொருட்களே! அக்னி எப்படி என்றும் குறையாததாகவும் அழிவில்லாததாகவும் இருக்கிறதோ, அதுபோல நீ என் தந்தைக்கு அழியாததாகவும் குறையாததாகவும் இரு. ஓ பிதாவே, நீர் அந்த அக்னி முதலியவர்களுடன் கூட இவற்றை ஏற்றுக்கொள்ளும். உங்களின் மகிமை ருக் வேதம் போன்றது.’

அடுத்த இரு மந்திரங்கள் இதுவே சில மாற்றங்களுடன்.
பிதாவுக்கு பதில் பிதாமஹர், ப்ரபிதாமஹர்.
அக்னி-பூமி க்கு பதில் வாயு-ஆகாசம், ஸூர்யன் - ஸுவர்க்கம்.
ருக் வேதத்துக்கு பதிலாக ஸாமம், யஜுர்.

நடைமுறையில் அன்னத்தை மட்டும் இப்படி தயார் செய்வதால் வாத்தியார் அடுத்து சமையலறைக்குப்போய் அங்கே உள்ள உணவுப் பொருட்களை தர்ப்பையால் தொட்டுவிட்டு அதை கீழே போட்டு விட்டு கை அலம்பி வருமாறு சொல்லுவார்.
அடுத்து போக்தாக்களுக்கு இலை போடும் இடத்தில் சுத்தி செய்ய வேண்டும்.
மது கைடபர்களின் உடலால் விளைந்தது இந்த பூமி. இதை சுத்தி செய்ய அதை உழுது மண்ணை புரட்டிப் போட வேண்டும். அப்போதுதான் அது யாகம் செய்ய அருகதை உள்ளதாகும். (விவசாயி செய்யும் யாகத்திலும் அதேதான் நடக்கிறது!) அதற்குத்தான் நாம் ஹோம குண்டத்தில் அக்னியை வைக்கும் முன் சமித்தால் கீறினோம். அதே போல இங்கேயும் இலை போடும் இடத்தில் தர்ப்பைகளால் பூமியை குத்தி மண் எடுப்பது போல பாவனை செய்து ‘அபேத வீத’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். அதன் பொருள்: ஓ யம தாஸர்களே! யமனது ஆணையால் இங்கே தங்கி இருக்கிறீர்கள். வெகுகாலமாக இருப்பவரும் சமீபத்தில் வந்தவருமான நீங்கள் சிறிது காலம் இந்த இடத்தை விட்டு சென்று விடுங்கள். பித்ரு பூஜை முடியும் வரை இந்த இடத்தை எமனை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். எங்கள் பித்ருக்கள் இங்கே வருகிறார்கள்.
 
அடுத்த மந்திரத்தில் ‘இந்த இடத்தை அண்டி வசிக்கும் அசுரர்கள், ராக்ஷஸர்கள், பிசாசுகள் - இவர்களும்; பித்ரு கர்மாக்களுக்கு விக்னம் செய்பவர்களும் இந்த இடத்தை விட்டு இஷ்டமான வேறு இடத்திற்கு செல்லட்டும்.’ இப்படி சொல்லி எள்ளை இறைக்க அவர்கள் வேறிடம் சென்றுவிடுவர்.
 
அடுத்து ‘உதீரதாம்’ என்ற மந்திரத்திற்கு பொருள்: தாழ்ந்தவர்களும் மத்தியமானவர்களும் உயர்ந்தவர்களும் ஆன பித்ருக்கள் இங்கே வந்து நான் அளிப்பதை உண்டு அருள் புரியட்டும். தண்டனை தரத்தக்க குற்றம் புரிந்தாலும் எங்களை இம்சிக்காமல் நான் கொடுத்ததை ஏற்றுக்கொண்டு நன்றியுடன் ரக்‌ஷிக்கட்டும்’ என்று வேண்ட வேண்டும்.

சுத்தம் செய்வதற்காக பூணூலை வலம் செய்து கொண்டு ‘அபவித்ர' என்ற மந்திரத்தால் நீரை தெளிக்கிறோம். இதன் பொருள் அசுத்தன் ஆயினும் சுத்தனாயினும் ‘சர்வ’ எனும் நிலையை அடைந்து இருந்தாலும் பகவானை நினைத்தவன் உள்ளும் புறமும் சுத்தம் ஆகிறான்.
முன்போல மூவருக்கும் சாப்பிடுவதற்காக இலை கையில் கொடுத்து ‘இந்த போஜன பாத்திரம் உங்கள் சௌகரியம் போல் இருக்கட்டும்’ என்று சொல்ல அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று பதில் சொல்வார்கள்.
 

Thursday, January 27, 2022

யோக சாத்திரம்- சாமானியன் பார்வை -1




 

பதஞ்சலி யோக சாஸ்திரத்தை விளக்குகிறார். 

முதலில் யோகம் என்பதை விளக்குகிறார். யோகம் என்பது மனதின் வளர்ச்சியை அடக்குதல். எதையோ படிக்க ஆரம்பிக்கிறோம் அல்லது பார்க்க ஆரம்பிக்கிறோம். ஏதோ ஒரு வேலை செய்ய ஆரம்பிக்கிறோம். அதிலிருந்து நம் கவனம் திரும்பி வேறு எங்கும் போய் விடுகிறது. கொஞ்சம் நிதானித்து கடந்த ஐந்து நிமிடம் முன்னால் வரை என்ன நினைப்பு இருந்தது என்று வரிசையாக நினைவு கூறலாம். அது நம் மனது அலை பாய்வதை நன்றாக விளக்கும். இப்போது என்ன யோசித்துக் கொண்டிருந்தோம்? இரவு என்ன சாப்பாடு இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். சரி, இந்த நினைப்பு ஏன் வந்தது? பக்கத்து வீட்டிலிருந்து தோசை வாசனை வந்தது. பக்கத்து வீட்டு நினைப்பு ஏன் வந்தது? அவர்கள் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வந்தது யாரும் இல்லை என்று திரும்பிப் போய் விட்டார்கள் என்பதை சொல்ல நினைத்தோம். அந்த நினைப்பு ஏன் வந்தது? வெளியே ஏதோ வண்டி சத்தம் கேட்டது. இப்படியே போனால் சம்பந்தமில்லாமல் எங்கோ ஆரம்பித்து எங்கோ நம் நினைப்பு இருக்கிறது என்பது புரியும்.  இந்த மாதிரி நம் மனம் எங்கோ அலைவதை கட்டுப்படுத்த வேண்டும். எங்கெங்கோ போகாமல் ஏதோ ஒன்றை சுற்றி மனம் அலைந்து கொண்டிருந்தால் அது ஒரு முன்னேற்றம். இப்படி ஒன்றை சுற்றியே அலைவதை சித்தம் என்போம். வெறுமனே நாம் கடவுளின் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கலாம் இல்லையா? அதை ஜெபம் என்கிற என்கிறார்கள். அதை முயற்சி செய்த உங்களுக்கு நன்றாக தெரியும். ஜெபம் செய்து கொண்டே இருப்போம் திடீரென்று வேறு ஏதோ நினைப்பு வந்து அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்போம். அது கிளைவிட்டுக்கொண்டே போகும். இது பழக பழக குறையும். இதற்குத்தான் பூஜை என்று ஆரம்பித்து ஒரு மூர்த்திக்கு பலவிதமான நடைபெறுகின்றன . 16 உபசாரங்கள் என்று செய்யும் போது அந்த பூஜையில் மனம் பகவானை சுற்றி வருவது ஒரு முன்னேற்றம். இந்த மாதிரி நடப்பதை, இந்த மனதின் நிலையை சித்தம் என்று சொல்கிறார்கள். பதஞ்சலி சொல்லுவது இந்த மாதிரி சித்தத்தையும் நிறுத்திவிட வேண்டும் என்று. இதுவே யோகம்.

 இது போல மனம் அடங்கும் போது நம்மில் இயங்கு சக்தியாக இருக்கிற ஏதோ ஒன்றுக்கு அதன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது. இந்த இயங்கு சக்தி என்பது என்ன? இது நம் உடல் இல்லை; நம் மனம் இல்லை; நம் புத்தியும் இல்லை. இதெல்லாம் இல்லாத ஏதோ ஒன்று நம்மில் இருப்பதால்தான் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். இதை ஜீவாத்மா என்றும் சொல்கிறார்கள். இந்த ஜீவாத்மா வேறு எதுவும் இல்லை; பிரபஞ்சம் முழுக்க இயங்கு சக்தியாக பரவி இருக்கிற அந்த பரமாத்மாவின் ஒரு சிறு துணுக்கு தான்.  இந்தத்  துணுக்கை ‘நான்’ என்கிற அகங்காரம் கட்டிப் போடும் போது அது ஜீவாத்மாவாக ஆகிறது. ஆகவே உண்மையில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான். 

நான் என்கிற எண்ணம் இருக்கும்போது நாம் சாத்விகம் ராஜசம் தாமசம் ஆகிய குணங்களோடு இருக்கிறோம். இந்த குணத்தை ஒட்டி மனம் ஓடுகிறது. இப்படிப்பட்ட மன ஓட்டம் ஐந்து வகை ஆகும். இந்த ஐந்து வகைகள் வருமாறு: பிரமாணம்  விகல்பம், நித்திரை ஸ்மிருதி.

 பிரமாணம் என்பதை கேள்விப்பட்டிருப்போம்.  ஆதாரம் என்ன என்று கேட்கிறார்கள் அல்லவா, அதுதான் பிரமாணம்.  நான் இதை நேரடியாக அனுபவித்து இருக்கிறேன்  கேட்டேன் பார்த்தேன் என்று புலன்கள் மூலம் அறிந்ததை சொல்லுகிற நேரடி அனுபவம் ஒரு பிரமாணம். இதை ப்ரத்யக்ஷம் என்கிறார்கள்.

பெருமாள் கோவிலில் பொங்கல் பிரசாதம் கொடுக்கிறார்கள். அங்கே முதலில் நினைப்பவர் யார் சொல்லு பார்ப்போம் என்று கேட்டால் ‘அட நம் ராமன் தானே இதுக்கெல்லாம் முன்னே போய் நிற்பான்? அவனாக தான் இருக்கும்’.  இப்படி சொல்வது ஊகம்.  இதேபோல் ‘முன்னே நெருப்பு இருக்கும் இடத்தில் புகை எழுவதை நான் பார்த்திருக்கிறேன்.  அதோ அங்கே எழுகிறது. ஆகவே அங்கே நெருப்பு இருக்கும் என்பது போன்றது ஆகமங்கள். அனுபவித்ததை அதேபோல ஒன்றுக்கு பொருத்திப் பார்ப்பது ஆகமம் எனப்படும் இதுவும் ஒரு பிரமாணம்.

 

 ஒரு பொருளின் உண்மையான வடிவத்தை சொரூபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் என்று நினைப்பது விபர்யயம்.  கடற்கரையில் தூரத்தில் ஏதோ மினுமினுப்பு. அதைப்பார்த்து ஏதோ வெள்ளியாலான பொருள் கிடைக்கிறது என்று நினைக்கிறோம். கிட்டே போய் பார்க்கும்போது அது ஒரு சிப்பிதான் என்று தெரிகிறது. வெள்ளி என்று நினைத்தது தவறானது. இதுதான் விபர்யயம்.  இதன் முக்கிய லட்சணம் என்ன என்றால்  வேறு ஆதாரம் தெரியவரும்போது மாறிவிடுவது.

 சில சமயம் சத்தத்தை கேட்டு மனது ஏதோ ஒன்றை முடிவு செய்கிறது. மணியின் சப்தத்தைக் கேட்டு யானை வருகிறது என்று முடிவு செய்கிறது.  ஆனால் இது போல் இயற்கையான நிகழ்வுகளில் ஏதோ ஒன்றை வார்த்தை ஜாலம் ஆக கவிஞர்கள் மாற்றுகிறார்கள் இல்லையா?  இன்னாரின் மறைவுக்கு வானம் அழுகிறது என்று மழையை பார்த்து சொல்லுகிறார்கள்.  ஏதோ சம்பந்தம் இருப்பது போல தோன்றினாலும் அது உண்மையில் இல்லை. இது விகல்பம்.


 மேலே சொன்னவை நம்முடைய சத்துவ ரஜோ குணங்களால் மனதில் ஏற்படுகிற சலனங்கள். இந்த இரண்டும் இல்லாமல் தமோகுணம் நேரிடும்போது நாம் உறங்குகிறோம்.  தூங்கும் போது ஏதோ கனவு காணலாம் கனவில் இல்லாமல் இருக்கலாம் சொல்ல முடியாது. கனவில் உலகத்தில் நடைமுறையில் சாத்தியம் இல்லாத பல விஷயங்களை நாம் செய்வதாக இருக்கலாம். இப்படியாக தூங்கும்போது கூட மனதின் சலனம் ஏதோ இருக்கிறது.


 இது இல்லாமல் பல விஷயங்களை பார்த்து கேட்டு அனுபவித்து பல விஷயங்களில் நிச்சயமாக அறிவு ஏதோ ஒன்றை பலரும் அடைந்து இருக்கிறோம். இந்த நாசம் இல்லாத அறிவே ஸ்மிருதி எனப்படும்.  மனமும் புத்தியும் ஒரே விஷயம் தான்.  ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. ஆகவே புத்தி சம்பந்தப்பட்ட இந்த அறிவு என்பதும் மனதின் இன்னொரு சலனம் தான்.

 இப்படியாக பல்கிப் பெருகும் மனதை அடக்கி தன்னுடைய சொந்த நிலையில் நிற்பது யோகம். 


இது எப்படி சாத்தியம் ஆகும் என்றால் குருவின் துணையுடன் இடைவிடாமல் உறுதியாக நிச்சயமாக நாம் செய்யக்கூடிய பயிற்சி முதலாவது. இரண்டாவதாக பற்றின்மை. இந்த பற்றின்மை வைராக்கியம் எனப்படும். இந்த வைராக்கியம் திடம் - டிடர்மினேஷன் - என்ற பொருளில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அது தவறு. உலக விஷயங்களில் பற்றை விட்டுவிடுவதே வைராக்கியம்.  இந்த வைராக்கியத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்று கேள்வி எழுகிறது.  ஆஹா இது நன்றாக இருக்கிறது என்று எதை நோக்கி மனது ஓடுகிறதோ அதில் குற்றங்களை பார்க்க ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதன் குணங்களில் உள்ள பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.  இதைத் தொடர்ந்து செய்ய செய்ய மனதிற்கு வெளியே ஓடும் நாட்டம் குறைந்து போகும்.  ஒரு அருமையான சுவையான இனிப்பு இருக்கிறது. இதை சாப்பிட வேண்டுமென்று நம் மனம் ஓடக் கூடும். ஆனால் அதில் உள்ள பிரச்சனைகளை ஆராய ஆரம்பிக்க வேண்டும். ‘நமக்கு சக்கரை வியாதி இருக்கிறது; இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாக போய்விடும்; அதனால் நமக்கு பல பிரச்சனைகள் வரும்’ என்பது நினைவுக்கு வர என்னதான் மனது அதை சாப்பிட வேண்டும் என்று விரும்பினாலும் இந்த புத்தி ரூபமாக யோசிக்கும்போது அந்த எண்ண ஓட்டம் நின்று விடுகிறது. இதுதான் சித்தத்தை அடக்குவது.  டெக்னிகலாக இதை விருத்தி நிரோதம் என்கிறார்கள்.

 இத்துடன் சமாதி பாதத்தில் முதல் 12 சூத்திரங்கள் விமர்சனம் முடிகிறது. 


 

Wednesday, January 26, 2022

ஶ்ராத்தம் - 27 ; பார்வண ஹோமம் -9 - ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.- 5




 
அடுத்ததாக வருணனை ஆவாஹனம் செய்தோம் அல்லவா? ஆவாஹனம் செய்த கிண்ணத்தின் மீது ‘வருணாய நம, ஸகல ஆராதனை ஸுவர்ச்சிதம்’ என்று அட்சதையை தூவ வேண்டும். அதை நம் எதிரில் எடுத்து வைத்துக்கொண்டு கிழக்கில் ஆரம்பித்து பிரதட்சிணமாக நீரை ஒவ்வொரு திசையிலும் கொஞ்சம் கொஞ்சம் இறைக்க வேண்டும் பிறகு உபவீதியாக கிழக்கே பாத்திரத்தை முழுவதும் சாய்த்து பூமியில் விழுந்த நீரை தன்னையும் தன் மனைவியையும் ப்ரோக்ஷணம் செய்துகொள்ளலாம்.
 
ஹோமத்திற்கு நமக்கு உதவிய வாத்தியாருக்கு பிரம்மன் ‘வரம் தே ததாமி’ என்று பசுமாட்டை தட்சிணையாக கொடுத்து ‘பிரம்ஹனே நமஹ, சகல ஆராதனை ஸுவர்ச்சிதம்’ என்று அட்சதையை அவர் தலை மீது போடுவோம். பசு மாடா? ஆமாம். நல்ல வேளையாக ஒரே ஒரு ‘ஆதத்ஸ்வ’ சொல்லறதுக்கு பசு மாடான்னு யாரும் அந்த காலத்தில எதிர்ப்பு காட்டலை போலிருக்கு. இருந்தாலும் யாரால் முடியும்? சாதாரணமாகவே ஒரு ஹோமத்துக்கு கொடுப்பது சிரம சாத்யமே. அப்படியானால் பக்ஷத்துக்கு பக்ஷம் ஸ்தாலீபாகம் செய்பவரை நினைத்துப் பாருங்கள்! எவ்ளோ பசுமாடு இருக்குன்னு கணக்கே தெரியாத அர்ஜென்டைனா போன்ற நாட்டு செல்வந்தர் போல இருந்தால் ஒழிய இது மிகவும் கஷ்டம். யாரோ ரிஷி அதை இளக்கி கொடுக்க கோ சப்தத்துக்கு தேங்காய்ன்னு வெச்சுக்கலாம்ன்னு சொல்லி இருக்கார். அதனால் மட்டை தேங்காய் கொடுக்கிறார்கள். (ஆனா இங்க ‘வரம் தே’ ன்னு தான சொல்லி இருக்குன்னு கேக்கக்கூடாது!) போகட்டும், எப்படியும் கடைசில பேசின தக்ஷிணைதான் கொடுக்கப்போகிறோம்! 
 
பிறகு ஒரே ஒரு சமித்தை ஸ்வாஹா என்று அக்னியில் வைத்து எழுந்து நின்று உபஸ்தானம் செய்கிறோம். அதற்கு ‘அக்னே நய’ என்ற மந்திரம் பிரயோகம் ஆகிறது.
அதன் பொருளாவது: அக்னியே! உனக்கு எல்லா வழிகளும் நன்கு தெரியும். ஆதலால் நல்ல வழியாக எங்களுக்கு செல்வம் வரும்படி செய்யுங்கள். கொடிய பாவங்களான சத்ருக்களுடன் போரிடுங்கள். உமக்கு பலமுறை வணக்கம் செலுத்துகிறோம். அக்னே, மந்திரத்திலும் செய்கையிலும் பக்தியிலும் குறைவுடன் நான் செய்த ஹோமம் பூரணமாக ஆகும்படி ஏற்றுக்கொள்ளுங்கள். தபஸ், கர்மா முதலிய வடிவமாக கூறப்பட்டுள்ள எல்லாவகை பிராயச்சித்தங்களுல் கிருஷ்ணனை நினைப்பதே உயர்ந்த பிராயச்சித்தம் ஆகும் .இப்படி சொல்லி கிருஷ்ணா கிருஷ்ணா என்று எட்டுமுறை சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
அக்னி காரியம் முடிந்தது.

மேற்கொண்டு இருக்கிற சிராத்த பிரயோகத்தை பார்க்கலாம்.


 

Monday, January 24, 2022

ஶ்ராத்தம் - 26 ; பார்வண ஹோமம் -8 - ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.- 4




 

இதெல்லாம் முடிந்த பிறகு ஸக்கு ஸ்ராவ ஹோமம் என்று ஒன்று இருக்கிறது இரண்டு கரண்டிகளிலும் நெய்யை எடுத்துக்கொண்டு சின்ன கரண்டியில் இருந்து பெரிய கரண்டியில் விழுந்து பின் அக்னியில் விழும்படி வார்க்க வேண்டும். இதற்கு ‘வஸு ருத்ர ஆதித்ய ஸக்கு ஸ்ராவ பாகேப்யோ இதம்’ என்று உத்தேச த்யாகம். அடுத்ததாக தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தமாக க்ஞாதாக்ஞாத ஸம்பாவித தோஷ நிர்ஹரணார்த்தம் என்று சொல்லி 3 ஹோமங்கள் இருக்கின்றன. இவை முடிந்த பிறகு மூன்று வியாஹ்ருதி சொல்லி - பூ புவ ஸுவ ஆகிய வியாஹ்ருதிகளை சொல்லி- ஹோமம் செய்ய வேண்டும். பிறகு ‘பூர் புவ ஸுவ ஸ்வாஹா’ என்று பிரஜாபதிக்கு ஹோமம். எடுத்து மேலும் ஹோமத்தில் நடந்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பூர் புவ ஸுவ ஸ்வாஹா என்று ஹோமம் செய்ய வேண்டும். விஷ்ணு தான் ஹோமங்களில் பிராயச்சித்த தேவதை. ஆகவே விஷ்ணவே ஸ்வாஹா என்று ஹோமம் இருக்கிறது. இங்கே நாம் சாதாரணமாக நினைக்கும் விஷ்ணு சிவன் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. ஆனால் சிலர் அப்படி நினைத்துக் கொண்டு விஷ்ணுவுக்கு உண்டு, சிவனுக்கு கிடையாதா என்று நினைத்தோ என்னவோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா என்று ஒரு ஹோமம் செய்கிறார்கள். இது தேவையில்லை. இப்படி பழமையான க்ரந்தங்களில் ஒரு ஹோமம் சொல்லப்படவில்லை. ஒருவேளை வாத்தியார் சொல்லுவதால் நாம் செய்தால் ருத்ர சப்தத்திற்கு நீரை தொட்டுக் கொள்ள வேண்டும்.
 
அடுத்ததாக மீதி இருக்கும் நெய் முழுவதையும் ‘ஸப்ததே’ என்ற மந்திரத்தால் முழுக்க முழுக்க ஹோமம் செய்து விட வேண்டும். இதற்கு சின்ன இலையை பெரிய இலையின் மீது வைத்து நெய் பாத்திரத்தை இடது கையால் எடுத்துக் கொண்டு நெய் முழுவதையும் சின்ன இலையில் வார்த்து அது பெரிய இலை மீது வழிந்து அக்னியில் சேரும்படி செய்ய வேண்டும். இந்த இலைகள், நெய், பாத்திரம் எல்லாவற்றையும் வடக்கு பக்கமாக வைத்து விட வேண்டும்.
இந்த மந்திரத்தின் பொருள்: ஹே அக்னே, உமக்கு 7 சமித்துகள், 7 நாக்குகள், 7 மந்திரங்கள், பிரியமான இடங்கள் ஏழு, ரித் விக்குகள் 7 பேர் ஹோமம் செய்கிறார்கள். ஏழு இடங்களிலும் நிறைந்த நெய்யால் சந்தோஷத்தை அடையவும். இந்த ஹோமம் ஸ்விஷ்டக்ருத் ஹோமம் போல ஆகும். ஆகவே அதை உரக்க கூற வேண்டும்.

இத்துடன் அக்னியில் செய்யும் காரியங்கள் முடிவடைந்தன. மூச்சு திணறும் வரை பிராணாயாமம் செய்து பிறகு அக்னியை மீண்டும் பரிசேஷனம் செய்ய வேண்டும். இதை முன்பே ஆரம்பத்தில் செய்தோம், சொல்லியிருக்கிறோம். மந்திரம் இல்லாமல் அப்பிரதட்சிணமாக செய்கிறோம். பொதுவான ஹோமத்தில் தெற்கே, மேற்கே, வடக்கே பிறகு முழுவதுமாக பிரதட்சிணமாக மந்திரத்துடன் பரிசேஷணம் செய்கிறோம்.
 

Saturday, January 22, 2022

ஶ்ராத்தம் - 25 ; பார்வண ஹோமம் -7 - ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.- 3




 

எப்போதும் எதிலாவது ஒரு பகுதியை எடுத்து ஹோமம் செய்தால் அது இருக்கும் பாத்திரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும். நெய் ஹோமமானால் நெய் பாத்திரம்; அன்ன ஹோமமானால் அன்ன பாத்திரம்.

அடுத்து ஹோமத்தின் உத்தராங்கம்

ஹோம கரண்டிகளை அவற்றின் இடத்தில் வைத்துவிடலாம். பெரிய கரண்டி தெற்கே. வடக்கே நெய் பாத்திரம். இடையில் சின்ன கரண்டி

எப்போது அன்ன ஹோமம் செய்கிறோமோ அப்போது லேப காரியம் என்று ஒன்று உண்டு. அதாவது ஹோமம் செய்த கரண்டிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது கூட உத்தேசித்த தேவதைகளுக்கு போய் சேர்ந்துவிட வேண்டும். இதையே அக்னிஹோத்திரத்தில் கூட பார்க்கலாம். பால்தான் அக்னிஹோத்ர ஹவிஸ். அது ஒட்டிக் கொண்டிருக்கும் கரண்டியில் மேலும் மேலும் நீர் வார்த்து அவற்றை ஒவ்வொரு தேவதையை உத்தேசித்து கீழே விடுவதாக இருக்கும். அதே போல இங்கு பித்ரு தேவதைகளை குறித்து ஹவிஸ் தயார் செய்தோம். அது அவர்களுக்கே அக்னி மூலமாக போய் சேருவதற்காக இந்த காரியம் செய்கிறோம். பாத்திரங்களை எல்லாம் 12 தர்ப்பங்கள் மீது வைத்தோம் அல்லவா? அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நெய் பாத்திரம், ஹோம கரண்டிகள் இவற்றில் இருந்து நெய் சிந்தி இருக்கலாம் என்பதால் அவற்றை வைக்கும் அந்த எட்டு தர்ப்பங்களையும் கூட சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றை ஒன்று சேர்த்து நுனிகளால் பெரிய கரண்டியையும் நடுப்பகுதியால் சின்ன கரண்டியையும் துடைக்க வேண்டும். அடுத்து நெய் பாத்திரத்தில் தர்ப்பங்களின் அடிப்பகுதியை தொட வேண்டும். இது போல மூன்று முறை செய்ய வேண்டும். முடிந்த பிறகு பெரிய கரண்டி மேலே இந்த தர்பங்களை அடிப்பகுதி தாங்கும்படி வைத்துக்கொண்டு ஒரு தர்ப்பையை தனியாக பிரித்து வைத்துக் கொண்டு வலது கையால் மேலே பிடித்துக்கொண்டு, இடது கையால் கீழே பிடித்து பின் இவற்றை அக்னியில் இட வேண்டும். இதை மூன்று முறை தள்ளி  உள்ளே கொடுக்க வேண்டும்பிறகு தனியாக வைத்ததை அக்னியில் இட வேண்டும். மூன்று முறை இரண்டு ஆள் காட்டி விரல் விரல்களால் தேசம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு உள்ளங்கைகளும் அக்னியை பார்க்கும்படி அணைப்பது போல காட்டி அக்னியை அபிமந்த்ரணம் செய்ய வேண்டும். அடுத்து பூமியை தொட வேண்டும். இதற்குப் பிறகு பரிதிகளை அக்னியில் இட வேண்டும். மேற்கே வைத்த பெரிய சமித்தை - கூடுதலாக தர்ப்பத்தையும் வைத்து இருந்தால் அதையும் சேர்த்து - முதலில் அக்னியில் வைக்க வேண்டும். அடுத்து தெற்கே வடக்கே வைத்த சமித்துகளை எடுத்துக் கொண்டு வடக்கே வைத்த சமித்தின் நுனி அக்னியின் உள்ளே போகும்படி அக்னியில் வைக்க வேண்டும்.


Thursday, January 20, 2022

ஶ்ராத்தம் - 24 ; பார்வண ஹோமம் -6 - ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.-2




 

பிதாவுக்கு, தாத்தாவுக்கு, அவரது தந்தைக்கு என 3 பேருக்கு தலா 2 ஹோமங்கள். யன்மே மாதா என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கான ஹோமங்களில் பொருத்தமாக யன்மே பிதாமஹி, யன்மே ப்ரபிதாமஹி என மாறி வரும். இரண்டாவது ஹோமம் உலகை தாங்கி நிற்கும் நீர் (1), மலைகள், முடிவேயில்லாத திக்குகள் (2), ருதுக்கள், பகலிரவு, ஸந்த்யா காலங்கள், பக்‌ஷம் மாசம் (3) ஆகியவை அன்னியரை தடுக்கட்டும்; குறிப்பிட்டவரையே ஹவிஸ் போய் சேரட்டும் என்ற பொருள் உள்ள மந்திரங்களால் செய்யப்படும்.

கடைசியாக ஞானாதாஞாத பித்ருக்கள். நமக்கு 7 தலைமுறை மேல் உள்ளவர்கள் பங்காளிகள் ஆவர். நமக்கோ 3 தலைமுறை மேல் தெரியவில்லை. முன்னே பல வீடுகளில் இப்படி தெரியாமல் போகக்கூடாது என்றோ என்னவோ தாத்தா பெயரையே வைப்பர். ஆக 2 பெயர்களே மாறி மாறி வந்து கொண்டு இருக்கும்.

போகட்டும். சில பித்ருக்கள் இந்த உலகில் மறு பிறப்பு எடுத்து இருப்பர். சிலர் பித்ரு லோகத்திலேயே இருப்பர், அல்லது வேறு லோகங்களில் இருப்பர். இப்படியாக தெரிந்த தெரியாத பித்ருக்களுக்கு 7 ஆவதாக ஹோமம் செய்யப்படுகிறது

பின் ஸ்வாஹா பித்ரே என்பதை மாற்றி மாற்றி சொல்லி 4 நெய்யால் ஹோமங்கள். ஸ்வதா என ஒரு முறை. அக்னி கவ்யவாஹனன் என ஒரு முறை

மீண்டும் பொதுவான முறைக்கு வந்து விட்டோம். எந்த ஹோமம் செய்தாலும் பிரதான ஹோமங்கள் முடிந்ததும் ‘அக்னயே ஸ்விஷ்டக்ருதே’ என்று ஒரு ஹோமம் உண்டு. பெரிய இலையில் ஒரு முறை அன்னம் எடுத்து வைக்க வேண்டும். ( 5 ப்ரவர ரிஷிகளுக்கு மேல் உள்ளவர்கள் 2 முறை) ஆனால் அளவில் இது முன்னே செய்த மொத்த அன்னத்தின் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும். மேலே இரு முறை நெய் விட்டு அக்னியின் வடகிழக்கு பகுதியில் ஹோமம் செய்ய வேண்டும். இது முன்னே செய்த ஹோமங்களுடன் கலக்கக்கூடாது. அதற்காக முன்னே ஹோமம் செய்த அன்னத்தை விராட்டி துண்டுகளால் மூடி விட வேண்டும். ஸ்விஷ்டக்ருத் ஆனதும் இது அளவில் அதிகம் ஆகையால் ஜீரணம் ஆகும் பொருட்டு இதை வராட்டி துண்டுகளால் மூட வேண்டும். ஸ்விஷ்டக்ருத் ஹோமம் அதன் முன் செய்த பிரதான ஹோமங்களின் குறைகளை நீக்கி நிறைவாக்குகிறது.

சிராத்தத்தில் அடுத்து பெரிய இலையில் உப்பு போடாத கறித்தானை எடுத்து வைத்து முன்னும் பின்னும் அபிகாரம் செய்து அதை வடக்கே சாம்பலில் ஸ்வாஹா: என்று சொல்லி இட்டு விட வேண்டும்.


Wednesday, January 19, 2022

ஶ்ராத்தம் - 24




 
போன பதிவுகளில் எழுதியதை கொஞ்சம் படங்கள் மூலம் விளக்க....
 
 



Tuesday, January 18, 2022

ஶ்ராத்தம் - 23 ; பார்வண ஹோமம் -5 - ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.




 

நல்லது. இப்பொழுது ஆபஸ்தம்ப கர்த்தாக்கள் செய்ய வேண்டிய ஹோமம் - சிராத்த பிரயோகத்தை பார்க்கலாம். பெரும்பாலான கர்த்தாக்கள் ஔபாசனம் இல்லாமல் தனியே ஹவிஸ் வைத்து கொண்டு வருவதால் இந்த நேரத்தில் இந்த ஔபாசன அக்னியின் மீது அதை வைத்து சூடு காட்டுவதாகவும் அதில் சிறிது நெய் விட்டு  இறக்கி வைப்பதாகவும் இருக்கிறது. இது அவ்வளவு சிலாக்கியம் இல்லை என்று நமக்கு தெரியும். இருந்தாலும் இதுதான் நடைமுறை சாத்தியமாக பலருக்கும் இருக்கிறது. இப்பொழுது பெரிய ஹோம கரண்டி - இனி பெரிய இலை என்று சொல்லிக்கொண்டு போகலாம் - பெரிய இலையில் சின்ன இலையால் நெய் விட்டு தடவ வேண்டும். அது வழுவழுவென்று ஆகிவிடும் படி சற்று அதிகமாகவே நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மீது அன்னத்தை வைத்தால் அது ஒட்டாமல் சுலபமாக வழுக்கிக்கொண்டு அக்னியில் விழவேண்டும் என்பது உத்தேசம்

நல்லது. இப்பொழுது பெரிய இலையில் நெய்யை தடவி ஒரு கட்டை விரல் பருமன் அளவுக்கு அன்னத்தின் நடுவிலிருந்து அன்னம் எடுக்க வேண்டும். பிறகு இரண்டாம் முறை கிழக்குப் பகுதியிலிருந்து அதே அளவு அன்னம் எடுக்க வேண்டும். ஶ்ரீவத்ஸ கோத்திரம் போன்ற 5 அல்லது மேற்பட்ட பிரவர ரிஷிகள் உள்ளவர்கள் மேற்குப் பகுதியில் இருந்து மூன்றாவது முறையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு சின்ன இலையால்  நெய் எடுத்து அன்னத்தின் மீது ஒரு முறை விட்டு அபிகாரம் செய்ய வேண்டும். இதற்கு நடுவில் ஒரு பாத்திரத்தில் நமக்கு வலது பக்கமாக தண்ணீரை வைத்திருந்து அன்னத்தை எடுத்த பின் கையை கழுவிக் கொள்ளலாம். அவரவர் நடைமுறை சௌகரியம். இப்போது இடது கையில் இருந்து இந்த பெரிய இலையை அன்னத்துடன் வலது கைக்கு மாற்றிக் கொண்டு, இடது கையால் ஹவிஸ் இருக்கும் அந்தப் பாத்திரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும்மந்திரத்தை கூறி கடைசியில் ஸ்வாஹா … ஆ என்று முடிக்கும் பொழுது அந்த அன்னத்தை அக்னியில் இட வேண்டும். இதுதான் பிரதான ஹோமம் செய்ய வேண்டிய முறை. இப்படியாக நாம் வேறு ஹோமங்களும் செய்வோம்

 ஆபஸ்தம்பிகள் இதில் சொல்லும் யன்மே மாதா என்னும் மந்திரத்திற்கு தவறான பொருள் கொள்ளப்படுகிறது. “என் தாய் பதிவிரதா தர்மப்படி தன் தர்ம விரதங்களை முழுக்க அனுஷ்டிக்காமல் இருந்தாலும் என்னை உண்டுபண்ண பிதாவே இந்த ஹவிசை பெறட்டும். விதி தவறு இருந்தால் ஹவிஸை பெற வரும் மற்ற அசுரர்கள் முதலானவர்கள் இதை அடைய வேண்டாம் என் தந்தைக்கே தருகிறேன்” என்பது அதன் பொருள். ‘என்னை உண்டு பண்ண  தந்தை’ என்று சொல்வதை வைத்துக்கொண்டு பலரும் மோசமான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு வியாக்கியானம் செய்து தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்கிறார்கள். இது அவசியம் இல்லை. அந்த காலத்தில் பதிவிரதா தர்மம் என்பது மிகவும் உயர்த்தி சொல்லப்பட்டதுஅப்படி அனுஷ்டிப்பது என்பது மிகவும் விரிவானது. அதை ‘சரியாக அனுஷ்டிக்க வில்லை என்றால்..’ என்று அது மிகவும் தெளிவாக சொல்லப்பட்டது. அவ்வளவுதானே ஒழிய அன்னை சோரம் போனாள் என்பதாக அர்த்தம் செய்து கொள்ள கொள்ளுதல் மிகவும் மோசமானதாகும்.