Pages

Monday, January 24, 2022

ஶ்ராத்தம் - 26 ; பார்வண ஹோமம் -8 - ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.- 4




 

இதெல்லாம் முடிந்த பிறகு ஸக்கு ஸ்ராவ ஹோமம் என்று ஒன்று இருக்கிறது இரண்டு கரண்டிகளிலும் நெய்யை எடுத்துக்கொண்டு சின்ன கரண்டியில் இருந்து பெரிய கரண்டியில் விழுந்து பின் அக்னியில் விழும்படி வார்க்க வேண்டும். இதற்கு ‘வஸு ருத்ர ஆதித்ய ஸக்கு ஸ்ராவ பாகேப்யோ இதம்’ என்று உத்தேச த்யாகம். அடுத்ததாக தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தமாக க்ஞாதாக்ஞாத ஸம்பாவித தோஷ நிர்ஹரணார்த்தம் என்று சொல்லி 3 ஹோமங்கள் இருக்கின்றன. இவை முடிந்த பிறகு மூன்று வியாஹ்ருதி சொல்லி - பூ புவ ஸுவ ஆகிய வியாஹ்ருதிகளை சொல்லி- ஹோமம் செய்ய வேண்டும். பிறகு ‘பூர் புவ ஸுவ ஸ்வாஹா’ என்று பிரஜாபதிக்கு ஹோமம். எடுத்து மேலும் ஹோமத்தில் நடந்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக பூர் புவ ஸுவ ஸ்வாஹா என்று ஹோமம் செய்ய வேண்டும். விஷ்ணு தான் ஹோமங்களில் பிராயச்சித்த தேவதை. ஆகவே விஷ்ணவே ஸ்வாஹா என்று ஹோமம் இருக்கிறது. இங்கே நாம் சாதாரணமாக நினைக்கும் விஷ்ணு சிவன் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. ஆனால் சிலர் அப்படி நினைத்துக் கொண்டு விஷ்ணுவுக்கு உண்டு, சிவனுக்கு கிடையாதா என்று நினைத்தோ என்னவோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா என்று ஒரு ஹோமம் செய்கிறார்கள். இது தேவையில்லை. இப்படி பழமையான க்ரந்தங்களில் ஒரு ஹோமம் சொல்லப்படவில்லை. ஒருவேளை வாத்தியார் சொல்லுவதால் நாம் செய்தால் ருத்ர சப்தத்திற்கு நீரை தொட்டுக் கொள்ள வேண்டும்.
 
அடுத்ததாக மீதி இருக்கும் நெய் முழுவதையும் ‘ஸப்ததே’ என்ற மந்திரத்தால் முழுக்க முழுக்க ஹோமம் செய்து விட வேண்டும். இதற்கு சின்ன இலையை பெரிய இலையின் மீது வைத்து நெய் பாத்திரத்தை இடது கையால் எடுத்துக் கொண்டு நெய் முழுவதையும் சின்ன இலையில் வார்த்து அது பெரிய இலை மீது வழிந்து அக்னியில் சேரும்படி செய்ய வேண்டும். இந்த இலைகள், நெய், பாத்திரம் எல்லாவற்றையும் வடக்கு பக்கமாக வைத்து விட வேண்டும்.
இந்த மந்திரத்தின் பொருள்: ஹே அக்னே, உமக்கு 7 சமித்துகள், 7 நாக்குகள், 7 மந்திரங்கள், பிரியமான இடங்கள் ஏழு, ரித் விக்குகள் 7 பேர் ஹோமம் செய்கிறார்கள். ஏழு இடங்களிலும் நிறைந்த நெய்யால் சந்தோஷத்தை அடையவும். இந்த ஹோமம் ஸ்விஷ்டக்ருத் ஹோமம் போல ஆகும். ஆகவே அதை உரக்க கூற வேண்டும்.

இத்துடன் அக்னியில் செய்யும் காரியங்கள் முடிவடைந்தன. மூச்சு திணறும் வரை பிராணாயாமம் செய்து பிறகு அக்னியை மீண்டும் பரிசேஷனம் செய்ய வேண்டும். இதை முன்பே ஆரம்பத்தில் செய்தோம், சொல்லியிருக்கிறோம். மந்திரம் இல்லாமல் அப்பிரதட்சிணமாக செய்கிறோம். பொதுவான ஹோமத்தில் தெற்கே, மேற்கே, வடக்கே பிறகு முழுவதுமாக பிரதட்சிணமாக மந்திரத்துடன் பரிசேஷணம் செய்கிறோம்.
 

No comments: