எப்போதும் எதிலாவது ஒரு பகுதியை எடுத்து ஹோமம் செய்தால் அது இருக்கும் பாத்திரத்தை தொட்டுக் கொள்ள வேண்டும். நெய் ஹோமமானால் நெய் பாத்திரம்; அன்ன ஹோமமானால் அன்ன பாத்திரம்.
அடுத்து ஹோமத்தின் உத்தராங்கம்.
ஹோம கரண்டிகளை அவற்றின் இடத்தில் வைத்துவிடலாம். பெரிய கரண்டி தெற்கே. வடக்கே நெய் பாத்திரம். இடையில் சின்ன கரண்டி.
எப்போது அன்ன ஹோமம் செய்கிறோமோ அப்போது லேப காரியம் என்று ஒன்று உண்டு. அதாவது ஹோமம் செய்த கரண்டிகளில் ஒட்டிக் கொண்டிருப்பது கூட உத்தேசித்த தேவதைகளுக்கு போய் சேர்ந்துவிட வேண்டும். இதையே அக்னிஹோத்திரத்தில் கூட பார்க்கலாம். பால்தான் அக்னிஹோத்ர ஹவிஸ். அது ஒட்டிக் கொண்டிருக்கும் கரண்டியில் மேலும் மேலும் நீர் வார்த்து அவற்றை ஒவ்வொரு தேவதையை உத்தேசித்து கீழே விடுவதாக இருக்கும். அதே போல இங்கு பித்ரு தேவதைகளை குறித்து ஹவிஸ் தயார் செய்தோம். அது அவர்களுக்கே அக்னி மூலமாக போய் சேருவதற்காக இந்த காரியம் செய்கிறோம். பாத்திரங்களை எல்லாம் 12 தர்ப்பங்கள் மீது வைத்தோம் அல்லவா? அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நெய் பாத்திரம், ஹோம கரண்டிகள் இவற்றில் இருந்து நெய் சிந்தி இருக்கலாம் என்பதால் அவற்றை வைக்கும் அந்த எட்டு தர்ப்பங்களையும் கூட சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றை ஒன்று சேர்த்து நுனிகளால் பெரிய கரண்டியையும் நடுப்பகுதியால் சின்ன கரண்டியையும் துடைக்க வேண்டும். அடுத்து நெய் பாத்திரத்தில் தர்ப்பங்களின் அடிப்பகுதியை தொட வேண்டும். இது போல மூன்று முறை செய்ய வேண்டும். முடிந்த பிறகு பெரிய கரண்டி மேலே இந்த தர்பங்களை அடிப்பகுதி தாங்கும்படி வைத்துக்கொண்டு ஒரு தர்ப்பையை தனியாக பிரித்து வைத்துக் கொண்டு வலது கையால் மேலே பிடித்துக்கொண்டு, இடது கையால் கீழே பிடித்து பின் இவற்றை அக்னியில் இட வேண்டும். இதை மூன்று முறை தள்ளி உள்ளே கொடுக்க வேண்டும். பிறகு தனியாக வைத்ததை அக்னியில் இட வேண்டும். மூன்று முறை இரண்டு ஆள் காட்டி விரல் விரல்களால் தேசம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு உள்ளங்கைகளும் அக்னியை பார்க்கும்படி அணைப்பது போல காட்டி அக்னியை அபிமந்த்ரணம் செய்ய வேண்டும். அடுத்து பூமியை தொட வேண்டும். இதற்குப் பிறகு பரிதிகளை அக்னியில் இட வேண்டும். மேற்கே வைத்த பெரிய சமித்தை - கூடுதலாக தர்ப்பத்தையும் வைத்து இருந்தால் அதையும் சேர்த்து - முதலில் அக்னியில் வைக்க வேண்டும். அடுத்து தெற்கே வடக்கே வைத்த சமித்துகளை எடுத்துக் கொண்டு வடக்கே வைத்த சமித்தின் நுனி அக்னியின் உள்ளே போகும்படி அக்னியில் வைக்க வேண்டும்.
No comments:
Post a Comment