Pages

Sunday, January 30, 2022

ஶ்ராத்தம் - 29 - உணவிடும் முன்.





பிறகு மூவருக்கும் உட்கார தர்ப்பை ஆசனம் கொடுக்க வேண்டும். முன் போல ‘க்ஷணக்கர்தவ்யஹ’ என்று சொல்லி கொடுத்து, பாத்திரத்திற்கு அடியில் இரண்டிரண்டு தர்ப்பைகளை போட்டு பாத்திர ஆசனம் கொடுக்க வேண்டும். பிறகு இலைகளை நீரால் துடைத்து இலை மீது சிறிது நெய் ஊற்றி அபிகாரம் செய்ய வேண்டும். பிறகு அன்னம் தவிர்த்த மீதி பதார்த்தங்களை எல்லாம் பரிமாற வேண்டும். இந்த சமயத்தில் கர்த்தா உபவீதியாக அமர்ந்து ‘ஸஹவை’ என்ற மந்திரத்தை கூற வேண்டும்.

நிறைய அன்னம் வடித்து அதில் ஹோமத்துக்கும் எடுத்துக்கொண்டு பிண்டத்துக்கு எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை போக்தாக்களுக்கு பரிமாறி அதிலும் மிஞ்சியதை தங்களுக்கும் பரிமாறி உண்பது என சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பழக்கத்தில் யாரும் அவ்வளவு அன்னம் வடிப்பதில்லை. ஆகவே ஹோமம் செய்யும் போது தயார் செய்த ஹவிஸை பாதி ஹோமம் செய்து விட்டு மீதியை பிண்டத்துக்கு வைத்துக்கொள்கிறார்கள். அதிலிருந்து சிறிது எடுத்து பித்ரு இலையில் மட்டும் இடுகிறார்கள். இது ஏதோ சம்பிரதாயம் போலிருக்கிறது. சாஸ்த்திரத்தில் அப்படி சொல்லப்படவில்லை.

சமையல் குறித்து சொல்லுவீங்களா? அப்படின்னா, அதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்….. அப்படி இல்ல. உண்மையில் கர்த்தாவைத்தான் சமைத்து பரிமாற சொல்லி இருக்கு. ஆனாலும் இந்த மத்த விஷயங்கள் எல்லாம் முடிச்சுண்டே சமையலுக்கு வரலாம்.

ஸஹவை என்ற மந்திரம் ஜபிக்க வேண்டும் என்றேன். இதன் கருத்து: ஒரு சமயம் தேவர்களும் அஸுரர்களும் தாங்களே ஸுவர்க்கம் சென்று ஆள வேண்டும் என்று யக்ஞம் செய்ய ஆரம்பித்தனர். அசுரர்கள் தயாரிப்பு செய்து கொண்டு பலத்தினால் யாகம் செய்தனர். தேவர்கள் பிரம்மசரியத்துடனும் விதிப்படியும் செய்தனர். விதி, சாஸ்திரம் இவற்றை விட்ட அசுரர்கள் மோகத்தால் என்ன செய்வதென்று அறியவில்லை; ஸுவர்கத்தையும் அடையவில்லை.

தேவர்கள் யக்ஞோபவீதம் அணிந்து யக்ஞம் செய்து ஸ்வர்கத்தை அடைந்தனர். அப்படி செய்வது ப்ரஸ்ருதம் எனப்படும். அணியாமல் செய்வது அப்ரஸ்ருதம். அந்தணன் யக்ஞோபவீதம் அணிந்து அத்யயனம் செய்தால் அது யாகத்தை செய்ததற்கு சமமாகிறது. ஆகவே யக்ஞோபவீதம் அணிந்தே அத்யயனம் செய்ய வேண்டும்; யாகம் செய்ய வேண்டும்; யாகம் செய்விக்க வேண்டும். அதனாலேயே அது சிறந்ததாகும். மான் தோலையோ வஸ்திரத்தையோ உபவீதமாக தரிக்க வேண்டும் (இடுப்பில் கட்டக்கூடாது) மேல் பக்கம் இடது தோளிலும் கீழ்ப்பக்கம் வலது கை பக்கமாக தொங்கும் படி அணிவது யக்ஞோபவீதம். மாறாக வலது தோள் மேலும் இடது கை பக்கம் கீழும் தொங்கும் படி தரிப்பது ப்ராசீனாவீதம். இரண்டு தோள்களிலும் மாலையாக கழிப்பது ரிஷிகளுக்கு (மனிதர்களுக்கு) ஏற்றது.

உபவீதியாக தேவ காரியம்; ப்ராசீனாவீதியாக பித்ரு காரியம்; நிவீதியாக ரிஷி காரியம் செய்ய வேண்டும். சிராதத்தில் அடிக்கடி தேவ பித்ரு காரியங்களுக்கு உபவீதி ப்ராசீனாவீதி என்று மாற்றுவதையும் அதனால் தேவர்கள் சுவர்கம் சென்றது போல் இந்த காரியம் பயனுள்ளதாகும் என்று கருத்தை உணர்ந்து கடைபிடிக்கிறோம்.

அடுத்ததாக ‘ரக்‌ஷாகும்ஸி’ என்று ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டும்.


 

No comments: