Pages

Thursday, January 27, 2022

யோக சாத்திரம்- சாமானியன் பார்வை -1
 

பதஞ்சலி யோக சாஸ்திரத்தை விளக்குகிறார். 

முதலில் யோகம் என்பதை விளக்குகிறார். யோகம் என்பது மனதின் வளர்ச்சியை அடக்குதல். எதையோ படிக்க ஆரம்பிக்கிறோம் அல்லது பார்க்க ஆரம்பிக்கிறோம். ஏதோ ஒரு வேலை செய்ய ஆரம்பிக்கிறோம். அதிலிருந்து நம் கவனம் திரும்பி வேறு எங்கும் போய் விடுகிறது. கொஞ்சம் நிதானித்து கடந்த ஐந்து நிமிடம் முன்னால் வரை என்ன நினைப்பு இருந்தது என்று வரிசையாக நினைவு கூறலாம். அது நம் மனது அலை பாய்வதை நன்றாக விளக்கும். இப்போது என்ன யோசித்துக் கொண்டிருந்தோம்? இரவு என்ன சாப்பாடு இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். சரி, இந்த நினைப்பு ஏன் வந்தது? பக்கத்து வீட்டிலிருந்து தோசை வாசனை வந்தது. பக்கத்து வீட்டு நினைப்பு ஏன் வந்தது? அவர்கள் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் வந்தது யாரும் இல்லை என்று திரும்பிப் போய் விட்டார்கள் என்பதை சொல்ல நினைத்தோம். அந்த நினைப்பு ஏன் வந்தது? வெளியே ஏதோ வண்டி சத்தம் கேட்டது. இப்படியே போனால் சம்பந்தமில்லாமல் எங்கோ ஆரம்பித்து எங்கோ நம் நினைப்பு இருக்கிறது என்பது புரியும்.  இந்த மாதிரி நம் மனம் எங்கோ அலைவதை கட்டுப்படுத்த வேண்டும். எங்கெங்கோ போகாமல் ஏதோ ஒன்றை சுற்றி மனம் அலைந்து கொண்டிருந்தால் அது ஒரு முன்னேற்றம். இப்படி ஒன்றை சுற்றியே அலைவதை சித்தம் என்போம். வெறுமனே நாம் கடவுளின் பெயரை மட்டும் சொல்லிக் கொண்டு இருக்கலாம் இல்லையா? அதை ஜெபம் என்கிற என்கிறார்கள். அதை முயற்சி செய்த உங்களுக்கு நன்றாக தெரியும். ஜெபம் செய்து கொண்டே இருப்போம் திடீரென்று வேறு ஏதோ நினைப்பு வந்து அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருப்போம். அது கிளைவிட்டுக்கொண்டே போகும். இது பழக பழக குறையும். இதற்குத்தான் பூஜை என்று ஆரம்பித்து ஒரு மூர்த்திக்கு பலவிதமான நடைபெறுகின்றன . 16 உபசாரங்கள் என்று செய்யும் போது அந்த பூஜையில் மனம் பகவானை சுற்றி வருவது ஒரு முன்னேற்றம். இந்த மாதிரி நடப்பதை, இந்த மனதின் நிலையை சித்தம் என்று சொல்கிறார்கள். பதஞ்சலி சொல்லுவது இந்த மாதிரி சித்தத்தையும் நிறுத்திவிட வேண்டும் என்று. இதுவே யோகம்.

 இது போல மனம் அடங்கும் போது நம்மில் இயங்கு சக்தியாக இருக்கிற ஏதோ ஒன்றுக்கு அதன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது. இந்த இயங்கு சக்தி என்பது என்ன? இது நம் உடல் இல்லை; நம் மனம் இல்லை; நம் புத்தியும் இல்லை. இதெல்லாம் இல்லாத ஏதோ ஒன்று நம்மில் இருப்பதால்தான் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். இதை ஜீவாத்மா என்றும் சொல்கிறார்கள். இந்த ஜீவாத்மா வேறு எதுவும் இல்லை; பிரபஞ்சம் முழுக்க இயங்கு சக்தியாக பரவி இருக்கிற அந்த பரமாத்மாவின் ஒரு சிறு துணுக்கு தான்.  இந்தத்  துணுக்கை ‘நான்’ என்கிற அகங்காரம் கட்டிப் போடும் போது அது ஜீவாத்மாவாக ஆகிறது. ஆகவே உண்மையில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் ஒரு சிறிய வித்தியாசம்தான். 

நான் என்கிற எண்ணம் இருக்கும்போது நாம் சாத்விகம் ராஜசம் தாமசம் ஆகிய குணங்களோடு இருக்கிறோம். இந்த குணத்தை ஒட்டி மனம் ஓடுகிறது. இப்படிப்பட்ட மன ஓட்டம் ஐந்து வகை ஆகும். இந்த ஐந்து வகைகள் வருமாறு: பிரமாணம்  விகல்பம், நித்திரை ஸ்மிருதி.

 பிரமாணம் என்பதை கேள்விப்பட்டிருப்போம்.  ஆதாரம் என்ன என்று கேட்கிறார்கள் அல்லவா, அதுதான் பிரமாணம்.  நான் இதை நேரடியாக அனுபவித்து இருக்கிறேன்  கேட்டேன் பார்த்தேன் என்று புலன்கள் மூலம் அறிந்ததை சொல்லுகிற நேரடி அனுபவம் ஒரு பிரமாணம். இதை ப்ரத்யக்ஷம் என்கிறார்கள்.

பெருமாள் கோவிலில் பொங்கல் பிரசாதம் கொடுக்கிறார்கள். அங்கே முதலில் நினைப்பவர் யார் சொல்லு பார்ப்போம் என்று கேட்டால் ‘அட நம் ராமன் தானே இதுக்கெல்லாம் முன்னே போய் நிற்பான்? அவனாக தான் இருக்கும்’.  இப்படி சொல்வது ஊகம்.  இதேபோல் ‘முன்னே நெருப்பு இருக்கும் இடத்தில் புகை எழுவதை நான் பார்த்திருக்கிறேன்.  அதோ அங்கே எழுகிறது. ஆகவே அங்கே நெருப்பு இருக்கும் என்பது போன்றது ஆகமங்கள். அனுபவித்ததை அதேபோல ஒன்றுக்கு பொருத்திப் பார்ப்பது ஆகமம் எனப்படும் இதுவும் ஒரு பிரமாணம்.

 

 ஒரு பொருளின் உண்மையான வடிவத்தை சொரூபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் என்று நினைப்பது விபர்யயம்.  கடற்கரையில் தூரத்தில் ஏதோ மினுமினுப்பு. அதைப்பார்த்து ஏதோ வெள்ளியாலான பொருள் கிடைக்கிறது என்று நினைக்கிறோம். கிட்டே போய் பார்க்கும்போது அது ஒரு சிப்பிதான் என்று தெரிகிறது. வெள்ளி என்று நினைத்தது தவறானது. இதுதான் விபர்யயம்.  இதன் முக்கிய லட்சணம் என்ன என்றால்  வேறு ஆதாரம் தெரியவரும்போது மாறிவிடுவது.

 சில சமயம் சத்தத்தை கேட்டு மனது ஏதோ ஒன்றை முடிவு செய்கிறது. மணியின் சப்தத்தைக் கேட்டு யானை வருகிறது என்று முடிவு செய்கிறது.  ஆனால் இது போல் இயற்கையான நிகழ்வுகளில் ஏதோ ஒன்றை வார்த்தை ஜாலம் ஆக கவிஞர்கள் மாற்றுகிறார்கள் இல்லையா?  இன்னாரின் மறைவுக்கு வானம் அழுகிறது என்று மழையை பார்த்து சொல்லுகிறார்கள்.  ஏதோ சம்பந்தம் இருப்பது போல தோன்றினாலும் அது உண்மையில் இல்லை. இது விகல்பம்.


 மேலே சொன்னவை நம்முடைய சத்துவ ரஜோ குணங்களால் மனதில் ஏற்படுகிற சலனங்கள். இந்த இரண்டும் இல்லாமல் தமோகுணம் நேரிடும்போது நாம் உறங்குகிறோம்.  தூங்கும் போது ஏதோ கனவு காணலாம் கனவில் இல்லாமல் இருக்கலாம் சொல்ல முடியாது. கனவில் உலகத்தில் நடைமுறையில் சாத்தியம் இல்லாத பல விஷயங்களை நாம் செய்வதாக இருக்கலாம். இப்படியாக தூங்கும்போது கூட மனதின் சலனம் ஏதோ இருக்கிறது.


 இது இல்லாமல் பல விஷயங்களை பார்த்து கேட்டு அனுபவித்து பல விஷயங்களில் நிச்சயமாக அறிவு ஏதோ ஒன்றை பலரும் அடைந்து இருக்கிறோம். இந்த நாசம் இல்லாத அறிவே ஸ்மிருதி எனப்படும்.  மனமும் புத்தியும் ஒரே விஷயம் தான்.  ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. ஆகவே புத்தி சம்பந்தப்பட்ட இந்த அறிவு என்பதும் மனதின் இன்னொரு சலனம் தான்.

 இப்படியாக பல்கிப் பெருகும் மனதை அடக்கி தன்னுடைய சொந்த நிலையில் நிற்பது யோகம். 


இது எப்படி சாத்தியம் ஆகும் என்றால் குருவின் துணையுடன் இடைவிடாமல் உறுதியாக நிச்சயமாக நாம் செய்யக்கூடிய பயிற்சி முதலாவது. இரண்டாவதாக பற்றின்மை. இந்த பற்றின்மை வைராக்கியம் எனப்படும். இந்த வைராக்கியம் திடம் - டிடர்மினேஷன் - என்ற பொருளில் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் அது தவறு. உலக விஷயங்களில் பற்றை விட்டுவிடுவதே வைராக்கியம்.  இந்த வைராக்கியத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்று கேள்வி எழுகிறது.  ஆஹா இது நன்றாக இருக்கிறது என்று எதை நோக்கி மனது ஓடுகிறதோ அதில் குற்றங்களை பார்க்க ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதன் குணங்களில் உள்ள பிரச்சனைகளை பார்க்க வேண்டும்.  இதைத் தொடர்ந்து செய்ய செய்ய மனதிற்கு வெளியே ஓடும் நாட்டம் குறைந்து போகும்.  ஒரு அருமையான சுவையான இனிப்பு இருக்கிறது. இதை சாப்பிட வேண்டுமென்று நம் மனம் ஓடக் கூடும். ஆனால் அதில் உள்ள பிரச்சனைகளை ஆராய ஆரம்பிக்க வேண்டும். ‘நமக்கு சக்கரை வியாதி இருக்கிறது; இதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகமாக போய்விடும்; அதனால் நமக்கு பல பிரச்சனைகள் வரும்’ என்பது நினைவுக்கு வர என்னதான் மனது அதை சாப்பிட வேண்டும் என்று விரும்பினாலும் இந்த புத்தி ரூபமாக யோசிக்கும்போது அந்த எண்ண ஓட்டம் நின்று விடுகிறது. இதுதான் சித்தத்தை அடக்குவது.  டெக்னிகலாக இதை விருத்தி நிரோதம் என்கிறார்கள்.

 இத்துடன் சமாதி பாதத்தில் முதல் 12 சூத்திரங்கள் விமர்சனம் முடிகிறது. 


 

No comments: