Pages

Sunday, January 16, 2022

ஶ்ராத்தம் - 22 ; பார்வண ஹோமம் -4




 

 அடுத்து செய்யப்போவது பரிதிகளை வைப்பது. கிழக்கே இருப்பது இருக்கும் பரிதி சூரியன்! இல்லையா? அவர் அந்தப் பக்கத்திலிருந்து ராக்ஷஸர்கள் வராமல் காப்பாற்றுகிறார். அதே போல மீதி மூன்று பக்கத்திற்கு சமித்துகள் - மேற்கே பருமனானது, தெற்கே மெல்லிய நீளமானது, மிகவும் மெல்லியது கொஞ்சம் குட்டை ஆனது வடக்கேயும் வைக்க வேண்டும் இவை மேற்கு பக்க விளிம்புகளில் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் நீளம் போதவில்லை, தொடவில்லை என்றால் கட்டை தர்ப்பையால் ஒரு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளலாம். அடுத்ததாக இரண்டு சமித்துக்கள் எடுத்துக்கொண்டு நடுவில் மேற்கே வைத்திருக்கும் பரிதியை கையால் தொட்டு விட்டு தெற்கே ஒன்றும் வடக்கே ஒன்றும் இரண்டு சமித்துகளை செங்குத்தாக அக்னியில் நிறுத்த வேண்டும். அதிலேயே வைத்து விட்டால் அவை நாம் ஹோமம் பூர்த்தி  செய்வதற்குள் பற்றி எரிந்து போகும். ஆகவே நான் முன்னே இந்த விரட்டி துண்டுகளை வைத்தேன் அல்லவா? அதற்கு அப்பால் இவற்றை வைக்கிறேன்.

 அடுத்ததாக பரிசேஷனம் செய்வது. சாதாரண ஹோமங்களில் நாம் மேற்கிலிருந்து ஆரம்பித்து கிழக்காக தெற்கு பக்கமும் பிறகு தெற்கிலிருந்து ஆரம்பித்து வடக்காக மேற்கு பக்கமும் பிறகு மேற்கிலிருந்து ஆரம்பித்து கிழக்காக வடக்குப் பக்கமும் பரிசேஷனம் செய்வோம். பிறகு வடகிழக்கு மூலையில் ஆரம்பித்து ஒரு முறை பிரதட்சிணமாக முழுக்க பரிசேஷனம் செய்வோம். சிராத்தத்தில் அப்படி இல்லை எதிர் திசையில் தெற்குப்புறமாக தெற்கே ஆரம்பித்து தெற்கே முடியும்படி ஒரே ஒரு முறை பரிசேஷனம் செய்வோம்.  16 சமித்துகளை சின்ன கரண்டியால் நெய் எடுத்து நனைத்து எந்த ஹோமம் செய்கிறோமோ அந்த ஹோமத்தில் என்று சொல்லி ‘பிரம்மன் இத்மம் ஆதாஸ்யே’ என்று கேட்போம். பிரம்மா ‘ஆதத்ஸ்வ’ என்று  சொல்லுவார். உத்தரவு கிடைத்ததும் கிழக்கு நுனியாக அக்னியில் வைத்து குழலால் ஊத வேண்டும். எப்போதெல்லாம் சமித் அல்லது மரத்துண்டுகள் வைக்கிறோமோ அப்போதெல்லாம் இப்படி ஊத வேண்டும் என்று விதி. தீச்சுவாலை எழுந்தபின்  பூணூலை கொண்டு இடம் மாற்றிக்கொண்டு சின்ன கரண்டியால் நெய் எடுத்துக்கொண்டு வாயு மூலை (வடமேற்கு) இல் இருந்து அக்னி மூலை (தென்கிழக்கு) வரை நேர்கோட்டில் ஆனால் அக்னியில் நெய் விழும்படி பிரஜாபதியை மனதில் நினைத்துக்கொண்டு தாரையாக நெய்யை விட வேண்டும். அதே போல நிருதி (தென்மேற்கு) மூலையில் இருந்து ஈசான (வடகிழக்கு) மூலை வரை பெரிய ஹோம கரண்டியால் நெய்யைத் தாரையாக விட வேண்டும். (பெரிய கரண்டியால் நேரடியாக நெய் எடுக்கலாகாது. சின்ன கரண்டியால் எடுத்து விட்டுக்கொள்ள வேண்டும்இப்படி விடும் போது ஸ்வாஹா என்று முனுமுனுக்க வேண்டும். முந்தைய ஹோமம் பிரஜாபதிக்கானது. இந்த ஹோமம் இந்திரனுக்கு ஆனது.

 அடுத்ததாக ஆஜ்ய பாகம் என்னும் ஹோமம். இரண்டு ஹோமங்கள் அக்னியின் வடகிழக்கே அக்னிக்கும்; அக்னியில் தென்கிழக்கே சோமனுக்கும் செய்கிறோம். பிறகு அன்ன ஹோமம் செய்யும் ஹோமங்களில் அக்னியின் மத்தியில் அக்னயே ஸ்வாஹா என்று ஒரு ஹோமம் உண்டு. இவை அத்தனையும் அக்னி முகம் எனப்படும்.  

அடுத்ததாக பிரதான ஹோமம் செய்யப்போகிறோம். அதற்கு முன் இதுவரை செய்த கர்மாவில் ஏற்பட்டு இருக்கக்கூடிய எல்லா தோஷங்களையும் நீக்க பிராயச்சித்தம் செய்கிறேன் என்று சொல்லி ‘பூர் புவஸ் ஸுவஸ் ஸ்வாஹா:’ என்று ஹோமம் செய்கிறோம். இதற்குப் பிறகு செய்யப்போவது பிரதான ஹோமங்கள். அவை ஹோமத்துக்கு ஹோமம் வேறுபடும். இதுவரை நாம் பார்த்தது பொதுவானதே. இதே போல முடிக்கும் முறையும் பொதுவானதாக இருக்கிறது. அதை அப்புறம் பார்க்கலாம்.


No comments: