Wednesday, February 23, 2022
#ஶ்ராத்தம் - 41 ஶ்ராத்தத்தின் புகழ்ச்சி
Tuesday, February 22, 2022
ஶ்ராத்தம் - 40 முடிவு, பரேஹணி தர்ப்பணம்
Saturday, February 19, 2022
#ஶ்ராத்தம் - 39 முடித்து வைப்பது.
ஶ்ராத்தம் - 38 -பிண்ட ப்ரதானம் -2
இந்த பிண்டங்களை வைத்திருந்த பாத்திரத்தில் சிறிது அன்னம் உதிரியாக இருக்கும். அவற்றை கர்த்தா ஒரு கவளத்துக்கு குறையாமல் சாப்பிடலாம். பொதுவாக முகர்ந்து பார்த்து விட்டு விடுங்கள் என்று வாத்தியார் சொல்கிறார். சாப்பிடுவதானால் பவித்ரத்தை கழட்டி காதில் வைத்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு கை அலம்பி ஆசமனம் செய்ய வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள், அதற்கு விருப்பம் உள்ளவர்களுக்கு பிதாமஹருக்கு வைத்த பிண்டத்தை பத்னிக்கு கொடுக்க வேண்டும். அப்போது அவர் பூணூலை மாலையாக அணிந்து இருக்க வேண்டும். இதற்கு மந்திரம் ‘அபாந்த் வௌஷதீனாம்…’ என இருக்கிறது. பொருள்: ‘ஜலம் ஓஷதிகளிவற்றின் ரஸமான இந்த பிண்டத்தை பத்னி சாப்பிடும்படி செய்கிறேன். பிரம்மா கர்ப்பத்தை உண்டாக்கட்டும்’. அவளும் கிழக்கு முகமாக உட்கார்ந்து சத்புத்திரன் உண்டாவான் என்று நினைத்து ‘ஆதத்த’ என்ற மந்திரம் சொல்லி அதை உட்கொள்ள வேண்டும். (நித்தியனான இறைவன் தாமரை மாலை அணிந்த குமாரனை உண்டு பண்ணியது போல பித்ருக்கள் குழந்தையை உண்டு பண்ணட்டும்). இக்காலத்தில் பிள்ளை பேறு இல்லாமல் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த பிரயோகம் தெரியாமல் இருக்கிறது. பிறகு கர்த்தா பூணூலை இடம் செய்து கொண்டு பிண்ட பித்ரு தேவதைகளை வணங்கி பிரணவத்தை சொல்லி (மற்ற) எல்லா பிண்டங்களையும் தொட வேண்டும். பிறகு எல்லா பிண்ட பித்ரு தேவதைகளையும் அவர்களது இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு இந்த பிண்டங்களை இரண்டிரண்டாக இரண்டு கைகளாலும் மறித்து முதலில் நடு பிண்டங்களையும் பின் தெற்கிலும் கடைசியாக வடக்கிலும் எடுத்து வேறு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இந்த பிண்டத்திற்கு அடியிலிருந்த இந்த தர்ப்பங்களை எடுத்து எள்ளும் ஜலமும் எடுத்து ‘ஏஷாம் ந மாதா’ என்ற மந்திரம் சொல்லி - ஆமாம் அமாவாசை தர்ப்பணத்தில் வரும் அதேதான் - பித்ரு தீர்த்தமாக கீழே விட்டு தர்ப்பைகளை போட்டு விட வேண்டும். பிறகு பூணூலை நேர் செய்து கொண்டு ஆசமனம் செய்து, ஔபாசன அக்னியிலிருந்து பஸ்மா எடுத்து இட்டுக் கொள்ளலாம். துளசி தீர்த்தம் அக்ஷதை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ‘காயேன வாசா’ சொல்லி எல்லாவற்றையும் பிரம்மார்ப்பணம் செய்துவிட வேண்டும். பிறகு யாரும் உண்ணும் காலத்தில் ஜபம் செய்து இருந்தால் அவர்களுக்கும் நடத்தி வைத்த வாத்தியாருக்கும் தக்க சம்பாவனை தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.
Tuesday, February 15, 2022
ஶ்ராத்தம் - 37 -பிண்ட ப்ரதானம்
அடுத்ததாக பிண்ட பிரதானம். இதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். பிறகு திரும்பி இடது கால் முட்டி விட்டு தெற்கு நுனியாக இரண்டு வரிசை கிழக்கு மேற்காக தர்ப்பங்களை பரப்ப வேண்டும். முன்னே ஹோமம் முடிந்து மிகுந்தது சிறிது பிராமணர்களுக்கு போட்டுவிட்டு மீதி வைத்திருக்கும் அன்னத்தில் ஆறு பிண்டங்களை பிடிக்க வேண்டும்.
மார்ஜயந்தாம் மம பிதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹஹ என்று சொல்லி கிழக்கு தர்ப்பங்களில் வடக்கில் ஆரம்பித்து எள்ளும் நீரும் இறைக்க வேண்டும். பின் மேற்கே அதே போல 3 இடங்களில் மார்ஜயந்தாம் மம மாதரஹ, மார்ஜயந்தாம் மம பிதாமஹ்யஹ, மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹ்யஹ என்று சொல்லி தர்ப்பங்களில் எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.(இதற்கெல்லாம் ப்ராசீனாவீதி, பித்ரு தீர்த்தம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை அல்லவா? )
ஒவ்வொரு பிண்டமாய் எடுத்து ‘ஏதத்தேதத’ என்று சொல்லி ஓவ்வொரு பித்ரு பெயரையும் சொல்லி கையை மறித்து வடக்கிலிருந்து தெற்காக தந்தை வர்க்கத்துக்கு முதலிலும் பிறகு தாய் வர்க்கத்திற்கு இரண்டாவதாகவும் பிண்டங்களை வைக்க வேண்டும். ஒவ்வொரு பிண்டத்தையும் வைத்தபின் அதற்கு மேற்கே சிறிது உதிரி அன்னத்தை வைக்க வேண்டும் இதை வைக்கும் போது ‘யே சத்வாமனு’ என்று சொல்ல வேண்டும். (அதாவது ‘யே ச த்வாம் அனு உங்களை சார்ந்தவர்களுக்கு என்று பொருள்). பிறகு மந்திரங்கள் கூறி உபஸ்தானம் செய்ய வேண்டும். ‘பித்ருக்களே, உங்களை அனுசரித்து இங்கே வந்த மற்ற பித்ருக்களும் எங்களை நாடிவந்து ஹவிஸை வேண்டுகின்றவர்களும் அதேபோல மாத்ரு வர்க்கத்தை சேர்ந்தவர்களும் இந்த அன்ன பிண்டத்தை பெற வேண்டும். இரண்டு வர்க்கத்தினரும் திருப்தி அடைய வேண்டும்’ என்று கூறுவதுடன் பல முறை ‘திருப்தி அடையுங்கள்’ என்று வேண்டுகிறோம்.
இப்படியாக சிராத்தம் செய்வது செய்யப்பட்டவருக்கு மட்டும் இல்லாமல் அவரை சார்ந்த பலருக்கும் பயனாகிறது என்று இந்த மந்திரம் காட்டுகிறது. அர்க்கியத்துக்கு சேர்த்த தீர்த்தங்களை ஒரே பாத்திரத்தில் ஊற்றி உள்ளங்கையால் மூடி எல்லா பிண்டங்களையும் மூன்று முறை அப்பிரதட்சணமாக பரிஷேசனம் செய்ய வேண்டும். ஹோமத்தில் உபயோகித்த சின்ன பெரிய இலைகள் நெய் பாத்திரம் மற்ற பாத்திரங்கள் ஆகிய அனைத்தையும் தெற்கு பக்கம் கவிழ்த்து வைத்து ‘திருப்யத திருப்யத திருப்யத’ என்று ஒன்பது முறை கூறி இலைகள் முதலானவற்றை இரண்டிரண்டாக பாத்திரங்களை நிமிர்த்தி வடக்கு பக்கம் வைக்க வேண்டும். பிறகு பிண்ட பித்ரு தேவதைகளுக்கு ஸ்ராத்தத்திற்காக செய்த வடை அதிரசம் இவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். தாம்பூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
Sunday, February 13, 2022
ஶ்ராத்தம் - 36 - போக்தாக்கள் விஷயம் பூர்த்தி
‘ஸ்வாதுஷகும் ஸதஹ’ என்ற மந்திரத்துக்கு பொருள் நீளமானது. ஆகவே இங்கே அத்தனையும் சொல்லவில்லை.
பிறகு கிழக்கே பார்த்து உப வீதியாக நின்று கொண்டு ‘அஷ்டாவஷ்டா’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இது கருட சயனம் என்னும் யாகத்தில் வரும் மந்திரம். ஆறு ருதுக்களும் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் இன்பத்தை தருகின்றன என்ற பொருளுடைய இதை சொல்லி பொதுவாக விஸ்வே தேவர்களையும் தேவர்களையும் சந்தோஷப் படுத்தும் என்று பிரார்த்தனை.
வேதம் தெரிந்த அந்தணர்கள் போக்தாக்களாக இருந்தால் ‘அக்னியாயுஷ்மான் * ப்ரதிஷ்டித்யை’ என்ற மந்திரம் சொல்லி மங்கல அக்ஷதை தர கர்த்தா அதை தன் தலையை போட்டுக்கொண்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு தெரிந்தால் கர்த்தா பிரார்த்தனை செய்வார். வழக்கமாக கர்தாவுக்காக வாத்தியார் ‘ஸ்வஸ்தி மந்த்ராஹா’ என்ற மந்திரம் சொல்லி வாழ்த்தும் படி பிராமணர்களிடம் கேட்க அவர்களும் ‘எஜமானன் குடும்பத்துடன் வேதம் சொன்ன தீர்க்க ஆயுசுடன் இருக்கட்டும்’ என்பதுபோல ஆசீர்வாதங்கள் செய்வார்கள். பிறகு ‘நான் (அல்லது எஜமானன்) செய்த இந்த சிராத்தத்தால் என் (அவரது) பித்ருக்கள் குறைவில்லாத திருப்தியுடன் இருக்கட்டும்; கயா ஸ்ராத்த பலன் ஏற்படட்டும்’ என்று வேண்ட அவர்களும் அப்படியே ஆகட்டும் என்று சொல்வார்கள்.
கடைசியாக பூணூலை இடம் செய்துகொண்டு பித்ரு பிராமணரை ‘உத்திஷ்டத’ என்று சொல்லி தர்ப்பத்தைக் கொடுத்து எழுப்பிவிட்டு அதேபோல் விச்வே தேவருக்கும் விஷ்ணுவுக்கும் உபவீதியாக தர்ப்பத்தைக் கொடுத்து எழுப்பி விட வேண்டும்.
பிறகு கர்த்தா கிழக்கு அல்லது வடக்கு நுனியாக தன் மேல் வஸ்திரத்தை கீழே போட போக்தாக்கள் அதை மிதித்துக்கொண்டு கடந்து செல்வார்கள். பின் ‘வாஜே வாஜே’ என்ற மந்திரம் சொல்லி பிரதட்சிணம் செய்து ‘ஹவிஶ் ஶோபனம்’ என்று சொல்ல அவர்கள் ‘ஶோபனம் ஹவிஹி’ என்பார்கள் . பிறகு அவர்களிடம் ‘வெறும் காய்கறிகள் கீரைகளை தந்து உயர்ந்த ஆகாரத்தை தராமல் கஷ்டப்படுத்தி விட்டேன். அதை மனதில் நினைத்துக் கொள்ளாமல் மறந்து மன்னிக்க வேண்டும்’ என்று அவர்களை உபசாரமாக சொல்லி சில அடிகள் வாசல் வரை சென்று அவர்களை வழியனுப்ப வேண்டும்.
Friday, February 11, 2022
ஶ்ராத்தம் - 35 - திருப்தி கேட்டல்
விஸ்வேதேவரிடம் கையில் சிறிது நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ரோசதே?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பார். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் விஶ்வே தே³வா꞉’ என்பார்.
அதே போல பித்ருக்களிடம் நீர் விட்டு ‘இயம் வஸ் த்ருப்திஹி’ என்று சொல்லி, ‘ஸ்வதி³தம்?’ என்று கேட்க வேண்டும். ‘ஸுத்ருʼப்தி꞉’ என்பர். ‘ப்ரீயந்தாம்’ என்று கேட்க ‘ப்ரீயந்தாம் பிதர꞉’ என்பர். ‘த்ருப்தாஸ்த’ என்று கேட்க ‘த்ருப்தாஸ்மஹ’ என்பர்.
மஹா விஷ்ணுவிடம் விஸ்வேதேவர் போலவே. ப்ரீயதாம் மஹாவிஷ்ணு என்று பதில் கொடுக்க வேண்டும். ‘த்ருப்தோஸி’ என்று கேட்க ‘த்ருப்தோஸ்மி’ என்பார்.
பின் போக்தாக்கள் அனைவருக்கும் தாம்பூலம் தக்ஷிணை தர வேண்டும். பின்னர் சுருக்கமாக அர்ச்சித்து குடும்பத்துடன் இவர்களை ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அஸ்மின் திவஸே (இன்று) என்று சொல்லி கோத்திரம் ஶர்மா எல்லாம் சொல்லி பார்வண விதானப்படி என்னால் செய்யப்பட்ட ‘என் தந்தையின்/ தாயின்/ வருடாந்திர சிராத்தத்தை, இன்ன விதமாக என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதத்தில் என்னால் முடிந்த அளவு செய்திருக்கிறேன். இதற்கு ‘கயாவில் சிராத்தம் செய்த பலன் கிடைக்கட்டும். பித்ருக்களுக்கு குறைவில்லாத திருப்தி உண்டாகும் படியும் இருக்கட்டும்’ என்று தாங்கள் அனுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். அவர்களும் அப்படியே இருக்கட்டும் என்று சொல்லுவார்கள். பிறகு மிகுந்த அன்னத்தை என்ன செய்வது -அன்னஶேஷை꞉ கிம்ʼ க்ரியதாம் - என்று கேட்க உங்களுக்கு இஷ்டமான நபர்களுடன் சேர்ந்து நீங்கள் உண்ணுங்கள் - இஷ்டை꞉ ஸஹோபபு⁴ஜ்யதாம் என்று அவர்கள் சொல்வார்கள். (இப்படிச் சொன்னாலும் பங்காளிகள்தான் உண்ண வேண்டும்). இதற்குப் பின் கர்த்தா போய் பிராமணர்கள் சாப்பிட்ட இலைகளை சற்று அசைக்க வேண்டும். இதன் பின்னரே இல்லத்தரசி இலைகளை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.
அடுத்து பிரார்த்தனை வருகிறது. ‘தாதாரோ’ என்ற மந்திரம். இதன் பொருள்: ‘நிறைய தானம் அளிப்பவர் விருத்தி ஆகட்டும். வேதமும் சந்ததியும் வளரட்டும். சிரத்தை எங்களை விட்டு அகல கூடாது. தானம் செய்வதற்கு எங்களுக்கு நிறைய பொருள் உண்டாகட்டும். நிறைய அன்னம் கிடைக்கட்டும். அதிதிகளும் நிறைய வரவேண்டும். எங்களிடம் யாசிப்பவர்கள் நிறைய வரட்டும். நாங்கள் ஒருவரிடமும் யாசிக்கக்கூடாது.’ இப்படி கேட்க ‘எங்களுக்கு உண்டாகட்டும்’ என்று சொன்னதை அனைத்தையும் ‘உங்களுக்கு உண்டாகட்டும்’ இன்று பிரதி வசனமாக கூறுவார்கள்.
பிறகு கர்த்தா பூணூலை இடமாக மற்றிக்கொண்டு ‘ஓம் ஸ்வதா’ என்று சொல்ல பித்ரு பிராமணர் ‘அஸ்து ஸ்வதா’ என்று சொல்லுவார். பிறகு தெற்கு முகமாக நின்று கொண்டு மந்திரம் கூற வேண்டும். ஆரம்பத்தில் மந்திரம் கூறி பித்ருக்களை அழைத்தோம் இல்லையா? அதே போல இப்போது மந்திரம் கூறி அவர்களை அனுப்பி வைக்கிறோம்.
Wednesday, February 9, 2022
ஶ்ராத்தம் - 34 - உண்ட பின் -விகிரான்னம், வாயஸ பிண்டம்
கிழக்கு பார்த்து உண்ட விஸ்வேதேவர் எதிரில் மண்டியிட்டு தெற்கே ஆரம்பித்து வடக்கே முடியும்படி நீரால் ஒரு கோடு போல போட வேண்டும். இதற்கு கிண்டி இருந்தால் சௌகரியம். ‘அஸோமபா’ என்னும் மந்திரம் சொல்லி அன்னத்தை இந்த நீர் மீது தெற்கிலிருந்து வடக்காக உதிர்க்க வேண்டும். இதன்மீது முன்போலவே நீர் விட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு பித்ரு இலை எதிரில் மண்டியிட்டு கிழக்கே ஆரம்பித்து மேற்கே முடியும்படி பித்ரு தீர்த்தத்தால் நீர் விட்டு அதன் மீது பித்ரு தீர்த்தம் விடுவது போல அன்னத்தை வைத்து ‘அஸம்ஸ்கிருத’ என்ற மந்திரம் சொல்ல வேண்டும். இதன் மீது கிழக்கிலிருந்து மேற்காக எள்ளும் ஜலமும் பித்ரு தீர்த்தத்தால் விட வேண்டும். பிறகு உபவீதியாக விஷ்ணு இலை எதிரில் மண்டியிட்டு விஸ்வ தேவர் போலவே இதை செய்ய வேண்டும். மந்திரம்: ‘அஸம்ஶயோ பவேத்’.
பிறகு பவித்ரத்தை காதில் வைத்துக்கொண்டு கை அலம்பி இரண்டு முறை ஆசமனம் செய்ய செய்து பவித்ரம் அணிந்து பூணூலை இடம் மாற்றிக்கொண்டு தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் நடுவே பூமியில் எள்ளை தெளித்து அதன் மீது தெற்கு நுனியாக சில தர்பங்களை பரப்ப வேண்டும். இடதுகாலை முட்டியிட்டு பிண்டத்தை எடுத்து மந்திரம் சொல்லி வைக்க வேண்டும். (யே அக்னி தக்தா..) இதன் மீது எள்ளும் நீரும் விட வேண்டும். இது முடிந்த பிறகு போக்தாக்களுக்கு உணவை முடித்துவைக்க ‘அமிர்தாபிதானமசி’ என்று என்று அவரவருக்கு தகுந்தபடி அருகே சென்று கையில் தீர்த்தம் போட வேண்டும். பிறகு பூணூலை இடம் மாற்றிக்கொண்டு இந்த பிண்டத்தை எடுத்துப் போய் காக்கைக்கு வைக்க வேண்டும். பின்னர் கை அலம்பிக்கொண்டு ஆசமனம் செய்ய வேண்டும்.
அஸோமபா மந்திர அர்த்தம்: யக்ஞத்தில் பாகம் இல்லாத சோமயாகம் செய்யாத தேவர்களுக்கு விஸ்வே தேவர்கள் சம்பந்தம் உள்ள உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.
அஸம்ஸ்கிருத: சம்ஸ்காரம் இல்லாமல் பிறந்தவர்களுக்கும் தியாகம் செய்த குலப்பெண்களுக்கும் பித்ரு சம்பந்தமான உதிரி அன்னத்தை கொடுக்கிறேன்.
அஸம்ஶயோ: மகாவிஷ்ணு அறிவற்ற மோக்ஷ சாதனமானவர் என்பதில் சந்தேகமில்லை. பித்ருக்களுக்கு விஷ்ணு சம்பந்தமான விகிரான்னம் உயர்ந்ததாகும்.
யே அக்னி தக்தா: எனது குலத்தில் பிறந்து அக்னியால் எரிக்கப்பட்டவர்களும் எரிக்கப்படாதவர்களுமான பித்ருக்கள் பூமியில் வைக்கப்பட்ட இந்தப் பிண்டத்தால் மகிழ்ச்சி அடைந்து சிறந்த கதியை அடையட்டும். விதிப்படி அக்னியில் எரிந்தவர் விதிப்படி அக்னி இன்றி தெரிந்தவர், நமது குலத்தில் பிறந்து இறந்தவர் இவர்களுக்கு இந்த பிண்டம்.
பிராமணர்கள் கை கால் அலம்பி கொண்டு வந்து ஆசமனம் செய்து அமர்ந்த பிறகு இன்னொரு முறை திருப்தியா என்று கேட்க வேண்டும்.
Monday, February 7, 2022
#ஶ்ராத்தம் - 33 - உண்ணும் முன்னும் பின்னும்
பின் போக்தாக்களுக்கு அவரவருக்கான பாணியில் பூணூலை மாற்றிக்கொண்டு ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும். பின் ப்ராசீனாவீதியாக சர்வத்ர அம்ருதம் பவது ‘அம்ருதோபஸ்தரணமஸி’ என்று சொல்ல வேண்டும்.
சாதாரணமாக நாம் பரிசேஷணம் செய்து பின் பஞ்ச ப்ராணன்களுக்கும் ‘ப்ராணாய ஸ்வாஹா’ என்று துவங்கி ப்ராணாக்னிஹோத்ரம் செய்கிறோம் இல்லையா? இங்கே அப்படி போக்தாக்கள் செய்வதில்லை. இதற்கு கர்த்தா மந்திரம் சொல்ல வேண்டும். (ஶ்ரத்தாயாம் ப்ராணே). அதே போல மந்திரம் முடிந்ததும் பூமியில் நீர் விட்டு, அதை தானே மார்பில் தொட்டு, கை அலம்ப வேண்டும். பின் ‘ஸ்வாமிகளே! என் சக்திக்கு ஏற்ப விஷ்ணு சம்பந்தமானதும் ராக்ஷசர்களை அகற்றுவதும் மற்றபடி பவித்ரமானதுமான மந்திரங்களையும் இதிஹாஸ புராணங்களையும் ப்ராம்ஹணர்கள் மூலம் நீங்கள் கேட்கும் படி செய்கிறேன். காலம் கடந்துவிட்டது. இரவு பசி எடுக்காதவாறு உங்களுக்கு பிரியமானதை மௌனமாக உண்ணுங்கள்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இது வேத மந்திரமில்லை.
இதன் பின் உண்டு முடிக்கும் வரை அபிஶ்ரவணம் என்னும் வேத மந்திரங்களின் தொகுப்பை பாராயணம் செய்ய வேண்டும். அனேகமாக நடப்பதில்லை. சிரத்தை உள்ளவர் குறைந்த பக்ஷம் புருஷ சூக்தம், ஸஹஸ்ரசீர்ஷம் என்னும் அனுவாகம் ஆகியவற்றைச் சொல்லலாம். உண்டு முடிக்கும் தருவாயில் ‘அஹமஸ்மி’ என்னும் அன்ன சூக்தத்தை முடிந்தால் சொல்லலாம். இவை நீளமானவை. ஆதலால் பொருள் சொல்லவில்லை.
உண்டு முடித்ததும் விக்ரான்னத்தை ப்ராம்ஹணர் அருகில் வைக்க வேண்டும். அதாவது பரிமாறி மிகுதியான அன்னத்தில் ஒரு பிண்டம் பிடித்தும் உதிரி அன்னமாக கொஞ்சமும் ஒரு தட்டில் கொண்டுவந்து பூமியில் ஜலம் விட்டு அதன் மீது அதை வைக்க வேண்டும். வைத்துவிட்டு திருப்தி கேட்க வேண்டும். அதற்கு முன் பத்னி ‘சந்தேகத்திற்கு அன்னம் வேண்டுமா?’ என்று ஒரு முறை அன்னத்துடன் வந்து கேட்டு விடுவார். அவரிடம் ‘அன்னம் பானீயம்’ (அன்னமும் பானமும் போதுமா?) என்று கேட்க அவர் ‘ஸர்வம் ஸம்பூர்ணம்’ என்பார். ‘மதுவாதா’ என்னும் மந்திரம் சிலர் சொல்வர். பிறகு விஸ்வேதேவரை பார்த்து ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ‘ஸுசம்பன்னம்’ என்பார். ‘த்ருப்தாஸ்த்த’ என்று கேட்க ‘திருப்தாஸ்மஹ’ என்று சொல்வார்.
பிறகு பூணூலை இடம் செய்து கொண்டு பித்ரு பிராமணரை பார்த்து முன்போல அன்னம் பானீயம் கேட்டு ‘அக்ஷன்ன’ என்னும் மந்திரம் சொன்ன பின் ‘மது மது சம்பன்னம்’ என்று கேட்க அவர் ஸுசம்பன்னம் என்பார். த்ருப்தாஸ்த என்று கேட்க அவர் ‘த்ருப்தாஸ்மஹ’ என்பார்.
அடுத்து மகாவிஷ்ணுவிடம் உப வீதியாக இந்த மூன்றும் கேட்கப்படும். மதுவாதா என்னும் மந்திரம் சொல்லப்படும். முதலிரண்டு அதே கேள்விகள்- பதில்கள். மூன்றாவது கொஞ்சம் மாறும். விஷ்ணு ஒருவர்தான் என்பதால் இலக்கணப்படி த்ருப்தோஸ்தி - த்ருப்தோஸ்மி என்று மாறும்.