காசி யாத்திரை என்று சொன்னால் அது ஒரு நீண்ட பயணம். வீட்டில் சங்கல்பம் செய்து கிளம்பி முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கே தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து மணல் சேகரிக்க வேண்டும். அதில் வேணி மாதவன் பிந்து மாதவர் சேது மாதவர் என்று மூன்றாக பிரித்து பூஜை செய்து சேதுமாதவரை வாத்தியாரிடம் கொடுத்து விட்டு, மீண்டும் அவரை அவரை உலர்த்தி மூட்டையாக கட்டிக்கொண்டு எடுத்து அடுத்து த்ரிவேணிக்கு செல்ல வேண்டும். அங்கே திரிவேணியில் முண்டனம் செய்துகொண்டு சங்கல்ப ஸ்நாநம் செய்து வேணி மாதவரை அங்கே கங்கையில் சேர்க்க வேண்டும். அந்த இடத்திலிருந் கங்கை நீரை சேகரித்துக்கொண்டு அடுத்து காசிக்கு செல்லவேண்டும். அங்கே கர்மாக்களை முடித்து கயை செல்ல வேண்டும். பிண்டதானங்களை முடித்து மீண்டும் ராமேஸ்வரத்திற்கு செல்ல வேண்டும். நாம் த்ருவேணியில் சேகரித்த அந்த கங்கை நீரை அங்கே ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கொடுக்க வேண்டும். சுருங்கச்சொல்ல இப்படியாக காசி யாத்திரை பூர்த்தி ஆகும்.
இரண்டு வருடங்களுக்கு முன் என் தாயார் தவறிவிட்டார். 2021 மார்ச் மாதம் என் தந்தையும் தவறிவிட்டார் இருவருடைய அந்திம காரியங்களை முடித்து தந்தையின் வருட பூர்த்தி சிராத்தத்தை முடித்து பின்னர் காசி யாத்திரை கிளம்பினோம். வடக்கே வெய்யில் அதிகமாகிவிடும் என்பதால் முடிந்தவரை சீக்கிரம் போக வேண்டும் என்று என்று நினைத்தோம் புது வருடம் துவங்கும் வரை கிளம்புவதற்கு முடியவில்லை. என் மகனே ராமேஸ்வரத்தில் காசியிலும் தெரிந்தவர்கள் இருப்பதால் ஏற்பாடுகளை கவனித்தான். அவனே பயணத்திற்கான பயணச்சீட்டு களையும் முன்பதிவு செய்தான்.
கிளம்பும் முன் வீட்டில் எங்கள் வாத்தியார் இஷ்டி முடித்து க்ருத (Grutha) ஶ்ராத்தம் செய்து வைத்தார்.
பிறகு நாங்கள் ராமேஸ்வரத்திற்கு கிளம்பினோம். கடலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அரை மணி நேரம் முன்பாகவே போய் சேர்ந்து விட்டோம். பயணத்தின் டிக்கட்டுகள் முக்கால்வாசி ஆர் ஏ சி என்றே இருந்தன. இந்த டிக்கெட்டுகளும் அவ்வாறே. முந்தின நாள் இவை முன் பதிவாக மாற்றப்பட்டன. இந்த டீ கோச் எங்கே வருகிறது என்று சரியாக தெரியவில்லை. எங்கள் மருத்துவமனை உதவியாளர் அங்கே கடைகளில் விசாரித்ததில் அது எங்கே வேண்டுமானாலும் வரும் என்று தெளிவாக உதவிகரமாக சொன்னார்கள். பின்னர் அனேகமாக இந்த இடத்தில் என்று சொன்ன பிறகு அங்கே போய் நின்றோம். கூரை கிடையாது. ஆனால் ரயில்வே டிஜிட்டல் இன்டிகேட்டர் அந்த இடம் வேறு பெட்டி என்று சொன்னது. அது எந்த இடம் என்று காட்டுகிறதோ அங்கே போகலாம் என்று நான் சொன்னது நிராகரிக்கப்பட்டது. நான் சின்னப்பையனாக இருந்தபோது 5 பெட்டிகள் இருந்தால் அதிகம். இப்போது சர்வ சாதாரணமாக 20 பெட்டிகள் இருக்கின்றன. எங்கே வரும் என்று தெரியாவிட்டால் எங்கே போய் நிற்பது? நடுவில் நிற்க வேண்டும் போல் இருக்கிறது எந்த பக்கம் வந்தாலும் அந்த பக்கம் போய்க் கொள்ளலாம், ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவதாக இருக்கிறது. ரயில் கொஞ்சம் லேட்டாக வந்தது. நினைத்தது போல நாங்கள் நின்ற இடமில்லை. அது இன்னம் பின்னால் போய்விட்டது. உதவியாளர்கள் இருந்ததால் லக்கேஜை ஏற்ற முடிந்தது. இரண்டு நாட்களுக்கு அப்படி என்ன பெரிய லக்கேஜ் என்று கேட்கிறீர்களா? கேட்கக் கூடாது. என்னதான் சொன்னாலும் வீட்டுப் பெண்கள் அப்படித்தான் எக்கச்சக்கமாக எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்கள். பல விஷயங்களை இங்கிருந்து கொண்டு போக வேண்டியிருந்ததால் இது குறித்து ஒன்னும் சொல்ல முடியவில்லை.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிரத்தையுடன் சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பல விஷயங்கள் தங்கும் இடத்தில் கிடைக்காது என்று புரிந்து கொள்ள வேண்டும் நாம். கிடைப்பது நாம் பழகிய படி இருக்காது. வாத்தியார் என்ன சொல்கிறாரோ செய்கிறாரோ அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டு கிளம்புபவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் நாங்கள் பார்வணவிதான சிராத்தம் செய்யவேண்டும் என்று நினைத்ததால் அதற்குத் தேவையான விஷயங்களை இங்கிருந்தே கொண்டு போக வேண்டி இருந்தது. அப்படியும் அங்கே சில விஷயங்கள் சரியாக கிடைக்காமல் தடுமாற வேண்டி இருந்தது.
-தொடரும்
No comments:
Post a Comment