நாம எப்படி இருக்கணும் நினைக்கிறதை விட மத்தவங்க எப்படி இருக்கணும்ன்னு சொல்கிறவர்களே அதிகமா இருக்காங்க! எந்த பஸ், பதிவு பாத்தாலும் இதுவே அதிகமா இருக்கு.
ஏன் இப்படி?
அட்வைஸ் எப்பவுமே சுலபம்; கடைப்பிடிக்கறதுதான் கஷ்டம்!
அதனால எப்பவும் அட்வைஸ் வாரிவழங்கறோம். நாம என்ன செய்யணும்ன்னு யோசிக்கிறதில்லை. அது கஷ்டமாச்சே!
முகம் தெரியாத ஆளைக்கூட ஒரு கட்டம் கட்டி இப்படித்தான் இருப்பார்ன்னு ஒரு கற்பனையை வளத்துக்கிறோம். அந்த கற்பனைக்கு எதிரா நிதர்சனம் இருந்தா அதை ஜீரணிக்க முடியறதில்லை. வலை உலகத்திலே இதோட தாக்கம் அதிகமாகவே இருக்கு. ஒருவர் தன்னை எப்படி காட்டிக்க நினைக்கிறாரோ அப்படியேத்தான் மத்தவங்களும் நினைக்க வேண்டி இருக்கு. உண்மையா இல்லையான்னு யார் கண்டார்கள்?
கொஞ்சம் நல்ல பையனா இருக்கறது ரொம்பவே கஷ்டம்.
ஆரம்பத்தில நல்ல பையன்னா கிண்டல் வரும். பெரிய இவரு... ன்னு எல்லாம். நாளாக ஆக நாம் அப்படியே நிலைச்சு விட்டா "சரி, இந்தப்பய உருப்பட மாட்டான், இப்படித்தான் இருப்பான்"னு ஒரு புள்ளி குத்திடறாங்க. இப்படி புள்ளி குத்தினப்பறம் கொஞ்சம் இப்படி அப்படி நகந்தா போச்சு! நீ இப்படி பண்ணலாமா?ன்னு ஆட்சேபணை வரும்!
ஏண்டான்னு கேட்டா இல்லை இல்லை நீ இப்படித்தான் இருக்கணும் ன்னு அட்வைஸ் வரும்!
யாருமே எப்போதுமே ஒரே மாதிரி இருக்கிறதில்லை. நாளுக்கு நாள்- ஏன் ஒரே நாளிலே கூட மணிக்கு மணி- மாறிட்டேத்தான் இருக்கிறோம். இந்த மாற்றம் என்கிறது நல்லதுக்குத்தான் இருக்கணும்ன்னும் ஒண்ணுமில்லை. ஹாஸ்டல்லே இருந்தப்பக் கூட மத்தவங்களை பொருட்படுத்தாம சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்தவரை 10வருஷம் கழிச்சு பார்த்தப்ப ஷாக்தான் மிஞ்சினது!
மாற்றமே இயற்கை. இந்த மாற்றத்தை நல்லதா இருக்கப் பண்ணுவதுதான் நாம் செய்யக்கூடியது. அப்ப அதை வளர்ச்சின்னு சொல்லலாம்.
சரி நம்மைப் பொருத்தவரை அப்படி செய்துடலாம்; மத்தவங்க சமாசாரம் என்ன?
எப்பவும் ஒவ்வொருத்தரையும் இருக்கிறபடியே பார்த்து பழகறதே உத்தமம்.
குழப்புதா?
ஒத்தர் இப்படின்னு வெளிக்காட்டிக்கொள்கிறார். சரி, அப்படியே இருக்கட்டுமே? மத்தபடி தெரிய வராத வரைக்கும்! அப்படியே நம்பச்சொல்லலை. நம்பிக்கைக்கு கேள்வி வராத வரை அதைப்பத்தி யோசனை வேண்டாம்.
ஆனா நம்ம மனசு அப்படி இருக்கறதில்லை. இவர் இப்படின்னு ஒரு கணிப்பு, ஒரு வட்டம் வரைஞ்சு உள்ளே போட்டுவிடும். அதுதான் அதோட இயற்கை குணம். அப்படி ஒரு வரைகோட்டுப் படமாவது இல்லாம அதால வேலை செய்ய முடியாது. சொல்லவே தேவை இல்லாமல் இந்த மாதிரி கணிப்புகளும் அநேகமா இருக்கும். ஐம்பது பேர் இருந்தா ஐம்பத்தோரு கணிப்பு இருக்கும்! அத்தனையிலும் எது உண்மைக்கு கிட்டே வருதுன்னு பாத்தா சொல்லறது ரொம்ப கஷ்டம். அனேகமா எல்லாமே தப்புதான்.
ஏன் தப்பு?
மனிதன் மாறிகிட்டே இருக்கறதால தப்பு.
இதுக்குத்தான் உள்ளதை உள்ளபடி பார்க்கணும்ன்னு சொன்னது.
இவர் இன்ன மாதிரி சமயத்துல எப்படி நடந்துப்பார்ன்னு சில சமயம் நமக்கு தெரிய வேண்டி இருக்கு. ஏன்னா நம்மோட நடத்தையை அதை வைத்து நிர்ணயிக்க வேண்டி இருக்கு. உதாரணமா, இவர்கிட்டே இன்ன உதவி கேட்கணும்; எப்போ எப்படி பேசினால் அது வெற்றிகரமா முடியும்? அவர் ஜம்முன்னு சாப்டு, பீடா போட்டுகிட்டு இருக்கறப்பவா? பூஜை முடிச்சு வரப்பவா? ஆபீஸ் வேலை எல்லாம் முடிச்சு அப்பாடான்னு நிம்மதியா வீட்டில இருக்கறப்பவா? இதை முடிவு செய்ய அவரைப்பத்தின இமேஜ்தான் உதவும்.
அனேகமா இப்படி நடந்துப்பார், இப்படி பேசினா சரிப்படும்ன்னு புத்தி ஒரு திட்டம் போடும். இப்படி திட்டம் போடறப்பவே இந்த 'அனேகமா' என்கிறதை நல்லாவே நினைவு வைத்துக்கொள்ளணும்! அதாவது அப்படி நடக்கலேன்னாலும் ஆச்சரியப்படக்கூடாது!
நாம மாறிகிட்டே இருக்கோம்ன்னு நல்லா புரிஞ்சவங்களுக்கு இது புரியும். இல்லைன்னா "அவளா சொன்னாள்? இருக்காது, அப்படி ஒன்றும் நடக்காது, நடக்கவும் கூடாது.... நம்ப முடியவில்லை" ன்னு பாடிகிட்டே இருக்க வேண்டியதுதான். இன்ன தேதிக்கு இவர் இப்படி இருக்கார். சரி அடுத்து என்ன செய்யலாம் ன்னு யோசிக்கிறவங்களுக்கு அதிகம் பிரச்சினை இராது.
சுருக்கமா சொல்ல "இப்படித்தான் நடக்கும்ன்னு எதிர்பார்க்காதீங்க! நடந்தா நல்லது, இல்லைன்னா அடுத்ததை பார்க்கலாம்.”
கீதையும் இதைத்தான் சொல்லித்தோ? எங்கேயோ ஆரம்பிச்சு ரிலேட்டடா வேற எங்கேயோ போயிடுத்து. போகட்டும். அதானே உரத்த சிந்தனை?!