Pages

Monday, March 20, 2017

அந்தணர் ஆசாரம் - 13




ஜபம் செய்யும் இடம் பற்றி சொல்லப்படுகிறது. சுத்தமான இடத்தில் செய்ய வேண்டும். வீட்டில் செய்வது ஒரு பங்கு பலன் தருமென்றால்; நதி தீரத்தில் 2 பங்கு, பசுமாட்டுக்கொட்டிலில் 10 பங்கு, அக்னிசாலையில் 100 பங்கு பலன் கிடைக்கும். ஸித்த க்ஷேத்ரம், புண்ய தீர்த்தம், தேவதா ஸந்நிதி ஆகியவற்றில் நூறு கோடிகள் கூடிய ஆயிரம் பங்கு பலன் கிடைக்கும் எனப்படுகிறது.
தனக்கு உகந்த சுகமான ஆஸனத்தை பந்தனம் செய்து கொண்டு, இந்திரியங்களை அடக்கி கண்களை பாதி மூடி, ரிஷி சந்தஸ் தேவதைகளை நினைத்துக்கொண்டு மௌனமாக ப்ராணாயாமம் செய்ய வேண்டும். மூன்று ப்ராணாயாமங்களில் 7 வ்யாஹ்ருதிகள், சிரஸுடன் கூடிய காயத்ரியை பத்து முறை ஜபம் செய்ய வேண்டும். அல்லது மூச்சை அடக்க இயலாதெனில் பத்து முறை ஜபம் செய்ய வேண்டும்.
ப்ரம்ஹா நான்கு வேதங்களை ஒரு பக்கமும் காயத்ரியை ஒரு பக்கமுமாக தராசில் நிறுத்தார். இரண்டு தட்டும் சமமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. அதாவது காயத்ரி நான்கு வேதங்களுக்கும் சமமானது.
காலையில் நின்று கொண்டு சூர்யன் உதயமாகும் வரை காயத்ரியை ஜபிக்க வேண்டும். மாலையில் உட்கார்ந்து கொண்டு நக்ஷத்திரங்கள் தோன்றும் வரை ஜபம் செய்ய வேண்டும். பல வேலைகள் உள்ள க்ருஹஸ்தனும், அத்யயனம் செய்ய கடமை உள்ள ப்ரம்ஹசாரியும் 108 முறை ஜபம் செய்ய வேண்டும். நேரம் இருக்கிற சன்யாஸியும் வானப்ரஸ்தனும் 1008 முறை ஜபிக்க வேண்டும்.
மனதால் ஜபம் செய்வதே உத்தமம். உதடுகள் நாக்கு சற்றே அசைய பிறர் கேளாவண்ணம் ஜபிப்பது உபாம்சு எனப்படும். இப்படி ஜபிப்பது மத்திமம். பிறருக்கு கேட்கும் படி ஜபிப்பது அதமம்.
கைகளில் விரல் ரேகைகளால் எண்ணி ஜபிப்பதே உத்தமம். வேதத்தை விரல்களில் ஸ்வரம் காட்டி பாராயணம் செய்கிறோம். வேத மாதாவான காயத்ரியையும் விரல்களில் எண்ணி ஜபிப்பதே சிறந்தது. மற்ற மந்திரங்களுக்கு இப்படி நியமமில்லை.
ஜபம் செய்து முடித்தபின் ‘உத்தமே சிகரே’ என்னும் மந்திரத்தால் காயத்ரியை உத்வாசனம் செய்ய வேண்டும்.
ஏகாக்ர சித்தத்துடன் அவரவர் வேத மந்திரங்களால் ஸூர்யனை உபஸ்தானம் செய்ய வேண்டும். உபஸ்தானம் என்பது நின்று கொண்டு ஸ்தோத்திரம் செய்வதாகும். பின் சந்த்யா, சாவித்ரீ, காயத்ரீ, ஸரஸ்வதி ஆகிய தேவதைகளை நமஸ்கரிக்க வேண்டும்.
பின் நான்கு திக்குகளையும், மேல் கீழ், அந்தரிக்ஷம், பூமி என மொத்தம் 8 திக்குகளையும் நம் மந்திரங்களை சொல்லி நமஸ்கரிக்க வேண்டும். யமன், விஷ்ணு, விரூபாக்ஷன், ஸவிதா ஆகிய தேவதைகளை அவரவர் திசை நோக்கி உபஸ்தானம் செய்ய வேண்டும். கடைசியாக பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

சந்த்யாவந்தனத்தை அவரவர் குலாசாரம் ப்ரகாரம் நன்கு தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும்.

No comments: