Pages

Friday, September 28, 2018

சபரி மலை






சமீபத்தில் சபரி மலை விஷயத்தில் இடப்பட்ட பதிவுகளில் இது மிகவும் மனதை கவர்ந்தது. அப்போது வேறு பணியில் மிக உன்னிப்பாக இருந்ததால் இதை மொழிபெயர்த்து இடமுடியவில்லை. அந்த வேலை இப்போது முடிந்ததால் இதை முக்கிய அடுத்தப் பணியாக எடுத்துச்செய்கிறேன்.
ஹும்! போஸ்ட் செய்யும் முன் தீர்ப்பே பாதகமாக வந்துவிட்டது! :(
இந்த கட்டுரை ஹிந்துக்களாகிய நமக்கே எழக்கூடிய பல கேள்விகளுக்கு பதில் தருகிறது.

ஆலயப்பிரவேசம், அல்லது ஒரு கோவிலில் வழிபாடு செய்வது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி அடிக்கடி அந்த கட்டுப்பாடுகளால் வழி பட முடியாமல் போவோரால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது வழிபாடு குறித்த அடிப்படையிலேயே தவறான கருத்தால்தான் ஏற்படுகிறது. வழிபாட்டில் பன்களிப்பு நேர்முறையாகத்தான் எப்போதும் இருக்க வேண்டும் என்று இல்லை.
நேர்முறையாக என்பது இங்கே என்ன? கோவிலில் நுழைவது, குறித்த முறையில் வழிபாடு செய்வது. இப்படித்தான் பலரும் செய்கிறார்கள் என்பதால் அப்படிச்சொல்லலாம்.

ஆனால் இது நம் தர்மத்தையோ மதத்தையோ சரியாக புரிந்து கொண்டதாக சொல்ல முடியாது. ஒரு மதத்தை பின்பற்றும்போது செய்யச்சொன்னதை செய்வது மட்டும் மதத்தை அனுசரித்ததாகாது. செய்தாலும் செய்யலாம் என்று தேர்வில் விட்டிருப்பதை செய்வது மட்டும் மதத்தை அனுசரித்ததாகாது. செய்யாதே என்று சொன்னவற்றையும் செய்யாதிருக்க வேண்டும்.

மாமிசம் சாப்பிடும் பழக்கம் உள்ள பலரும் விரதம்/ உபவாசம் இருக்கும் நாட்களில் மாமிசம் சாப்பிடுவதில்லை. அதே போல கோவிலுக்குள் போகும்போது செருப்பை வெளியேவே விட்டுவிட்டு செல்கிறார்கள். இப்படி சிலவற்றை செய்யாமல் இருந்து கடைபிடிப்பதும்கூட தர்மத்தை கடைபிடித்ததாகவே ஆகும். அதாவது சில எதிர்மறை விஷயங்களும் தர்மமாகும். சாத்திரங்களை படித்துப்பார்த்தால் இவை தெளிவாகவே புரியும். கொஞ்சம் விளக்கலாம்.

எதிர்மறை கடமைகளும் பங்களிப்பின் முக்கிய மைய விஷயங்களாகும். அதனால்தான் அஷ்டாங்க யோகத்தில் 'யமம்' என்று ஒன்றை வைத்து இருக்கிறார்கள். இதனால்தான் எல்லா விரதங்களும் வெகுஜன தர்மமாக சொல்லி எல்லாவற்றுக்கும் ஒரு புராண கதையை சொல்லி இருக்கிறார்கள்.

இதனால்தான் யமுனாச்சாரியா என்னும் ஶ்ரீவைஷ்ணவ ஆசாரியர் இப்படி 'ஆகம ப்ராமாண்யா' வில் சொல்லுகிறார்: ஸ்ருதி சொல்லும் ஸ்ரௌத்தம் என்னும் கர்மாக்களில் யாரும் முழுக்க விலக்கப்படவில்லை. ஸ்ருதி அனேகமாக 'எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காதே' என்பது போன்ற கட்டுப்பாடுகளையே விதிக்கிறது. இது எல்லா மக்களாலும் போற்றி கடைபிடிக்கத்தக்கது.

அதே போல ஒரு பெண் கருவுறக்கூடிய காலத்தில் - நடைமுறைக்காக 10 முதல் 50 வயது வரை என்று வைக்கப்பட்டுள்ளது - சபரிமலை குறித்த கட்டுப்பாடுகளை பக்தியுடன் அனுசரிக்கும்போது அவர் மத ரீதியாக இந்த தெய்வத்தை வழிபடுவதில் முழுக்க பங்களிக்கிறார். இந்த 'எதிர்மறை' பங்களிப்பு எந்த விதத்திலும் ஆண்களும் அனுமதிக்கப்பட்ட வயதுடைய பெண்களும் நேரடியாக பங்களிப்பதை விட குறைந்ததோ அர்த்தமில்லாததோ இல்லை.

இதில் மையக்கருத்து என்னவென்றால் ஒரு அமைப்பில் எல்லாருமே பங்களிக்கிறார்கள். அது நேரடியாக செய்யசொல்லி இருக்கும் கடமைகளை செய்வதாலோ அல்லது செய்யாதே என்று சொல்லும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதாலோ இருக்கலாம். இவை யாவை என்பதே அந்த அமைப்பின் தனித்துவ ரசத்தையும் அடையாளத்தையும் காட்டுகிறது.

இது வெறும் இந்து வகுப்புகளுக்கு மட்டுமில்லை. நம்பிக்கை/ பழக்க அமைப்பு எதானாலும் அதில் இப்படி இருக்கும். அந்தந்த மதங்களில் சொல்லப்பட்டபடி உணவு, பாலுணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்கள் மற்றும் பல ஏனைய கட்டுப்பாடுகளை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு கடைபிடிக்காதவரை அந்த மதத்தை கடைபிடிப்பதாக சொல்ல முடியாது.
இந்த இடத்தில் ஒருவர் ஒரு வாதத்தை முன்வைக்கலாம். சபரி மலை கோவிலுக்குள் நுழையக்கூடாது என்னும் கட்டுப்பாட்டை சம்பந்தப்பட்ட பெண்களின் மனச்சாட்சியிடம் விடவில்லை; இது புகுத்தப்படுகிறது என்று சொல்லலாம். இது தனிமனிதர் தாம் காணும்படி வழிபாடு மேற்கொள்ளும் சுதந்திரத்தை தடுக்கிறது என்றும் சொல்லலாம்.
இதற்கு உண்மையான நேர்மையான பதில் இப்படித்தான் இருக்க முடியும்: கோவில் என்பது அந்த தனித்துவம் உள்ள தெய்வத்தின் உறைவிடமாகும். அவரே அந்த கோவிலுக்கு உரிமையாளர். அவரது சொத்தை அவருக்கு ஏற்றவாறு அனுபவிக்க அவருக்கு உரிமை உள்ளது. தேவ்வாஸ்வம், தேவக்ருஹம் போன்ற சொற்றொடர்கள் இதையே காட்டுகின்றன.
கொஞ்சம் இருங்க. தெய்வம் என்கிறது 'உண்மையான நபர்' இல்லை. எப்படி அவர் இந்த சொத்தை ஆளுவது என்று கேட்டால்... சட்டமே இதை அப்படித்தான் நடத்துகிறது. ஒரு 'கார்பொரேட் பாடி' (கம்பனி) இருக்கலாம் என்றும் அதன் பெயரில் சொத்தை வைத்திருக்கவும் நடைமுறைகளை நடத்தவும் முடியும் என்றும் சொல்லும்போது கோவிலில் இருக்கும் தெய்வத்தையும் அப்படி கருத தடையில்லை.
ஒரு நெடுநாள் பாரம்பரிய முன்னோடி அப்படித்தான் இருக்கிறது. கிடைக்கும் கல்வெட்டுக்கள், உரைகளை பார்க்கையில் அப்படி புலப்படுகிறது. சட்டப்படியான தெய்வத்தின் உரிமை தன் குடியிருக்கும் இடத்தின் (சொந்தமான மற்ற இடங்களின் கூட) உரிமை, அதில் மாற்றார் எப்படி நுழையலாம், அந்த இடத்தில் எப்படி இருக்கலாம் என்பது போன்றவற்றை நிர்ணயிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது.
எதை வைத்து இந்த உரிமை அவரது பூசாரிகளால் நிர்வாகிகளால் - இவர்களே உண்மையில் இவரது அறங்காவலர்கள் இல்லையா - புரிந்து கொண்டு நிலைநாட்டப்படுகிறது? ஆகம சாத்திரங்களாலும் தாந்த்ர சாத்திரங்களாலும் ஆரம்பம் முதல் கடைபிடிக்கப்படும், அது தெரியவில்லையானால் நெடுங்காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைகளாலும் இது நிர்ணயிக்கப்படுகிறது.



சில ஹிந்துக்கள் தர்ம சாஸ்தா என்னும் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று சொல்வது இங்கே ஏற்புடையது இல்லை. ஏன் அவரால் 10-50 வயது பெண்களை சகோதரிகளாகவோ அல்லது தாயாகவோ பார்க்க இயலாதா என்ன?
ஒரு குறிப்பிட்ட கோவிலின் புராணங்களையும் சடங்குகளையும் அனுபவ பூர்வமான யதார்த்தங்களுடன் பொருத்திப்பார்க்க முடியாது. அது போலவே மனிதர்களின் குணங்களை தெய்வத்தின் மீது பொருத்த முடியாது.
தெய்வங்கள் இவற்றை கடந்தவை. மிக நுண்ணிய சூக்‌ஷ்ம உடலுடையவை. இவை படைக்கப்படுபவைகளை சாப்பிடுவதும் இல்லை. பிரம்மச்சரியம் அனுஷ்டிப்பதும் இல்லை. பின்னே இதன் முக்கியத்துவம் எங்கே?
இங்கே: நமது சடங்குகள் எப்படி வேலை செய்கின்றன என்பது ஒரு முக்கியமான விஷயம்.
நம் நீதிபதிகளுக்கு மதங்களைப்பற்றிய சரியான கற்பனை இல்லை. பின் வரும் விஷயம் அவர்களது மனதில் தைக்குமாறு யாரேனும் சொல்ல முடிந்தால் நல்லது.
கோவிலில் வழிபடும் தெய்வத்தின் இயல்பு ஒன்று இருக்கிறது. தென்நாடுகளில் ஆகம முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்ட கோவில்களிலும் தந்திரிக முறைப்படி ஸ்தாபனம் செய்யப்பட்ட கோவில்களிலும் இது மந்திரங்களைப்பொருத்து இருக்கிறது. மேலும் கோவில் இருக்கும் இடம், சடங்குகளின் இயல்பு, பூஜை செய்வோரின் தன்மை, பூஜைக்கு உதவும் பூக்கள், நிவேதனங்கள், கோவிலுக்கு வருவோரின் தன்மை, தெய்வத்துக்கு அணிவிக்கப்படும், பக்தர்கள் அணியும் பூசாரிகள் அணியும் உடைகளின் நிறம் போன்ற பல விஷயங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவேண்டும்.
இவை அனைத்தும் ஒன்றாகும்போது ஒரு 'சடங்கு நிதர்சன நிலை' ஏற்படுகிறது. இதுவே ஒரு உண்மையான பக்தன் வேண்டக்கூடிய நிலை. அப்போது தெய்வத்தின் சாந்நித்தியம் முழுமையாகிறது. இது பக்தனுக்கும் அவனது குடும்பத்துக்கும் அனுக்கிரகம் செய்கிறது. பல வேறு ஆகமங்களும் தந்திரீக சாத்திரங்களும் வெவ்வேறு நிலையை இந்த சடங்கு நிதர்சன நிலையாக சொல்லுகின்றன. இந்த நிலையில்தான் பூசாரிகளுக்கும் பக்தர்களுக்கும் இவ்வுலகில் அவர்கள் செய்ய வேண்டியவைகளும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த சடங்குகளில் காரண காரியங்கள் இல்லாமல் இல்லை. சைவ ஆகமங்களும் காமிகாகமங்களும் சிவன் மற்றும் விஷ்ணுவின் உக்ர ரூபங்கள் கிராமத்தின் எல்லையிலேயே வைக்கப்பட வேண்டும் என்று சொல்லுகின்றன. ஏன்?
அந்த உக்கிர ரூபங்களின் இயல்புக்கு அந்த இடங்களே உகந்தவை என்பதால்தான். உக்கிரமான, ஆபத்தை விளைவிக்க வாய்ப்பிருக்கக்கூடிய இந்த இயல்புள்ளவை மனிதன் வசிக்கும் இடத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எந்த கிராமங்கள், ஊர்கள், கோவில்கள் இந்த காமிகாகமத்தின்படி நிர்மாணம் செய்யப்படுள்ளனவோ அவற்றில் இந்த விதி கடைபிடிக்கப்பட்டு இருப்பதை காணலாம்.
இந்த சடங்கு நிதர்சன நிலையும் சடங்குகளால் ஏற்படும் ஒத்திணக்க இயல்பும் என்ற எண்ணம் சபரிமலையிலும் காணப்படுகிறது. ஆரம்ப நாட்களில் இந்த தெய்வம் உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட காலத்தில் ஓதப்பட்ட மந்திரங்கள் இந்த தெய்வ சிலையில் நைஷ்டிக பிரம்மச்சரியத்தை இயல்பாக்கி இருக்கின்றன. இதுவே இந்த தெய்வத்தின் முக்கிய இயல்பாகும். அதன் முக்கிய சடங்கு நிதர்சன நிலையாகும்.
ஒரு கோவிலின் இந்த சடங்கு நிதர்சன நிலைக்கு விதிகள் மீறப்படும்போது தீங்கு விளைவிக்கப்படுகிறது. நாசம் கூட ஏற்படலாம். இங்கே பொருத்தமான விதி 'வீட்டு விலக்கான பெண்களுக்கு தடை' என்பது.
அப்படிப்பட்ட தடை மீறப்படுமானால் அந்த கோவிலின் 'சடங்கு நிதர்சன நிலை'யும் சடங்கு ஒத்திணக்க இயல்பும் மாற்றப்படும் அல்லது உருக்குலையும். இவைதான் நம் சடங்குவெளியை நிர்ணயிக்கின்றன. எது ஒரு சடங்குவெளிக்கு சரியோ உகந்ததோ அது இன்னொரு சடங்குவெளிக்கு பொருத்தமில்லாமல், ஏன் தீங்கு விளைவிப்பதாகக்கூட இருக்கலாம்.
உதாரணமாக சைவ ஆகமங்களில் ருத்ர கன்யாக்கள் சொல்லப்படுகிறார்கள். இவர்கள் இளைய பக்திகொண்ட கன்னிகைகள். சிவனின் முன் நடனமாடுவார்கள். இவர்கள் மற்ற பூசாரிகளுடன் ஏன் ராஜாக்களுடனே கூட புதிதாக நிறுவப்படும்/ கும்பாபிஷேகம் முடிந்தபின் சிவனின் முதல் தரிசனத்தை காண அழைக்கப்படுவர்.
ஆனால் ஐயப்பனின் சடங்குவெளியில் இவர்கள் பொருந்த மாட்டார்கள். இவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வயதாகி குழந்தை பெறும் காலம் போகும் வரை காத்திருக்க வேண்டும்.
இதெல்லாம் ஐயப்பனின் 'மனதை' சார்ந்த விஷயமில்லை. எல்லாவற்றையும் கடந்தவரின் 'மனதை' யாரும் சலனப்படுத்த முடியாது. ஆனால் அதே கடந்தவரின் சக்தி ஒரு சிலையில் ஆவாஹனம் செய்யப்படும்போது சில விதிகள் செயலுக்கு வந்துவிடுகின்றன.
நமது தர்மத்தில் எல்லாமே, கற்பனை செய்யப்பட முடியக்கூடிய எல்லாமே - வயதோ, பாலினமோ, பல்வித மரங்களோ, விலங்குகளோ, உலோகங்களோ, மற்ற பொருட்களோ, நிறங்களோ, வடிவங்களோ, நேரங்களோ - எல்லாவற்றுக்கும் ஒரு புனித அர்த்தம், சடங்குக்கான மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஹிந்துயிசத்தின் செயல்பாட்டுக்கு மிகச்சிறந்த உதாரணம்.
இந்த அம்சம் எல்லா ஆபிரகாமியம் அல்லாத பல தெய்வங்களை வழிபடும் எல்லா பாரம்பரியங்களுக்கும் பொருந்தும். நாம் உலகை பார்க்கும் விதமே தனித்துவமானது. பல சடங்கு அறைகள், அர்த்தங்கள், சக்திகள், குறியீடுகள், குறிப்பிட்ட தெய்வங்கள், அவற்றுக்கான சடங்குகள்….. இவை எல்லாம் ஒரு சடங்கு நிதரிசனத்தை உருவாக்க, பலப்படுத்த, அனுகிரகம் பெற.
யார் இந்த நம் சடங்குகளை மிதிக்க விழைகிறார்களோ - அது அறியாமையால் இருக்கட்டும் அல்லது காழ்ப்புணர்வால் இருக்கட்டும் - நாம் பலமாக நம்மால் முடிந்த விதத்தில் முடிந்த சக்தியுடன் போராட வேண்டும். இந்த கட்டுரை மக்களுக்கு நம் ஹிந்து சடங்குகள் குறித்த சில பரிமாணங்களையும் கட்டுப்பாடுகளுக்கான காரணங்களையும் புரிய வைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த கட்டுரை ஆங்கிலத்தில் ஆங்கீரச ஸ்ரேஷ்டா என்பவரால் எழுதப்பட்டது. முதலில் பல நாட்களுக்கு முன் இதை ஒத்தி ஒட்டியபோது அதன் சுட்டியை சேமிக்கவில்லை. இப்போது வலையில் தேடியதில் கிடைத்துவிட்டது. ஆகவே அதை இங்கே பதிவு செய்கிறேன்.
நிறைந்தது

No comments: