Pages

Monday, October 20, 2008

நெரூர் -5



சதாசிவரின் சித்தம் வெளிமுகமாகிய ஒரு சந்தர்பத்தில் தன்னுடன் இளமையில் பயின்ற போதேந்திராளையும் அய்யாவாளையும் நினைத்தாராம். அவரை காண எண்ணி கோவிந்தபுரம் அடைந்து அதற்குள் சித்தம் அகமுகமாகிவிட அங்கிருந்த நாணல் புதர்கள் விழுந்து அப்படியே கிடந்தாராம். அய்யாவாள் வாரம் ஒரு முறை கோவிந்தபுரம் வருவார். அப்படி வரும்போது புதரில் கிடந்த சதாசிவரை பார்த்து அடையாளம் தெரியாமல் யாரோ ஒரு மகான் இப்படி இருக்கீறார். இவர் ஆசி கிடைத்தால் பாக்கியம் பெறுவோம் என்று நினைத்து சுற்றி வந்து வணங்கினார்; ஸ்தோத்திரம் செய்தார். அப்படியும் சதாசிவர் அக முகமாகவே இருந்துவிட்டார்.
அய்யாவாள் தன் குருநாதராகிய போதேந்திராளிடம் இதை சொல்ல அவரும் உடனே அப்படிப்பட்ட மகானுபாவரை உடனே தரிசிப்போம் என்று புறப்பட்டார். சுற்றி இருந்த புதர்களையும் செடிகளையும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து தீபம் ஏற்றி சாம்பிராணி புகையும் போட்டால் பகிர்முகப்படுவாரோ என்று அதையும் செய்தனர்.

சதாசிவர் அசையக்கூடவில்லை. போதேந்திராள் தன் யோக வலிமையால் ராம நாமத்தை அந்த உடலுக்குள் புகுத்தினாராம். ராம நாமம் கேட்டு விழித்துக்கொள்ளட்டும், பின்னால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, "பிபரே ராம ரஸம்" என பாடலானார். இதனால் சற்றே பகிர்முகமானார் சதாசிவர். அடுத்து " கேலதி மம ஹ்ருதயே" என பாட, சதாசிவர் சப்த பேதத்தை திருத்தினார். இது சதாசிவமே என நிச்சயித்து பலவாறு புகழ்ந்து போற்றினார்கள். அதற்குள் பிரம்மம் அகமுகமாகிவிட்டது. (முன் நினைத்த வேலை முடிந்ததல்லவா? இருவரையும் கண்டாகிவிட்டது.) என்ன செய்தும் அவரை பகிர்முகப்படுத்தி மடத்துக்குள் கொண்டு செல்ல முடியவில்லை எனக்கண்டு அப்படியே விட்டு விட்டனர். சதாசிவரும் பிறகு எங்கோ போய்விட்டார்.

சதாசிவர் நிகழ்த்திய அற்புதங்கள் பலவாக சொல்லப்படுகின்றன. அவரா நிகழ்த்தினார்? ப்ரம்மத்துக்கு சங்கல்பமேது? அந்த உடல் முன்னிலையில் பல அற்புதங்கள் நடந்தன. தாக்க வந்த மூடர்கள் செயலிழந்து போயினர். பலரை தன் பார்வையாலேயே பிணி தீர்த்தார். " தாத்தா, திருவிழா காண வேண்டும் " என்று கேட்ட குழந்தைகளை கண நேரத்தில் மதுரை அழைத்து சென்று காண்பித்து திருப்பியும் கூட்டி வந்தார்.


யோனுத் பன்ன விகாரோ பாஹௌ மிலேச்சேன சின்ன பதிதேபி
அவிதித மமதாயாஸ்மை பிரணதிம் குர்ம ஸதாசிவேந்திராய

சதாசிவர் ஒரு முறை அகமுகமாக இருந்தபடியே நடந்து கொண்டு இருந்தார். எங்கே போகிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு முஸ்லிம் அரசனின் அரண்மனைக்குள் நுழைந்தார். "யாராடா இவன்! அம்மணமாக இங்கே வருவது" என சினந்த மன்னன் பதில் வராததால் கோபம் கொண்டு கத்தியால் கைகளை வெட்டிவிட்டான். ஒரு கை கீழே விழ இன்னும் ஒன்று கொஞ்சம் ஒட்டிக்கொணடு இருந்தது. சதாசிவர் பாட்டுக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தார். மன்னனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. "இவர் யாரோ பெரிய மகான், தவறு செய்து விட்டோம்!' என்று உணர்ந்து கீழே கிடந்த கையை எடுத்துக்கொண்டு ஓடினான். சதாசிவரின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான். பகிர் முகப்பட்ட ப்ரம்மம் என்ன என்று கேட்டது. "பெரிய தவறு செய்தேன். மன்னிக்க வேண்டும்" என்றான் அரசன். "தவறு செய்தவனும் இல்லை; மன்னிக்கிறவனும் இல்லை போ!” என்றது ப்ரம்மம். "இல்லை! மன்னித்தால்தான் ஆயிற்று; இல்லாவிட்டால் வாளுக்கு இரையாவேன்" என்று கூற, "அப்படியா? என்ன தப்பு செய்தாய்?” என்றார். "உங்கள் கைகளை வெட்டிவிட்டேனே!” என்றழுதான் அரசன். "அப்படியா!” என்று கூறி வெட்டிய கையை வாங்கி பொருத்தியதும் அது சரியானது. "சரியாகிவிட்டது போ" என்று சொல்லி தன் வழியே நடந்தது ப்ரம்மம்.

இதைத்தான் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ப்ரம்மேந்திரர் அனுக்கிரகம் கிடைத்த பின் மேற்கண்ட படி பாடினார். "கைகளை மிலேச்சன் வெட்டிவிட்ட பின்னும் விகாரம் உண்டாகாததால் என்னுடையது என்ற எண்ணமே இல்லை. அப்படிப்பட்ட ஸதாசிவேந்திராய சற்குருவை நமஸ்கரிக்கிறேன்.”

6 comments:

Geetha Sambasivam said...

இதுக்குத் தான் வெயிட்டிங், இன்னும் இருக்கே??????

திவாண்ணா said...

இருக்கு!

ambi said...

இந்த மகானை பத்தி நிறைய தெரிந்து கொண்டேன். :)

இந்த தங்கவேலு மனைவியாக முத்துலட்சுமி, பூரி செய்வது எப்படி?னு கேட்பதற்க்கு

அதான் எனக்கு தெரியுமே!
அதான் எனக்கு தெரியுமே!னு

சொல்வாங்களே அது எந்த படம்..?

இல்ல, சும்மா தான் கேட்டேன். எந்த உள்குத்தும் இல்லை. :))

Kavinaya said...

ஆஹா, படிக்கையிலேயே பரவசமாக இருந்தது. மிக்க நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

நானும் அந்த 4 மஹான்களையும் மனசால் நினைத்து நமஸ்காரம் பண்ணிக்கறேன்.

jeevagv said...

எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமு!