Pages

Saturday, October 18, 2008

நெரூர் -4கொடு முடிக்கு பக்கத்தில் அகத்தியம் பாறை என்ற ஒரிடத்தில் காவேரிக்கு நடுவே மையத்தில் ஒரு பெரும்பாறை உண்டு. பல சமயம் இந்த பாறை மீது அமர்ந்து சதாசிவர் தவம் செய்வார். தவம் செய்பவரை பெரியவர்கள் தொந்திரவு செய்யமாட்டார்கள். ஆனால் சிறுவர்கள் செய்யக்கூடுமாகையால் இப்படி ஆற்றின் நடுவே அமர்வார். ஒரு நாள் ஆற்றுவெள்ளம் அதிகமாகி இந்த பாறையையும் சதாசிவரையும் புரட்டிப்போட்டுவிட்டது. நீர் வற்றிய பின் சதாசிவரை தேடி தேடி அலுத்தனர் மக்கள்.

பல மாதங்கள் ஓடி முடிந்து வற்றி இருந்த ஆற்றில் கட்டிட வேலைக்காக மணல் எடுக்க வந்தனர் சிலர். ஓரிடத்தில் நல்ல மணல் கிடைக்கிறது என்று தோண்டவே ஆழமாக போன பின் மண்வெட்டியால் வெட்ட ரத்தம் வந்தது. பயந்து போனவர்கள் கிராம அதிகாரியை அழைத்துவர
அவர் இது சதாசிவ பிரம்மமாக்தான் இருக்க வேன்டும் என ஊகித்து சுற்றிலும் மணலை எடுக்கச்செய்யவே சதாசிவர் உணர்வு பெற்று எழுந்து நடந்து போய்விட்டாராம்.

புதுக்கோட்டை அரசரது காடுகளை அடுத்த வயல்களில் சதாசிவர் போய் கொண்டு இருந்த போது வைக்கோல் போர் போட்டுக்கொண்டு இருந்தார்கள். இது வழி இது வழி அல்ல என் ஆராயும் நிலையில் இல்லாத சதாசிவர் பாட்டுக்கு நேரே போக வைக்கோல் போர் இடையே மாட்டிக்கொண்டார். வேலையாட்கள் தெரியாமல் மேலும் மேலும் வைக்கோல் போட 10,000 போர்கள் போட்டுவிட்டனர். பிறகு பல மாதங்கள் கழித்து அது செலவழிந்து கீழே பார்க்க சதாசிவர் படுத்த நிலையிலேயே இருந்தார்.

இதை கண்டு அதிசயித்து மகாராஜாவிடம் போய் சொன்னார்கள். மகாராஜா விஜய ரகுநாத தொண்டைமான் சாதுக்களிடம் மரியாதையும் நம்பிக்கையும் உள்ளவர். ராஜ்ய பரிபாலனத்தில் நிகழும் கேடுகளை சாதுக்களால் தீர்க்க முடியும் என நம்பியவர். ஒரு பல்லக்கை கொண்டுவரச்சொல்லி குதிரை மீது ஏறி விரைந்து சென்று ப்ரம்மத்தை தரிசித்தார். சுற்றி வந்து வீழ்ந்து வணங்கி அரண்மனை வருமாறு வேண்டியும் ப்ரம்மம் ஏதும் சலனமில்லாமல் இருந்தார். மேலும் வற்புறுத்த திருவரங்குளம் காட்டுள் சென்றுவிட்டார். முயற்சியில் தளராத ராஜா இவரது அருகாமையில் ஒரு குடிசை அமைத்து சதாசிவருக்கு சேவை செய்து வரலானார். இடையிடையே அரண்மணை சென்று ராஜாங்க வேலைகளை கவனித்துவிட்டு மீண்டும் சேவைக்கு வந்துவிடுவார். இப்படி 8 வருடங்கள் ஓடின. ஒரு நால் தனக்கு மந்திர தீக்ஷை தர வேண்டும் என மிகவும் வேண்ட சதாசிவர் மணலில் எழுதிக்காண்பித்தார். ராஜாவும் அதை பாடம் செய்து கொண்டு அந்த மணலை அரண்மணைக்கு கொண்டுவந்து தங்கப்பேழையில் வைத்து பூஜை செய்யலானான். இந்த மணல் இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது.

சாஸ்திர சந்தேகங்களை ராஜா கேட்க, பதில் வராததை கண்டு இனி தொந்திரவு செய்யக்கூடாது என நிச்சயித்து எங்கு சென்றாலும் கடைசியில் சரீரத்தை உகுக்கும் காலத்தில் தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை தரும்படி கேட்டுக்கொண்டான். சதாசிவரும் இசைவை தெரிவித்து தகுந்த சாஸ்திர குருவையும் அடையாளம் காட்டி தன் போக்கில் போகலானார்.

கரூரில் வசித்த சாஸ்திரிகள் சிலரும் கனபாடிகள் சிலரும் சதாசிவரை அணுகி திருப்பதி ஸ்தல யாத்திரை செய்வது மிக சிரமமாக இருக்கிறது. இந்த தான் தோன்றி மலையில் உள்ள அப்பரை தரிசித்தால் வெங்கடாசலபதியை தரிசித்த புண்ணியமுண்டாக வேண்டும் என வேண்டினர். சதாசிவரும் சந்தோஷமாக அங்கே சென்று பூஜை செய்து ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்று எழுதி அங்கே பிரதிஷ்டை செய்தார்.

தஞ்சைக்கு அருகே புன்னை காடுகள் இருந்தன. தஞ்சை ராஜா ராமேஸ்வரம் ஸ்தல யாத்திரை செய்து திரும்பும் போது அந்த புன்னை காடுகள் அருகில் தங்கி இருந்த போது அவருடைய குழந்தைக்கு உஷ்ணம் அதிகமாகி கண்ணிலிருந்து ரத்தமே வந்தது. இது சரியாக வேண்டுமென சமயபுரம் மாரியம்மனுக்கு ராஜா பிரார்த்தனை செய்ய அன்றிரவு " நான் இங்கேயே இருக்க ஏன் சமயபுரத்துக்கு வருவதாக பிரார்த்திக்கிறாய்?” என்று அன்னை கேட்டாள். அட, இது தெரியாமல் போயிற்றே, என் ராஜ்ஜியத்திலேயே இருக்கிறாளா என்று நாலாபுறமும் ஆட்களை அனுப்பி தேடினான். தேடியவர்கள் இங்கே ஒரு புற்றுக்கு சிறுவர்கள் வேப்பிலை வைத்து மாரியம்மன் என்று விளையாட்டாக வழிபடுவது தவிர கோவில் எதுவும் இல்லை என சொன்னார்கள்.

மகாராஜா அந்த புன்னை காடுகளை சுற்றி வந்தார். அங்கே ஏதோ விசேஷம் இருப்பதாக தோன்றவே உள்ளே நுழைந்து தேடினார்கள். ஒரு இடத்தில் சதாசிவர் அமர்ந்து இருப்பதை பார்த்து மகிழ்ந்து வனங்கி எழுந்து " இங்கே மாரியம்மன் கோவில் இருப்பதாக கனவு கண்டேன். ஆனால் என்ன தேடியும் ஒரு புற்றை தவிர ஒன்றும் தென்படவில்லை. என்ன செய்வது என்று சொல்ல வேண்டும்" என்று வேண்ட, சதாசிவர் "அந்த புற்றேதான் மாரியம்மன்" என்று எழுதிக்காட்டினார். "இப்படி இருந்தால் ஜனங்கள் எப்படி பக்தியோடு வழிபட முடியும்? நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்" என்க சதாசிவரும் கோரோசனை, கஸ்தூரி, சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, அகில் சந்தனம், குங்குமப்பூ, பச்சைகற்பூரம் ஆகியவற்றை வாங்கி வரச்செய்து அந்த புற்று மண்ணிலேயே பிசைந்து மாரியம்மனை செய்தார். ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி அம்மன் முன் வைத்து "இதற்கு பூஜை செய், குழந்தையின் கண் சரியாகும்" என்று தெரிவிக்க, அவ்வாறே செய்து பிரச்சினை தீர்ந்தது. தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவே இன்றளவும் பூஜை நடக்கிறது. 5 வருடங்களுக்கு ஒரு முறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டும் செய்கிறார்கள். அம்மன் பக்தர்கள் பலர் கனவில் தோன்றி தனக்கு புடவை சாற்றுமாறு சொல்வாள். அவர்களும் அப்படியே செய்து அவர்களது வேண்டுதல் கைவர பெறுவர். அபிஷேகம் நடக்கும் காலத்தில் அவற்றை நீக்குவார்கள். வெகு நேரம் பிடிக்குமாம்.

Post a Comment