Pages

Friday, October 17, 2008

நெரூர் - 3சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் (அட!) சோமநாத யோகியார் - பார்வதி தம்பதியர். சோமநாத யோகி சிறு வயதில் இருந்து பிரம்மசர்யத்தை கடைபிடித்து குண்டலினி யோகம் பயின்று சித்திகள் வரப்பெற்றவர். இவரது தாய் தந்தையர் புத்திரனுக்கு வயதாகிக்கொண்டே போகிறதே என்று கவலைப்பட்டு திருமணம் செய்து வைக்க முயல யோகியார் லேசில் சம்மதிக்கவில்லை. அப்பா உனக்கு திருமணம் செய்து வைத்தால் எங்கள் கடமைகளேல்லாம் நிறைவேற்றியவர்கள் ஆவோம். அதன் பின் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்து, வானபிரஸ்தம் அனுஷ்டித்து கடைதேறும் வழியை பார்க்க வேண்டும் என்று பலவாறு சொல்ல பின் யோகியாரும் இணங்கினார்.

திருமணத்திற்கு பிறகும் யோகியார் பிரம்மசரியத்தை கடைபிடித்துவர 15 வருடங்கள் சென்றன. சந்ததி குறித்து ஒரு சிந்தனையும் இல்லாது இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட பார்வதி அம்மை " சுவாமி திருமணம் நடந்து 15 வருடங்கள் ஆகின்றன. ஒரு சத்புத்திரனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்களே என்று கேட்க "உன் வாயால் சத் புத்திரன் என்று வந்துவிட்டதா? சரி. அப்படி நடக்க வேண்டுமானால் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்ய வேண்டும். உடம்பின் ஒவ்வொரு அணுவும் ராம நாமம் சொல்ல வேண்டும். அப்படி ஆனால்தான் உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும். அப்படி பட்ட நேரத்தில் கர்ப்பம் தரித்தால் அதில் ஒரு மகரிஷி வந்து புகுவார். அது நாட்டுக்கு நல்லது" என்று சொல்ல அம்மையும் இசைந்து மந்திர உபதேசம் பெற்று ஜபம் செய்து வரலானார்.

ஸ்தல யாத்திரை செய்து ராமேஸ்வரம் சென்றபோது கனவில் உனக்கு சத் புத்திரன் உண்டவான் என்று ராமநாதர் சொல்ல விழித்ததும் யோகியார் தானும் அதே கனவை கண்டதாக சொல்லி வீடு திரும்பினர். இறைவன் ஆணைப்படியே 10 ஆம் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சிவராமகிருஷ்ணன் என பெயரிட்டனர். குழந்தை 3 வயதை எட்டும் முன்னேயே யோகியார் இமயத்துக்கு தவம் செய்ய போய்விட்டார்.

சிறு வயதிலேயே வேதம் படிக்க அனுப்பிவிட்டார்கள். அதி புத்திசாலியாகையால் மிக விரைவில் 4 வேதங்களும் கற்றுக்கொண்டுவிட்டார். அத்துடன் சாஸ்திரங்களும் கற்றார்.
இவரது திறமையை பார்த்த உள்ளூர் சாஸ்திர விற்பனர்கள் மேற்கொண்டு சாஸ்திரம் வாசிக்க திருவீசைநல்லூர் வேங்கடேச அய்யாவாளிடம் அனுப்பச்சொல்லி வேண்டினர். ஆனால் அன்னை அவருக்கு தக்க ஒரு மணப்பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்தார். பெண்ணுக்கு 5 வயதே ஆனபடியால் உரிய வயது வந்த பின் கொண்டு வந்து விடுவதாக ஏற்பாடு ஆகியது. எப்படியோ இப்போது திருவீசைநல்லூர் போக அனுமதி கிடைத்துவிட்டது.

பாடம் சொன்ன அய்யாவாளுக்கு வியப்பு மேலிட்டது. சாதாரணமாக ஒருவர் பாடம் கற்று அதை அசை போட்டு புரிந்து கொள்வர். அனுபவம் பெறும் முறைகளையும் கற்க வேண்டும். ஆனால் சிவராம க்ருஷ்ணனுக்கோ பாடம் கேட்கும் போதே அனுபூதி கிடைக்கிறது! அனுபவத்தின் முதிர்ந்த நிலை அடைகிறான். இவனை இப்படியே விடக்கூடாது என்று ஸ்ரீமடாதிபதி பரமசிவேந்திரரிடம் (இவர் அதிஷ்டானம் திருவெண்காடு அருகில் உள்ளது) இவனை கொண்டு விட்டார். சில மாதங்களிலேயே அத்யாத்ம சாஸ்திரங்களை கற்று தேர்ந்தான் சிவராமன். ஏக சந்த க்ராஹி என்பார்கள்- ஒரு முறை கேட்டாலே நினைவில் இருத்திக்கொள்ள முடியும். அப்படி ஒரு சக்தி - இல்லை, - புரிவதும் நிகழ்வதால் அதுக்கும் மேலே- இருந்தது சிவராமனுக்கு. குருவே சிலாகித்த சிஷ்யனாக விளங்கினார்.

இந்த நிலையில் மைசூரில் அரசவையில் சரியான வித்வான் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்கள். சிவராமன் புகழை கேள்விப்பட்டு பரமசிவேந்திரரிடம் விழுந்து வணங்கி மைசூர் ஆஸ்தான வித்வானாக அனுப்பும் படி கேட்க அவரும் நாட்டு நலன் கருதி இசைந்தார். மைசூர் ராஜாவின் சந்தோஷத்துக்கு அளவில்லை! வருகிற எல்லா வித்வான்களும் இவராலேயே பரீட்சிக்கப்பட வேண்டும்; இவர் சொல்கிற சன்மானம்தான் தர வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. சிவராமனுக்கோ அத்தனை கலைகளும் அத்துப்படி. ஒரு ராகம்பாடினால் அது சுத்தமாக இல்லையென்றால் கண்டுபிடித்துவிடுவார். சாஸ்திரம் பற்றி கேட்கவே வேண்டாம். இவரிடம் பரிசு வாங்க வித்வான்கள் சிரமப்பட்டு போயினர்.

தஞ்சையிலிருந்து ஒரு விதவான் கோபாலகிருஷ்ண சாச்திரி என்பவர் சிவராமனை வென்று ஆஸ்தான வித்வான் ஆக வேண்டும் என்ற கனவுடன் கிளம்பிப்போய் இவரை கண்டவுடன் விழுந்து வணங்கி "குருவே தங்களுக்கு சேவை செய்ய வந்து இருக்கிறேன்" என்றாராம்! சேவையில் சில காலம் போன பின் கோபாலக்ருஷ்ணன் பரம குருவை சந்திக்க வேண்டி கேட்க சிவராமனும் பரமசிவேந்திராளை சந்திக்கும் விதி முறை, வழி, இடமெல்லாம் சொல்லி அனுப்பி வைத்தார். அப்படியே பரம குருவை சந்தித்த கோபாலர் " சிவராமக்ருஷ்ணர் தங்கள் சிஷ்யர்களிலே மிக உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர் வரும் வித்வான்களை வாதத்தில் வென்று வெற்றி அடைவதிலேயே குறியாக இருக்கிறார். யாருக்கும் விரும்பிய பரிசு கிடைப்பதில்லை. இதனால் ராஜ்யத்துக்கு அவப்பெயர். மேலும் இவர் இதிலேயே கவனமாக இருப்பதால் தவம் செய்ய நேரம், இடம் இல்லை. இவர் வெளியேறி தவம் செய்தால் இவர் ராஜா முன் கைகட்டி நில்லாமல் இவரிடம் மகாராஜாக்கள் கைகட்டி காத்து நிற்பர்" என்ற ரீதியில் சொல்லவே, இதன் உண்மையை உணர்ந்து பரமசிவர் " நான் தரிசிக்க விரும்பியதாக கூறு" என்று சொல்லி அனுப்பிவிட்டார். இதை கேள்விப்பட்ட சிவராமன் மிக வருந்தினார். ஒரு குரு சிஷ்யனை தரிசிப்பதாவது! அப்படி சொன்னால் என்ன ஒரு வருத்தம் இருக்க வேண்டும் என்று உணர்ந்து வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

வந்து வணங்கிய சிவராமனை கண்ட பரமசிவேந்திரர் " ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே" என்று கூற அந்த கணத்திலிருந்து இனி பேசுவதில்லை என்று உறுதி கொண்டுவிட்டார். குருநாதரும் சன்னியாசம் கொடுத்து "இனி பிரியமான இடம் சென்று தவம் செய்" என்று சொல்லிவிட்டதாக கூறுகிறார்கள். (இதில் அபிப்பிராய பேதம் இருக்கலாம்) தவம் செய்ய ஏகாந்த இடத்தை தேடி நெரூர் வந்து சேர்ந்தார் சதாசிவர். யோகம் பயின்று அனைத்து யோக சித்திகளும் கைவரப்பெற்று மேலும் தவம் செய்து ப்ரம்ம மாகவே ஆகிவிட்டார்.

5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

//மதுரையில் (அட!)//

அதென்ன அட? :)

மதுரையில்தான் சோமசுந்தரரே சித்தராக வந்திருக்கார். குழந்தையானந்த ஸ்வாமிகளையும், ரமணரையும் தந்த ஊர் எங்களூர். :)

திவாண்ணா said...

மதுரை மக்கள் சிலர் இங்கே இருக்காங்களேன்னுதான் அட! வேற ஒண்ணுமில்லை.

கவிநயா said...

மதுரைன்னாலே நிறைய பேருக்கு ஒரு தனி ப்ரியம்தான் :)

திவாண்ணா said...

//மதுரைன்னாலே நிறைய பேருக்கு ஒரு தனி ப்ரியம்தான் :) //
:-)))))))))

Geetha Sambasivam said...

//மதுரைன்னாலே நிறைய பேருக்கு ஒரு தனி ப்ரியம்தான்//
மதுரைன்னாலே பதிவுகள் கூடப் பெரிசாவே வருதே! :P:P:P

மதுரைக்காரங்களே அதிபுத்திசாலிங்களாக்கும்! :)))))))))