Pages

Tuesday, October 21, 2008

நெரூர் -6சுற்றியது போதும் என சங்கல்பித்தாரோ என்னவோ நெரூர் வந்து சேர்ந்தார். மனதால் மைசூர் புதுக்கோட்டை தஞ்சை அரசர்களை நினைக்க அவர்களும் வந்து சேர்ந்தனர். "குகை அமையுங்கள். அதில் அமர்ந்த பின் சாமக்கிரியைகளால் மூடிவிடுங்கள்" என உணர்த்தினார். அழும் அரசர்களிடம் "மனதுதானே நினைக்கிறது? உடலை பார்த்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்றார். "காவேரியில் கூடத்தான் புதைந்து கிடந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருப்பேன். கவலை வேண்டாம்" என்று உணர்த்த தேற்றிக்கொண்டனர்.

குகை தயாராக அதில் அமர்ந்து யோகத்தில் ஆழ, முறைப்படி குகையை மூடினார்கள். ப்ரம்மம் சொன்னபடியே 9 ஆம் நாள் அங்கு வில்வ மரம் தோன்றியது. பன்னிரண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வந்து சேர்ந்தது. அதை பன்னிரண்டு அடி கிழக்கே ப்ரதிஷ்டை செய்து கோவில் கட்டினர்.

மானாமதுரையில் ஒரு சாஸ்திரிகளும் கராச்சியில் ஒரு முஸ்லிம் பக்தரும் முன்னரே உடலை உகுக்கும் காலத்தில் தமக்கு தெரியப்படுத்த வேண்டும் என பலமாக வேண்டிக்கொண்டு இருந்தனர். சாஸ்திரிகள் அப்படி நடக்காவிட்டால் ப்ராணத்தியாகம் செய்வதாகவே சத்தியம் செய்து இருந்தார். இதே சமயம் அந்த இரண்டு இடங்களிலும் கூட கற்பிக்கப்பட்ட உடல்கள் தோன்றி உகுக்கப்பட்டு குகையும் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மானாமதுரையில் அவ்விடத்தில் வில்வ மரமும் தோன்றியதாக சொல்லப்படுகிறது.

சதாசிவர் சமாதி கொண்டு இப்போது சுமார் 220 ஆண்டுகள் ஆயின். சுமார் 120 வருடங்கள் முன் சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தார். அவருக்கு தத்வ விசாரம் செய்து சித்தி ஏற்படுவதில் தடை இருந்தது. என்ன செய்வதென்று ஆலோசித்து நெரூர் சென்று ப்ரம்மேந்திராளை ஆராதித்தால் சித்தி ஏற்படும் என்று தெளிந்தார். நெரூர் நோக்கி பல்லக்கில் பயணித்து ரங்கநாதம் பேட்டை என்ற இடத்தை அடைந்தனர். அதற்கு மேலே பல்லக்கு போக முடியவில்லை. போகிகள் (பல்லக்கு தூக்குவோர்) யாரோ முன்னாலிருந்து தள்ளுவது போல் இருப்பதாக சொன்னார்கள். ஸ்வாமிகள் கீழே இறங்கி விழுந்து வணங்கி, ஒரு கை தூரம் முன் சென்று மீண்டும் விழுந்து வணங்குவதுமாக ஒன்றரை கல் நடந்து நெரூரில் ப்ரம்மேந்திரர் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார். தன் சந்தேகங்கள் தீராமல் எழுந்திருப்பதில்லை என்ற உறுதியுடன் காலை காவிரி சென்று கடன்களை முடிக்க மட்டும் வெளி வந்து, மற்றபடி சந்தியிலேயே அமர்ந்து, அன்ன ஆகாரமின்றி தீவிர தவம் மேற்கொண்டார்.

மதிலுக்கு வெளியே 300 பேர்கள் என்ன நடக்கப்போகிறது என்றறிய கூடிவிட்டனர். மூன்றாம் நாள் இரவு இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. காலை வெளி வரும் போது சதாசிவரை துதித்து நாற்பத்தைந்து பாடல்கள் எழுதிக்கொண்டு வந்தார் ஸ்வாமிகள். ப்ரம்மேந்திரர் ப்ரத்தயக்ஷம் ஆகி சந்தேகம் தீர்த்தது உறுதியாயிற்று. அதிலிருந்து யார் சிருங்கேரி மடத்து பட்டத்துக்கு வந்தாலும் நெரூர் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து மூட்டையாக கொண்டு வந்த தனத்தை எண்ணிப்பாராமல் செலுத்திவிட்டு போவது வழக்கம்.

ப்ரம்மேந்திராள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களும் பல. கீர்த்தனங்களில் சர்வம் ப்ரம்ம மயம் என்று பாடுவார். ப்ரம்மேந்திரரின் சரித்திரத்தை கேட்டாலும் கீர்த்த்னங்களை கேட்டு அதன் பொருள்படி நடந்தாலும் கட்டாயம் மெய்ப்பொருளை அடைந்துவிடலாம் என்று நம்புகின்றனர். ப்ரம்ஹ சூத்ர வ்ருத்தி, ஆத்ம வித்ய விலாஸம், அத்வைத ரஸ மஞ்சரி, ப்ரம்ஹ தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா போன்ற கிரந்தங்களும் பஜே ரகுவீரம், பஜரே கோபாலம், மானஸ சஞ்சரரே, பிபரே ராம ரஸம் ஆகிய கீர்த்தனங்களும் குறிப்பாக அவர் படைப்புகளில் சொல்லப்படுகின்றன.

இந்த பதிவுகளில் கண்ட பல விஷயங்கள் நெரூர் கைலாஸ ஆஸ்ரமம் தவத்திரு சதாசிவானந்த ஸ்வாமிகளின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டன.
மேலும்
http://living.oneindia.in/yoga-spirituality/faith-mysticism/sadasiva-brahmendra-partii
http://www.geocities.com/profvk/gohitvip/sadasiva.html


Post a Comment