Pages

Wednesday, October 22, 2008

நெரூர் -7
சரி, இப்போது ஆரம்பித்த பையர் கதையை கொஞ்சம் வைண்ட் அப் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
எங்கே விட்டோம்? நெரூர் பாடசாலை திட்டம் கைவிடப்பட்டதாக ஆகிவிட்டது. இதற்கு முன்பே எங்கள் வழிகாட்டி பெரியவரை பார்த்து பேசிய போது " ஏண்டா, உனக்கு பகவானே பெரிய வேலையை வைத்து கொண்டு இருக்கிறான். இங்கே போகிறேன் என்கிறாயே" என்றார். பிறகு சில விதிகளை சொல்லி இருந்தார். ஒருவரிடமிருந்து மட்டுமே தனம் வருவதை அவர் விரும்பவில்லை போல இருந்தது. இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது பகவான் செயலே என்று நினைத்துக்கொண்டோம்.

நெரூர் பற்றி கேள்விப்பட்ட இன்னொரு விஷயம் மகா பெரியவாள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அங்கு விஜயம் செய்தார். அதற்கு ஏற்பாடு செய்தது - ஒரு வக்கீலைப்பத்தி சொன்னேன் அல்லவா? அவருடைய தகப்பனார்தான். அவர்கள் சிருங்கேரி மடத்தை ஆஸ்ரயித்தவர்களாக இருந்தாலும் மகாபெரியவர் மேல் ஒரு அபிமானம், மரியாதை இருந்ததால் தங்கள் ஊருக்கு அர வேன்டும் என வேண்டி அப்படியே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் வருந்தும்படி என்ன நடந்தது என்றால் மற்ற ஊர் ஜனங்கள் சிருங்கேரி மடத்து அபிமானிகளாக இருந்து, இந்த வரவேற்பில் கலந்து கொள்ள தயங்கி வீட்டுக்குள் போய் கதவை அடைத்துக் கொண்டார்களாம். கேள்விப்பட்ட பெரியவர் நேரடியாக அதிஷ்டானத்துக்கே போய் அங்கேயே 4 நாட்கள் முகாம் செய்து விட்டார். மகா கருணை படைத்தவர் என்று பலரும் போற்றும் அந்த மகான் தவறாக எதையும் நினைப்பரா? இருந்தாலும் ஒரு உத்தம சன்னியாசிக்கு இப்படி அவமரியாதை செய்வது தானே அதன் பலனை கொடுக்கும், இல்லையா? அன்றிலிருந்து ஆரம்பித்தது ஊர் ஜனங்களுக்கு கெட்ட காலம். கொஞ்சம் கொஞ்சமாக க்ஷீணமாகி இப்போது மரம் பட்டு போனதும் முற்றிவிட்டது. அதுதான் அக்கிரஹாரம் இப்படி போனதுக்கு காரணம் என்று தெரிந்துகொண்டோம்.

பிறகு வாளாடி என்ற கிராமத்திலிருந்து அழைப்பு வந்தது. இதற்குள் பெரியவா பார்க்க விரும்புவதாகவும் ஒரு முறை வந்து போகும்படியும் உத்திரவாயிற்று. பையர் வாளாடி போய்விட்டு பெரியவா உத்தரவை தெரிந்து கொண்டு பின்னால் சொல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு வந்துவிட்டார்.

காஞ்சி சென்று பெரியவாளை தரிசித்தோம். நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டார். பின் "நீ பழூர் போயேன். அங்கே உன் அக்னிஹோத்திரம், அனுஷ்டானங்கள் எல்லாத்துக்கும் தோதாக இருக்கும். 4 வீடுகள் இருக்கு. எதை வேணுமானாலும் எடுத்துக்கோ. பசுமாடு கண்ணு வெச்சுகிறதானாலும் சௌகரியமாகவே இருக்கும். பணமும் பிரச்சினை இல்லை" என்று சொல்லிவிட்டார். சரி என்று சொல்லிவிட்டு பையர் ஒரு விண்ணப்பம் போட்டார். "மடத்திலேயே நெரூரில் பாடசாலை அமைக்கிற திட்டம் இருக்கிறதாக கேள்விபட்டேன். அப்படி ஒரு வேளை அமைந்தால் அங்கே எனக்கு மற்றிக்கொடுக்க வேண்டும். " பெரியவாளும் சிரித்துக்கொண்டு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்.

அந்த வார கடைசியிலேயே பழூர் (இது திருச்சியில் இருந்து கரூர் மார்க்கத்தில் சுமார் 12 கி.மீ) போய் பார்த்துவிட்டோம். அங்கே ஒரு வீட்டை தேர்ந்தெடுத்துவிட்டு அடுத்து ஆடி மாதம் ஆரம்பிக்க இருந்ததால் பால் காய்ச்சி சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம். எல்லாம் பழைய வீடுகள் ஆனதால் நிறைய பழுது பார்க்க வேண்டி இருந்தது. தேவையான மாறுதல்களை கேட்டு தெரிந்து கொண்டனர். நாங்களும் சில வருஷங்கள் இங்கே இருக்க பெரிசா ஒண்ணும் வேண்டாம் என்று அத்தியாவசிய மாறுதல்கள் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.

ஆனால் ஏனோ இந்த மாற்றங்கள் சமாசாரம் இழுத்துக்கொண்டே போயின. பல திட்டங்கள் போடப்பட்டு கைவிடப்பட்டன. திடீரென்று காஞ்சி மடத்திலிருந்து வந்து போகும்படி உத்தரவாயிற்று. பையர் அங்கே போனால் " நெரூரில் இன்னொரு வீடு மடத்துக்கு கையகம் ஆகிவிட்டது. நீ அங்கேயே போய் இரு. ஒவ்வொன்றாய் நடந்து பாடசாலை வந்துவிடும்" என்று சொல்லிவிட்டார்.

பழூருக்கு வேறு ஆசார்யனை அனுப்பிவிட்டார்கள். ஆவணி சிருங்கேரி மடத்துக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து இருக்கிறார்கள். அக்னி ஹோத்திர சாலயை கட்டி ஒரு மோட்டாரும் போட்டு கொடுத்து இருக்கிறார்கள். விஜய தசமிக்கு பால் காய்ச்சி சாப்பிட்டுவிடு என்று உத்திரவானதால் பையர், அவர் மனைவி, நான் 3 பேரும் போய் அப்படியே செய்தோம். 4 நாட்கள் தங்கி பங்களுரில் இருந்து பழூர் போய் அங்கே கிடப்பில் கிடந்த பெட்டி படுக்கை எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி ஒருவாறு ஒழுங்கு செய்துவிட்ட பின் நான் மட்டும் திரும்பி வந்தேன்.

4 நாள் காவேரி குளியல் சுகமாக இருந்தது! நல்ல வேகமாகவே நீரோட்டம். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டி இருந்தது. துணிகளை கொண்டுபோய் கொஞ்ச நேரம் தண்ணியில் அமுக்கி பிடித்தால் சுத்தமாக ஆகிவிட்டன!
வெய்யிலோ வெய்யில். கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போனால் கீழே வந்தால் குளிக்கலாம் போல இருந்தது. கிளம்பும் முன் நாள் மழை ஆரம்பித்துவிட்டது.

நெரூரில் கிடப்பில் கிடந்த ஒரு ப்லாட் பதிவும், போன வாரம் ஆகிவிட்டது. இனி கட்டிட வேலை ஆரம்பிக்க தடை ஏதும் இல்லை.

வில்வ மர சமாசரத்தை என் குருவை பார்த்தபோது பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சிரித்துக்கொண்டே உனக்கும் இதற்கும் என்ன உறவு என்று தெரியாது. இப்படி கேள்விப்பட்டு பார்த்தாகிவிட்டதல்லவா? இதை சும்மா விடக்கூடாது. என்ன செய்து அதை சரி செய்ய வேண்டுமோ அப்படி செய் என்று சொல்லிவிட்டார்.

சரி என்று புகளூர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அங்கிருந்த சில நண்பர்களுடன் பேசி இருந்தார். நெருரில் ஒரு மீட்டிங் கூப்பிட்டு "பிரச்சினை கல்தளம் அமைத்ததும் பால் அபிஷேகம் செய்ததும்தான். இதை சரி செய்ய வேண்டும்" என்று பேச எல்லாரும் " அப்படியா, தெரியவே தெரியாதே" என்று சொல்லி ஒப்புக்கொண்டனர். கல்தளம் அமைத்த நபரை கரூரில் பார்த்து பேச அவரும் மனம் வருந்தி உடனே சரி செய்துவிடுங்க என்று அனுமதி கொடுத்துவிட்டார். அரசு தரப்பிலும் ஆட்களை பார்த்து பேசி ஒண்ணும் பிரச்சினை வராமல் ஏற்பாடு ஆகிவிட்டது.

எல்லாமே நல்லா நடக்குமா? இப்போது ஏதோ ஒரு தடை. நண்பரும் பிஸி ஆகிவிட்டார். சமாசாரம் ஆறின கஞ்சி ஆகிவிட்டது. திருப்பி கிளப்ப வேண்டும்.

இந்த முறை போய் பார்த்த போது வில்வ மரம் துளிர் விட்டு இருக்கிறது! அடி மரத்தில் நான்கைந்து இடங்களிலேயே! சுப சகுனம் என்று நினைத்துக்கொண்டேன்.

Post a Comment