Pages

Wednesday, December 23, 2009

விசார சங்க்ரஹம் 6




11.சதா சலனத்தையே வடிவாகவுடைய மனத்திற்குச் சொரூபாவநுபவங் கூடுமா?

மனத்திற்குச் சத்துவகுணமே ஸ்வபாவமாகலானும் அது ஆகாசத்தைப் போன்று ஸ்வச்சமாயும் நிர்மலமாயுமிருத்த லானும் மனமென்பது உண்மையில் ஞான சொரூபமே. அத்தகைய ஸ்வபாவ நிலையில் அதற்கு மனமென்னும் பெயருமில்லை. ஒன்றை இன்னொன்றாக அறியும் விபரீத ஞானமே மனமெனப்படுகிறது. ஞான மாத்திரமாக விருந்த சுத்த சத்துவ மனதானது தன் ஞான சொரூபத்தை மறந்த அவித்தையால் தானே தமோ குணவசத்தாய் உலக ரூபமாகப் பரிணமித்து ரஜோ குண வசத்தாய் தேகாதிகள் நானென்றும் உலகம் சத்தியமென்றும் பாவித்து இதன் மூல முண்டாகும் ராக த்வேஷாதிகளால் புண்ணிய பாப கர்மங்களை சம்பாதித்து அவ்வாசனையால் ஜனனமரணங்களை யடையும். அநேக ஜன்மங்களிற் செய்து வந்த நிஷ்காம்ய கர்மங்களால் மலம் (பாபம்) நீங்கின மனமானது சற்குரு மூலமாய் சிரவண மனனங்களியற்றி நெடுங்காலம் ப்ரஹ்ம த்யானமாகிற அதாவது அஹம் ப்ரஹ்மமென்னும் ஆத்மாகார மனோவிருத்தியின் சஹஜ ஸ்திதியைப் பெறுவதற்கான நிதித்தியாசனம் செய்யவே மனதின் தமோகுண ரூபமான உலகாகார பரிணாமமடைதலும் ரஜோ குண ரூபமான அவற்றிலுள்ள சலனமும் நீங்கும். நீங்கவே மனம் சூக்ஷ்மமும் நிச்சலமுமாகும். ஸ்தூலமான (பெரிய) கட்டப்பாரையால் மெல்லிய பட்டு வஸ்திரத்தை இழையிடக் கூடாதது போலவும் காற்றினால் அதிக சலனமாகவுள்ள தீபத்தால் அதி சூக்ஷ்மமான வஸ்துக்களின் லக்ஷணங்களை நிர்ணயிக்கக்கூடாதது போலவும் ஸ்தூலமாகவும் சலனமாகவுமுள்ள ரஜோதமோ குண வசத்தான அசுத்த மனத்தால் மாத்திரம் அதி சூக்ஷ்மமும் நிச்சலமுமான வஸ்துவை அனுபவித்தல் கூடாதே யொழிய முற்கூறியபடி தியானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான சுத்த மனத்தில் சொரூபானந்தம் ஆவிர்பவிக்கும். (தோன்றும்). மனமின்றி அனுபவம் கூடாதாகையால் அதி சூக்ஷ்மமான விருத்தியோடுங்கூடிய தெளிந்த மனத்தால் அம்மயமாகவே யிருந்து சொரூபானந்தம் அநுபவித்தல் கூடும்.
அப்போது தான் பிரஹ்ம சொரூபமாயிருப்பது நன்றாய் அனுபவமாகும்.


மனத்திற்குச் சத்துவகுணமே ஸ்வபாவம். அது ஆகாசத்தைப் போல ஸ்வச்சமாயும் நிர்மலமாயும் இருக்கு. மனமென்பது உண்மையில ஞான சொரூபமே. அத்தகைய ஸ்வபாவ நிலையில் அதற்கு மனம் ன்னு பெயருமில்லை. ஒண்ணை இன்னொண்ணா அறிகிற விபரீத ஞானமே மனம் எனப்படுவது. ஞான மாத்திரமாக இருந்த சுத்த சத்துவ மனசு, தன் ஞான சொரூபத்தை அவித்தையால மறந்துடும். தானே தமோ குணவசத்தால உலக ரூபமாகப் பரிணமிக்கும். ரஜோ குண வசத்தால தேகாதிகள் நானென்றும், உலகம் சத்தியமென்றும் பாவிக்கும். இதன் மூலம் உண்டாகும் ராக த்வேஷம் முதலானவைகளால் புண்ணிய, பாப கர்மங்களை சம்பாதிக்கும். அந்த வாசனையால் ஜனன மரணங்களை அடையும். அது சரி, இதிலேந்து எப்படி விடுபடும்?
அநேக ஜன்மங்களில செய்து வந்த நிஷ்காம்ய கர்மங்களால மனசோட அழுக்கு நீங்கும். சற்குரு மூலமாய் சிரவண, மனனங்கள் இயற்றும். நெடுங்காலம் ப்ரஹ்ம த்யானமாகிற அதாவது "நான் ப்ரஹ்மம்" என்னும் ஆத்மாகார மனோவிருத்தியின் இயல்பான ஸ்திதியைப் பெறுவதற்கான நிதித்தியாசனத்தை செய்யும். மனதின் தமோகுண சொரூபம் உலகங்களாக பரிணாமம் அடைவது. அதன் ரஜோ குண ரூபம் அவற்றிலுள்ள சலனம். இவை நிதித்தியாசனம் செய்யவே நீங்கும். மனம் சூக்ஷ்மமாகும்; நிச்சலமுமாகும்.
எல்லாத்துக்கும் பொருத்தம்ன்னு ஒண்ணு இருக்கு இல்லையா? காலிலே குத்தின முள்ளை எடுக்க கட்டப்பாரையால் குத்த மாட்டோம். பெரிய கட்டப்பாரையால் மெல்லிய பட்டு வஸ்திரத்தை இழையிட மாட்டோம். அது போல காற்றினால அதிக சலனமாக இருக்கிற தீபத்தால அதி நுட்பமான பொருட்கள் எப்படி இருக்குன்னு ஆராய மாட்டோம். அதே போல பருமனாகவும் சலனமாகவும் இருக்கிற ரஜோ, தமோ குண வசத்தில விழுந்துவிட்ட அசுத்த மனத்தால் மாத்திரம் அதி சூக்ஷ்மமும் நிச்சலமுமா இருக்கிற வஸ்துவை அனுபவிக்க முடியாது. முன்னே சொன்னபடி தியானத்தால் சூக்ஷ்மமும் நிச்சலமுமான சுத்த மனத்தில் சொரூபானந்தம் தோன்றும். மனமின்றி அனுபவம் எப்படி கூடும்? அதனால அதி சூக்ஷ்மமான விருத்தியோட கூடிய தெளிந்த மனத்தால் அம்மயமாகவே யிருந்து சொரூபானந்தம் அநுபவித்தல் கூடும்.
அப்போது பிரஹ்ம சொரூபமா தான் இருக்கிறது நல்லா அனுபவமாகும்.

No comments: