Pages

Sunday, November 22, 2009

காயத்ரி அனுபவங்கள் -11




இந்த ஜப யக்ஞம் ஆரம்பிக்கும் போது செலவு குறித்து கேள்வி எழுந்தது. வசூல்
ஏதும் வேண்டாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஏன் என்று கேட்டார்கள்.
வசூலுக்கு போக நேரம் இருந்தால் அந்த நேரத்தில் சிலரை போய் பார்த்து ஜபம்
செய்யுங்கள் என்று கேட்கலாம். அல்லது ஜபம் செய்கிறீர்களா ஏதேனும்
பிரச்சினை இருக்கிறதா என்று விசாரிக்கலாம். அதுவே முக்கியம் என்றோம்.

இந்த நேரத்தில் குழு அங்கத்தினர் ஒருவர் அருமையான யோசனை ஒன்றை முன்
வைத்தார். ஜப காலத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அடிப்படையாக
கொண்டது அது. ஓ! உங்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் குறித்து ஒன்றுமே
சொல்லவில்லையே மன்னிக்கணும்.

சாதாரணமாக கடைபிடிக்க வேண்டிய சிலவற்றையே கட்டுப்பாடு என்று சொல்லி
வைத்தோம். தினசரி மூன்று வேளை சந்தியா உபாசனை, வீட்டு விலக்கு நாட்களில்
ஸ்திரீக்கள் சமைத்து உண்பதில்லை, தினசரி ஒரு ரூபாயாவது தானம்
செய்வது, தினசரி அப்பா அம்மாவுக்கு நமஸ்காரம் செய்தல், சினிமா, டிவி
பார்ப்பதில்லை, பிரம்ம யக்ஞம் செய்தல். இவற்றில் முதல் இரண்டு
கட்டாயம் என்றும் மற்றது விரும்பத்தக்கது என்றும் திட்டம் செய்தோம். இந்த
கட்டுப்பாடுகள் குறித்து நிறைய சர்ச்சை நடந்தது. கடைசியில்
கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்கத்தான் வேண்டும் என்று முடிவாயிற்று.
பெரும்பாலான கட்டுப்பாடுகள் அப்படியே ஒப்புக்கொள்ளப்பட்டன.

இதில் தினசரி ஒரு ரூபாய் தானம் என்று உத்தேசித்தோம் இல்லையா? அதை
உண்டியலில் போட்டு சேமித்து யக்ஞத்து செலவுக்கே பயன்படுத்திக்கொள்ளலாமே
என்ற யோசனை முன் வைக்கப்பட்டது. சாதகர்கள் எப்படி இதை ஏற்பர் என்ற
சந்தேகம் இருந்தாலும் பரீட்சார்த்தமாக முயற்சிக்கலாம் என்றும் இதை
செலுத்தினால்தான் ஹோமத்தில் பங்கேற்கலாம் என்று சொல்வதில்லை என்றும்
முடிவு செய்தோம். முதல் வருட ஹோமம் முடிந்த பிறகு இது குறித்து சாதகர்கள்
என்ன நினைக்கிறார்கள் என்று விசாரித்ததில் எல்லாரும் இதை வரவேற்பது
தெரிந்தது. ஹோமத்தன்று பலரும் ஒரு ரூபாய் நாணயமாக நூறு ரூபாய் கொண்டு
வந்து கொடுத்ததிலேயே இதை ஒருவாறு ஊகித்து இருந்தோம். தானே செலவு செய்து
ஹோமம் செய்வதாக அவர்களுக்கு தோன்றியதில் ஒரு பெருமிதம் அடைந்ததாக
தெரிந்தது. இது தவிர நெய் கால் கிலோ கொண்டு வரச்சொன்னோம். பலரும்
கொண்டுவந்தனர். அல்லது அதற்கான தொகையை செலுத்தினர்.
முதல் சில வருடங்கள் செலவு கையை கடித்தாலும் பின்னால் கொட்டகை போடுவதை
தவிர்த்தபின் வரவும் செலவும் சரியாகிவிட்டது. நெய்யும் ஹோமத்துக்கு
வேண்டிய அளவு தானாகவே வந்து விடுகிறது. இதில் பெரிய விஷயம் என்ன என்றால்
இப்படி மற்றவர்களும் அவரவர் ஊரில் ஏற்பாடு செய்து நிகழ்ச்சி நடத்துவதை
இது ஊக்குவிக்கிறது என்பதே! செலவு பற்றி கவலை பெரிசாக இல்லை அல்லவா?

1 comment:

Geetha Sambasivam said...

//செலவு பற்றி கவலை பெரிசாக இல்லை அல்லவா?//

எல்லாச் செலவு பத்தியும் இப்படியே கவலை பெரிசா இல்லாமல் இருக்கணும்னு வேண்டிக்கலாம்.