27.யோகாஷ்டாங்கங்க ளெவை?
இயமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி யென்பனவாம். இவற்றில் (1) இயமம்: அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரமசரியம், அபரிகிரகமாதிய ஒழுக்கமுடைமையாம்.
(2) நியமம்: சௌசம், சந்தோஷம், தவம், ஸ்வாத்யாயம், ஈச்வர பணிதானமாகிய ஒழுக்கமுடைமையாம்.
மோக்ஷாதிகாரிக்குரிய சர்வ சன்மார்க்கங்களின் ப்ராப்பதியே இயம நியமங்களின் தாத்பரியமாம். இவைகளைப்பற்றி விரிவாகயறிய வேண்டின் யோக சூத்ரம், ஹடயோக தீபிகை முதலிய நூல்களிற் காண்க.
(3) ஆசனம்: ஆசன பேதங்கள் 84 வகையாகும். அவற்றில் சிம்ஹம், பத்ரம், பத்மம், சித்தம் ஆகிய விந்நான்குமே சிரேஷ்டமென்றும் இவற்றிலும் சித்தாசனமே மிக சிரேஷ்டமென்றும் யோகசாஸ்திரங்கள் கூறுகின்றன.
(4) ப்ராணாயாமம்: சுருதிகளிற் கூறியுள்ள மாத்திரைக் கணக்கின்படி ப்ராணனை வெளிவிடுவது இரேசக மென்றும் உட்கொள்வது பூரகமென்றும் ஹிருதயத்தில் நிறுத்துவது கும்பகமென்றும் சொல்லப்படும். மாத்திரை யளவுகளைப் பற்றிச் சில சாஸ்திரங்களில் இரேசக பூரகங்களுக்கு சமமும் கும்பகத்திற்கு இரண்டு மடங்கும்; சில சாஸ்திரங்களில் இரேசகத்தைப்போல் பூரகத்திற்கு இரண்டு பங்கும் கும்பகத்திற்கு நான்கு பங்குமென சொல்லப்பட்டிருக்கிறது. மாத்திரை யென்பது காயத்ரி மந்திரத்தை ஒரு முறை யுச்சரிக்கும் காலமாக சொல்லப்படுகிறது. இவ்வித இரேசக பூரக கும்பகங்களடங்கிய ப்ராணாயாமத்தை தன்னாலியன்ற அளவு மிருதுவாகவும், கிரமமாகவும், நாடோறு மப்யசித்து வரின் சரீரத்தில் ஒரு வித இளைப்புடன், சலனமற்று ஆனந்தமாயிருத்தற்கான இச்சை மனதிலுண்டாகும். இதன் பின் ப்ரத்யாகாரம் செய்ய வேண்டும்.
(5)ப்ரத்யாகாரம்: வெளியிலுள்ள நாம ரூபங்களிற் செல்லவொட்டாமல் மனதை ஒருவழிப்படுத்தலாம். இதுகாறும் ஓடியுழன்ற மனது இப்போது ஒருவழிப்பட்டிருத்த லருமை யாதலின் இதற்கு (1) மனோமாத்திர ப்ரணவ த்யானம் (2) புருவ மத்திய நாட்டம் (3) நாசிகாக்ர திருஷ்டி (4) நாதாநுசந்தானம் ஆகியவை சகாயமாம். இப்படி யொருமைப்பட்ட மனம் ஓரிடமேயிருக்க யோக்கிய மானதாகும். இதன்பின் தாரணை செய்ய வேண்டும்.
(6) தாரணை: மனதை தியான யோக்கியமானதோர் ஸ்தானத்திலிருத்துவதாம். ஹ்ருதயமும் ப்ரஹ்ம ரந்திரமுமே தியான யோக்கிய ஸ்தானங்களாம். இவ்விரண்டிடங்களிலுமுள்ள அஷ்டதள பத்மங்களின் மத்தியில் ஆத்ம தேவதா ரூப ப்ரஹ்ம சொரூபமே தீப ஜ்வாலை போலும் ப்ரகாசித்துக் கொண்டிருப்பதாகப் பாவித்து மனதை அதில் ஸ்திரமாய் நிறுத்துவதாம். இதன்பின் தியானம் செய்ய வேண்டும்.
(7) தியானம்: முற்கூறிய அத்தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லையென்று ஸோஹம் பாவனையால் தியானிப்பதாம். இதிலும் எங்குமுள்ள ப்ரஹ்ம சொரூபமே ஆன்ம ரூபமாய் ஹ்ருதயத்தில் புத்தி சாக்ஷியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்னும் சுருதியின் படி அங்ஙனனமாயிருக்கும் நானார் என்னும் விசாரத்தால் விசாரிக்கில் ஹ்ருதய கமலத்தில் ஆன்ம தேவதை "அஹம் அஹம்" எனத் தான்றானே ஜ்வலித்துக்கொண்டிருப்பது விளங்கும். இவ்வநுசந்தானரூப தியானமே சிரேஷ்டமாகும்.
ப்ரஹ்மரந்திரத்திலுள்ளது சஹஸ்ர (1000) தள பத்மமானாலும் அதுவும் 125 சிறுதளங்களுடைய அஷ்டதள பத்ம மேயாம்.
(8) சமாதி:- மேற்கூறிய தியானத்தின் பரிபாகத்தால் தான் இன்னானென்றும் இன்னது செய்கிறோமென்றும் தோன்றாமல் மனது தியான ரூபத்திலேயே லயித்த அல்லது அஹம் அஹம் என்னும் ஸ்புரிப்பு அடங்கிய (சூக்ஷ்மமான) ஸ்திதியே சமாதி யென்பதாம். இதில் நித்திரை மாத்திரம் வராமல் பாதுகாத்துக்கொண்டு தினந்தோறும் விடாமல் கிரமமாக அநுசந்தித்து வந்தால் ஈச்வரன் கூடிய சீக்கிரத்தில் மனோவிசிராந்திரூப சிரேஷ்டமான கதியை அநுகிரஹிப்பார்.
No comments:
Post a Comment