Pages

Friday, February 19, 2010

ந்யாஸம்




நியாஸம்
முன்னே தாந்த்ரிகத்தில் ன்னு சொன்னேன் இல்லையா? யோசித்ததில அது அவ்வளவு சரியில்லைன்னு தோணுது. தாந்த்ரீகத்தில் சேராத மந்திரங்களுக்கும் உண்டு. ஏன் வேத மந்திரமான ருத்ரத்துக்கே லகு ந்யாஸம் மஹா ந்யாஸம்ன்னு உண்டு.
ந்யாஸம் என்கிறதுக்கு ஒப்பு கொடுக்கிறதுன்னு பொருள்.
எதை ஒப்புக்கொடுக்கிறது?
நம்மையேதான்.
கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம்.
மந்திர ஜபத்திலே ஈடுபட போறப்ப வெளியிலிருந்து பிரச்சினை வரக்கூடாதுன்னு நினைக்கிறோம் இல்லையா? நமக்கு தெரிஞ்சு வரக்கூடிய பிரச்சினைகளை தடுக்க முயற்சி எடுக்கிறோம். கொசு விரட்டி வெச்சுக்கிறோம்; அல்லது கொசுவை கஷ்டப்படுத்த மனசில்லையானா கொசு வலைக்குள் புகுந்துக்குறோம். மின்காத்தாடியை தகுந்த வேகத்திலே வெச்சுக்கிறோம். வீட்டுல இருக்கிறவங்களை கொஞ்ச நேரம் தொந்திரவு செய்யக்கூடாதுன்னு சொல்கிறோம். இப்படி பலது.
நமக்குத் தெரியாத பாதிப்புகளும் இருக்கலாம். அதெல்லாம் கண்னுக்கு தெரியாது என்பதால சூக்ஷுமம் என்கிறோம். அதற்கும் பாதுகாப்பு செய்துக்கணும்.
எப்படின்னா..
உடம்பிலே சில முக்கிய இடங்களில் தேவதா ஸ்தாபனம் செய்து இப்படி செய்யலாம். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு நிலையிலே ஒரு இடத்திலே (ஜீவ) ஆத்மா நிலைக்குமாதலால் (இது ஒரு வகை பார்வை) அதில் நாம் ஜபம் செய்ய மந்திரத்தின் அதி தேவதையை ஸ்தாபனம் செய்வதால அதைச்சுத்தி சில வட்டங்களில் வேறு சில தேவதைகளை ஸ்தாபனம் செய்து சூக்ஷுமமா இடைஞ்சல் வராம பாதுகாப்பு செய்துக்கலாம்.
இப்படி செய்ததும் அந்தக்கரணத்துக்கும் (ம்ம்ம்ம்ம்... சரி, மனசுக்கும்ன்னு வெச்சுக்கலாம்) ஆன்மாவில நிலை பெற்ற தேவதைக்கும் இடையே வேறு ஏதும் வராது.
இப்படி செய்வதே ந்யாஸம்.
கர ந்யாஸம் என்பது ஒவ்வொரு விரலிலும் பின் கைமுழுவதும் தேவதா ஸ்தாபனம் செய்வது. விரல்கள் மிகவும் தொடு உணர்வு மிக்கவை. ஏதானாலும் விரல்களால் தொட்டு தெரிஞ்சுக்கிறோம். ஒரு பொருள் சூடா, சில்லுன்னா, வற வறன்னா, வழ வழன்னா எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கிறது விரல்களால தடவிப்பார்த்துதான். விஞ்ஞானமும் விரல்கள் வெகு சென்சிடிவ் ன்னு ஒத்துக்குது. உடம்பு முழுதும் நரம்பு நுனிகள் விரவி இருந்தாலும் அவை விரல் நுனிகளிலே அதிக அளவிலே அடர்த்தியா இருக்கு.
ஒவ்வொரு விரலும் கையோட ஒட்டி இருக்கு இல்லையா? அங்கே ஒரு ரேகை இருக்கும். இந்த இடத்தை அடையாளம் வெச்சுப்போம்.
மந்திரங்களாலே இந்த ரேகையில் ஆரம்பித்து விரல் நுனி வரை தடவிக்கொடுக்கணும். கட்டை விரல் நுனியால் மத்த விரல்களையும் ஆள் காட்டி விரல் நுனியால் கட்டை விரலையும் இப்படி தடவிக்கொடுக்கணும்.
வலது கை விரல்களை வலது கை விரல்களாலும் இடது கை விரல்களை இடது கை விரல்களாலும் தடவிக்கொடுக்கணும். கை மாத்தி செய்வதில்லை.
அங்க ந்யாஸம் என்கிறது ஹ்ருதயம், சிரஸ், சிகை, கவசம், 3 கண்கள் இவற்றுடன் சம்பந்தப்பட்டது. வலது கை நடு 3 விரல்களால் ஹ்ருதய ஸ்தானத்தையும்; நடு, மோதிர விரல்களால் தலை உச்சியையும்; கட்டை விரலால் சிகையையும் (சிகை இல்லைன்னா என்ன செய்வது?!) மந்திரங்களால் தொட வேண்டும். கைகளை மறித்து 10 விரல்களாலும் தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும். நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும். வலது ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும். பின் தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.
இதை அடுத்து த்யானம். ஒவ்வொரு தேவதைக்குமான த்யான ஸ்லோகத்தை சொல்லி அப்படி அந்த தேவதையை த்யானம் செய்ய வேண்டும். த்யானித்த தேவதைக்கு உடனே பூஜை செய்ய வேண்டும். அட என்னாப்பா? பூஜையா? முன்னேயே சொல்லக்கூடாதா? தூபம் தீபம் ன்னு ஒண்ணும் தயார் பண்ணலையேன்னு சொல்லாதீங்க. மனசை வழி நடத்தி இப்படி போன பிறகு செயல்களுக்கு அதிக இடமில்லே! மனசாலேயே பஞ்ச பூதங்களாலேயே பூஜை செய்துடலாம்.
சம்ஸ்க்ருத எழுத்து ஒவ்வொண்ணுக்கும் ஒரு தேவதை சம்பந்தம் உண்டு.
லம் என்பது ப்ருத்வீக்கு பீஜாக்ஷரம். ஹம் ஆகாசம்; யம் வாயு; ரம் அக்னி; வம் ஜலம்.
லம் என்பதால் சந்தனம்; ஹம் ஆல் புஷ்பம்; யம் ஆல் தூபம்; ரம் ஆல் தீபம்; வம் ஆல் நிவேதனம். ஸம் ஆல் கைகளை இரு புறமும் துடைத்து எல்லா உபசாரங்களும். எவ்வளொ சுளுவா ஆத்ம பூஜை முடிஞ்சுப்போச்சு!
இதன் பின் ஜபம்.
இதே போல மந்திர ஜபம் முடிந்ததும் அங்க ந்யாஸம் செய்து (அந்தந்த தேவதைகளுக்கு நன்றி சொன்னதாக வைத்துக்கொள்லலாம்!:-)) திக் பந்தத்தை இடமாக சுற்றி விடுவிக்கலாம். கர ந்யாஸம் முடிக்கும்போது செய்வதில்லை.

கொஞ்சம் புரியலைன்னா இப்ப இதையே ஒரு உதாரணத்தோட பார்க்கலாம்.

2 comments:

yrskbalu said...

i think its better easy way is guru nama jabam.guru will take care provided must have sincere trust to guru.

திவாண்ணா said...

உண்மைதான்! ஒரே விஷயத்தில் அப்படி ஈடு பாடு கொள்வது மிகவும் நல்லதே.