முன்னேயே முகமூடி பத்தி பேசின போது நாம ஜபத்தை இடைவிடாம செய்வது பத்தி கொஞ்சம் பேசினோம். ஒரு நாளில இதுக்குன்னு கொஞ்ச நேரம் ஒதுக்கி செய்து வர அதுவே தன் போக்கை பிடிச்சுக்கும். தானே ஓட ஆரம்பிக்கும்.
எதுலேயும் ஒரே வழின்னு எதுவும் இல்லை. ஒரே விஷயத்துக்கு பலப்பல வழிகள் இருக்கும். ஒவ்வொண்ணு ஒவ்வொத்தருக்கு ஒத்து வரும். அது போல இன்னொரு வழியையும் இப்ப பார்க்கலாம்.
பலருக்கும் நேரம் கொடுத்து உட்கார்ந்து ஜபம் செய்ய நேரமில்லை (ன்னு நினைக்கிறாங்க!); பொறுமை இல்லை; உடம்பு வணங்கறதில்லை. இப்படிப்பட்டவங்களுக்கு இந்த வழி பொருத்தமா இருக்குமோ என்னவோ?
யாரானாலும் எதுவும் செயலில்லாமல் இருக்கறதில்லை. குறிப்பா ராஜஸம் அதிகமானவங்களுக்கு ஏதேனும் வேலை செய்து கொண்டே இருக்கணும். அதான் இயல்பு. இதை கொஞ்சம் மாத்தி சாத்விகத்தை அதிகப்படுத்தறது செய்ய வேண்டிய விஷயமானாலும் அது கொஞ்சம் சிரம சாத்தியமே.
வேலை ஏதேனும் செய்து கொண்டுதான் இருப்போம் ன்னு ஆன பிறகு அந்த வேலைகளோட இறைவனை தொடர்பு செய்து பார்க்கலாமா?
சாதாரணமான, மலினமான விஷயங்களோட இறைவனை சம்பந்திக்க மனசு ஒப்பாது.
இதை கொஞ்சம் ஆராயலாம்.
என்ன செய்ய உத்தேசிச்சு ஆரம்பிக்கிறோம் என்பது ஒரு முக்கிய விஷயம். இததான் சங்கல்பம் என்கிறாங்க. பூஜை செய்யப்போறேன் ன்னு சங்கல்பம் செய்யலாம். இதோட வேற விஷயத்தை சேர்க்கிறது சரி இல்லை. பூஜை செய்கிறதா சங்கல்பம் பண்ணிட்டு இன்னிக்கு என்ன டிபன்னு யோசனை செய்கிறது சரியில்லை.
ஹோமம் செய்யறேன்னு சங்கல்பம் செய்துவிட்டு மற்றபடி பேசிக்கொண்டு இருந்தா தோஷம்ன்னு சொல்லறாங்க. ஹோமம் செய்தா செல்வம் கிடைக்கும்ன்னா ஹோமம் செய்யும்போது வேற விஷயம் பேசினா செல்வம் குறைந்து போகுமாம். இது போல பகவானோட விஷயத்துல மத்ததை கலக்குறதுல சுவாரசியம் இல்லை. தப்பும் கூட.
இந்த விஷயத்தை சொல்லத்தான் புத்த இளம் துறவிகளோட கதை வந்தது. ப்ரார்த்தனை செய்வதுன்னு சங்கல்பம்ன்னா அப்ப சாப்பிடறது குற்றம். சாப்பிடுவோம் என்கிறது சங்கல்பமானா அப்ப பகவானை பிரார்த்தனை செய்வது குற்றமில்லை.
(நீங்களும் இப்படி செய்தா மனைவிக்கு தெரியாம பாத்துக்குங்க. சமையல்
சரியில்லைன்னு கடவுளே காப்பாத்துன்னு வேண்டிக்கிறதா நினைக்கப்போறாங்க!)
அப்ப மத்த விஷயங்களில் பகவானை கலக்கலாமா? சந்தேகமே இல்லாம ஆமாம் என்கிறதே பதில். வெகு சர்வ சாதாரணமாக அனேகமா எந்த ஓட்டுனரும் வண்டி எடுக்கும்போது ஒரு சில வினாடிகளாவது சாமி கும்பிடாம எடுக்கறதில்லை.
அது போல பகவத் விஷயங்களில் மத்த விஷயங்களை கலக்கிறது மத்த விஷயங்களில் பகவத் விஷயத்தை கலக்கிறதும் ஒன்று போல தோன்றினாலும் ஒன்று இல்லை.
அக்னிஹோத்திரம் செய்கிறவங்க ஹோம காலத்திலே என்ன செய்யறாங்கன்னு பாத்தா கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். அக்னியை எடுக்கறதுக்காக கிடுக்கியை எடுப்பார். அப்படி எடுக்கும்போது ஒரு மந்திரம் சொல்லுவார். கிடுக்கியால அக்னியை எடுக்கும்போது மந்திரம் சொல்லுவார். அக்னியை வைக்கும்போது மந்திரம் சொல்லுவார். இப்படியே கன்னுக்குட்டியை அவிழ்த்துவிட, பால் கறக்கும்போது, பாலை காய்ச்சி இறக்க – இப்படி ஒவ்வொரு செயலுக்குமே ஒவ்வொரு மந்திரம் சொல்லுவார்.
இதைபோல நாமும் செய்யலாம். செய்யலாம்ன்னா அக்னி ஹோத்திரம் செய்யலாம்ன்னு சொல்ல வரலை. ஒவ்வொரு செயலுக்குமே இறைவன் நாமாவை சொல்லலாம். காலை எழுந்திருக்கும்போதே விஷ்ணுவை ஸ்மரிக்க வேண்டும் என்கிறது சாஸ்த்ரம். ராம ராம ன்னு சொல்லியே எழுந்திருப்போம். ஓ! ராமாவை காக்கா பிடிக்கிறேன்னு நினைச்சுக்க வாய்ப்பிருக்கோ? சரி சிவசிவான்னு...ஓ அப்படி பேர்லேயும் ஒத்தர் இங்கே உறுப்பினரா இருக்காரோ?..ம்ம்ம் என்ன செய்யறது ?! நினைச்சா நினைச்சுக்கோங்க. ராமான்னே சொல்லறேன்.
ராம ராம ன்னு சொல்லி எழுந்து, ராம ராம ன்னுசொல்லி நடந்து, ராம ராம ன்னு
சொல்லி பிரஷ் எடுத்து, ராம ராமன்னு சொல்லி பேஸ்ட் எடுத்து .....
புரியுதில்லை? காலை எழுந்துக்கிறது முதல் இரவு தூங்க போகிறது வரை - யாரோ ஆபீஸ்ல தூங்க போகிறது வரை ன்னு திருத்தம் சொல்லறா மாதிரி இருக்கே?- எத்தனை எத்தனை செயல்கள் செய்கிறோம்?
ஒவ்வொண்ணுத்தையும் நாமா சொல்லியே செய்து பழகலாமா?
சுலபம்ன்னு சொல்லலை. சிரம சாத்தியம்தான். ஆனா சாத்தியம்.
ஆரம்பத்துல கொஞ்சம் விழிப்போட இருந்தே சொல்லி பழகிட்டா அப்புறம்
தானியங்கியா இது நடக்க ஆரம்பிச்சுடும். அப்புறம் நிதி அமைச்சர் ஒவ்வொண்ணா சர்வீஸ் டாக்ஸ் வலைக்குள்ளே கொண்டு வராப்போலே - இன்னும் கோவில்லே அர்ச்சகர்தான் அது வாங்க ஆரம்பிக்கலே...தட்டுல அஞ்சு ரூபா போட்டேளா? சர்வீஸ் டாக்ஸ் அம்பது பைசா போடுங்கோ அண்ணா! ..... அந்த நாள் வந்துடுமோன்னு பயமா இருக்கு! ச்சே! அது கிடக்கட்டும் விஷயத்துக்கு வருவோம். - நிதி அமைச்சர் ஒவ்வொண்ணா சர்வீஸ் டாக்ஸ் வலைக்குள்ளே கொண்டு வராப்போலே நம் செயல்கள் ஒவ்வொண்ணா இந்த முறைக்கு கொண்டு வரணும்.
கொஞ்ச கொஞ்சமா எல்லா செயல்களும் நாம வலைக்குள்ளே அகப்பட்டு கொண்டா அப்புறம் பிரச்சினை இல்லை.
சிலருக்கு இதில் ஒரு ஆட்சேபணை வரலாம். "இது சும்மா மெகானிகலா இல்லே இருக்கு? இதுல பகவானோட இயைந்து இருக்க முடியுமா? நானும் ஜபம் பண்ணறேன்னு சொல்லலாம். அவ்வளொதான்; ஒண்ணும் பிரயோசனம் இருக்காது.”
அப்படி இல்லை. இதை கடைபிடிக்க, கடைபிடிக்க அடுத்த நிலைக்கு போய்விடுவோம்.
சும்மா இருக்கும் போது நாமம் தானே வந்து சேரும். நாம் முயற்சி செய்து
வரவழைக்கவேண்டாம். அந்த சமயத்தில் ஊன்றி ஜபம் செய்யலாம். இது இல்லைன்னா மனசு குதிரை எங்கான மேயப்போய் வேண்டாத சமாசாரமெல்லாம் இழுத்துண்டு வரும்.
கடந்த கால குப்பையை எல்லாம் இழுத்துப்போட்டு ஆத்திரப் பட்டு
வருத்தப்பட்டு.... தேவைதானா?
மேலும் அவசர -க்ரைசிஸ்- சமயத்துல இது துள்ளி குதிச்சுகிட்டு தானே வந்து நிக்கும்.
இப்படி ஆன பிறகு நம் லௌகீக உலகத்தில இறைவனை கொண்டு வரதா இருக்காது. இறை உலகத்தில லௌகீகத்தை கொண்டு வரதா இருக்கும்.
இதைத்தானே கூடாதுன்னு சொன்னா மாதிரி இருக்கு என்கிறீங்களா?
அப்படி இல்லை. இன்னும் கூட நம் உண்மையான சங்கல்பத்துக்கு இது எதிரா
இல்லை. இறைவனோட எப்பவும் இருக்கறது எப்படின்னு இல்லை யோசிக்க
ஆரம்பிச்சோம்?
எனிவே இதைத்தான் மாத்தி யோசின்னு சொன்னேன். :-))