Pages

Monday, April 12, 2010

விசார சங்கிரகம் -26




37.மேற்கூறிய அனுஷ்டாங்களால் ஒருவாறு மனத்திலுள்ள அஞ்ஞான, சந்தேக, விபரீதமாகிய சர்வ பிரதிபந்தங்களும் நசிக்கப்பெற்று சித்தோப சாந்தம் வாய்க்கப்பெற்றாலும் ஓர் சந்தேக மாத்திரமுளது. அதாவது மனதை ஹ்ருதயத்தில் இருத்திவிட்ட பிற்கு அறிவொன்றுதான் பூரணமாக பிரகாசிக்கிறது. இங்ஙனம் மனமானது ஆன்மாகாரமடைந்து விட்ட பிறகு விசாரிக்கிறவன் யார்? தன்னைத்தானே பூஜிப்பதாக முடிவதால் இது ஆட்டைத்தோளில் போட்டுக்கொண்டு "ஆடெங்கே ஆடெங்கே" என்று தேடிய இடையன் கதையாகவன்றோ முடிகிறது?

ஜீவனே சிவன், சிவனே ஜீவன்; அந்த ஜீவன் சிவனேதான். உமியால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறவரையில் நெல்லாக இருக்கிறது. உமி நீங்கினால் அரிசியாகிறது. அதைப்போல "கர்ம பாசத்தால் கட்டுண்டிருக்கிற வரையில் ஜீவனாயிருக்கிறான். அஞ்ஞான பாசம் நீங்கினால் சிவனாகிய தேவனாகப் பிரகாசிக்கிறான்" என்ற சுருதியின்படி மனோரூப ஜீவன், தான் கேவலம் ஆத்ம சொரூபமாகவே யிருப்பதை மறந்த மறப்பினாலேயே ஜீவனென்னும் நாமத்தோடு மனோரூபமாய்ப் பந்தப்பட்டிருத்தலால், எப்போதும் தானாகவே யிருக்கும் ஆன்மாவை தேடுவது இடையன் கதையாகவே யிருந்தாலும், தன்னை மறந்த ஜீவன் தன்னை ஆத்மாவென் றோர்காலறிந்து கொண்டே ஆத்மாவாகிய தெய்வமாய்விடுவானா? பூர்வ ஜன்மாந்தர வாசனா ப்ரதிபந்தத்தால் அடிக்கடி தன் ஆத்மாவாக யிருப்பதை மறந்து தேகாதிகள் நானென்று பிரமிப்பனன்றோ? ஒருவன் பெரிய உத்யோகஸ்தனைப் பார்த்துக்கொண்டே தானும் அவ் வுத்தியோகஸ்தனாய் விடுவானா? கிரமமாக அதற்கு முயற்சி செய்தாலன்றோ அவ் வுத்தியோகஸ்தனாதல் கூடும்? அங்ஙனமே தேகாதிகளை நானென்னும் மனோ ரூபமாகப் பந்தப்பட்டிருக்கும் ஜீவனும் கிரமப்படி ஆத்மானுசந்தான மென்ற முயற்சியைச் செய்து மனோநாசம் வாய்க்கப்பெற்றாலன்றோ ஆன்மாவாதல் கூடும்?
தேகாதிகள் நானென்ற இந்த நெடுங்கால 'தேகாதிகள் நானல்ல; ஆன்மாவே நான்' (சிவோகம், சிவோகம்) என்ற நெடுங்கால அனுசந்தானத்தாலேயே நசிக்கப்பெற்று மனோசமன ரூப பரம சீதள சிவ நிலையை அடைதல் கூடுமாகலான், மனமென்னும் அகங்கார ரூப ஜீவனானவன் சர்வ தேவாத்மகமாய் தானிருக்கும் ஆத்ம தேவதையே தான் என்று பலகாலம் தன்னைத்தானே பூஜித்து வாசனைகளே ரூபமாகக் கொண்டிருக்கிற மனமென்னும் பாசத்தை வென்று பரம கைவல்யத்தைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் இடைவிடாது செய்யப்படும் இவ்வாத்மானுசந்தானம் மனோ நாசம் செய்து முடிவில் பிணஞ்சுடு தடி போலத் தானும் நீங்கிவிடும்; இதுவே மோக்ஷமாம்.

ஜீவனே சிவன், சிவனே ஜீவன்; அந்த ஜீவன் சிவனேதான். உமியால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறவரையில் நெல்லாக இருக்கிறது. உமி நீங்கினால் அரிசியாகிறது. அதைப்போல "கர்ம பாசத்தால் கட்டுண்டிருக்கிற வரையில் ஜீவனாயிருக்கிறான். அஞ்ஞான பாசம் நீங்கினால் சிவனாகிய தேவனாகப் பிரகாசிக்கிறான்" என்பது சுருதி. அதன்படி மனோரூப ஜீவன், தான் ஆத்ம சொரூபமாகவே மட்டுமே இருப்பதை மறந்த மறப்பினாலேயேதான் ஜீவன் என்னும் நாமத்தோடு மனோரூபமாய்ப் பந்தப்பட்டு இருக்கிறது. எப்போதும் தானாகவே இருக்கிற ஆன்மாவை தேடுவது இடையன் கதையாகவேதான் இருக்கு. அப்படி இருந்தாலும், தன்னை மறந்த ஜீவன் தன்னை ஆத்மாவென்று ஒரு கால் தியரியா அறிந்து கொண்டால் ஆத்மாவாகிய தெய்வமாய்விடுவானா? அப்படி ஆகாது.
பூர்வ ஜன்மாந்தர வாசனைகள் என்கிற தடைகளால அடிக்கடி தன் ஆத்மாவாக இருப்பதை மறந்து தேகம் முதலானவை நான் என்று பிரமிப்பன் அன்றோ? ஒருவன் பெரிய உத்யோகஸ்தனைப் பார்த்துக்கொண்டே தானும் அந்த உத்தியோகஸ்தனாய் விடுவானா? கிரமமாக அதற்கு முயற்சி செய்தாலன்றோ அந்த உத்தியோகஸ்தன் ஆகலாம்? அதே போல "தேகம் முதலானவைகளே நான்" என்னும் மன வடிவிலே கட்டுப்பட்டிருக்கும் ஜீவனும் கிரமப்படி ஆத்ம அனுசந்தானம் என்ற முயற்சியைச் செய்து மனோநாசம் வாய்க்கப்பெற்றால்தான் ஆன்மாவாதல் கூடும்.
தேகம் முதலானவை நானென்ற இந்த நெடுங்கால 'தேகாதிகள் நானல்ல; ஆன்மாவே நான்' (சிவோகம், சிவோகம்) என்ற நெடுங்கால அனுசந்தானத்தாலேயே நசிக்கப்பெற்று மனோசமன ரூப பரம சீதள சிவ நிலையை அடைதல் கூடும். ஆகலான், மனமென்னும் அகங்கார ரூப ஜீவனானவன், சர்வ தேவ ஆத்மகமாக தானிருக்கும் ஆத்ம தேவதையே தான் என்று பலகாலம் தன்னைத்தானே பூஜிக்க வேண்டும். அப்படி பூஜித்து வாசனைகளே ரூபமாகக் கொண்டிருக்கிற மனமென்னும் பாசத்தை வென்று பரம கைவல்யத்தைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் இடைவிடாது செய்யப்படும் இவ்வாத்மானுசந்தானம் மனோ நாசம் செய்து முடிவில் பிணஞ்சுடு தடி போலத் தானும் நீங்கிவிடும்; இதுவே மோக்ஷமாம்.

6 comments:

yrskbalu said...

ஆஹா.

சிவஹோகம்

சிவஹோஅம்

திவாண்ணா said...

சிவோஹம்!
தமிழ்ல எழுத ஆரம்பிச்சுட்டீங்களா? சந்தோஷம்!

Anonymous said...

திவா சார், பொறிதுயில் ஆழ்த்தும் நிலைக்கும், தியான நிலைக்கும் ஏதாவது கம்பாரிசன் பண்ண முடியுமா? எனக்கு தெரிந்த ஒரு தற்கால யோக குரு சொல்றாரு தியான நிலையை கெமிக்கல் மூலமாகவும் காண்பித்து கொடுக்கலாம் என்று - ஆனால் அது நிலை இல்லாதது ... எல்.எஸ்.டி கொடுப்பதும், சிவோக மந்திரம் கொடுப்பதும் ஒன்று போல் இருக்குமா? ஒரு பொறி துயில் ஆழ்த்துனர்ன்ற முறையில, பொறிகளை துயில் செய்யும் தியானம் மருந்தில் தர முடியுமான சொல்ல முடியுமா? நான் அதெல்லாம் (எல்,எஸ்,டி)சரின்னு சொல்லல ... நிஜமான சந்தேகம்.

Anonymous said...

இதை மாத்தி கேட்டுருக்கலாமோன்னு முந்தின கேள்வி அனுப்பனப்புறம்தான் தோணுது!!! ... அதாவது, தியான நிலையில ஒரு யோகியால மருந்தில்லாம சர்ஜரில இருக்க முடியும்னு சொல்றாங்க இல்லையா? அப்படின்னா தியானம் மூலமா அவங்க பொறி துயில் ஆழ்த்துறாங்க இல்லையா? இப்ப சிவோகம்ன்ற மந்திரத்தை முழுசா உணர்ந்துட்டவங்க உடலை தாண்டி பற்றில்லாம அதை பாக்கிறது வலி அறியாம இருக்கிறது, ஃபிஸியலாஜிக்கலா அனஸ்தீசியா மாதிரி தானே ஆகியிருக்கணும்? இல்ல சும்மா கன்னா பின்னான்னு குழம்பிட்டனா நான்?!!! :))) ...

திவாண்ணா said...

வாங்க மதுரா!
நல்ல கேள்விகள்தான்.
மயக்க மருந்தால நரம்பு செல்களோட மின்னலைகளை மட்டுப்படுத்தறதாலே மூளைக்கு ஒரு சிக்னலும் கிடைக்காமல் போகுது.
எல்எஸ்டி யாலே கண்டபடி மின்னலைகள் உருவாக்கப்பட்டு இல்லாத ஒரு அனுப்வம் கிடைக்குது (illusion). த்யானத்தாலே சிந்தனை ஓட்டம் வகைப்படுத்தப்பட்டு குவிக்கப்பட்டு ஒரே பொருளைப்பத்தி கவனம் செலுத்தி அதைப்பற்றிய ஆழ்ந்த அறிவு ஏற்படுது.
முந்தையது இரண்டும் அறிவின்மை; இல்லாத ஒண்ணோட அனுபவம். பிந்தையது உள்ளதின் அறிவார்ந்த அனுபவம்.
மருந்தால த்யான நிலையை உருவாக்க முடியாது.
ரமணர் அனெஸ்தீசியா இல்லாம ஆபரேஷன் பண்ணிக்கொண்டார். அவருக்கு வலி இல்லாமல் இல்லை. அதை உணர்ந்தார். ஆனால் அதனால் வழக்கமாக ஏற்படும் துன்பம் ஏற்படலை. இதை பின்னால் இதைப்பத்தி கேட்ட ஒத்தருக்கு சொல்லி இருக்கார்.
இப்படிப்பட்டவங்க தீவிரமாக- சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காம - உதாசீனம் செய்ய முடியும். அதுக்கு அவங்க பழகினவங்க!

Anonymous said...

நல்ல விளக்கத்திற்கு நன்றி திவா சார்.