29. இந்த மந்திரத்தோட பெருமை பத்தி சொல்லுங்களேன்.
நாம சந்தியாவந்தனத்தோட செய்கிற காயத்ரி த்ரிபதா காயத்ரி எனப்படும்.
30. அட அப்படின்னா வேற என்ன காயத்ரி இருக்கு?
அஜபா காயத்ரீ, துரீய காயத்ரீன்னு உண்டு. நாம் மூச்சை இழுக்கிறது ஹம் என்று, விடுகிறது ஸஹ என்று, இப்படி பழக்கமாகிவிட்டால் அது ஹம்ஸ அல்லது அஜபா காயத்ரி. துரீய காயத்ரி சன்னியாசிகள் செய்வது.
த்ரிபதா காயத்ரிதான் நாம் சாதாரணமா காயத்ரி ன்னு சொல்கிற போது குறிக்கிறது. இது எவ்வளவு பெருமை வாய்ந்தது என்றால் மந்திரங்களில் காயத்ரியாக இருக்கிறேன்ன்னு பகவான் சொல்லும் அளவு!
இது மிக பெருமை வாய்ந்தது என்கிறதால எல்லா தேவதைகளுக்குமே ஒரு காயத்ரி உருவாக்கப்பட்டது. ஆனா வேதத்தில குறிப்பிட்டு இருக்கிற காயத்ரி சிலருக்குத்தான்.
ஸவிதா தவிர
நரஸிம்மர்
சுப்ரமணியர்
அக்னி
சூரியன்
ப்ரம்ஹா
சிவன்
விஷ்ணு
லக்ஷ்மி
31. மத்ததெல்லாம்?
மத்ததெல்லாம் நாமே நம் இஷ்ட தேவதை மேலே இருக்கிற அபிமானத்திலே செஞ்சது.
இந்த காயத்ரி மூன்று வேதங்களிலேயும் இருக்கு. வேதத்திலேயே ஆவாஹன மந்திரம் இருக்கிறது இதுக்கு மட்டுமே. (ஆயாது வரதா...) மேலே அங்க ந்யாஸம், கரந்யாஸம், செய்பவர்களும் இருக்காங்க. த்யான ஸ்லோகம் எல்லோருக்கும் பொதுவே.
வேத கதை: தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் அடிக்கடி நடந்து கொண்டே இருக்கும். ஒரு முறை அப்படி போர் நடக்கும்போது காயத்ரி இருவருடைய பொருட்களையும் எடுத்து பத்திரப்படுத்தி காப்பாற்றியது. போர் முடிந்த பின் அசுரர்கள் தம் பொருட்களைப்பெற காயத்ரியை மரியாதை இல்லாமல் விரட்டிமிரட்டினர். ஆனாலும் அவர்களால் பொருட்களை பெற முடியவில்லை. தேவர்கள் அன்புடன் காயத்ரியை 'ஆயாது' என்ற மந்திரத்தால் துதித்தனர். “ஓ, காயத்ரியே! நீ வேதங்களுக்கெல்லாம் தாய்! வரத்தை கொடுப்பவள், அழிவில்லாதவள். ப்ரும்ஹ ஸ்வரூபிணி. நீ எங்களிடம் வா. எங்களிடம் இரு. நீ ஓஜஸ், ஸஹன சக்தி, பலம், தேஜஸ்! தேவர்களுக்கு வீடு எல்லாம் நீயே! ஆயுஸ் நீயே!” மகிழ்ந்த காயத்ரி அவர்களது சொத்தை கொடுத்து அருள் புரிந்தாள்.
32. காயத்ரின்னு ஏன் பெயர்?
காயந்தம் த்ராயதே இதி காயத்ரி. அதாவது யார் அதை சரியாக ஸ்வரத்துடன் உச்சரிக்கிறார்களோ அவர்களை காப்பாற்றுவது காயத்ரி.
வேதத்தில பல சந்தஸ் கள் (meter) உண்டு. உஷ்ணீக், அந்ஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தீ, த்ருஷ்டுப், ஜகதீ என்று பல. அவற்றில் ஒன்று காயத்ரி.
இதற்கு மூன்று பாதம், ஒவ்வொன்றிலும் எட்டு எழுத்துக்கள்.
முதலில் நான்கு எழுத்துக்கள்தான் இருந்தனவாம். அப்புறம் எட்டு ஆகிவிட்டது. இதற்கு வேதத்தில் ஒரு கதை உண்டு.
33. ஆஹா! கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். சொல்லுங்க.
(க்ருஷ்ண யஜுர் வேதம்- காண்டம் 6- ப்ரச்னம் 1- அநுவாகம் 6)
கத்ரூ, ஸுபர்ணி என்று இருவர் சகோதரிகள். அழகில் சிறந்தவர் யார் என்று இவர்களிடையே ஒரு போட்டி வந்துவிட்டது. அதில் கத்ரூ ஜெயித்தாள். போட்டியின் விதிப்படி ஸுபர்ணி கத்ருவின் அடிமையானாள். உனக்காக யாராவது மூன்றாம் உலகத்துக்குப்போய் ஸோம லதையை கொண்டு வந்தால் நீ அடிமைத்தனத்தில் இருந்து விடுபடலாம் என்று சொன்னாள் கத்ரூ. ஸுபர்ணா " ஓ குழந்தைகளே, இளமையில் பெற்றோர் உங்களை ரக்ஷிப்பது வயதான காலத்தில் தம்மை ரக்ஷிப்பீர்கள் என்பதனாலேயே. நீங்க ஸோமலதையை கொண்டு வந்து என்னை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பீர்களாக" என்றாள்.
உடனே 14 அக்ஷரங்கள் கொண்ட ஜகதீ சந்தஸ் ஸோமலதையை கொண்டுவரச்சென்று தோற்றது. தன் அக்ஷரங்களில் இரண்டையும் இழந்து திரும்பியது. 13 அக்ஷ்ர வடிவான த்ருஷ்டுப் உம் அதே போல சென்று, தோற்று, அக்ஷரங்களில் இரண்டையும் இழந்து திரும்பியது. அடுத்து 4 அக்ஷ்ரங்கள் கொண்ட காயத்ரி கிளம்பிசென்று தன் சாமர்த்தியத்தால் ஸோம லதையையும் பெற்று தன் சகோதரிகளிழந்த 4 அக்ஷரங்களையும் மீட்டுக்கொண்டு திரும்பியது. அன்று முதல் அது 8 அக்ஷ்ரங்கள் கொண்டதாயிற்று. ஆகவே வயதிலும் உருவிலும் சிறியதாக இருந்தாலும் காயத்ரியே சிறந்தது உயர்ந்தது என்று ப்ரம்ஹவாதிகள் கூறினர்.
ஒரு பாதத்தில் 8 அக்ஷரங்கள் வீதம் மூன்று பாதங்களில் 24 அக்ஷரங்கள் கொண்டது காயத்ரி.
34. சரி ஜப கிரமத்தை சொல்லுங்க.
முதலில் ஆசமனம். இது எல்லா கர்மாவுக்கும் பொது. அப்புறம் ப்ரணாயாமம். இது பத்தி தனியா பார்க்கலாம். அடுத்து சங்கல்பம். வேளைக்கு தகுந்தாப்போலே மாறும். இத்தனை ஜபம் செய்கிறேன் ன்னும் சங்கல்பிக்கலாம். அடுத்து பத்து ப்ராணாயாமம். இது ஜபத்திலே மனசு நல்லா நிலைக்க. அடுத்து முன்னே சொன்ன ஆயாது என்ற மந்திரத்தால ஆவாஹனம். அங்க கர ந்யாஸம் செய்வதும் உண்டு. முக்தா வித்ரும என்று ஆரம்பிக்கும் த்யானம்.
35. இந்த த்யானம் என்ன சமாசாரம்?
ஒரு பொருளையே சுத்தி மனசு லயமாகிறது த்யானம் என்பாங்க. டெக்னிகலா தாரணை என்கிறது இது. த்யானம் இதுக்கும் ஒரு படி மேலே போய் 'தடை இல்லாம' பொருளைப்பத்தியே சிந்திக்கறது.
காயத்ரி ஜபம் செய்ய நாம் காயத்ரியுடைய வடிவத்தை எப்படி இருக்கும்ன்னு மனசுல கற்பனை செய்யறோம்.
"முக்தா வித்ரும ஹேமநீல தவளவ சாயைர் முகை: த்ரியக்ஷணைர்
யுக்தா மிந்து கலா நிபத்த மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாம் அங்குச கசா: சுப்ரம் கபாலம் குணம்
சங்கம் சக்ரம் அதார விந்தயுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே'
முத்து, பவழம், தங்கம், நீலம், வெண்மை ஆகிய ஐந்து வண்ண திருமுகங்களையுடையவள் காயத்ரி! ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களுடையவள். சந்திரக் கலையை நவரத்தின க்ரீடத்தில் அணிந்தவள். தத்துவார்த்தமுள்ள (24) எழுத்துக்களின் வடிவானவள். வரதம், அபயம், அங்குசம், சாட்டை, வெண்மையான கபாலம், கதாயுதம், சங்கு, சக்கரம், இரு செந்தாமரை ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியவள். இத்தகைய காயத்ரி தேவதையை த்யானம் செய்கிறேன்.
36. மந்திரத்தை உரக்க சொல்லணுமா எப்படி?
காயத்ரியை மனதில் மட்டுமே சொல்வது சிறந்தது.
இருந்தாலும் எப்படி ஒரு விஷயம் - மொழி - முதலில் கற்றுக்கொள்ளும் போது எழுத்துக்கூட்டி மெதுவாக சொல்கிறோமோ அப்படி சரியாக உச்சரிப்பு ஸ்வரம் வரும் வரை சொல்லலாம். பிறகு உதடுகள் மட்டும் அசையும்படி சொல்லலாம். இதற்கு உபாம்சு என்று பெயர். பிறகு மனதிலேயே சொல்லி பழகலாம்.
35. ஏன் முதல்ல உரக்க சொல்லச்சொல்லறீங்க?